கொழும்பு ஐ.நா. அலுவலகம் அமைச்சர் விமல் வீரவன்ஸ தலைமையிலான ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டமை குறித்து தாம் அச்சமடைவதாக இலங்கையிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் இன்று விடுத்த கூட்டறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் எதிர்வரும் திங்கட்கிழமை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸுடன் தாம் கலந்துரையாடலொன்றை நடத்தவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலுள்ள ஜேர்மனி, பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, சுவிட்ஸர்லாந்து, நெதர்லாந்து, ருமேனியா, நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தூதரகங்களின் தலைவர்கள் கூட்டாக இந்த அறிக்கையை விடுத்துள்ளனர்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் இவ்வாரம் முற்றுகையிடப்பட்டமை மற்றும் அரசாங்க அமைச்சர் ஒருவர் அதில் வகித்த பங்கு ஆகியன தொடர்பாக நாம் மிகவும் அச்சமடைந்துள்ளோம்.
அமைதியான எதிர்ப்புகள் ஜனநாயகத்தின் ஒரு பகுதியாகும். ஆனால் இலங்கையும் ஓர் அங்கத்தவராக உள்ள ஐ.நா.வின் அலுவலகத்தின் வாயிலை மறிப்பது, ஐ.நா. அலுவலர்களை அச்சுறுத்துவது மற்றும் தொந்தரவுக்குள்ளாகு;குவது என்பன சர்வதேச நெறிமுறைகளை மீறுவதுடன் உலக அரங்கில் இலங்கையின் மதிப்புக்கும் பங்கம் விளைவிப்பதாகும்.
ஐ.நா. அலுவலர்களினதும் வளாகத்தினதும் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை நாம் கோருகிறோம்.
திங்கட்கிழமை நடைபெறவுள்ள ராஜந்திரிகளின் தலைவருக்கும் வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடலையும் நாம் வரவேற்கிறோம்.



0 Responses to ஐ.நா அலுவலகம் மீதான முற்றுகை வெளிநாட்டு ராஜதந்திரிகள் அச்சம்