Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”
Showing posts with label Maaveerar Naal 2016. Show all posts
Showing posts with label Maaveerar Naal 2016. Show all posts

ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான குறு வெளியொன்று தாயகத்தில் இம்முறை திறந்தது. அதன் பின்னரான கடந்த ஒரு வார காலத்தில் தமிழ்ச் சமூக, அரசியல், ஊடகப் பரப்பு குறிப்பிட்டளவான உரையாடல்களை நிகழ்த்தியிருக்கின்றது. அதில், தமிழ்த் தேசியப் போராட்டத்தில் உயிர்நீத்த அனைவரையும் நினைவுகூருவதற்கான பொது நாளொன்றின் அவசியம் பற்றிய உரையாடல் கவனம் பெற்றது. 

தமிழ்த் தேசியப் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களை பொதுவான நாளொன்றின் கீழ் நினைவுகூர வேண்டும் என்கிற கோரிக்கை இன்று எழுந்தது அல்ல. அது, 2000களின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டளவில் எழுப்பப்பட்டது. விவாதிக்கப்பட்டது. அது தொடர்பிலான நியாயப்படுகள் தமிழீழ விடுதலைப் புலிகளிடமும் எடுத்துக் கூறப்பட்டிருந்தது.

அரசியல் விடுதலைக்கான போராட்டத்தினை முன்னெடுக்கும் சமூகமாக தமிழ் மக்களுக்கு தமக்காக உயிர்நீத்தவர்களை நினைவு கூருவதற்கான கடப்பாடும், அவர்களின் கனவுகள் மீதான நியாயத்தன்மையை பொறுப்புணர்வோடும் கள யதார்த்தத்தோடும் கொண்டு சுமப்பதற்கான பொறுப்பும் உண்டு. அந்த வகையில் உள்முரண்பாடுகள் தாண்டி நியாயமான வெளியொன்றை நோக்கி நகர வேண்டிய அவசியம் அவசரமானது. அதுதான், அடுத்த தலைமுறையிடம் போராட்டத்தின் நியாயத்தன்மைகளை சரியாகக் கொண்டு சேர்ப்பதற்கும் உதவும். அது, எந்தவித ஏற்றத்தாழ்வும் புறக்கணிப்பும் இன்றியதாக இருக்க வேண்டும். அதன்போக்கிலேயே தமிழ்த் தேசியப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான பொது நாளொன்றின் தேவை முக்கியத்துவம் பெறுகின்றது.

தமிழ்த் தேசிய போராட்டம் ஆரம்பித்தது முதல் ‘தியாகிகள்- துரோகிகள்’ வரலாற்று உரையாடலும் ஆரம்பித்துவிட்டது. பல நேரங்களில் ஆதிக்கம் பெற்ற தரப்புக்கள் விதிப்பவையே இறுதித் தீர்ப்பாக மொழியப்பட்டு பலரும் தியாகிகளாகவும், துரோகிகளாகவும் அடையாளப்படுத்தப்பட்டனர். ஆனால், கால மாற்றம் தியாகிகள் அடையாளத்தை விமர்சன ரீதியில் அணுகவும், துரோகிகள் தொடர்பிலான உரையாடலின் வீரியத்தை குறைக்கவும் செய்தது. அல்லது, நியாயமான உரையாடலுக்கான களம் அதனை உருவாக்கியது.

தமிழ்த் தேசியப் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூருவதற்கான பொது நாளொன்றை அடையாளம் கொள்வதற்கு முன்னர், தமிழ் மக்களின் பொது உளவியலில் சில முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டும். அதில் முக்கியமானது, உயிர்நீத்தவர்களின் அர்ப்பணிப்பு எதற்கானது என்பது தொடர்பிலானது. அந்தச் சிந்தையே அடிப்படையான முன்னேற்றமாக இருக்கும். அஹிம்சை வடிவத்திலிருந்து தமிழ்த் தேசியப் போராட்டக்களம் ஆயுத வடிவம் பெற்ற தருணத்தில் உள்வந்த அனைவரும் தனி ஈழத்தினையும், தமிழ் மக்களின் விடுதலையையுமே பிரதானமாகக் கொண்டார்கள். அதற்காகவே அவர்கள் உயிரையும் அர்ப்பணித்தார்கள். அதனை, மனதார ஏற்றுக் கொள்ளாமல் நினைவுகூருவதற்கான பொது நாள் பற்றிய உரையாடல் அடுத்த கட்டத்துக்கு செல்லவே முடியாது.

உதாரணமொன்று, 1984ஆம் ஆண்டு திருகோணமலைக் கடற்பரப்பில் புளோட் அமைப்பின் போராளிகள் சிலர் இலங்கை விமானப்படையின் தாக்குதலில் உயிரிழந்தார்கள். அதில், உயிரிழந்தவர்களில் ஒருவரான க.ஜெயராசாவின் நினைவுத்தூபியொன்று யாழ்ப்பாணத்தில் அவரது சொந்தக் கிராமத்தில் குடும்பத்தினரால் 1991ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதில், எந்தவிதமான இயக்க அடையாளமும் இருக்கவில்லை. ஆனாலும், அப்போது அது அனுமதிக்கப்படவில்லை. அவரின் படத்தை நீக்குமாறும் கோரப்பட்டது.  அதனை குடும்பத்தார் ஏற்க மறுத்த தருணத்தில் அது பலவந்தமாக நீக்கப்பட்டது. 

2007ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற இராணுவத்துடனான மோதலில் இரு போராளிகள் உயிரிழந்தார்கள். அதில், ஒருவர் சுமன். இந்தச் சுமன், புளொட் அமைப்பிலிருந்து உயிரிழந்த ஜெயராசாவின் ஒரே மகன். சுமனின் உடலம் உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் அடக்கம் செய்யப்பட்டது.  இந்தத் தகப்பனையும்- மகனையும் தமிழ் மக்கள் எப்படி நோக்குவார்கள். ஒருவரை தேவையற்ற அடையாளத்துக்குள்ளும், இன்னொருவரை மாவீரராகவும் கொள்வது நியாயமாகுமா?  தந்தையும், மகனும் ஒரே விடயத்துக்காக தங்களுடைய உயிர்களை அர்ப்பணித்திருக்கின்றார்கள்.

மாற்று இயக்கங்களை விடுதலைப் புலிகள் தடை செய்த 1980களின் இறுதியில் தமிழ் மக்களின் மனநிலை ஒட்டுமொத்தமாக புலிகளின் இயங்கு நிலைக்கு ஏற்ப இசையத் தொடங்கியது. அதில் நியாயங்கள் தொடர்பிலான காரணங்களும் நிறைய உண்டு. ஆனால், போராட்டக்களத்தில் அர்ப்பணித்தவர்களை நினைவு கூருவதற்கான வெளியை அடைவது தொடர்பில் பெரும் சிக்கல் அப்போதும் இருந்தது.  அது, 1980களின் இறுதியில் தோற்றம் பெற்று 1990களில் மூர்க்கம் பெற்று வளர்ந்தது. அந்த நிலையில், உண்மையிலேயே தமிழ் இன விடுதலைக்கான போராட்டத்தினை வாழ்க்கையாக ஏற்று மடிந்தவர்களையும் மறக்கவும், பல நேரங்களில் நிராகரிக்கவும் வேண்டி வந்தது. அந்த சூழ்நிலையின், எச்சமான மனநிலை இன்னமும் நீடிக்கின்றது. ஜெயராசா இறக்கும் போது தன்னுடைய இறப்பின் மேல் துரோகி அடையாளம் விழும் என்று நினைத்திருக்க மாட்டார். இப்படி, நூற்றுக்கணக்கானோரின் அர்ப்பணிப்புக்களையும் நாம் அங்கீகரிக்க வேண்டிய கடமையோடு இருக்கின்றோம். சுமன் மாத்திரமல்ல, அவரது தந்தையும் தமிழ்த் தேசிய வீரராக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

ஆனால், சிலரின் தவறும், தவறான வழிநடத்தலும் தமிழ்த் தேசிய விடுதலைக்கான அர்ப்பணிப்பையோ, அவர்களின் உயிர்கொடைகளையோ மறுதலிப்பதாக இருந்தால், அதனைச் சரி செய்து அடுத்த கட்டங்கள் நோக்கிய பயணத்தை ஆரம்பிப்பதும், வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுவதும் இன்றுள்ளவர்களின் பொறுப்பாகும். அது உண்மையில் சுலபமானது அல்ல. பல விடயங்களுக்காக மன்னிக்கவும், பல விடயங்களுக்காக மன்னிப்புக் கோரவும் வேண்டியிருக்கும். ஆனால், அதனைச் செய்வதும் அவசியமானது. அது கட்சி, இயக்க, அமைப்பு சார் இயங்கு நிலைகளுக்கு அப்பாலிருந்து அணுகப்பட வேண்டியது.

நினைவு கூருவதற்கான பொது நாளொன்றை வரையறுப்பது தொடர்பில் குறிப்பிட்டளவானவர்கள் உடன்படத்தான் செய்கின்றார்கள். ஆனால், அது என்ன நாள்? என்பதில் தான் சிக்கல் நீடிக்கின்றது. சிலர், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமான மே 18ஐ, தமிழ்த் தேசிய வீரர்கள் தினமாக அனுஷ்டிக்க வேண்டும் என்கிறார்கள். இன்னும் சிலரோ, மாவீரர் நாளான நவம்பர் 27க்குள் அனைவரும் உள்ளடக்கப்பட வேண்டும் என்கிறார்கள். இன்னும் சிலரோ, இந்த உரையாடல்களை பெரும் எரிச்சலோடு பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

நவம்பர் 27, என்பது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து உயிர்நீத்தவர்களை நினைவுகூருவதற்கான நாள். இயக்கத்தின் மூத்த தளபதிகள் தொடக்கம் கடைநிலை போராளியாக இருந்து உயிர்நீத்தவர் வரை அனைவரும் பொதுவானவர்கள், ஏற்றத்தாழ்வுகளுக்கு அப்பாலானவர்கள் என்கிற அடையாளத்தோடு நினைவுகூரப்பட வேண்டியவர்கள் என்கிற கடப்பாட்டினை உறுதிப்படுத்துவதற்காக, புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் சங்கரின் நினைவு தினத்தை மாவீரர் தினமாக பிரகடனப்படுத்தியதாக தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தன்னுடைய முதலாவது மாவீரர் தின உரையில் குறிப்பிடுகின்றார். சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் ஆற்றப்பட்ட அந்த உரையை இன்று திரும்பிப் பார்க்கின்ற போது, அதில் நிறைய குற்றங்களையும் குறைகளையும் காண முடியும். ஆனால், அது, போரியல் யுத்திகளை உள்வாங்கி  வளர்ந்து கொண்டிருந்த இயக்கமொன்றின் தலைவராக, தன்னுடைய இயக்கத்தின் ஆதிக்கத்தை உறுதி செய்வதற்கான தருணத்தில் ஆற்றப்பட்ட உரை. அந்த உரையின் பெரும் பகுதிகளிலிருந்து 2000க்குப் பின்னரான காலத்தில் தலைவரே மாறியிருந்தார். அவர், துரோகியாக விலக்கி வைத்த பலரையும் அரசியல் ரீதியாக இணைத்துக் கொண்டு பயணிப்பதற்கும் முயற்சித்தார். அதனை சில விடயங்களில் நிகழ்த்தியும் காட்டினார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது தமிழ் மக்கள் தொடர்ச்சியாக படுகொலை செய்யப்படுவதற்கான நிகழ்கால சாட்சிக் கூடம். அது, தெற்கில் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட பெரும் படுகொலைகளிலிருந்து ஆரம்பித்து முள்ளிவாய்க்காலுக்குள் வந்து நின்றது. அதன் தொடர்ச்சி பற்றிய அச்சுறுத்தல் இன்னமும் இருக்கின்றன. அது, தமிழ் மக்கள் மீதான படுகொலைகளுக்கான நினைவுநாளாக கொள்ள வேண்டும். அதுதான் பொருத்தமாக இருக்கும். மாறாக, அதனை உயிரிழந்த போராளிகள் அனைவரையும் நினைவு கொள்வதற்கான நாளாக மாற்றுவது பொருத்தமானதல்ல.

நினைவுகூருவதற்கான பொதுநாள் பற்றிய உரையாடல்களில், தமிழ்த் தேசியப் போராட்டக்களத்தில் உயிரிழந்தவர்களில் 90 வீதத்துக்கும் அதிகமானவர்கள் புலிகள் இயக்கப் போராளிகள் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. ஆக, மாவீரர் நாளையே தமிழ்த் தேசிய வீரர்களை நினைவு கூருவதற்கான பொதுநாளாக கொள்வதுதான் சாத்தியமானது. ஏனெனில், ஏற்கனவே மக்கள் அதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி வரும் நிலையில், ஏனைய இயங்கங்கள், அமைப்புக்கள், கட்சிகளில் இருந்து உயிரிழந்தவர்களையும் மாவீரர் நாளுக்குள் உள்வாங்கிக் கொள்வது இலகுவானது. மாறாக, புதியதொரு நாளை நோக்கி நகர்வது மக்களிடமிருந்து அந்நியமாக செல்வதாக முடியும். அது, ஒப்புக்கு ஒருநாளாக மாறும் வாய்ப்புண்டு. அதனை, வேறு தரப்புக்கள் சூழ்ச்சிகளைப் பின்னுவதற்கான வாய்ப்புக்களையும் உருவாக்கும்.

