Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


இலங்கையில் முன்றரை ஆண்டுக்கு முன் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்களை அழிவிலிருந்து பாதுகாக்க ஐநா மன்றம் மோசமாகத் தவறியுள்ளது என்று ஐநாவுக்குள் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை ஒன்று கூறுகிறது.

ஐநாவுக்குள் உள்ளளவில் நடத்தப்பட்ட ஆய்வுடைய அறிக்கையின் வரைவு பிரதி ஒன்று பிபிசியிடம் கசியவிடப்பட்டுள்ளது. தாங்கள் பாதுகாக்க வேண்டிய மக்களை ஐநா கைவிட்டிருந்தது என்று இந்த அறிக்கை முடிவு தெரிவித்துள்ளது.

ஐநா அதிகாரிகளின் தகுதி, அனுபவம் போதவில்லை

இலங்கையில் ஐநா ஆற்றிவந்த பணியின் நோக்கம் யுத்தத்தை தடுப்பது என்பதல்ல, மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கச்செய்வதுதான் அவர்களுடைய வேலை.
ஆனால் இலங்கைத் தலைநகர் கொழும்பில் பணியாற்றிய ஐநா பணியாளர்களுக்கு அவ்வாறான உதவிகளை செய்வதற்கான தகுதிகளோ, அனுபவமோ இல்லை என்பதை இந்த ஆய்வு அறிக்கை விவரிக்கிறது.

இலங்கையின் கொடூரமான யுத்தத்தால் எழுந்த சவால்களை இவர்களால் சமாளிக்க முடியவில்லை என்றும், நியுயார்க்கிலுள்ள ஐநா தலைமையகத்திலிருந்து இவர்களுக்கு ஒழுங்கான உதவிகளும் கிடைக்கவில்லை என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

பயங்கரவாதத்தை நசுக்குவதாக சூளுரைத்துவிட்டு அரசாங்கம் முன்னெடுத்த விஷயங்களை சர்வதேச நாடுகள் பெருமளவில் கண்டும்காணாமல் இருந்துவிட்டனர் என்று இந்த அறிக்கை கூறுகிறது. ஆக கட்டமைப்பு ரீதியாகவே கூட பெரும் தவறுகள் நடந்துள்ளன என்றும், இப்படி ஒன்று எதிர்காலத்தில் நடக்கவே கூடாது என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

யுத்தப் பிரதேசத்திலிருந்து ஐநா விலகியது

யுத்தப் பிரதேசத்துக்குள்ளிருந்து வெளியேற முடியாமல் ஒரு சிறு இடத்தில் பொதுமக்கள் மாட்டப்பட்டிருந்தனர். செப்டம்பர் 2008ல், ஐநா தனது பணியாளர்களை இலங்கையின் வடக்கிலுள்ள யுத்த பகுதிகளிலிருந்து விலக்கிக்கொண்டிருந்தது.

ஐநா ஊழியர்களின் பாதுகாப்புக்கு தாங்கள் உத்திரவாதம் வழங்க முடியாது என்று இலங்கை அரசாங்கம் எச்சரித்ததை அடுத்து அது இம்முடிவை எடுத்திருந்தது. இலங்கை அரசாங்கத்தின் இந்த எச்சரிக்கையை ஐநா எப்போதும் எதிர்த்துக் கேள்வி கேட்கவே இல்லை என்றும், ஐநா அந்த இடத்திலிருந்து விலகியதால் யுத்த பிரதேசத்தில் வாழ்ந்த மக்களுக்கு உதவிகள் கிடைப்பதிலும் அவர்களுடைய உயிர்கள் பாதுகாக்கப்படுவதிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டதென்று இந்த அறிக்கை கூறுகிறது.

யுத்தப் பிரதேசத்துக்குள் லட்சக்கணக்கான மக்களை விட்டுவிட்டு ஐநா பணியாளர்கள் வெளியேறிய பின்னர், அரச படைகளும் விடுதலைப் புலிகள் தரப்பும் அம்மக்களை தமக்கு வேண்டிய விதத்தில் பயன்படுத்திக்கொண்டனர்.

விடுதலைப் புலிகளை அவர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியும், கட்டாயப்படுத்தி சண்டையில் ஈடுபட வைத்தும் வந்தனர் என்றால், அரச படையினரின் கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு அவர்கள் விலைகொடுத்தும் வந்தனர்.

