Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவிலிருந்து வந்து அயர்லாந்தில் தனது மனைவியுடன் குடியேறிய இந்தியரான பிரவீன் ஹலப்பனவர் தனது 4 வருடகால திருமண வாழ்க்கையின் பின்னர் திடீரெனத் தனது மனைவியை இழந்து சம்பவம் அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

சவிதா எனும் 31 வயதுடைய இவரின் மனைவி தனது வயிற்றில் வளர்ந்து வந்த கரு இறந்த போதும் அதை அயர்லாந்து நாட்டு கிறித்தவ மத அடிப்படையிலான சட்டத்தின் கீழ் கலைக்க முடியாமல் போனதால் இரத்தம் விஷமடைந்து சமீபத்தில் இறக்க நேரிட்டது.

இச்சம்பவத்தை அடுத்து பிரவீன் நீதிமன்றத்துக்குப் போகக் கூடும் என்று கருதிய அயர்லாந்தின் மருத்துவமனை சவிதாவின் மருத்துவ குறிப்புக்களில் வேண்டுமென்றே முக்கிய தகவல்களை அழித்து வழங்கியுள்ளது என அவர் CNN இற்குத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தவறவிடப்பட்ட தகவல்களில் கருக்கலைப்பு செய்யக் கூறி அவர்கள் கோரிய விண்ணப்பமும் அடங்கியுள்ளது என்றும் பிரவீன் தெரிவித்தார்.

ஆனால் பிரவீனின் முறைப்பாடு குறித்து கருக்கலைப்புச் செய்ய மறுத்த கால்வே/ரொஸ்கொம்மொன் பல்கலைக் கழக வைத்தியசாலை வளாகம் கருத்து ஏதும் கூற மறுத்து விட்டது. எனினும் வெள்ளிக்கிழமை அயர்லாந்தின் சுகாதாரத் துறை அதிகாரிகள் சவீதாவின் மரணம் குறித்த விசாரணையை தொடங்கியுள்ளனர். சுகாதார அமைச்சு சவிதாவின் மரணம் குறித்து என்னதான் விளக்கம் அளித்தாலும் அவை அவரது கணவர் பிரவீனின் விசனத்தை அல்லது கவலையைத் தீர்க்கப் போவதில்லை என்று அயர்லாந்து மக்கள் கருதுவது குறிப்பிடத்தக்கது.

தனது மனைவி பற்றிக் கூறிய பிரவீன் இதன்போது தாம் இருவரும் இந்தியாவில் சந்தித்துத் திருமணம் செய்து கொண்டதாகவும் தமது திருமண வாழ்க்கை மிகவும் வெளிச்சமாக இருந்ததாகவும் அயர்லாந்தின் கல்வாய் நகரில் பல குழந்தைகளைப் பெற்று ஒரு அழகிய வாழ்க்கையை வாழ விரும்பியிருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அயர்லாந்து பிரதமர் என்டா கென்னிக்கு தனது சுகாதாரத் திணைக்களத்தில் உள்ள குறைபாடுகளைக் களையவும் மற்றும் பிரவீனுக்கு நஷ்ட ஈடு வழங்கவும் அவசியமான அழுத்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பிரவீன் கூறுகையில் தனக்கு வேண்டியதெல்லாம் ஒரு பொது மக்கள் முன்னிலையிலான விசாரணை எனவும் இது தனது மனைவியின் மரணம் குறித்து மட்டுமல்லாமல் சுகாதாரத் திணைக்களத்தின் மதக் கொள்கையிலுள்ள ஓட்டைகள் தொடர்பாகவும் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இவர் மேலும் கூறுகையில், இந்த நவீன தொழிநுட்ப வசதி மிக்க 21 ஆம் நூற்றாண்டில், அயர்லாந்தில் இப்படி ஒரு அற்ப காரணத்துக்காக தனது மனைவி எப்படி இறந்தார் எனத் தன்னிடம் பல குடும்பங்கள் கேட்டு வருவதாகவும் இது மிக முக்கியமான கவலை எனவும் கூறினார். 'தனது மனைவியைக் கருக்கலைப்புச் செய்ய சொல்லி மருத்துவர்களிடம் தான் கூறிய போது, அவரின் வயிற்றில் வளரும் குழந்தை உயிர் பிழைக்காது என்று தெரிந்தும், அக்குழந்தையை விட பெரிய உயிரான தனது மனைவியை காப்பாற்ற வேண்டும் என ஏன் அவர்கள் நினைக்கவில்லை?' என்றும் பிரவீன் ஆதங்கப்பட்டார். தனக்கு வேண்டியதெல்லாம் உண்மை மட்டுமே எனவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

0 Responses to மருத்துவ குறிப்புக்கள் அழிக்கப்பட்டுள்ளன : அயர்லாந்து நீதித்துறையிடம் சவிதாவின் கணவர் குற்றச்சாட்டு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com