இந்த இடத்தில், முதலாவது மாவீரர் தின உரையில் தலைவர் பிரபாகரன் ‘மாற்று இயக்கங்களை துரோகிகள்’ என்று அழைத்தார் என்று கூறிக் கொண்டு வருபவர்கள், தலைவரின் 2000ஆம் ஆண்டுக்குப் பின்னரான நிலைப்பாட்டினைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது, அவர் ஒரு காலத்தில் தடை செய்தவர்களையெல்லாம் இணைத்துக் கொண்டு பயணிப்பதற்கான கட்டத்தை அடைந்தார். அதனை கிட்டத்தட்ட நடத்தியும் காட்டியிருந்தார். அரசியலில் மாற்றங்கள் சாத்தியமானது. அதோடு தலைவரும் உடன்பட்டிருந்தார். அப்படியான நிலையில், மாவீரர் நாளை, தமிழ்த் தேசியப் போராட்டத்தில் உயிர்நீத்த அனைவரையும் நினைவுகூருவதற்கான பொது நாளாக கொள்வதே பொருத்தமானதாக இருக்கும். அது, எதிர்காலத்தில் சாத்தியப்படுத்தப்பட வேண்டும்.

4TamilMedia

மாவீரர் நாள் 2016 (நிலாந்தன்)

பதிந்தவர்: தம்பியன் 05 December 2016

இம்முறை தாயகத்தில் மாவீரர்நாள் ஒரு வெகுசன நிகழ்வாகவும் அனுஷ்டிக்கப்பட்டது. அரசியல்வாதிகளின் நிகழ்வாகவும் அனுஷ்டிக்கப்பட்டது. மே பதினெட்டுக்குப்பின் தாயகம் தமிழகம் டயஸ்பொறா ஆகிய மூன்று தரப்புக்களும் ஒரே நாளில் ஒரு விடயத்துக்காக உணர்வுபூர்வமாக ஒன்று திரண்ட மிக அரிதான நிகழ்வுகளில் அதுவும் ஒன்று.

தாயகத்தில் அதை ஒரு வெகுசன நிகழ்வாக ஒழுங்குபடுத்திய அரசியல்வாதிகளே அதைத் தங்களுடைய நிகழ்வாகவும் வடிவமைத்திருந்தார்கள் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

கடந்த ஏழாண்டுகாலப் பகுதிக்குள் தமிழ் மக்கள் துணிந்து காலடிகளை முன்வைத்த மற்றொரு நிகழ்வு அது. கடந்த ஏழு ஆண்டுகளில் தாயகத்தில் முதன்முதலாக ஒரு வெகுசன நிகழ்வாக அனுஷ்டி க்கப்பட்ட மாவீரர் நாள் இது. மாற்றத்தின் விரிவை தமிழ் மக்கள் வெற்றிகரமாக பரிசோதித்த ஒரு வெகுசன நிகழ்வும் இது. ஆட்சி மாற்றத்தை உடனடுத்து யாழ் பல்கலைக்கழக சமூகமூம் சிவில் சமூகங்களும் இணைந்து யாழ்ப்பாணத்தில் முதலாவது பெரிய ஊர்வலத்தை ஒழுங்குபடுத்தியிருந்தன. அதன் பின் இவ்வாண்டு மே மாதம் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நினைவு கூரப்பட்டது. அதன் பின் எழுக தமிழ், இப்பொழுது மாவீரர் நாள்.

முன்னைய மூன்று நிகழ்வுகளும் ஆயுதப் போராட்டத்தோடு நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கவில்லை. அவை பெருமளவுக்கு பொதுமக்கள் சம்பந்தப்பட்டவை. ஆனால் மாவீரர் நாள் அப்படியல்ல. அது புலிகள் இயக்கத்தின் தியாகிகளை நினைவு கூரும் ஒரு நாள். அந்த இயக்கம் இலங்கைத்தீவில் இப்பொழுதும் தடை செய்யப்பட்டுள்ளது. அந்த இயக்கத்தின் இலட்சியமாகிய தனிநாட்டுக் கோரிக்கைக்கு எதிரான ஆறாவது திருத்தச்சட்டம் இப்பொழுதும் அரசியல் யாப்பில் உண்டு. தவிர தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்டத்தைப் பயங்கரவாதமாகப் பார்க்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம் இப்பொழுதும் அமுலில் உண்டு. அச்சட்டத்தின் கீழ் கடந்த மாதமும் சில கைதுகள் செய்யப்பட்டுள்ளன.

இத்தனை தடைகளையும் தாண்டி மாவீரர் நாளை ஒரு வெகுசன நிகழ்வாக அனுஷ்டித்தமை என்பது அதில் பங்குபற்றிய சாதாரண சனங்களைப் பொறுத்தவரை ஒரு துணிச்சலான அடிவைப்புத்தான். அதை யாராவது அரசியல்வாதிகள் அல்லது கட்சிகள் தான் முன்னெடுக்க வேண்டியும் இருந்தது. புலிகள் இயக்கத்தின் வீரத்தையும், தியாகத்தையும் காட்டி வாக்குக் கேட்ட அரசியல் வாதிகளே அதை முன்மாதிரியாகச் செய்யவும் வேண்டியிருந்தது. தமிழ் கட்சிகளும், அரசியல்வாதிகளும் தமது வீரத்தையும், விசுவாசத்தையும் எண்பிக்க வேண்டிய ஒரு நிகழ்வாகவும் அது காணப்பட்டது.

“ஒரு நாடு இருதேசம்” என்ற கொள்கையை முன்வைக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது மாவீரர்நாளை முன்வந்து நடாத்தும் என்று ஓர் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்தக்கட்சி அதை துயிலுமில்லங்களில் செய்யவில்லை. மாறாக தமது அலுவலகத்தோடு மாவீரர்நாளை மட்டுப்படுத்திக் கொண்டது. அங்கும் கூட அதை அவர்கள் மாவீரர் நாளாக அனுஷ்டிக்கவில்லை. போரில் உயிர்துறந்த அனைவரையும் நினைவு கூரும் ஒரு நிகழ்வாகவே அது அனுஷ்டிக்கப்பட்டது. அதற்கு அக்கட்சி பின்வருமாறு விளக்கம் கூறியது.

புலிகள் இயக்கத்துக்கு எதிரான சகல சட்ட ஏற்பாடுகளும் அப்படியே அமுலில் இருக்கும் ஓர் அரசியற் சூழலில் அந்த இயக்கத்தின் தியாகிகளை நினைவு கூர்வது என்பது சட்டரீதியாக ஆபத்தானது. தமது கட்சி அந்த நாளை துயிலுமில்லங்களில் அனுஷ்டி த்தால் அதைச் சாட்டாக வைத்தே அரசாங்கம் தம்மை சட்ட ரீதியாக முடக்க முயற்சிக்கலாம் என்று அக்கட்சியினர் தெரிவித்தார்கள். ஏற்கனவே தமது கட்சியைச் சேர்ந்த சிலர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதையும் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டதையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

அரசாங்கம் ஒரு புதிய யாப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அதில் இனப்பிரச்சினைக்கான தீர்வும் உள்ளடக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டமைப்பு அந்தத்தீர்வின் பங்காளிபோல தோன்றுகிறது. எனவே அத்தீர்வைக் கேள்விக்குட்படுத்தக் கூடிய தமிழ் தரப்புக்களில் முக்கியமானது தமிழ் தேசிய மக்கள் முன்னணிதான். எனவே அந்தக் கட்சியை சட்டரீதியாக முடக்கி வைத்திருக்க வேண்டிய ஒரு தேவை அரசாங்கத்திற்கு உண்டு. அதனால் அரசாங்கத்திற்கு அப்படியொரு வாய்ப்பை வழங்கக் கூடாது என்பதற்காக தமது கட்சியானது துயிலுமில்லங்களில் மாவீரர் நாளை அனுஷ்டிக்கவில்லை என்றும் அக்கட்சி வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது.

அப்படியானால் கூட்டமைப்புக்கு அது போன்ற சட்டச் சிக்கல்கள் எதுவும் ஏன் இதுவரையிலும் ஏற்படவில்லை? கடந்த மாவீரர் நாளை பெருமளவுக்குக் கூட்டமைப்பே தத்தெடுத்தது போல ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டது. கூட்டமைப்பு பிரமுகர்கள் துயிலுமில்லங்களில் பொதுச் சுடர்களை ஏற்றினார்கள். சிலர் துயிலுமில்லங்களில் செல்பியும் எடுத்துக் கொண்டார்கள். ஆனால் அவர்களில் யாரும் இதுவரையிலும் கைது செய்யப்படவுமில்லை. விசாரிக்கப்படவுமில்லை. மாறாக, சம்பந்தரும், சுமந்திரனும் ஏற்படுத்திக் கொடுத்த ஒரு சுதந்திர வெளிக்குள்தான் இப்படியாக மாவீரர்களை நினைவு கூர முடிந்தது என்று ஒரு விளக்கமும் தரப்படுகிறது.

குறிப்பாக, கடந்த மாவீரர் நாள் நிகழ்வுகளில் அதிகம் கவனிப்பைப் பெற்றது. கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லம்தான். ஒப்பீட்டளவில் அதிக தொகை பொதுசனங்கள் பங்குபற்றிய துயிலுமில்லமும் அதுவே. சில நாட்களுக்கும் முன்னரே நன்கு திட்டமிடப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு நினைவு கூர்தல் அது. கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் ஒருவர் முன்னின்று துயிலுமில்லங்களைத் துப்பரவாக்கத் தொடங்கினார். சாதாரண சனங்கள் அவரைப் பின்தொடர்ந்து களத்தில் இறங்கினார்கள். இங்கிருந்து தொடங்கி மாவீரர் நாளை அனுஷ்டிப்பதற்கான ஒரு பொது உளவியல் உருவாகலாயிற்று.

ஊடகங்கள் குறிப்பாக சமூக வலைத்தளங்கள் அந்த உளவியலை மேலும் உற்சாகப்படுத்திக் கட்டியெழுப்பின. தீப்பந்தங்களுக்காக நூற்றுக்கணக்கான இரும்புக்கம்பிகள் முன்கூட்டியே வளைத்தெடுக்கப்பட்டன. அந்தக் கம்பிகளையும், கொடித்துணிகளையும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கான நீராகாரத்ததையும் கிளிநொச்சி வர்த்தகர்களும் ஆர்வலர்களும் தரமாக முன்வந்து வழங்கியிருக்கிறார்கள். மாவீரர் நாளுக்கு முதல் நாள் இரவே துயிலுமில்லத்தைச் சுற்றி பிரகாசமான மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.

இந்த ஏற்பாடுகள் யாவும் அரச புலனாய்வுத் துறைக்கு நன்கு தெரியும். குறிப்பாக மேற்படி ஒழுங்குகளை முதலில் முன்னின்று தொடக்கிய மாகாணசபை உறுப்பினர்; கடந்த சனிக்கிழமையன்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு ஒரு கடிதத்தை கொடுத்திருக்கிறார். அக்கடிதத்தில் போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கான அனுமதி கோரப்பட்டதாக ஒரு தகவல் உண்டு. மேலும் அந்த நிகழ்வுக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தருமாறும் அக்கடிதத்தில் கேட்கப்பட்டிருந்ததாகவும் ஒரு தகவல் உண்டு. ஆனால் கிளிநொச்சி பொலிஸ் நிலையம் அக்கடிதத்திற்கு உத்தியோகபூர்வமாகப் பதில் அளித்திருக்கவில்லை என்று அறிய முடிகிறது.

இது போலவே முழங்காவில் துயிலுமில்லத்தைத் துப்பரவாக்கிக் கொண்டிருந்தவர்களை அப்பகுதியில் உள்ள பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளில் ஒருவர் அணுகி ஏதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவையா என்று கேட்டதாகவும் ஒரு தகவல் உண்டு.

கிளிநொச்சியில் உள்ள கரைச்சிப்பகுதி ஒப்பீட்டளவில் சனச்செறிவானது. புலிகளின் வீழ்ச்சிக்கு முன்பு அவர்கள் கடைசியாகக் கொடிகட்டிப்பறந்த ஒரு தலைப்பட்டினம் அது. நவீன தமிழில் தோன்றிய வீரயுகம் ஒன்றின் கடைசித் தலைப்பட்டினம் அது. போர் நிறுத்த காலத்தில் அதிகம் மினுங்கிய பட்டினமும் அதுவே. போர்க்காலத்தில் அதிகம் பாழடைந்த ஒரு பட்டினமும் அதுவே. எனவே ஒரு வீரயுகத்தின் நினைவுகளை இரை மீட்டி பொதுசனங்களைக் கனகபுரத்தை நோக்கிக் கொண்டு வருவது கூட்டமைப்புக்குக் கடினமாக இருக்கவில்லை.

சனங்கள் தன்னியல்பாகவே முன்வந்தார்கள். தலைவர்களிடம் ஏதும் சூதான நிகழ்ச்சி நிரல்கள் இருந்திருக்கலாம். ஆனால் சனங்கள் விசுவாசமாகவும், உணர்வு பூர்வமாகவும் பங்கேற்றார்கள். அரசியல் வாதிகள் முன்சென்றபடியால்தான் சாதாரண சனங்கள் பின்சென்றார்கள் என்பதே உண்மை நிலவரம் ஆகும். கூட்டமைப்பு இந்த சந்தர்ப்பத்தை கூடிய பட்சம் பயன்படுத்திக் கொண்டுள்ளது. கூட்டமைப்பு மாவீரர் நாளை அனுஷ்டி ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறது என்று அரசாங்கத்துக்கு முன் கூட்டியே தெரியும். அரசாங்கம் அதைத் தடுக்க எத்தனிக்கவில்லை. அதை உத்தியோகபூர்வமாக அனுமதிக்காவிட்டாலும் அதை அவர்கள் கண்டும் காணாமலும் விட்டார்கள். மாவீரர்நாளைக் கூட்டமைப்பு கைப்பற்றுவதை அரசாங்கமும் விரும்பும். அந்த நாளை செயற்பாட்டியக்கங்களோ அல்லது அரசியல் இயக்கங்களோ கைப்பற்றுவதை விடவும் வாக்குவேட்டை அரசியல் வாதிகள் அதைத் தத்தெடுப்பதை அரசாங்கம் விரும்பும். மறைமுகமாக ஆதரிக்கவும் செய்யும்.

