Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்கா அரசாங்கத்தின் பயங்கரவாத நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகம் சிங்கள ஆட்சியாளர்களிடம் நியாயம் கிடைக்கும் என்பதை 2009ம் ஆண்டுக்கு பின்னர் சிறிதளவேனும் எதிர்பார்க்கவில்லை.

தாயகப் பகுதியில் நடைபெறும் அனைத்து கொடூரத்தனமான செயற்பாடுகளுக்கு அனைத்துலக சமூகம்தான் தீர்வைப் பெற்றுத்தரவேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகவுள்ளது. அதன் எதிர்பார்ப்பின் உச்சக்கட்டமானது கடந்த மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் நடைபெற்ற போது பெரும் மலையான நம்பிக்கையை பாதிக்கப்பட்ட தமிழ் சமூகம் எதிர்பார்த்தது.

ஆனால் நிகழ்வுகள் அனைத்தும் ஒரு புஸ்வானமாக போனதையும் அனைவரும் அறிவோம். ஆனால், தமிழர்களின் ஒரு இயல்பான பண்பாக தாம் எத்தனை தடவைகள் வீழ்ந்தாலும் மீண்டும் எழுவோம் என்ற நம்பிக்கைக்கு அமைவாக அடுத்த தடவை பார்ப்போம் என்ற சவாலை விடுத்திருந்தார்கள்.

அதாவது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையினால் தமிழர்க்கு ஒரு நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கவில்லை. எனினும், சிறீலங்கா அரசாங்கத்தின் அரக்கத்தனமாக இனப்படுகொலையை உலகம் அறிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும் என்பதே தவிர தமிழர்கள் எதிர்பார்க்கும் தமிழீழம் கிடைக்கும் என்பதற்கல்ல. ஈழத்தைப் பெற்றுக்கொள்வதற்கு மனித உரிமை பேரவையும் ஒரு துரும்பாக பயன்படுத்தப்படலாம் என்பதே அதன் உள்நோக்கம்.

ஆனால், தாயகப் பகுதியில் இடம்பெற்ற தமிழ் இன அழிப்பானது சிறீலங்காப் படைகளினால் மாத்திரம் செய்து முடிக்கப்படவில்லை என்பதற்கு பல ஆதாரங்கள் தற்போதும் கிடைத்தவண்ணமாகத்தான் உள்ளன. இதில் ஒன்றுதான் ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளார் சிறீலங்கா வந்து தாயகப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட போது, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களினால் ஆட்கொணர்வு மனு ஒன்று தாக்குதல் செய்யப்பட்டது. அதில் முக்கியமாக தெரிவிக்கப்பட்டது, முல்லைத்தீவு கடற்பரப்பில் இந்தியக் கொடியைத் தாங்கிய போர்க்கப்பல் ஒன்றில் இருந்து தரைப் பகுதியை நோக்கி தாக்குதல் நடாத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருப்பதுதான் முக்கிய விடயம்.

சிறீலங்காவினால் இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டு நான்கு வருடங்களில் பல உண்மைத் தகவல்கள் வெளிவந்த போதிலும், ஆட்கொணர்வு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்த விடயம் புதியவை. காரணம், பிரித்தானிய, பாகிஸ்தான், சீனா, உட்பட பல நாடுகள் ஆயுதங்களையும், அமெரிக்கா தொழில்நுட்ப வசதிகளையும், ராடர்களையும் மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் வழங்கின. ஆனால், இந்தியா கனரக யுத்தத் தளபாடங்களை வழங்கியதுடன், வஞ்சம் தீர்ப்பதற்காக அப்பாவித் தமிழ் மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டனர். அதனால்தான், தாயகப் பகுதியில் இடம்பெற்ற இனப்படுகொலை கூட்டு நடவடிக்கையாகும். மேற்குலக நாடுகளுக்கு சிறீலங்கா அரசாங்கம் வழங்கிய பொய்யான தகவல்களினால், விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பாக சித்தரித்துக் காட்டினர். அத்துடன், அமெரிக்கா மற்றும் பிரித்தானிய நாடுகளில் முஸ்ஸிம் தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட சில தீவிரவாத நடவடிக்கையினால் விடுதலைப் புலிகளையும் அவ்வாறானதொரு அமைப்பாகத்தான் கணக்குப் போட்டதே தவிர அது மக்களின் விடுதலைக்காக போராடும் ஒரு போராட்ட அமைப்பாக அவர்கள் அவதானிக்கவில்லை.