கொல்லப்பட்ட பொதுமக்கள் எண்ணிக்கை

இலங்கையில் மிக மோசமான ஒரு பெருந்துயர சூழல் நிலவியதாக ஐநாவின் இந்த அறிக்கை கூறுகிறது. பொதுமக்கள் கொல்லப்படாமல் தடுப்பதற்கு முயல வேண்டும் என்பதை கொழும்பிலுள்ள மூத்த ஐநா அதிகாரிகள் தங்களது பொறுப்பாகவே கருதியிருக்கவில்லை என்றும், நியூயார்க்கிலுள்ள ஐநா தலைமையக அதிகாரிகளும் அவர்களுக்கு அறிவுறுத்தல்களையோ மாற்று உத்தரவுகளையோ வழங்கியிருக்கவில்லை என்றும் இந்த அறிக்கை விமர்சித்துள்ளது.

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது என்பதை வலுவான உத்திகள் மூலம் தெளிவாக கணக்கிட்டுவருகிறது ஐநா என்று அதுவே கூறினாலும், அந்த விவரங்களை ஐநா பிரசுரிக்கத் தவறியது என்பதையும் இந்த அறிக்கை விவரமாக எடுத்துரைக்கிறது.

மேலும் பொதுமக்கள் உயிரிழப்புகளில் பெரும்பான்மையானவற்றுக்குக் காரணம் அரச படையினரின் ஷெல் தாக்குதல்தான் என்பதை இலங்கை அரசின் அழுத்தங்கள் காரணமாக ஐநா தெளிவுபடுத்தியிருக்கவில்லை என்றும் இந்த அறிக்கை குற்றம்சாட்டுகிறது. ஆனால் தகவல்களை உறுதிசெய்ய முடியவில்லை என்பதால்தான் அவற்றை வெளியிடவில்லை என்று ஐநா வாதிடுகிறது.

இவையெல்லாம் ஏன் நடந்தன?

ஐநா கட்டமைப்புக்குள் ஒரு விஷயத்துக்கு மாறாக இன்னொரு விஷயத்தை விட்டுக்கொடுப்பது என்ற ஒரு கலாச்சாரம் அதிகம் என்று இந்த அறிக்கை கூறுகிறது.

யுத்தப் பிரதேசத்தில் மக்களுக்கு சென்று உதவ கூடுதலான இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த மாதிரியான விஷயங்கள் பற்றி வெளியில் பேசாமல் இருந்துவிட ஐநா பணியாளர்கள் தீர்மானித்திருந்தனர் என்று இது சுட்டிக்காட்டுகிறது.

இலங்கையில் யுத்தத்தின் இறுதிக்கட்டம் அரங்கேறியபோது ஐநா பாதுகாப்பு சபையோ, வேறு முக்கிய ஐநா நிறுவனங்களோ ஒருமுறைகூட உத்தியோகபூர்வமாகக் கூடியிருக்கவில்லை. ஐநா உறுப்பு நாடுகளுக்கு எது தெரியவேண்டுமோ அதனை வெளியில் சொல்லாமல், அவர்கள் எதனைக் கேட்க விரும்புவார்களோ அதனைத்தான் ஐநா வெளியில் சொன்னது என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த அறிக்கையைப் பிரசுரித்து அதிலிருந்து படிப்பினைகளை கற்றுக்கொண்டு எதிர்காலத்தில் இப்படியான விஷயம் நடக்காமல் பார்த்துக்கொள்ள ஐநா முயல வேண்டும் என்று ஐநா தலைமைச் செயலர் விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐ.நாவிடம் மன்றாடினோம், அவர்கள் கேட்கவில்லை : 

சாபிரித்தானியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கை தமிழ் பள்ளி ஆசிரியர் ஒருவர் ஐ.நாவின் இச்செயற்பாடு தொடர்பில் கூறுகையில், 'இறுதி யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில், ஐ.நா எமது இடத்தை விட்டு விலகிக்கொண்டிருந்தது. நாம் கெஞ்சினோம். மன்றாடினோம். இங்கிலிருந்து போகவேண்டாம் என்றோம். அவர்கள் எமது கோரிக்கையை ஏற்கவில்லை. அவர்கள் அங்கு தொடர்ந்து நிலை கொண்டிருந்தால், எம்மில் பலர் இன்று உயிரோடு இருந்திருக்கலாம்' என பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசு கடும் எதிர்ப்பு

இதேவேளை பிபிசிக்கு கசிந்துள்ள இந்த விசாரணை அறிக்கை தொடர்பில் இலங்கை அரசு தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. 2009 இறுதி போர் கட்ட நடவடிக்கைகளின் போது இலங்கையிலிருந்த ஐ.நா அதிகாரிகள் அச்சுறுத்தப்பட்டதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டுக்களை தாம் முழுமையாக நிராகரிப்பதாகவும் இலங்கை அரசு கூறியுள்ளது.  இலங்கைக்கான ஐ.நா தூதுவர் பாலித கோஹன்ன இது தொடர்பில் கொழும்பில் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையில்,  'இவை நியாயமற்ற குற்றச்சாட்டுக்கள். இலங்கை போன்ற சிறிய நாடு எப்படி ஐ.நாவை அச்சுறுத்த முடியும்?, அவர்களை யாராலும் அச்சுறுத்த முடியாது' என கூறியுள்ளார்.