மாவீரர் நாளைப் போன்ற உணர்வெழுச்சியான நிகழ்வுகளை அவற்றின் பெறுமதியுணர்ந்து விசுவாசமாக முன்னெடுக்கும் அமைப்புக்கள் கையேற்பதை அரசாங்கம் அனுமதிக்காது. அது ஆயுதப்போராட்டத்தின் தொடர்ச்சியாக வரக்கூடிய ஓர் அரசியலை ஊக்குவித்துவிடும். எனவே இப்படிப்பட்ட நிகழ்வுகளை வாக்குவேட்டை நிகழ்ச்சி நிரல்களுக்கு கீழ்ப்பட்டவைகளாக மாற்றுவது நீண்ட கால நோக்கு நிலையில் அரசாங்கத்துக்கு அனுகூலமானது. குறிப்பாக இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வைக் கொண்டுவரவிருக்கும் ஒரு பின்னணியில் கூட்டமைப்பின் வாக்குத்தளத்தைப் பலப்படுத்த அரசாங்கம் திட்டமிடுகிறதா?

வரவிருக்கும் தீர்வு தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர்கள் அண்மைக்காலமாக தெரிவித்துவரும் கருத்துக்கள் ஆவிக்குரிய சபையினர் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளை நினைவூட்டுகின்றன. “நம்பிக்கையோடிருப்போம்”, “நிதானமாக இருப்போம்” “நாம் இருளான காலத்திலிருந்து ஒரு வெளிச்சத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறோம்” “ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது”…. என்றெல்லாம் கூறப்படுகிறது. கூட்டமைப்பு ஒரு தீர்வை நோக்கி தமிழ் மக்களைத் தயார் படுத்துகிறதா?

ஆனால் அண்மையில் அரசத்தலைவரைக் கூட்டமைப்புச் சந்தித்தபோது அச்சந்திப்பில் பங்குபற்றியவர்கள் சிலர் தரும் தகவல்களின்படி நிலமைகள் அப்படியொன்றும் திருப்திகரமானவைகளாகத் தோன்றவில்லை. அச்சந்திப்பில் சம்பந்தர் பெருமளவுக்கு அடக்கியே வாசித்ததாகக் கூறப்படுகிறது. மாவை வழமைக்கு மாறாக சில விடயங்களை அழுத்திக் கூற முற்பட்டிருக்கிறார். குறிப்பாக ஒற்றையாட்சிக்கு எதிராக அவர் கருத்துத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அவரைத் தொடர்ந்து பேசவிடாது தடுத்திருக்கிறார்கள். அவர் தெரிவித்த கருத்துக்கள் அந்த உரையாடலிற்கு பொருத்தமற்றவை என்ற தொனிப்பட மற்றொரு கூட்டமைப்பு முக்கியஸ்தர் அரசுத்தலைவருக்கு ஆங்கிலத்தில் கூறியிருக்கிறார்.

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் அரசியல் தீர்வைப் பற்றிக் கதைத்திருக்கிறார். அவர் அப்படிக் கதைக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். குறிப்பாக வடக்கு கிழக்கு இணைப்புப்பற்றி யாரும் வாயைத்திறக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாக ஒரு தகவல் உண்டு.

இதுதான் நிலமை என்றால் இனப்பிரச்சினைக்கான உத்தேச தீர்வில் கூட்டமைப்பு பங்காளியாகக் கூடிய வாய்ப்புக்கள் அதிகரித்து வருகின்றன என்று அர்த்தம். எனவே தனது பங்காளியின் வாக்கு வங்கியைப் பலப்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்குண்டு. வரும் ஆண்டில் புதிய யாப்புக்கான சர்வசனவாக்கெடுப்பு நடக்குமாயிருந்தால் அதில் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்குமாயிருந்தால் தமிழ் மக்களின் வாக்குகள் கூட்டமைப்புக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்குண்டு.

கடந்த மாவீரர்நாள் அந்த நோக்கத்தோடு பயன்படுத்தப்படவில்லை என்பதை எதிர்காலத்தில் நிரூபிக்க வேண்டிய தேவை சம்பந்தப்பட்ட கூட்டமைப்பு முக்கியஸ்தர்களுக்கு உண்டு.

இவ்வாண்டு மே 18 நினைவு கூரப்பட்ட போது அதை அரசியல்வாதிகளின் நிகழ்வாக சுருக்கியது குறித்து விமர்சனங்கள் எழுந்தன. எந்த ஒரு கட்சியோ அல்லது அரசியல் வாதியோ அதைப் பொருத்தமான விதத்தில் பொறுப்பெடுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால் மாவீரர் நாளை பல்கலைக்கழக மாணவர்களும், அரசியல்வாதிகளும் பொறுப்பெடுத்தார்கள். அப்படிப் பொறுப்பெடுத்த அரசியல்வாதிகள் அந்த நாளின் மரபை புனிதத்தைக் கெடுத்து விட்டார்கள் என்றும் விமர்சிக்கப்படுகிறது. அரசியல் வாதிகள் அப்படித்தானிருப்பார்கள். அவர்களுடைய ஒழுக்கம் அதுதான். முழங்காவில் துயிலுமில்லத்தில் மாவை சுடரேற்றியபோது அவருடைய பொலிஸ் மெய்க்காவலர் பின்னணியில் நிற்கிறார். இந்தக்காட்சி புலிகள் இயக்கத்தை விசுவாசிப்பவர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால் அதுதான் இலங்கைத்தீவின் இப்போதுள்ள களயதார்த்தம். இந்தக் கள யதார்த்தத்தை உள்வாங்கி அதைக் கடந்து சென்றுதான் தமிழ் அரசியலை அதன் அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வேண்டியிருக்கிறது.

தாயக விடுதலைக்காய் தம்முயிர் ஈந்தவர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வானது வரலாறு காணாத மக்களுடன் மிகவும் பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக சுவிசில் சிறப்பாக நடைபெற்றது. இவர்டோன் நகரில் அமைந்துள்ள நினைவுக்கல்லில் 27ம் திகதி காலை 09:00 மணியளவில் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் ஈகைச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி முறையே அகவணக்கம், மலர்வணக்கம், சுடரேற்றல், உறுதிப்பிரமாணம் எடுத்தல் என்பவற்றோடு நிறைவுபெற்றன.

தமிழ்த் தேசிய விடுதலை வேள்வியில் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் குடும்ப மதிப்பளிப்பானது உறவுகளின் உணர்வுப் பகிர்வின் உறவாடலக சிறப்பாக மாவீரர் நிகழ்வு மண்டபத்தில் காலை 10:45 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுவிஸ் வாழ் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த நூற்றிற்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

முதற்களப்பலியான மாவீரர் லெப்.சங்கர் அவர்களின் நினைவுக்கல் அமைந்திருக்கும் வடமராட்சி மாவீரர் துயிலும் இல்லத்திலிருந்து ஏற்கனவே இங்கு பாதுகாக்கப்பட்ட புனிதமண் எடுத்துவரப்பட்டு மாவீரர் பொதுத்தூபி முன்றலில் வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டு துயிலுமில்ல நிகழ்வுகள் ஆரம்பமாகின.

தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியேற்றலுடன் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் கடந்த கால உரைகளிலிருந்து காலத்தின் தேவையைச் சுட்டிநிற்கும் சிறுதொகுப்பு அகன்ற வெண்திரையில் காண்பிக்கப்பட்டதோடு தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2016க்கான கொள்கைவகுப்பு அறிக்கை ஒலிபரப்பப்பட்டது. மணியோசை, சங்கொலி, பறையொலியுடன் அகவணக்கத்தினைத் தொடர்ந்து தாயக நேரம் 18:05 மணியளவில் முதன்மைச் சுடரேற்றப்பட்டு துயிலுமில்லப் பாடலோடு மலர்வணக்கப் பாடலும் ஒலிபரப்பப்பட்டதுடன், இளையோர்களின் இசையில் மாவீரர்களுக்கான வணக்கப்பாடல்களும் இடம்பெற்றன.

சுவிஸ் தேசிய மாவீரர்நாள் நிகழ்வில், சுவிசின்; அனைத்து மாநிலங்களிலிருந்தும் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வரலாற்றுக் கடமைக்கான உறுதிமொழியை மாவீரர் நாளில் எடுத்தனர்.

நிகழ்வில் தாயகம் சார்ந்த சிறப்பு வெளியீடுகள் வெளியீட்டு வைக்கப்பட்டதோடு தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிஸ் கிளையினால் நடாத்தப்பட்ட மாவீரர் நினைவுகள் சுமந்த பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ்கிளையின் அறிக்கை வாசிக்கப்பட்டதோடு, தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளினால் சிறப்பரைகளும் வழங்கப்பட்டது. மாவீரர் காணிக்கை நிகழ்வுகள் அனைத்தும் மிகவும் உணர்வெழுச்சியாக இருந்ததுடன் சமகால நிகழ்வுகளைக் கருத்தியலாகக் கொண்ட “தொலைந்த மனிதம்“; நாடகமானது மக்களின் உணர்வுகளுக்கு மேலும் உரமேற்றியது.

‘நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்“ என்ற தாயகப் பாடலையடுத்து, தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு, தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் உணர்வெழுச்சியுடன் மிகவும் சிறப்பாக இனிதே நிறைவுபெற்றன.


படங்கள் இங்கே: https://goo.gl/fmJIX



தமிழீழ விடுதலைப் புலிகள் – சுவிஸ் கிளை

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை சற்றுப் பகிரங்கமாகவே இம்முறை நடத்த முடிந்திருக்கின்றது. தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் விதையாக வீழ்ந்தவர்களை நினைவுகூருவதற்கான வெளியை இலங்கை அரசும், அதன் பாதுகாப்புக் கட்டமைப்பும் கடந்த காலங்களில், குறிப்பாக போருக்குப் பின்னரான கடந்த ஏழு ஆண்டுகளில் அனுமதித்திருக்கவில்லை. இறந்தவர்களை நினைவுகூருவதற்கான மக்களின் கூட்டுரிமையையே அரச பயங்கரவாதம் தன்னுடைய கொடுங்கரம் கொண்டு அடங்கியிருந்தது. ஆனால், இம்முறை அந்தக் கரத்தினை முற்றாக விலக்காமல் பிடியின் இறுக்கத்தை சற்றுத் தளர்த்தியிருக்கின்றது. (ஆம், அப்படித்தான் கொள்ள வேண்டியிருக்கின்றது.) அதுதான், மக்களை பெருவாரியாக மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நோக்கி பகிரங்கமாக வர வைத்திருக்கின்றது. 

எந்தவொரு மாற்றமும் அரசியல் அடிப்படை சார்ந்ததுதான். அதுவும் தமிழ் மக்களை பிரதானப்படுத்தும் விடயங்களும், அதுசார் நிலைப்பாடுகளும் பெரும் அரசியல் சார்ந்தவை. அதனை, கடந்த காலம் எமக்கு தெளிவாக உணர்த்தியிருக்கின்றது. அப்படிப்பட்ட நிலையில், மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக திறந்திருக்கும் ‘வெளி’ அரசியலுக்கு அப்பாலானது என்கிற வாதத்தை யார் வைத்தாலும், அதனை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. இம்முறை கிடைத்திருக்கின்ற நினைவுகூருவதற்கான வெளியை உருவாக்குவதில் தமிழ் மக்கள் பெரும் பங்களித்திருக்கின்றார்கள். அவர்கள், கடந்த வருடம் மேற்கொண்ட தீர்மானத்தின் விளைவே, அவர்களின் நினைவுகூருவதற்கான கூட்டுரிமையை நிறைவேற்றுவதற்கான சாத்தியப்பாடுகளை வழங்கியிருக்கின்றது. மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் ஏறி நின்று அரசியல் பேசுவது அபத்தமானது என்கிற வாதங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக கேட்க முடிகிறது. ஆனால், மக்களினால் ஏற்பட்ட மாற்றத்தினையும், மீளக்கிடைத்த உரிமையையும் சுட்டிக்காட்டுவது எதிர்கால அரசியலுக்கு அவசியானது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும், மாவீரர் நினைவேந்தலும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் காலாகாலத்துக்கும் கொண்டு சுமக்கப்பட வேண்டியவை. நீக்கம் செய்ய முடியாதவை. இந்த இரண்டு விடயங்களையும் அதன் வீரியம் குறையாமல் கொண்டு சுமப்பதுதான், தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் அனைத்து வடிவங்களின் போக்கிலும் தன்னுடைய பரப்பினை விரித்திருந்தது என்பதற்கான அடிப்படைகளைத் தக்க வைக்கும். அதுபோல, கள- கால யதார்த்தத்தினை உள்வாங்கி எமது அரசியல் போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டும் என்கிற விடயத்தையும் உணர்த்திக் கொண்டிருக்கும். ‘அடையாள நீக்கம்’ செய்யப்படுகின்றது என்கிற கூச்சல்களை அண்மைய நாட்களில் அதிகமாக கேட்க முடிகின்றது. ஆனால், அடையாள நீக்கத்தினை முற்றாக முறியடித்து கால காலத்துக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலினூடும், மாவீரர் நினைவேந்தலினூடும் பல விடயங்களை நாம் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சேர்க்க முடியும். அதற்கான அடிப்படைகளை செய்ய வேண்டியதும் தமிழ் மக்களின் பொறுப்பாகும். அதுதான், அடுத்த தலைமுறைகளை நோக்கி உண்மையான அர்ப்பணிப்புக்கள் சார் வரலாற்றை  கொண்டு சேர்க்கும். அதன்போக்கில், மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான பகிரங்க வெளி சில ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றது.