இவ்வாறான செயற்பாடுகளின் பின்னணியில்தான் மார்ச் மாதம் நடைபெற்ற மனித உரிமை பேரவை மாநாட்டில் முன்னுக்குப் பின்னான கருத்து முரண்பாடுகள் உலநாடுகளிடையே எழுந்தன. அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களும் பல சரத்துக்கள் அகற்றப்பட்ட நிலையில் நிறைவேறிதையும் நாம் அறிவோம். இதனையடுத்து, பொதுநலவாய நாடுகளின் மகாநாடு சிறீலங்காவில் நடைபெறக் கூடாது என்பதில் புலம்பெயர் சமூகம் மிகவும் உச்சிப்பாக இருந்து, சிறீலங்காவுக்கு ஆதரவு வழங்கும் வெளிநாடுகளுக்கு சிறீலங்காவின் கொடூர முகத்தை வெளிக்காட்டுவதற்காக பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். அதற்குள்தான், மனித உரிமை ஆணையாளரின் சிறீலங்காவுக்காகன விஜயம் சூடுபிடிக்கத் தொடங்கியது. ஆரம்பத்தில் சிறீலங்கா அரசு பல குழறுபடிகளை மேற்கொண்டு அவரின் விஜயத்தை தடுக்க முற்பட்ட போதிலும், தொடர்ச்சியான உலக நாடுகளின் அழுத்தங்கள் மற்றும் பொதுநலவாய நாடுகளின் மகாநாடு போன்ற விடயங்களை கருத்தில் கொண்ட சிறீலங்கா அரசாங்கம் ஆணையாளரின் விஜயத்திற்கு பச்சைக் கொடிகாட்டியது.

சிறீலங்கா அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் அவரின் விஜயம் கசப்பாக இருந்தாலும் பாதிக்கப்பட்ட தமிழர்களைப் பொறுத்தவரையில் பெரும் எதிர்பார்ப்புக்களைக் கொண்டது. எவ்வாறாயினும், இனவாத சிங்கள அமைப்புக்கள் அவரை விமர்சனம் செய்தாலும், ஆணையாளர் தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. இறுதியாக ஆணையாளர் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது, அரசாங்கத்தை எச்சரிப்பதைப் போன்ற அறிக்கைகளை வெளிப்படுத்தினாலும், பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில் அது எந்தளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆணையாளர் சிறீலங்கா விஜயம் மேற்கொண்டு உண்மையாக சிங்களப் படைகளினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு தன்னால் முடிந்தவற்றை செய்வதாக தெரிவித்தமை ஒரு ஆறுதல் அளிக்கும் வியடமாக நோக்கினாலும், பல குறைபாடுகளையும் நாம் அவதானிக்க தவரவில்லை.

தமிழர்களின் புரையோடிப் போயுள்ள தமிழர்களின் இனப்பிரச்சினையில் முப்பது வருடகால ஆயுதப் போராட்டத்தில் தமிழர்கள் எதிர்கொண்ட துன்ப துயரங்களை அளவிடுவதற்கு ஆணையாளரின் ஒருவாரகால விஜயம் போதுமானதாகயில்லை. காரணம், வடக்கு கிழக்கு மாகாணத்தில் எட்டு மாவட்டங்கள் உள்ளன ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிங்களப் படைகளினால் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலை வரலாற்றுப் படிவுகள் இன்னும் காணப்படுகின்றன. அந்த வகையில், மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் கடந்த காலங்களில் பல இனப் படுகொலை இடம்பெற்றன. அவற்றை மேற்கொண்ட சிங்களப் படைகள் மீது இதுவரையில் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு வேறு இடங்களுக்கு மாற்றியதுதான் உண்மை.

