Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ரஸ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரத்தின் விமான நிலையத்தில் உலகத்தின் முக்கிய தலைவர்கள் இறங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இன்று காலை முதலாவதாக கனடா பிரதமரின் விமானம் வந்தது, பின் துருக்கி விமானம், இத்தாலி விமானம் என்று தலைவர்கள் வரிசைக்கிரமமாக இறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இப்பொழுது சுவீடிஸ் அரண்மனையில் அரச குடும்பத்தினருடன் பேச்சுக்களை நடாத்துகிறார், சொற்ப நேரத்தில் அவருடைய ரஸ்யா நோக்கிய பயணம் ஆரம்பமாகும்.

நேற்று நோடிஸ்க் நாடுகளின் தலைவர்களுடன் மதிய உணவில் பங்கேற்ற ஒபாமா ஐந்து நாடுகளுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை மறுபடியும் புதுப்பித்துக் கொண்டார்.

ஜி 20 மாநாடு உலகப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக நடக்க இருக்கிறது என்றாலும், முக்கிய விடயமாக சிரியா பற்றியே தலைவர்கள் முடிவெடுக்க வேண்டியுள்ளது.

பிரான்சிய அதிபர் ஒலந் முக்கிய பாத்திரம் வகிக்கிறார், இவருக்கு சிரிய போர் தொடர்பாக உள்நாட்டில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பிரதான எதிர்க்கட்சி ஐ.நாவின் பாதுகாப்பு சபையின் அனுமதி பெறாத தாக்குதலுக்காக அமெரிக்காவுடன் கூட்டு சேரக்கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளான சவுதி, எகிப்து போன்றவற்றிடமிருந்தும் ஒபாமாவுக்கு ஆதரவான பச்சைக் கொடி அழுத்தம் திருத்தமாகக் காட்டப்படவில்லை.

மிகமிக கடினமான ஒரு வேலைத்திட்டத்தையே ஒபாமா முன்னெடுத்துள்ளதாக சென் பீட்டர்ஸ் பேர்க்கில் இருந்து டென்மார்க் நிருபர் தகவல் தருகிறார்.

இதற்குள் சிரியா மேலை நாடுகள் மீதான தனது சைபர் தாக்குதல்களை நேற்றே ஆரம்பித்திருக்கிறது.

சிரிய எலக்ரோனிக் ஆமி என்ற பெயரில் அமெரிக்கக் கடற்படை இணையத்தளம் மீது தாக்குதல் நடாத்தப்பட்டு, செயலிழக்கச் செய்ய முயற்சிக்கப்பட்டது.

பல மேலை நாடுகளின் இணையத்தளங்கள் இப்போது சிரிய எலக்ரோனிக் ஆமியின் ஹேக் தாக்குதலில் உள்ளன.

மறுபுறம் ரஸ்ய அதிபர் புற்றின் ஐ.நாவின் பாதுகாப்பு சபையின் ஆதரவில்லாமல் சிரியா மீது தாக்குதல் நடாத்தக்கூடாது என்று பேட்டியளித்துள்ளார்.

ஜி – 20 மாநாடு உலகளாவிய பொருளாதார உயர்வும், பொருளாதார மந்தத்தில் இருந்து முழு உலகையும் மீட்கும் சிந்தனைகளை முன்னெடுக்கவே கூடுகிறது.

ஆனால் அங்கு ஒபாமா முன் வைக்கும் திட்டமோ அதற்கு எதிர்மாறாக இருக்கிறது, இதனால் தலைவர்களிடையே கடுமையான மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

முதலாவது சிரிய போர் ஆரம்பித்தால் எரிபொருள் விலை மறுபடியும் வேகமாக உயரும் ஒரு பீப்பாய்க்கு ஒரு டாலர் என்றளவில் உயர்ந்தாலே இந்தியா 900 மில்லியன் டாலர்கள் நட்டமடையும்.

இதுபோல உலக நாடுகள் எல்லாமே நஷ்டத்தை சந்திக்க நேரிடும், எரிபொருள் விலை உயர்வென்பது இடியாப்பம் விற்கும் இளையதம்பி கடையின் அடுப்பில் இருந்து பில்கேய்ற்சின் பிளேன் வரை விலை உயர்வை ஏற்படுத்தும்.

ஈராக் போரால் ஏற்பட்ட சிக்கல்களே இன்றைய உலகப் பொருளாதார மந்தத்தின் பிரதான காரணம், இதிலிருந்து விடுபட முன்னரே சிரியப் போர் வந்தால் அது உலகத்தை பாதாளத்தில் தள்ளும் வேலையாகும்.

1470 பேர் நச்சு வாயுவில் செத்ததற்காக பல்லாயிரக்கணக்கான உலக மக்களை பட்டினியில் கொல்லாமல் ஏதாவது வழியில் பேசித் தீர்த்து இந்த நஷ்டத்தில் இருந்து உலகத்தை காக்க உதவும்படி ஜி 20 தலைவர்கள் கேட்பார்கள்.

நடக்கப்போகும் பட்டிமன்றத்தில் ஒபாமா வெற்றி பெறவேண்டும், ஆனால் ஒபாமாவின் வாதங்கள் பலவீனமாகவே இருக்கின்றன.

நேற்று செனட்டில் பேசியோது யோன் கார்ரி முன்வைத்த வாதங்களும் அழுத்தம் திருத்தமான ஆவணங்களையும், ஆதாரங்களையும் முன் வைக்கவில்லை.

பல இட்டுமுட்டான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அவர் தள்ளாடி மைக்கைத் தட்டிவிட்டதையும் காண முடிந்தது.

அதேபோல நேற்று சுவீடன் தலைநகர் ஸ்ரொக்கோமில் ஒபாமா கேள்விகளுக்கு பதிலளித்தபோதும் அவருடைய பதிலில் ஒரு பிடிமானம் இருக்கவில்லை.

சிவப்புக் கோட்டை சிரியா தாண்டிவிட்டதென தான் சொல்லவில்லை அதை உலகம் சொல்லுகிறது என்று இவர் கூறியிருக்கிறார்.

ஆனால் அவருடைய வாயினாலேயே இந்த வாசகம் இரண்டு மாதங்களுக்கு முன் வெளிவந்தது.

அவரைத்தவிர உலகத்தின் வேறெந்தத் தலைவரும் இந்தச் சிவப்புக் கோடு பிரகடனத்தை பேசவே இல்லை.

தாமே ஒரு முடிவை எடுத்துவிட்டு மக்கள் சொல்கிறார்கள் என்று நமது தமிழர்கள் கடந்தகாலங்களில் கூறியது போன்ற ஓர் அர்த்தமற்ற உதாரணமாகவே ஒபாமாவின் கருத்து இருக்கிறது.

இந்தப் பலவீனமான ஆதாரங்களுடன் ஜி 20 தலைவர்களை திருப்திப்படுத்துவது மிகக் கடினம், அதுதான் ஒபாமா கடினமான சிலுவையை தூக்க முற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அன்று கோப் 15 உலகக் காலநிலை மாநாட்டில் மாநாட்டில்..

எப்படி முடிவெடுக்க முடியாமல் தலைவர்கள் தகிடுதத்தம் போட்டு திரும்பினார்களோ அதே நிலைதான் இங்கும் வரும் என்பதை இப்போதே உணர முடிகிறது..

அடுத்து என்ன..

மேலும் சில மணி நேரங்கள் காத்திருக்க வேண்டும்…

அலைகள்

0 Responses to ஜி – 20 மாநாடு பட்டிமன்றத்தில் வெல்வாரா ஒபாமா..?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com