இறுதி மோதல்களுக்குப் பின்னரான வடக்கு- கிழக்கில் மே மாதங்களிலோ, நவம்பர் மாதங்களிலோ தீபங்களை ஏற்றி அஞ்சலி செலுத்துதல் என்பது பாரிய குற்றமாக அரச படைகளினால் நோக்கப்பட்டது. கோவில்களிலும், தேவாலயங்களில் அடிக்கப்படும் மணியோசை கூட நேரங்கள் கணிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. அச்சகர்களும், பாதிரியார்களும் அச்சுறுத்தப்பட்டார்கள். வீடுகளின் சாமியறை வரை வந்து இராணுவச் சீருடைகள் பரிசோதித்துச் சென்றிருக்கின்றன. கிட்டத்தட்ட மூச்சுக்குழாயினை ஒட்டுமொத்தமாக நெரிப்பதற்கு ஒப்பான இறுக்கத்தை கடந்த அரசாங்கமும், அரச படைகளும் ஏற்படுத்தியிருந்தன. நவம்பர் மாதங்களில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் துரத்தித் துரத்தி தாக்கப்பட்ட வரலாற்றையும், இறந்தவர்களுக்கான கிரிகைகளை மே மாதத்தில் செய்ய முடியாத அழுத்தங்களையும் மக்கள் சந்தித்து நின்றார்கள். அந்த இறுக்கம் சொல்லிக் கொள்ள முடியாதவை. அது, ஓங்கி ஒப்பாரி வைத்து அழ வேண்டிய துயரத்தை மனதுக்குள் புழுங்கிக் கொண்டு மனநோயோடு அலைய வைத்தது. சமூகமொன்றினை மன ரீதியாக நோயாளியாக்குவதற்கான ஏதுகைகளையும் செய்திருந்தது.

இறந்தவர்களை பகிரங்கமாக நினைவுகூருவதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்று வடக்கு- கிழக்கிலுள்ள மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கின்றார்கள். அது, தங்களை ஆசுவாசப்படுத்தி அடுத்த கட்டங்களை நோக்கி சிந்திக்க உதவும் என்றும் கோரியிருந்தார்கள். போருக்குப் பின்னரான சமூகமொன்று எதிர்நோக்கும் பிரச்சினைகள் அதிகமானவை. அதுவும், ஒட்டுமொத்தமாக கைவிடப்பட்ட சமூகமாக மாறிவிட்ட மக்களின் அழுத்தங்கள் எவ்வளவு என்று அவர்களோடு நெருங்கி பேசுபவர்கள் அறிந்து கொள்ள முடியும். அண்மையில் நடைபெற்ற நல்லிணக்க பொறிமுறைகளுக்கான செயலணியின் மக்கள் கருத்தறியும் அமர்வுகளையும் அழுது தமது மனப்பாரத்தைக் குறைப்பதற்காக பாவித்தவர்கள் பலர். இந்த அமர்வுகளில் கலந்து கொண்ட முன்னாள் போராளிகள் உள்ளிட்ட பெரும்பான்மையான மக்கள் நினைவுகூருதலுக்கான அனுமதியை பிரதானமாக வேண்டிக் கொண்டார்கள்.

அரச படைகளினால் அழித்து சிதைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களை நோக்கி மக்களை அழைத்து வந்து, துப்புரவாக்கி அங்கொன்றும் இங்கொன்றுமாக எஞ்சியிருந்த மாவீரர் நினைவுப் படிகங்களை ஒன்றாக்கி நினைவுத்தூபியாக அடுக்கி வைத்திருக்கும் படங்கள் கடந்த 25, 26ஆம் திகதிகளில் வெளியாக ஆரம்பித்தது. இந்தப் படங்களைப் பார்த்ததுமே சில தரப்புக்கள் பதற்றமடைய ஆரம்பித்தன. இராணுவப் புலனாய்வாளர்கள் தலையீடு செய்கிறார்கள் இல்லை. இராணுவமும், பொலிஸூம் உள்நுழைந்து மக்களை அடித்து விரட்டுகிறார்கள் இல்லை என்பது மாதிரியான எண்ணப்பாடுகளின் போக்கில் எழுந்தவை அவை. ஏனெனில், மக்கள் மீதான அடக்குமுறையை ஒருவகையில் ரசித்துக் கொண்டு அதற்கு எதிராகவே எதிர்வினையாற்றுவதாக காட்டிக்கொள்ள வேண்டிய சில்லறைத்தனமாக அரசியலுக்காக அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அதனையும் மீறி கடந்த 27ஆம் திகதி சிவப்பு மஞ்சள் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில் ஆயிரக்கணக்கில் கூடிய மக்கள் மலர்கள் தூவி தீபங்களை ஏற்றி அழுது புரண்டு தங்களின் ஆற்றாமையை அழுகையாக வெளிப்படுத்திய போது பெரும் ஆறுதலொன்று ஏற்பட்டது. ஆனால், சில்லறை அரசியலுக்கான காத்திருப்பாளர்களினால் இதனைச் சகித்துக் கொள்ள முடியவில்லை. என்ன விடயத்தைப் பிடித்துக் கொண்டு இந்த வெளியை நிராகரிப்பது என்று மூளையைக் கசக்க ஆரம்பித்தார்கள், விளைவு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த மார்ச் மாத அமர்வுகள் கண்ணுக்கு தெரிந்தன.

ஆரம்பத்தில் கூறியது போலத்தான், எந்தவொரு மாற்றமும் அரசியலுக்கு அப்பாலானது அல்ல. மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான பகிரங்க வெளியை இலங்கை அரசும், தென்னிலங்கை அடிப்படைவாதச் சக்திகளும் சும்மா வழங்கிவிடாது. அவற்றுக்கும் அரசியல் நிகழ்ச்சி நிரல் உண்டு. அது, அடுத்த ஜெனீவா அமர்வுகளை கருத்தில் கொண்டதாக இருக்கலாம். ஆனால், இம்முறை தமிழ் மக்கள் பெற்றுக் கொண்ட நினைவுகூருவதற்கான பகிரங்க வெளியை, அடுத்த வருடங்களில் அரசும், தென்னிலங்கைச் சக்திகளும் அடக்குமுறைகளினூடு மீளப்பெற்றுக் கொள்ளுமாக இருந்தால், அப்போதும் அவை பதில் சொல்ல வேண்டியிருக்கும். அந்த வகையில், எதிர்காலத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை தெளிவாகவும் காத்திரமாகவும் ஒருங்கிணைக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உருவாகியிருக்கின்றன.

மாவீரர் துயிலும் இல்லங்களில் பொதுச் சுடரினை மாவீரர் ஒருவரின் தாயாரோ, மனைவியோ, பிள்ளையோ, முன்னாள் போராளி ஒருவரோ ஏற்றியிருக்க வேண்டும் ஏன்கிற ஆதங்கம் இந்தப் பத்தியாளருக்கும் உண்டு. சில அரசியல்வாதிகள் தங்களை அடுத்த பிரபாகரனான சித்தரிக்க முயலும் அசிங்கமான காட்சிகளையும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் காண முடிந்தது. அது, அற்பமான முயற்சிதான். அதனை, அந்தக் கட்சிகள், குறிப்பாக தமிழரசுக் கட்சி எதிர்காலத்தில் தடுத்து நிறுத்த வேண்டும்.

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நோக்கி இவ்வளவு மக்கள் வந்திருப்பதை தென்னிலங்கை பெரும் ஆச்சரியத்தோடும், ஆற்றாமையோடும் பார்த்துக் கொண்டிருக்கின்றது. திருடனுக்கு தேள் கொட்டிய நிலையோடு மேம்போக்காக நல்லிணக்கம் பற்றி பேசும் அரசாங்கப் பிரதிநிதிகள் சிலர் தற்போது இருக்கின்றார்கள். ஏனெனில், மக்கள் ஆயிரக்கணக்கில் மாவீரர் துயிலும் இல்லங்களை நோக்கி படையெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. அது, அவர்களை ஏமாற்றமடைய வைத்திருப்பது உண்மைதான்.

தென்னிலங்கை நண்பர் ஒருவரோடு பேசும் போது, பெரும் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். “திரும்பவும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மீண்டும் அரச பயங்கரவாதத்தின் கொடும் கரங்கள் அழுத்தலாம் என்று தெரிந்தாலும், தமிழ் மக்கள் தமது தார்மீக உரிமையையும், கடப்பாட்டினையும் நிறைவேற்றுவதற்காக இவ்வளவு அர்ப்பணிப்பாக இருக்கின்றார்கள் என்பது ஆச்சரியம் தான். அவர்களை போலியான வார்த்தைகளினூடு வெற்றி கொள்ள முடியாது என்பதற்கு மாவீரர் நினைவேந்தலுக்காக கூடிய மக்களே சாட்சி” என்றார். “எழுபது ஆண்டுகளை அண்மித்துவிட்ட போராட்ட வரலாற்றை தமிழ் மக்கள் கொண்டிருக்கின்றார்கள், அவர்களை அவ்வளவு இலகுவாக யாருமே ஏமாற்றிவிட முடியாது” என்றேன்.

‘ஏமாற்றிவிட முடியாது!’ என்கிற வார்த்தைகள் தென்னிலங்கையையும் சர்வதேசத்தையும் நோக்கியது மாத்திரமல்ல. தமிழ் அரசியல்வாதிகளையும், புத்திஜீவிகளையும் நோக்கியதுதான். கடந்த வருடம் ஜனவரி மாதம் தமிழ் மக்கள் மேற்கொண்ட தீர்மானமும் மிகத்தெளிவாக சிந்தித்து எடுக்கப்பட்டதுதான். அது, யாரினதும் ஏமாற்று வார்த்தைகளை நம்பி மேற்கொள்ளப்பட்டதில்லை. அதனை, அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அதுதான், மாவீரர் நினைவேந்தலுக்கான பகிரங்க வெளியை உருவாக்கித் தந்திருக்கின்றது!

4TamilMedia

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை ஈய்ந்த மாவீரர்களையும், பொதுமக்களையும் நினைவுகூரும் நிகழ்வுகள் தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 27) உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டன. சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பின் பொதுமக்கள் தமது உள்ளக் குமுறல்களை மாவீரர் துயிலும் இல்லங்களை நோக்கி வந்து கொட்டித் தீர்த்தனர். அஞ்சலி செலுத்தி அழுது புரண்டனர்.

இறந்தவர்களை நினைவுகூர்வதும், அவர்களுக்காக பெரும் குரலெடுத்து அழுது தீர்ப்பதும் மனிதனின் அடிப்படை உரிமை. அதனை, தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கங்கள் தடுத்து வந்திருக்கின்றன. அல்லது, பாதுகாப்புக் கெடுபிடிகளை ஏற்படுத்தி மக்களை அச்சுறுத்தி வந்திருந்தன. அந்த நிலையில், நேற்றைய மாவீரர் தின நிகழ்வுகள் மக்களின் பெரும் பங்களிப்போடு முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக, இறுதி மோதல்களுக்குப் பின்னராக கடந்த காலத்தில் மாவீரர்களை மாத்திரமல்ல, போரில் கொல்லப்பட்ட பொதுமக்களைக் கூட நினைவுகூர்வதற்கு தடை விதிக்கப்பட்டது. புலனாய்வாளர்களும், இராணுவமும் வீடுகள் வரை வந்து அச்சுறுத்தல் விடுத்துச் சென்ற வரலாறு உண்டு.

அந்த நிலையில், தமிழர் தாயகப் பகுதிகளில் ஒருவிதமான மன அழுத்தம் நீடித்து வந்தது.  அது, போருக்குப் பின்னரான சமூகம் ஒன்று எதிர்கொள்வதுதான். ஆனால், அழுவதற்கும் அஞ்சலி செலுத்துவதற்கும் கூட தடை விதிப்பது என்பது பெருமளவான மக்களை நடைப்பிணங்களாக மாற்றிவிட்டிருந்தது. அந்த நிலையில், மாவீரர்களை நினைவு கூருவதற்காக நேற்று விடுவிக்கப்பட்ட வெளி முக்கியமானது. அதனை, இலங்கை அரசும் அதன் இயந்திரமும் வேண்டாவெறுப்பாக அனுமதித்திருக்கின்றது. அதற்கு, சர்வதேச அழுத்தமும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் எதிர்வரும் மார்ச் மாத அமர்வுகளும் காரணமாக இருக்கலாம். ஆனால், வேண்டாவெறுப்பாக அனுமதித்தாலும், அது தமிழ் மக்களின் அடிப்படை உரிமை. அதனைப் பெற்றுக் கொள்வதற்காக அல்லாடிப் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள். நீண்ட நாட்களின் பின்னர் பெரும் ஆசுவாசத்தோடு உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தியிருக்கின்றார்கள்.

போருக்குப் பின்னரான மஹிந்த ராஜபக்ஷவின் ஐந்து ஆண்டுகால ஆட்சி வடக்கு- கிழக்கில் குறிப்பாக தமிழர்கள் வாழும் பகுதிகளில் எவ்வளவு அச்சுறுத்தல்களை வழங்கியது என்பதை அறிவோம். அந்த அழுத்தங்களை விலக்கி சிறிய இடைவெளியொன்றின் தேவையை தமிழ் மக்கள் பெருவாரியாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதனை, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த வாய்ப்பினூடு பயன்படுத்திக் கொண்டார்கள். அந்த முடிவு, மனதிலுள்ள அழுகையை ஓங்கி ஒப்பாரியாக கொட்டுவதற்கானதும் ஆனது. அதனை நிராகரித்தலும், அதனை அடக்கி ஒடுக்கி வைத்துக் கொண்டிருப்பதும் எம் மக்களை மனநோயோடும், அடுத்த கட்டங்கள் குறித்து சிந்திப்பதையும் தடுத்து ஒரேயிடத்தில் தங்கியிருக்க வைக்கும். அது, காயங்களை குணப்படுத்தி புதிய பயணத்தை ஆரம்பிப்பதைத் தடுத்து, சீழ் பிடித்த காயங்களோடு அவஸ்தைப்படுவதற்கு ஒப்பானது.

தமிழ் மக்கள் எப்போதுமே தமது விடுதலைப் போராட்டம் குறித்து பெரும் நம்பிக்கையோடும், அர்ப்பணிப்போடும் இருக்கின்றார்கள். அதுவும், தாயகத்திலிருக்கின்ற மக்களின் ஓர்மம் அபரிமிதமானது. அதனை சரியான வழியில் கொண்டு செல்வதுதான் இப்போதுள்ள தேவை. அதை, மாவீரர் தின நிகழ்வுகள் உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றன.