கடந்த காலங்களில் ஆட்சி செய்த சிங்களப் பேரினவாத சக்திகளினால் ஒவ்வொரு படுகொலை சம்பவங்களையும் விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால், அவை எதுவும் சுதந்திரமாக செயற்படவுமில்லை. குற்றவாளிகளை கண்டுபிடிக்கவுமில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் மைலந்தனைப் படுகொலை, சத்துருக்கொண்டான் படுகொலை, கொக்கட்டிச்சோலை படுகொலை, மகிழடித்தீவு படுகொலை, தோணிதாண்டமடு படுகொலை போன்றவற்றைக் குறிப்பிட்டாலும், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 158 பேரை விசாரணை என்ற போர்வையில் சிங்களப் படைகள் அழைத்துச் சென்றனர். அவர்களின் நிலை இதுவரையில் என்ன என்று தெரியாது.

அதேபோன்று, அம்பாறை மாவட்டத்தில் உடும்பன்குளம், திராய்க்கேணி, கண்ணகிபுரம் 35ஆம் கொலனி, வீரமுனை போன்ற தமிழ் கிராமங்களில் இனப்படுகொலைகள் இடம்பெற்றன. இவற்றுக்கு எதுவரையில் தீர்வு எட்டப்படவில்லை. இந்த இரு மாவட்டங்களில் பல தமிழ் கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளன. தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் நிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன. இவற்றுக்கு எதிராக பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டாலும், இறுதி முடிவுகள் பூச்சியமாகத்தான் உள்ளது.

இவற்றையெல்லாம்  விட கிழக்கில் போர் முடிந்துவிட்டதாக தெரிவித்த 2007 ஆம் ஆண்டுக்குப் பின்னனர் 300 பேர் சிறீலங்காப் படைகள், ஒட்டுக்குழுக்கள், படையினர் என ஆயுதம் ஏந்தியவர்களினால் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர். இவ்வாறு அம்பாறை மாவட்டத்திலும் இடம்பெற்றுள்ளது. இவற்றை விசாரணை செய்வதற்கு சிறீலங்கா அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவும் விஜயம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து தகவல்களைப் பெற்றுச் சென்றனர். ஆனால், ஒரு முடிவும் இதுவரையில் கிடைக்கவில்லை. அவ்வாறு, பிள்ளைகளையும், கணவன்மார்களையும், இழந்து இன்று துன்பப்படும் மக்களை ஆணையாளர் சந்திப்பது மிகவும் இன்றியமையாதொன்றாகும்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளாமையின் உள்ள இரகசியம் என்ன? மனித உரிமைகள் ஆணையாளரின் நிகழ்ச்சி நிரலில் இந்த இரு மாவட்டங்களும் உள்ளடக்கப்படவில்லையா? அல்லது அரசாங்கம் அவரைப் போகவிடாது தடுத்துவிட்டனரா? அவ்வாறு தடுத்திருந்தால், அதற்கான காரணம் என்னவாக இருக்கும். சிறீலங்கா அரசாங்கம் இன்று தெரிவித்துவரும் கருத்து வடக்கில் ஒரு சிறிய பகுதியினர்தான் குழப்பங்களை ஏற்படுத்துகின்றார்கள் கிழக்கில் அவ்வாறில்லை என்ற மாதிரியான பிரச்சாரங்களை மேற்கொண்டுவருகின்றனர்.

பாதிப்புக்கள் என்றவகையில் வடக்கு கிழக்கு என்று அமையவில்லை தமிழர் என்ற வகையில் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு விடயம் என்னவென்றால் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் ஒட்டுக்குழுக்களை வைத்துக் கொண்டு அரசாங்கம் இவ்வாறு விளம்பரம் செய்ய முற்படுகின்றனர். ஆனால், பாதிக்கப்பட்ட தமிழர்கள் என்றவகையில் அனைவரும் நீறுபூத்த நெருப்பாகத்தான் உள்ளார்கள் என்பதுதான் உண்மை.

நன்றி: ஈழமுரசு

-தாயகத்தில் இருந்து எழுவான்

0 Responses to மனித உரிமைகள் ஆணையாளருக்கு இனப்படுகொலை இடம்பெற்ற மாவட்டங்களை மறைத்தனரா? அல்லது மறந்ததாரா?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com