ஜோன் ஹோல்ம்ஸ் என்ன கூறுகிறார்?

இதேவேளை ஐ.நாவின் முன்னாள் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான பொறுப்பாளர் ஜோன் ஹோல்ம்ஸ் இந்த அறிக்கை தொடர்பில் தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். ஐ.நா அந்நேரம் சில கடினமான இக்கட்டான நிலைமைகளை எதிர்கொண்டிருந்ததாகவும், அப்போது நாம் வித்தியாசமாக செயற்பட்டிருந்தால், இலங்கை அரசும் வித்தியாசமாக செயற்பட்டிருக்கலாம். அத்தருணத்தில் அது இலகுவாக மீள் ஒருங்கிணைக்க முடிந்த விடயமாக இருக்கவில்லை என கூறியுள்ளார்.

இந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்படுமா?

பான்கீ மூனின் பேச்சாளர் மார்டீன் நெசர்கீயின் தகவல்கள் படி, இந்த அறிக்கை ஐ.நா அமைப்பின் பொதுச்செயலாளர் பான் கீ மூனிடம் ஒப்படைக்க பட்டிருக்கலாம் என ஊகிக்கப்பட்டுள்ளது.

'இலங்கையில் ஐ.நா அமைப்பின் பணிகள் தொடர்பில் தகவல்கள் அடங்கிய ஐ.நா அறிக்கையொன்றி பான் கீ மூனிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், இந்த அறிக்கையை  அவர் விசாரித்த பின்னர் இது பகிரங்கப்படுத்தப்படும்' எனவும் அவர் நேற்று தெரிவித்துள்ளார்.

தாரூஸ்மன் தலைமையிலான நிபுணர்கள் குழு இலங்கை விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயற்பாடுகள் குறித்து மீளாய்வு செய்யும் வகையிலும் இந்த அறிக்கை அமைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இந்த வார இறுதியளவில் அறிக்கை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதி யுத்த அவலங்கள்

இறுதி யுத்தம் முடிவடையும் வரை போர்க்களத்திலிருந்த ஒரே ஒரு சர்வதேச அமைப்பு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மாத்திரமே. யுத்தம் முடிவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் செஞ்சிலுவை சங்கம், 'கற்பனை செய்து பார்க்க முடியாத மிகப்பெரும் மனித அவலம் நடந்து வருவதாக'  தெரிவித்திருந்தது.

சர்வதேச ஊடகங்கள் பாதிக்கப்பட்டிருந்த யுத்த பிரதேசங்களுக்கு செல்வதற்கு இலங்கை அரசால் முற்றாக தடை விதிக்கப்பட்டிருந்தது. வி.புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் எண்ணிக்கை குறித்து ஊடகங்களுக்கு தகவல் கூறிய ஐந்து மருத்துவர்கள், சிறிலங்கா அரசினால்  தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கபப்ட்டனர். கடந்த 2009ம் ஆண்டு ஜூலை மாதம், கொழும்பில் அவர்களை கொண்டு இலங்கை அரசு ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர் மாநாட்டில் அவர்கள் கூறிய விடயங்கள் ஆச்சரியமாக இருந்துள்ளன. இறுதி யுத்தம் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த 2009இன் ஜனவரி - மே வரையிலான காலப்பகுதியில் 700க்கும் குறைவான பொதுமக்களே கொல்லப்பட்டிருந்தனர் என அவர்கள் ஒப்புவித்தனர்.

இறுதியுத்தத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என இலங்கை அரசு இவ்வருடம் ஏற்றுக்கொண்ட எண்ணிக்கையிலும் பார்க்க, அம்மருத்துவர்கள் கூறியது குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஐ.நாவின் விசாரணை அறிக்கை வெளியிட்ட தகவல்களின் படி இலங்கையில் இறுதியுத்தம் நடைபெற்ற ஐந்து மாத காலப்பகுதியில் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்திருந்தது. எனினும் இந்த எண்ணிக்கை இன்னமும் அதிகமாக இருக்கலாம் என ஏனைய தரப்பினர் தெரிவித்திருந்தனர்.

பிபிசி

0 Responses to இறுதியுத்தத்தில் தமிழர்களை பாதுகாக்க தவறியது ஐ.நா: கசிந்தது விசாரணை அறிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com