இலங்கை அரசும், அதன் பாதுகாப்புத் தரப்பும் கண்கொத்திப் பாம்புகளாக பார்த்துக் கொண்டிருக்க அலை அலையாக மக்கள் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மாவீரர் துயிலும் இல்லங்கள், பொது இடங்கள், பல்கலைக்கழகங்கள், கோயில்கள், தேவாலயங்கள் என்று ஒருங்கிணைந்தார்கள். அது, அரசியல் வேற்றுமைகளுக்கு அப்பாலானது. அதனை, தனிப்பட்ட அரசியலுக்காக யார் பாவித்தாலும் அது அற்பமானது. அது, பிணங்களை விற்றுப் பிழைப்பதற்கு ஒப்பானது.

ஆனால், இந்த இடத்தில் ஒரு விடயத்தினைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கின்றது. மாவீரர்களை பகிரங்கமாக நினைவுகூர்வதற்கு அனுமதிக்கப்பட்ட விடயம் தென்னிலங்கையிலுள்ள இனவாதத் தரப்புக்களுக்கும், தமிழ் மக்களுக்குள் உள்ள சில குழுக்களுக்கும் பெரும் எரிச்சலை ஊட்டியிருக்கின்றது. தென்னிலங்கையின் இனவாதக் குழுக்களுக்கு புலிகள் மீதான வெறும்பும், தமிழ் மக்களினை அடக்கி ஆளவேண்டும் என்கிற மனநிலையின் சார்பில் அது எழுந்திருக்கின்றது. ஆனால், தமிழ் மக்களுக்குள் இருக்கின்ற சிறு குழுக்களுக்கு தனிப்பட்ட அரசியல் மற்றும் தனிமனித விரோதங்கள் சார்ந்து எழுந்திருக்கின்றது.

ஒவ்வொரு மாற்றத்திற்குப் பின்னாலும் அரசியல் உண்டு என்பது யதார்த்தம். எமது உரிமைகளையும் அரசியல் சதிராட்டத்தில் வென்றே அடைய வேண்டியிருக்கின்றது. அதன்போக்கில், மாவீரர் தினத்தினை ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் பகிரங்கமாக அனுஷ்டிப்பதற்கு கிடைத்துள்ள வெளியும் நாம் போராடிப் பெற்றது. அதன்பின்னால், வேறு தரப்புக்களும் பல்வேறு அரசியல் இருக்கலாம். அதனையெல்லாம் தாண்டி நாம் பெற்றது, எமது உறவுகளை நினைவு கூருவதற்கான கூட்டுரிமை. அது, எமது அடிப்படை உரிமைகளில் ஒன்று. அதனை யாருமே நிராகரிக்க முடியாது.

4tamilmedia.com

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வுகள், தமிழர் தாயகம் எங்கும் இன்று ஞாயிற்றுக்கிழமை பெரும் எழுச்சியோடு முன்னெடுக்கப்பட்டது. 

மாவீரர் துயிலும் இல்லங்கள், பொது இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவில் திரண்ட பொதுமக்கள், மாவீரர்களின் தியாக்கத்தை போற்றி மலர் தூவி தீபங்களை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

தமிழீழ மாவீரர் நாள். முதற் களப்பலியான புலிவீரன் லெப். சங்கர் நினைவு நாள். (1982)

இன்று தழீழத்தின் தேசிய நாள். தமது இனிய உயிர் அர்ப்பணிப்பால் தனியரசிற்கு வித்திட்டு, உரமிட்ட மாவீரர்களை நினைவுகூரும் புனித நாள்.

எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலிவீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைக் பிளந்து அந்த வீரர்களை புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களை புதைத்தோம். வரலாற்றுத்தாய் அவர்களை அரவணைத்துக் கொண்டாள். ஆயிரமாயிரம் தனிமனித உயிர்கள் சரித்திரத்தின் கருவூலத்தில் சங்கமித்தன. அவ்வுயிர்கள் கருவாகி, காலத்தால் உருவம்பெற்று, தேசத்தின் சுதந்திரமாக வடிவம் பெற்று வருகிறது. தமிழீழம் என்ற அந்த சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும்.

தமிழீழ தேசியத் தலைவர்.

ஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்…

லெப். சங்கர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்த மாவீரன். இன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகளாவிய ரீதியில் கூர்ந்து கவனிக்கப்படுவதற்கு முதலாவது அத்திவாரக் கல்லாய் அமைந்த உறுதி மிக்க போராளி லெப். சங்கர்.

சத்தியநாதன் என்னும் இயற்பெயரைக் கொண்ட லெ. சங்கர் 1961இல் பிறந்தவர். 1977ஆம் ஆண்டு… வீட்டில் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு அவர் பண்ணை ஒன்றில் இயங்கிய விடுதலைப் புலிகளின் பாசறையை அடைந்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் பண்டிதருடன் வந்த அவரை கூர்ந்து நோக்கினார். இளைஞன்… தோற்றத்தில் சின்னவன். தலைமறைவுப் போராட்டம் என்பது மிகவும் கடினமானது. குறிவைத்த எதிரியை வீழ்த்துவதற்காக எதிரியின் கண்களில் மண்ணைத் தூவி பல நாட்கள் அலைந்து திரிய வேண்டும். நிரந்தரமாக ஓரிடத்தில் தங்க முடியாது. நேரத்திற்கு உணவு கிடையாது. அல்லது பல நாட்கள் உணவின்றியே இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் தாங்கும் மனோபலம் சிறுவனுக்கு இருக்குமா…?

தலைவர் பிரபாகரன் கூற்றுப்படி படிப்பைத் தொடர்வதற்காக வீடு திரும்புகிறான் சத்தியநாதன்.

‘ஏதோ அறியாதவன். சில நாட்;கள் சுற்றிவிட்டு வீடு வந்து விட்டான். இனி ஒழுங்காகப் படிப்பைத் தொடர்வான்” என இவரது பெற்றோர் எண்ணினர். ஆனால், சத்தியநாதனின் உள்ளத்து உறுதி கலையவில்லை. தானும் ஒரு போராளியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்கிறான். இடைப்பட்ட காலத்தில் போராட்டத்திற்கு உறுதுணையாக சாரதிப்பயிற்சி பெறத்தீர்மானித்து அதில் வெற்றியும் பெற்றுவிடுகிறான்.

1978ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு நாள் இரவு மீண்டும் தம்முன் வந்து நின்ற சத்தியநாதனை ஏறிட்டனர் ஏனைய போராளிகள். அவர்கள் முகங்களில் புன்னகை. அதில் சத்தியநாதனின் உறுதி புலப்படுகிறது. சத்தியநாதனுக்கு தலைமறைவு வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் புனைப்பெயர் சூட்டப்படுகிறது. சத்தியநாதன்…. சங்கராக விடுதலைப் புலியாக மாறினான்.

சங்கரின் உள்ளத்தைப் போலவே உடலும் உறுதிபெற்றது. ஓயாது உழைத்தான். எதிலும் ஆர்வம் எப்போதும் சுறுசுறுப்பு. தோழர்கள் ஒன்றுகூடி கருத்தரங்குகள் வைப்பதும், திட்டங்கள் தீட்டுவதும், விவாதிப்பதுமாக… சங்கரின் அரசியல் அறிவு விரிந்தது. வளர்ச்சி பெற்றது.

இயக்கத்தில் ஆரம்பகாலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலருக்கு மட்டுமே ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டது. ஓய்வு நேரங்களில் ரிவோல்வரில் குறி பார்ப்பதிலும் ஆங்கில சினிமாப் படங்கள் மூலம் தன் ஆயுத அறிவை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டினான் சங்கர். 1979இல் சிறிய ஆயுதங்களில் குறிபார்த்துச் சுடும் பயிற்சி சங்கருக்கு வழங்கப்பட்டது.

சங்கருக்கு குறி பார்த்துச் சுடும் பயிற்சியிலிருந்த திறமையால் தலைவரிடமிருந்து வெகுமதியாக 0-45 ரிவோல்வர் ஒன்று கிடைத்தது. அது சங்கருக்கு கிடைத்த பின் அதை வைத்து மேலும் தனது திறமையை வளர்த்துக் கொண்டான். இரு கரங்களாலும் குறி பார்த்துச் சுடுவதில் தன்னிகரற்றவனாயினான். சிறந்த ஆயுதப் பராமரிப்பு, தினசரி துப்பரவாக்கப்பட்டு பளபளத்தது ரிவோல்வர்.

1979 வைகாசியிலே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்வதாக அறிவித்திருந்த அரசு, விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்குடன் தேடுதல் வேட்டைகளை விஸ்தரித்தது. சங்கரின் பெயரும் எதிரிக்குத் தெரிந்துவிட்டது. அவனும் தேடப்பட்டான்.

1981ஆம் ஆண்டு நவீன ரக ஆயுதங்களை இயக்கும் பயிற்சி சங்கருக்கு வழங்கப்பட்டது. சங்கர் தாக்குதல் படைப்பிரிவில் ஒருவனானான்.

1982ஆடி 2ஆம் நாள் முதல்முதலாக எதிரியுடன் ஆயுதம் தாங்கிய மோதலில் சங்கர் ஈடுபடப்போகும் நாள், திட்டமிட்டபடி போராளிகள் ஏழுவர் நெல்லியடியில் ரோந்து வந்த பொலிஸ் ஜீப் மீது தாக்குதல் தொடுத்தனர். சங்கரிடம் ஒரு ரிவோல்வர் வேறொரு போராளியிடம் ஒரு இயந்திரத் துப்பாக்கி இதைத்தவிர வேறு ஆயுதங்கள் இல்லை புலிகளிடம்.

முதலில்… எதிரி வாகனச் சாரதி சுட்டு வீழ்த்தப்பட்டான். சங்கரின் நீண்ட காலக் கனவு நனவாகத் தொடங்கியது. வெற்றிகரமானத் தாக்குதலில் எதிரிகளில் நால்வர் கொல்லப்பட்டனர். அவர்களின் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. விடுதலைப் புலிகள் எந்தவித இழப்புகளுமின்றி வெற்றியுடன் மீண்டனர்.

1982இல் தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பிற்காக முதன் முதலாக இரு மெய்ப்பாதுகாவலர்கள் தெரிவுசெய்யப்படுகின்றனர். அவர்களில் ஒருவனாக சங்கரும் தெரிவுசெய்யப்பட்டிருந்தான். இக் காலகட்டத்தில் நவீனரக ஆயுதவரிசையில் இரண்டு ஜீ-3க்கள் மட்டுமே இயக்கத்திடமிருந்தன. இவற்றில் ஒன்று சங்கருக்கு வழங்கப்படுகின்றது.

இராணுவத் தாக்குதல்களில் மட்டுமல்ல மக்களை அரசியல் மயப்படுத்தும் நடவடிக்கைகளிலும் சங்கர் ஈடுபட்டான். புலிகளை வலை வீசித் தேடும் நடவடிக்கைகளுக்கு ஊடாகவே இவற்றையெல்லாம் மேற்கொள்ள வேண்டியிருந்தது.

கூலிப்படைகளின் தேடுதல் வேட்டை மும்முரமாகின்றது. புலிகள் இயக்க ஆதரவாக இருந்த விரிவுரையாளர் ஒருவரின் வீட்டில் சங்கர்… இதை மோப்பம் பிடித்துவிடுகிறது கூலிப்படை…. வீடு முற்றுகையிடப்படுகிறது….. முற்றுகை முற்று முழுதான முற்றுகை. சங்கரின் கை இடுப்பிலிருந்த ரிவோல்வரின் பிடியை இறுகப் பிடிக்கின்றது. தப்பியோடத் தீர்மானிக்கின்றான் சங்கர். கூவிப் பாய்ந்த ரவைகளில் ஒன்று சங்கரின் வயிற்றைப் பதம் பார்த்துவிடுகிறது. தரையை நனைக்கின்றது குருதி. உடல் சோர்ந்தாலும் உள்ளம் சோரவில்லை. எதிரியின் கையில் தனது ரிவோல்வர் கிடைத்துவிடக்கூடாது. எப்படியும் தன் தோழர் கையில் அதனை ஒப்படைத்து விட வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தை உறுதியாக்க கிட்டத்தட்ட இரண்டு மைல் ஓடியிருப்பான். தெரிந்த ஒருவரின் உதவியுடன் நண்பர்கள் இரகசியமாகக் கூடும் இடத்தை அடைந்தான். ரிவோல்வரை தோழர்களிடம் கையளித்துவிட்டு உணர்விழந்தான் சங்கர். தோழர்கள் அவனைத் தாங்கிக்கொள்கிறார்கள்.

முற்றுகையில் அகப்பட்ட புலி கைநழுவிட்டது என்ற ஆத்திரம் அரச படையினருக்கு. ஆதரவாளர் கைது செய்யப்பட்டார். தேடுதல் முடுக்கிவிடப்பட்டது. தெருவெங்கும் இராணுவம். காயமுற்றவனை வெளியில் கொண்டு செல்லமுடியாத நிலை. இரத்த வாந்தி எடுத்த சங்கர் துவண்டு போனான். ஐந்து நாட்கள் கடந்தன.

சங்கரை பாரதம் கொண்டு செல்வதற்காக மோட்டார் படகு தயார் செய்யப்பட்டது. பலத்த சிரமத்தின் மத்தியில் சங்கர் ஒருவாறு கரைசேர்க்கப்பட்டான். அங்கும் போதிய வைத்தியம் செய்ய முடியாதநிலை.

உடல்நிலை நாளுக்கு நாள் நலிவடைந்தது.

27-11-1982 அன்று … விடுதலைப் புலிகளால் மறக்கவே முடியாத நாள். தமிழீழ மக்கள் மனதில் உத்வேகத்தை ஊட்டிய நாள். ஆயிரமாயிரம் போராளிகளை தன்னகத்தே கொண்டு விடுதலைப் போர் வீறுநடை போட வித்திட்ட நாள் அன்றுதான்.

தலைவர் பிரபாகரனின் மடியில் அவர் கைகளை இறுகப்பற்றி ‘தம்பி” என்றவாறே சங்கர் உயிர் துறந்தான்.

தலைவரின் விழிகளை நிறைத்த கண்ணீர் விழுந்து தெறித்து அவ் வீரனுக்கு அஞ்சலி செலுத்தியது.

தாயக மீட்புக்கான உரிமைப் போரில் வீரச்சாவடைந்த முதற்புலி லெப். சங்கரின் உடல் தமிழீழத்திற்கு வெளியே பாரதத்தில் தகனம் செய்யப்பட்டது. இவனது வீரச்சாவுகூட மக்களுக்கும் புலிகளுக்கும் இடையே இருந்த இணைப்பு இறுகிய பின்னரே வெளியே தெரியப்படுத்தப்பட்டது.

இம் மாவீரனின் வழித்தடத்தில் நடந்த ஆயிரக்கணக்கான போராளிகளில் 16000ற்கு மேற்பட்ட போராளிகள் விடுதலைப் போருக்கு தம்மை வித்தாக்கியுள்ளனர். இம் மாவீரர்களையெல்லாம் நினைவுகூரும் நாளாக லெப். சங்கர் வீரச்சாவடைந்த தினம் மாவீரர் நாளாக தமிழீழ மக்களால் அனுட்டிக்கப்பட்டு வருவதுடன் அவர்களின் இலட்சியப் பயணம் பல வெற்றிகளைப் பெற்று உறுதியுடன் தொடர்கின்றது.

எரிமலை (கார்த்திகை, 2000) இதழிலிருந்து............

தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசமெங்கும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், இத்தினத்தை நினைவுகூர்ந்து கிழக்கில் துண்டுப்பிரசுரமொன்று வெளியாகியுள்ளது.

மாவீரர் நாள் கார்த்திகை – 27 என தலைப்பிடப்பட்டு வெளியாகியுள்ள குறித்த துண்டுப்பிரசுரத்திற்கு மட்டக்களப்பு தமிழ் சமூகம் என உரிமை கோரப்பட்டுள்ளது. குறித்த துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-

‘மாவீரர் தெய்வங்கள் மகத்தான தியாகிகள். மண்மீட்பு போரின்பால் உயிர் நீத்த புனிதர்கள். எண்ணற்ற பணி செய்து இனம் வாழ வைத்தவர்கள். கண்மூடித் தூங்குகின்ற கடமையுணர்வாளர்கள்.

கார்த்திகைத் தீபங்கள் கலங்கரை விளக்குகள். காலத்தால் அழியாத கரிகாலன் வீரர்கள். ஈழத்தில் தமிழ் வாழ எமக்காக உழைத்தவர்கள். நேருக்குப் போர் செய்து நிலம் காத்த உத்தமர்கள்.

தேசத்தின் விடுதலைக்காய் தேகத்தை அர்ப்பணித்தோர் தாகமே தமிழ் என்று தமது மூச்சில் உச்சரித்தோர், இலட்சியக் கனவுகளை ஏந்தி நிற்கும் தீப்பொறிகள், இடி மின்னல் அடித்தாலும் இலக்குமாறா எறிகணைகள்.

இனம் காக்க வீழ்ந்திட்ட இலட்சிய வீரர்களை மறக்கலாமா தமிழினமே? மாவீரர் நினைவுகளை மனதார தீபமேற்றி மரியாதை செய்திடுவோம். மாவீரர் நாளதனை மறக்காமல் போற்றிடுவோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசிற்கும் – விடுதலைப் பேரியக்கத்திற்குமிடையில் இடம்பெற்ற பேச்சுக்களினடிப்படையில் இந்திய வல்லாதிக்கப் படைகள் 1990 பங்குனியுடன் இலங்கையிலிருந்து முற்றாக வெளியேறிய நிலையில் வட-கிழக்குப் பிராந்தியத்தியம் முழுவதும் விடுதலைப் புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வர ஸ்ரீலங்காப் படைகள் ஆங்காங்கே முகாம்களுக்குள் முடங்கிக் கொண்டனர்.

வரிப் புலிச் சீருடை தரித்த புலிகளின் ஆண், பெண் போராளிகள் அணியணியாக நகரங்களில் வந்திறங்குகின்றனர். மக்கள் ஆழ்ந்த வியப்புடன் இக் காட்சிகளை திரண்டு சென்று பார்க்கின்றனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் உள்ளிட்ட பெரும் பிரதேசங்களில் புலிகள் நிர்வாக நடவடிக்கைகளை வீச்சுடன் தொடங்குகின்றனர். இளைஞர்களும் யுவதிகளும் அணியணியாக இயக்கத்துடன் இணைந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் பிரேமதாஸ-புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தை முறிவடைய 1990 ஆனி மாதம் 10ம் நாள் இரண்டாம் கட்ட ஈழப் போர் ஆரம்பமாகின்றது. அந் நேரம் வடபிரதேசத்தின் பெரும் பகுதி புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்க படையினர் தங்கியிருந்த சில முகாம்களை புலிகள் சுற்றிவளைத்து தமது இறுக்கமான முற்றுகைக்குள் கொண்டுவருகின்றனர். யாழ் கோட்டை, ஆனையிறவு, பலாலி, மற்றும் மாங்குளம் ஆகிய முகாம்கள் இவ்வாறு முற்றுகை வளையத்துள் வந்தன. இவ் இராணுவ முகாம்களிற்கான விநியோகங்களை ஹெலிகொப்டர்கள் மூலமாகவே இராணுவம் மேற்கொண்டுவந்தது. இவற்றுள் யாழ் கோட்டை இராணுவ முகாமை கடுமையான சமர்களின் பின்னர் 1990 புரட்டாதி மாதம் 26ம் திகதி தியாகச் செம்மல் திலீபனின் மூன்றாவது நினைவு நாளன்று புலிகள் முற்றாக மீட்கப்படுகின்றது.

இந் நிலையில் வன்னிப் பிராந்தியத்தின் மையத்தில் அதன் இருதயத்தை போன்று அமைந்திருந்த மாங்குளம் இராணுவ முகாமை தகர்த்து அழித்து அப்பிரதேசத்தை விடுவிப்பதற்கு புலிகள் திட்டமிட்டனர். அப்போதைய வன்னிப் பிராந்தியத் தளபதி பால்ராஜ், உதவித் தளபதி தீபன் ஆகியோருடன் வன்னியின் மாவட்டத் தலைவர்கள், குழுத்தலைவர்களும் சேர்ந்து மாங்குளம் முகாமின் அமைப்பு, அதன் பலம்-பலவீனம் ஆகிய இராணுவ விடயங்களை நுணுகி ஆராய்ந்து தாக்குதலுக்கான திட்டங்களை வரைந்தனர்.

21.11.1990 மாவீர்ர் வாரத்தின் தொடக்க நாள். மண்ணுக்காக மரணித்த வீரமறவர்களை தாய்மண் நினைவு கூர்ந்து கொண்டிருக்க புலிகளின் பீரங்கிப் படையணிகள் சுறுசுறுப்பாக தமது வேலையை ஆரம்பித்தன. முகாமையும் அதன் பிரதான காவலரண்களையும் குறிபார்க்கும் வண்ணம் தமது தயாரிப்பான பசிலன்-2000 ஏவுகணைகளை நிலைநிறுத்திக் கொண்டனர். முகாம் தகர்ப்பிற்கான தாக்குதலணிகளும், பக்கபலமாக செயற்படுவதற்கான உதவித் தாக்குதல் அணிளும், இவர்களிற்கான ஆயுத-வெடிமருந்துகளை வழங்க விநியோக அணிகளும், தாக்குதலில் காயமடையும் போராளிகளை அப்புறப்படுத்த மீட்புக் குழுக்களும், அவர்களுக்கு சிகிச்சை வழங்கவென 18-22 வயதேயான சீருடை தரித்த இளம் மருத்துவ அணியினரும் பிரிக்கப்பட்ட அவரவர்களுக்குரிய கடமைகளும், கட்டளைகளும் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன.

கார்த்திகை 22ம் நாள் கதிரவன் மறையத் தொடங்க அணிகளும் தத்தமது கடமை இடங்களுக்கு நகரத்தொடங்குகின்றன. மீண்டும் தாம் சந்திக்க முடியாமல் போகலாம் என்பதை நன்கறிந்து கொண்டவர்களாய் வேறு வேறு தாக்குதலணிகளில் இருந்த நண்பர்கள் பரஸ்பரம் விடைபெற்றுக் கொள்கின்றனர். சரியாக இரவு 7.00 மணிக்கு முகாமைச் சுற்றியிருந்த அனைத்து பீரங்கிகளும் இயங்க வைக்கப்படுகின்றன. 23ம் நாள் விடிகாலைப் பொழுதில் பெரும்பாலான காவலரண்களும் மினிமுகாம்களும் புலிகளின் கட்டுப்பாட்டினுள் வருகின்றன. பின்வாங்குதலும் முன்நகர்தலுமாக பகல்பொழுது அமைந்திருக்க மாலை 4.00 மணியளவில் பிரதான முகாம் தவிர்ந்த அனைத்து பகுதிகளும் கைப்பற்றப்பட்டு 57 போராளிகளின் இழப்புடன் முதலாவது தாக்குதல் திட்டம் நிறைவிற்கு வருகின்றது. இவ்வாறு வீரச்சாவடைந்தவர்களில் கப்டன் ஜெகன், கப்டன் வதனன், மேஜர் திலீப் ஆகியோர் இணைபிரியாத நண்பர்களாக இருந்துள்ளனர். பல தாக்குதல்களில் ஒன்றாகப் பணியாற்றியிருந்திருக்கின்றார்கள். புகைப்படக் கருவியை வைத்திருந்த சக போராளியை பார்த்து ஜெகன் கூறினானாம் ”மச்சான்! எங்கள் மூன்று பேரையும் ஒரு படம் எடுத்து விடு. நாளைக்கு சுவரில தான் நிப்பம்” என. 23.11.1990 முகாமைச் சுற்றியிருந்த அனைத்து பீரங்கிகளையும் முன்னோக்கி நகர்த்திய அணிகள் பிரதான முகாமை குறிவைத்து சரியாக இரவு 8.00 மணிக்கு சகல பீரங்கிகளையும் இயக்கின.

பேரொசைகளுடன் முகாம் பகுதி அதிர்கின்றது. நள்ளிரவு தாண்டி 1.00 மணிக்கு பீரங்கிகளின் அனைத்து இயக்கமும் நிறுத்தப்பட யாழ்-வவுனியா பிரதான வீதியிலே வெடிமருந்து வண்டியுடன் தயாராக கரும்புலி லெப்.கேணல் போர்க். முகாமைச் சுற்றியிருந்த அனைத்து அணிகளுக்கும் வெடிமருந்து வண்டி செல்லப் போகும் செய்தி இரகசிய பாசை வழியாக அறிவிக்கப்படுகின்றது. போராளிகள் பாதுகாப்பாக நிலையெடுத்துக் கொள்கின்றனர். துணைத் தளபதி தீபனிடம் இறுதி விடைபெற்றுக் கொண்ட இரண்டாவது தரைக்கரும்புலி தன் இலக்கு நோக்கி நகர்ந்து சென்று பிரதான முகாமின் மையப்பகுதியில் வெடிக்கின்றான். மாங்குளம் பிரதேசம் முழுவதுமே அதிர போர்க் காற்றோடு கலந்தான். புகைமண்டலமாக காட்சியளித்த முகாம் பகுதியை நோக்கி நிலையெடுத்திருந்த புலியணிகள் விரைந்து சென்று சல்லடை போட்டு முகாமை தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருகின்றன. இத் தாக்குதல்களில் பங்கு கொண்ட போராளிகளில் மொத்தமாக 108 பேர் வீரச்சாவடைந்தனர்.

இவ்வாறாக விடுதலையை அவாவி நின்ற எம் இளைஞர்களின் தியாகங்களும், அர்ப்பணிப்புகளும் வார்த்தைகளில் அளவிட முடியாதவை. சொற்களில் வர்ணிக்க முடியாதவை. இவர்கள் விடுதலை வேண்டி பட்ட துன்பங்கள், இழப்புகள், வேதனைகள் எண்ணிறைந்தவை. என்றோ ஒரு நாள் இவர்களின் உயிர்விலைக்கான அறுவடை பெறப்படும். அப்போது வருடத்தின் இந் நாட்களில் இன்றைய இளைஞர்களிற்கான வழிகாட்டிகளாக இவர்கள் ஒளிவீசிப் பிரகாசிப்பர்.

பாலசிங்கம் செவ்வேள்

தமிழ் இளையோர் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மாவீரர் வார நிகழ்வுகள் பல நாட்டின் பல்கலைக்கழகங்களில் நடந்தேறிவருகின்றன.

இந்த வகையில் லண்டன் UCL பல்கலைக்கழகத்தில் நேற்று புதன்கிழமை(25) தாயக மண்மீட்பு போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பிரித்தானிய இளையோர் அமைப்பும் லண்டன் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து முன்னெடுத்த இந்த நிகழ்வில்முன்னாள் போராளி மாணவர்களான கோபி, பிரம்மி ஜெகன் ,மற்றும் சத்தியசீலன் தமிழ்வாணி போன்றோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

மாணவர்கள் எப்படி ஆரம்பகாலத்தில் ஈழப் போரினில் ஈடுபட்டார்கள் முள்ளிவாய்க்காலில் தனது தந்தையரின் அனுபவங்கள் அவர்கள் அனுபவித்த துயரங்கள் இராணுவத்தின் இனப்படுகொலையின் உச்சகட்ட போரினைப் பற்றியும் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இதேவேளை கோபி அவர்கள் சர்வதேச அரசியல் மற்றும் தமிழீழ புவிசார் அரசியல் நிலைமை பற்றியும் எடுத்துரைத்தார்.

அத்தோடு இந் நிகழ்வில் தமிழர்களுக்கு எதிரான பிரித்தானியாவின் போர் நூல் எழுத்தாளர் Phil Miller உரையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 62வது பிறந்த தினத்தை முன்னிட்டு, யாழ். பல்கலைக்கழக வளவுக்குள்  இன்று சனிக்கிழமை மதியம் 12.00 மணியளவில் சிலரினால் கேக் வெட்டி பிறந்தநாள் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது சுட்டிக்காட்டத்தக்கது.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த மாவீர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. 

மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசார ஊழியர்கள் ஒருங்கிணைந்து இந்த அஞ்சலி நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.

வடக்கு- கிழக்கு உள்ளிட்ட தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் மாவீரர் நினைவேந்தல் வாரம் மனப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே, யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.




யாழ். பல்கலைக்கழகத்துக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. விரிவுரை மண்டபங்கள் உள்ளிட்ட சில பகுதிகளிலேயே இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 

இன்று வெள்ளிக்கிழமை காலை விரிவுரைகளுக்காக வருகை தந்த மாணவர்கள் குறித்த சுவரொட்டிகளைக் கண்டுள்ளனர்.

வடக்கு- கிழக்கு உள்ளிட்ட தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் மாவீரர் நினைவு வாரம் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையிலேயே, மாவீரர் நினைவேந்தல் சுவரொட்டிகள் யாழ். பல்கலைக்கழகத்துக்குள் ஒட்டப்பட்டுள்ளன.

மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்: எந்த சூழலிலும் பதட்டப்படாத ஒரு கெரில்லா வீரனுக்குரிய அனைத்து அம்சங்களையும் கொண்ட சங்கர் எனும் சத்திய நாதன் 19.08.1961 அன்று பிறந்தார் 27.11.1982 அன்று தமிழ் நாட்டில் வீரச்சாவு அடைந்தார். சங்கர் அவர்கள் வீரச்சாவு அடையும் போது தமிழீழ தேசிய தலைவர் மேதகு திரு வே பிரபாகரன் அவர்கள் உடன் இருந்தார்.

அவர் வீரச்சாவு அடையும் போது “ ஒரு உண்மை மனிதனின் கதை” என்ற இரஷ்சிய நாவலை படித்து கொண்டிருந்தார் ஆனால் படித்து முடிவதற்கு முன்பாகவே அவரது உயிர் பிரிந்தது. ஆனால் இன்னொரு உண்மை மனிதனின் கதை பிறந்தது.

1982 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளை இலங்கை பொலிசார் வலை விரித்து தேடும் நேரம். சங்கர் எனும் முதல் மவீரனும் தலைவர் பிரபாகரன் அவர்களின் அரசியல், இராணுவ செயற்பாடுகளை முழுமையாக வரித்துக்கொண்டு இயக்கத்தின் இராணுவ பிரிவில் தனது கடமைகளை செய்ய தொடங்கினார். தனது 20 வயதிலேயே தலைமறைவு வாழ்க்கையினை மேற்கொண்ட கெரில்லா வீரனாக, இயக்கத்தின் தாக்குதல் தலைவனாக குடா நாடு முழுவதும் சுற்றி திரிந்த அதிரடிப்புலிதான் சங்கர்.

சங்கர் விடுதலைப்புலிகள் அமைப்பில் சேர்வதற்கான முயற்சிகள் கூட ஒரு போராட்டமாகவே இருந்தது எனலாம். 1977ஆம் ஆண்டு. வீட்டில் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு அவர் பண்ணை ஒன்றில் இயங்கிக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் பாசறையை அடைந்தார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் பண்டிதருடன் வந்த அவரைக் கூர்ந்து நோக்கினார். இளைஞன் ஆனால் தோற்றத்தில் சிறியவன். தலைமறைவுப் போராட்டம் என்பது மிகவும் கடினமானது. குறிவைத்த எதிரியை வீழ்த்துவதற்காக எதிரியின் கண்களில் மண்ணைத் தூவி பல நாட்கள் அலைந்து திரிய வேண்டும். நிரந்தரமாக ஓரிடத்தில் தங்க முடியாது. நேரத்திற்கு உணவு கிடையாது. அல்லது பல நாட்கள் உணவின்றியே இருக்க வேண்டும். இவற்றை எல்லாம் தாங்கும் மனோபலம் சிறுவனுக்கு இருக்குமா?

தலைவர் பிரபாகரன் கூற்றுப்படி படிப்பைத் தொடர்வதற்காக வீடு திரும்புகிறான் சத்தியநாதன். ‘ஏதோ அறியாதவன். சில நாட்கள் சுற்றி விட்டு வீடு வந்து விட்டான். இனி ஒழுங்காகப் படிப்பைத் தொடர்வான்” என இவரது பெற்றோர் எண்ணினர். ஆனால், சத்தியநாதனின் உள்ளத்து உறுதி கலையவில்லை. தானும் ஒரு போராளியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்கிறான். இடைப்பட்ட காலத்தில் போராட்டத்திற்கு உறுதுணையாக சாரதிப் பயிற்சி பெறத் தீர்மானித்து அதில் வெற்றியும் பெற்று விடுகிறான்.

1978ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு நாள் இரவு மீண்டும் தம்முன் வந்து நின்ற சத்தியநாதனை ஏறிட்டனர் ஏனைய போராளிகள். அவர்கள் முகங்களில் புன்னகை. அதில் சத்தியநாதனின் உறுதி புலப்படுகிறது. சத்தியநாதனுக்கு தலைமறைவு வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் புனைப்பெயர் சூட்டப்படுகிறது. சத்தியநாதன் சங்கராக விடுதலைப் புலியாக மாறினான். சங்கரின் உள்ளத்தைப் போலவே உடலும் உறுதி பெற்றது. ஓயாது உழைத்தான். எதிலும் ஆர்வம் எப்போதும் சுறுசுறுப்பு. தோழர்கள் ஒன்றுகூடி கருத்தரங்குகள் வைப்பதும்இ திட்டங்கள் தீட்டுவதும்இ விவாதிப்பதுமாக… சங்கரின் அரசியல் அறிவு விரிந்தது. வளர்ச்சி பெற்றது.

இயக்கத்தில் ஆரம்பகாலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலருக்கு மட்டுமே ஆயுதப் பயிற்சி வழங்கப் பட்டது. ஓய்வு நேரங்களில் ரிவோல்வரில் குறி பார்ப்பதிலும் ஆங்கில சினிமாப் படங்கள் மூலம் தன் ஆயுத அறிவை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டினான் சங்கர். 1979இல் சிறிய ஆயுதங்களில் குறிபார்த்துச் சுடும் பயிற்சி சங்கருக்கு வழங்கப் பட்டது. சங்கருக்கு குறி பார்த்துச் சுடும் பயிற்சியிலிருந்த திறமையால் தலைவரிடமிருந்து வெகுமதியாக 0-45 ரிவோல்வர் ஒன்று கிடைத்தது.

அது சங்கருக்கு கிடைத்த பின் அதை வைத்து மேலும் தனது திறமையை வளர்த்துக் கொண்டான். இரு கரங்களாலும் குறி பார்த்துச் சுடுவதில் தன்னிகரற்றவனாயினான். சிறந்த ஆயுதப் பராமரிப்புஇ தினசரி துப்பரவாக்கப் பட்டு பளபளத்தது ரிவோல்வர். 1979 வைகாசியிலே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்வதாக அறிவித்திருந்த அரசுஇ விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்குடன் தேடுதல் வேட்டைகளை விஸ்தரித்தது. சங்கரின் பெயரும் எதிரிக்குத் தெரிந்து விட்டது. அவனும் தேடப் பட்டான். 1981ஆம் ஆண்டு நவீன ரக ஆயுதங்களை இயக்கும் பயிற்சி சங்கருக்கு வழங்கப் பட்டது. சங்கர் தாக்குதல் படைப் பிரிவில் ஒருவனானான்.

1982ஆடி 2ஆம் நாள் முதல் முதலாக எதிரியுடன் ஆயுதம் தாங்கிய மோதலில் சங்கர் ஈடுபடப் போகும் நாள், திட்டமிட்டபடி போராளிகள் எழுவர் நெல்லியடியில் ரோந்து வந்த பொலிஸ் ஜீப் மீது தாக்குதல் தொடுத்தனர். சங்கரிடம் ஒரு ரிவோல்வர், வேறொரு போராளியிடம் ஒரு இயந்திரத் துப்பாக்கி இதைத்தவிர வேறு ஆயுதங்கள் இல்லை புலிகளிடம். முதலில் எதிரி வாகனச் சாரதி சுட்டு வீழ்த்தப்பட்டான். சங்கரின் நீண்ட காலக் கனவு நனவாகத் தொடங்கியது. வெற்றிகரமான தாக்குதலில் எதிரிகளில் நால்வர் கொல்லப் பட்டனர். அவர்களின் ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டன. விடுதலைப் புலிகள் எந்தவித இழப்புக்களுமின்றி வெற்றியுடன் மீண்டனர்.

1982இல் தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பிற்காக முதன் முதலாக இரு மெய்ப் பாதுகாவலர்கள் தெரிவு செய்யப் படுகின்றனர். அவர்களில் ஒருவனாக சங்கரும் தெரிவு செய்யப் பட்டிருந்தான். இக் காலகட்டத்தில் நவீனரக ஆயுத வரிசையில் இரண்டு ஜீ-3க்கள் மட்டுமே இயக்கத்திடம் இருந்தன. இவற்றில் ஒன்று சங்கருக்கு வழங்கப் படுகின்றது. இராணுவத் தாக்குதல்களில் மட்டுமல்ல மக்களை அரசியல் மயப்படுத்தும் நடவடிக்கைகளிலும் சங்கர் ஈடுபட்டான். புலிகளை வலை வீசித் தேடும் நடவடிக்கைகளுக்கு ஊடாகவே இவற்றையெல்லாம் மேற்கொள்ள வேண்டியிருந்தது.

கூலிப்படைகளின் தேடுதல் வேட்டை மும்முரமாகின்றது. புலிகள் இயக்க ஆதரவாக இருந்த விரிவுரையாளர் ஒருவரின் வீட்டில் சங்கர் இதை மோப்பம் பிடித்து விடுகிறது கூலிப்படை…. வீடு முற்றுகை இடப்படுகிறது. முற்றுகை முற்று முழுதான முற்றுகை. சங்கரின் கை இடுப்பிலிருந்த ரிவோல்வரின் பிடியை இறுகப் பிடிக்கின்றது. தப்பியோடத் தீர்மானிக்கின்றான் சங்கர். கூவிப் பாய்ந்த ரவைகளில் ஒன்று சங்கரின் வயிற்றைப் பதம் பார்த்து விடுகிறது. தரையை நனைக்கின்றது குருதி. உடல் சோர்ந்தாலும் உள்ளம் சோரவில்லை. எதிரியின் கையில் தனது ரிவோல்வர் கிடைத்து விடக்கூடாது. எப்படியும் தன் தோழர் கையில் அதனை ஒப்படைத்து விட வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தை உறுதியாக்க கிட்டத்தட்ட இரண்டு மைல் ஓடியிருப்பான். தெரிந்த ஒருவரின் உதவியுடன் நண்பர்கள் இரகசியமாகக் கூடும் இடத்தை அடைந்தான். ரிவோல்வரை தோழர்களிடம் கையளித்து விட்டு உணர்விழந்தான் சங்கர். தோழர்கள் அவனைத் தாங்கிக் கொள்கிறார்கள்.

முற்றுகையில் அகப்பட்ட புலி கைநழுவி விட்டது என்ற ஆத்திரம் அரச படையினருக்கு. ஆதரவாளர் கைது செய்யப்பட்டார். தேடுதல் முடுக்கி விடப்பட்டது. தெருவெங்கும் இராணுவம். காயமுற்றவனை வெளியில் கொண்டு செல்ல முடியாத நிலை. இரத்த வாந்தி எடுத்த சங்கர் துவண்டு போனான். ஐந்து நாட்கள் கடந்தன. சங்கரை இந்தியா கொண்டு செல்வதற்காக மோட்டார் படகு தயார் செய்யப்பட்டது. பலத்த சிரமத்தின் மத்தியில் சங்கர் ஒருவாறு கரை சேர்க்கப்பட்டான். அங்கும் போதிய வைத்தியம் செய்ய முடியாத நிலை. உடல்நிலை நாளுக்கு நாள் நலிவடைந்தது.

27-11-1982 அன்று விடுதலைப் புலிகளால் மறக்கவே முடியாத நாள். தமிழீழ மக்கள் மனதில் உத்வேகத்தை ஊட்டிய நாள். ஆயிரமாயிரம் போராளிகளைத் தன்னகத்தே கொண்டு விடுதலைப் போர் வீறுநடை போட வித்திட்ட நாள் அன்றுதான். தலைவர் பிரபாகரனின் மடியில் அவர் கைகளை இறுகப்பற்றி ‘தம்பி” என்றவாறே சங்கர் உயிர் துறந்தான். தலைவரின் விழிகளை நிறைத்த கண்ணீர் விழுந்து தெறித்து அவ் வீரனுக்கு அஞ்சலி செலுத்தியது.தாயக மீட்புக்கான உரிமைப் போரில் வீரச்சாவடைந்த முதற்புலி லெப். சங்கரின் உடல் தமிழீழத்திற்கு வெளியே இந்தியாவில் தகனம் செய்யப்பட்டது. இவனது வீரச்சாவு கூட மக்களுக்கும் புலிகளுக்கும் இடையே இருந்த இணைப்பு இறுகிய பின்னரே வெளியே தெரியப் படுத்தப்பட்டது.

தனது 19 வயதிலேயே வெடிகுண்டு தயாரிக்கும் திறமையினை பெற்றிருந்த சங்கர் தாக்குதலிற்கான வெடிகுண்டுகளை தய்யரித்து மற்றவர்களுக்கு பயிற்சியும் வழங்குவான். ஆயுதங்களோடு எதிரியிடம் பிடிபடுவதனை எந்த காலத்திலும் விரும்பாத சங்கர் அவ்வாறு யாரும் பிடிபடும் வேளை உள்ளம் குமுறுவான். எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்பதில் எக்காலத்திலும் மாற்று கருத்துக்கு இடமில்லாமல் தனது பயணத்தினை தொடர்ந்தவன்.

அதனால் தான் தனித்து தன்னை சுற்றி துப்பாக்கி வேட்டுக்களை தீர்க்க தயாராக இருந்த இலங்கை அதிரடி பொலிஸ் படை மீது தாக்குதல் நடாத்திய வாறே தப்பி சென்றான். காயப்பட்ட உடலுடன் கைத்துப்பாகியை கைவிடாது மதில்கள் வேலிகள் தாண்டி இறுதி வரை தான் பாதுகாப்பாக வந்தடையும் வரை துப்பாக்கியிபை பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்த்தான் சங்கர் என்ற மாவீரன்.

தெற்கில் இருந்து சாரணர்களை அனுப்பி புலிகளை அடக்குவேன் என அப்போதைய அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்கள் கூறிய சில தினங்களில் நெல்லியடியில் சிறிலங்கா பொலிஸ் படையின் ஜீப் ஒன்றின் தனது கைத்துப்பாக்கியால் சுட்டான் அதன் பின்னர் அந்த சாரதியினை ஒருகையால் இழுத்து வெளியே விட்டு கொண்டு மற்றவர்களுக்கும் தனி ஒருவனாய் கைத்துப்பாகியால் தாக்கினான். அந்த காலத்தில் சிங்கள அரசாங்கத்திற்கு இது ஒரு அதிர்ச்சிகரமான தாக்குதல்தான்.

மாவீரன் சீலன் அவர்களின் வழினடத்தலில் இடம்பெற்ற சாவகச்சேரி பொலிஸ் நிலைய தாக்குதல் நடவடிக்கையிலும் சங்கர் கணிசமான பங்களிப்பினை வழங்கினான். அதேவேளை பொன்னாலை கண்ணிவெடிதாக்குதல் நடவடிகையிலும் சங்கரின் பங்களிப்பு கணிசமானது. இதே வேளை ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் தம்பாபிள்ளை அவர்கள் மீதான் இயக்க நடவடிக்கைக்கும் சங்கர் அவரே பொறுப்பெடுத்தார்.

எந்த சூழலிலும் பதட்டப்படாத ஒரு கெரில்லா வீரனுக்குரிய அனைத்து அம்சங்களையும் கொண்ட சங்கர் எனும் சத்திய நாதன் 19.08.1961 அன்று பிறந்தார் 27.11.1982 அன்று தமிழ் நாட்டில் வீரச்சாவு அடைந்தார். சங்கர் அவர்கள் வீரச்சாவு அடையும் போது தமிழீழ தேசிய தலைவர் மேதகு திரு வே பிரபாகரன் அவர்கள் உடன் இருந்தார். அவர் வீரச்சாவு அடையும் போது “ ஒரு உண்மை மனிதனின் கதை” என்ற இரஷ்சிய நாவலை படித்து கொண்டிருந்தார் ஆனால் படித்து முடிவதற்கு முன்பாகவே அவரது உயிர் பிரிந்தது. ஆனால் இன்னொரு உண்மை மனிதனின் கதை பிறந்தது.

யுத்தத்தில் உயிரிழந்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்த கடந்தகால அரசாங்கத்தில் தடைவிதிக்கப்பட்டமையே, இன்று  ஆவேசத்துடன் தமிழர்கள் மாவீரர் தினத்தை  நினைவுகூர்வதற்கு  காரணமாக அமைந்துள்ளதாக வட மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின்போது உயிரிழந்த தமது குடும்ப உறுப்பினர்களின் கல்லறைகளுக்குச் சென்று, அவர்களுக்கு   அஞ்சலி செலுத்த ஆட்சியளர்கள்  அனுமதி அளிக்காததால் மாவீரர் குடும்பங்கள் உள ரீதியாக   பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்ளைச் சிரமதானம் செய்யும் பணிகள் அப்பகுதி மக்களினால் இன்று முன்னெடுக்கப்பட்டன.

இந்தச் சிரமதான பணிகள் இன்று காலை வட மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

சிரமதானப் பணிகளில் அப்பகுதி மக்கள் மற்றும் வடமாகாண கல்வியமைச்ச குருகுலராசா ஆகியோரும் பங்கேற்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், முழங்காவில், தேராவில் ஆகிய பகுதிகளில் மொத்தமாக   மூன்று மாவீரர் துயிலும் இல்லங்கள் காணப்படுகின்ற போதும், அதன் பின்னரும் தேராவில் மாவீரர் துயிலும் இல்லம் ஸ்ரீலங்கா இராணுவத்தின் வசம் காணப்படுகின்றது.

இந்த நிலையிலேயே, கனகபுரம், முழங்காவில் பகுதிகளிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில்  மக்கள் சிரமதானத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் இனத்தின் விடுதலைக்காகப் போராடி தமது உயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி தமிழ் மக்களினால்  அஞ்சலி செலுத்தப்படுகின்றது.

இந்த நிலையில், போரின்போது கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவுகூறுவதற்கு எவராவது முற்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், யுத்ததின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளதாக நேற்று முன்தினம் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வட மாகாண முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

இதே கருத்தினை வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் வலியுறுத்தியிருந்தமையும்  குறிப்பிடத்தக்கது.




இன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்: நவம்பர் மாதம் 23 மதியத்தில் இருந்து 24 காலைவரை யாழ் போதனா வைத்தியசாலையில் உள்ள போராளிகள் மருத்துவ விடுதி நிரம்பி வழிந்தது. யாழ் போதனா வைத்திய சாலையும் வைத்தியர்கள், தாதிகள் உட்பட தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவ துறை வைத்தியர்கள் மற்றும் மருத்துவ போராளிகளும் கடமையில் இரவு பகலாக ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

3வைத்திய சாலைக்கு முன்பாக இருந்த பாலம் பணிமனையில் குருதிகொடை செய்வதற்காக மாணவர்கள் சிலரும் வந்து காத்திருந்தனர். அந்தளவு போராளிகள் காயப்பட்டு வந்து கொண்டிருந்தனர்.

ஆம் மாவீரர் வாரத்தின் மூன்றாம் நாளான நேற்று தமிழீழ விடுதலைப்புலிகளின் 1992 வரையான வரலாற்றில் மிக முக குறுகிய நேரத்தில் நீண்ட காவலரண்களை தாக்கியழித்த சமர் நேற்று நடந்திருந்தது. பலாலி பெரும் கூட்டு படைத்தளத்தின் கிழக்கு பகுதியில் 4.5 கிலோமீற்றர் காவலரண்களை தாக்கி அழித்திருந்தனர். அந்த நடவடிக்கையில் காயப்பட்டோர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். அது மட்டுமன்றி வன்னியில் இருந்தும் தென் தமிழீழத்தில் இருந்தும் மன்னாரில் இருந்தும் கடல்வழியாக காயப்பட்ட போராளிகள் வந்த வண்ணம் இருந்தனர். அதே வேளை மாவீரர்களின் வித்துடல்களும் கிளாலி கடல்வழியாக ந்து கொண்டிருந்தன.

இதற்கு காரணம் 1992 ம் ஆண்டு விடுதலைப்புலிகள் இலங்கை அரசாங்கத்தின் வட தமிழீழ மிகப்பெரும் படை நடவடிக்கை எடுப்பினை சீர்குலைக்கும் தாக்குதல்களை நடாத்தியதும் தென் தமிழீழத்தில் படை நடவடிக்கைகளை முறியடித்ததும் ஆகும். 1992 ம் ஆண்டினை ஓர் வெற்றி ஆண்டாக தமிழ்ழிழ தேசமும் விடுதலைப்புலிகளின் போராளிகளும் கொண்டாடினர். அந்த வெற்றிக்காக தமது உயிரையும், குருதியினையும்,அங்கங்களையும் கொடுத்த போராளிகளை மக்கள் வாழ்த்தினர். கூடவே மாவீரர் நாளில் அந்த மாவீரர்களுக்காக தமிழீழத்தின் திக்கு திசை எங்கும் மக்கள் தமது இடங்களை அழகு படுத்தி அந்த அழகில் மாவீரர்களை நிறுத்தினர் என்றே சொல்லவேண்டும்.

பலாலி கிழக்கு இராணுவ வேலிகள் தகர்ப்பு தாக்குதல் அப்போது அரச படைகளுக்கும், அரசாங்கத்திற்கும் பெரும் அதிருப்தியினை தோற்றுவித்து இருந்தது ஏனெனில் 1992 ம் ஆண்டு இலங்கை அரசாங்கம் குடா நாட்டில் மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையினை மேற்கொள்ள இருந்தது. ஐந்து முனைகளில் இந்த தாக்குதலினை நடாத்த அரச படைகள் தயாராகி கொண்டிருந்தனர். மண்டைதீவு வழியாக , பலாலி ஊடாக,அனையிறவு இயக்கச்சி ஊடாக, கட்டைக்காட்டில் இருந்து வடமராட்சி கிழக்கு ஊடாக, அராலிதுறையூடாக ஆகிய முனைகளில் தயாராகி கொண்டிருந்த வேளையில் தான் தமிழீழ விடுதலைப்புலிகள் திட்டமிட்ட பல முறியடிப்பு தாக்குதல்களை நடாத்திக்கொண்டிருந்தனர்.

இதன்படி குடா நாட்டை கைப்பற்றுவதற்கான படை நடைவடிக்கையினை வழி நடாத்தவிருந்த சிங்கள தளபதிகளான டென்சில் கொப்பேகடுவ, விஜய விமலரட்ன, ஜெயமகா உட்பட 09 அதிகாரிகள் அராலியில் கண்ணீவெடி தாக்குதலில் 1992.08.08 அன்று கொல்லப்பட்டனர். மேஜர் கார்வண்ணன் இந்த தாக்குதலை வெற்றிகரமாக நடாத்தினார். அதன் பின்னர் கட்டைக்காட்டில் உள்ள படை நடவடிக்கைக்கான ஆயுத கிடங்கின் மீது 1/10/1992 ம் ஆண்டு அதிகாலை விடுதலைப்புலிகளின் இம்ரான் பாண்டியன் படையணி, கடற்புலிகள், மகளிர்படையணி ஆகியன இணைந்து தாக்குதலை மேற்கொண்டனர். இதில் இயக்க வரலாற்றில் (1992வரை) முதன் முறையாக பெரும் தொகையாக ஆயுதங்கள் மீட்கப்பட்ட சமராக அப்போது அமைந்தது. இந்த சமரில் மேஜர் கார்வண்ணன் வீரச்சாவு அடைந்தது பேரிழப்பாக இருந்தது.

இதே நேரம் தென் தமிழீழத்தில் இலங்கை அரசாங்கம் தமது தோல்விகளை மறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஜயபார இராணுவ நடவடிக்கையானதும் விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டது. இதில் இலங்கை அரசாங்கம் உலங்கு வானூர்தி ஒன்றினையும் இழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் தான் பூனகரி இராணுவ முகாமின் இராணுவ வேலிகளும் தாக்கி அழிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப்புலிகள் தமது போராட்ட வரலாற்றில் 1992 ம் ஆண்டினை வெற்றியாண்டாக பதிவு செய்துள்ளனர். காரணம் போருக்கு தேவையான பெரும் தொகையான ஆயுத வெடிப்பொருட்களை எதிரியிடம் இருந்து மீட்ட ஆண்டு, வட தமிழீழ மிகப்பெரும் படையெடுப்பினை முறியடித்து அதன் தளபதிகளையே கொன்றொழித்த ஆண்டு. இவ்வாறாக நமது வெற்றிக்கு உயிர் கொடுத்தது மட்டுமன்றி எதிர்கால போராட்டத்திற்கே உயிர்கொடுத்து ஆயுதங்களை பெற்று தந்த அந்த மாவீரர்களை போற்றுவோம்.

அதே நேரம் உயிர்கொடுத்து பெற்ற ஆயுதங்கள் இன்று எதிரி கைக்கு போவதனை நினைக்கும் ஒவ்வொரு கணமும் எங்கள் மனம் கனக்கின்றது என்றாலும் இந்த நேரத்தில் ஒரு ஆயுதத்தை கொடுத்து பல உயிர்கள் காப்பாற்றப்படும் என்றால் சில வேளை எங்கள் மாவீரர்கள் மன்னிப்பார்கள். ஏனென்றால் நாட்டின் மீது கொண்ட அதே பாசம் மக்கள் மீதும் போராளிகள் மீதும் அவர்களுக்கு இருந்தது.

கொடிய போர்கள் நடந்த ஜயசிக்குறு காலப்பகுதியில் எமது ஒரு நேர சாப்பாட்டை நிறுத்தி பட்டிணி கிடக்கும் மக்களுக்கு கொடுங்கள் என்று சொன்ன ஒரு மாவீரனை இந்த நேரத்தில் நினைவு கூருகின்றேன். அந்த மாவீரனின் சகோதரன் இந்த வருடம் இரணைப்பாலை ஆனந்த புரம் சண்டையில் படுகாயமடைந்து தற்போது இராணுவத்தின் சிறையில் இருக்கின்றான்.

தாயகத்தில் யாரும் யாருக்காக ஒன்றும் செய்ய முடியாத நிலையில் தமது பிள்ளைகளுக்கு தமது வீட்டில்கூட நினைவு கூர முடியாத நிலையில் இருக்கின்றது தமிழீழம். வெற்றி ஒலிகளில் மாவீரர்களை போற்றிய தமிழீழம் இன்று வேதனை ஒலிகளாலும் வலிகளாலும் தளர்வுற்று காணப்படுகின்றது. என்றாலும் எப்போ ஒரு நாள் நிமிரும் எம் தேசம் என்ற நம்பிக்கை இன்னமும் இருக்கின்றது.

இன்று மாவீரர் வாரத்தின் மூன்றாம் நாள். ஆம் 1989ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட மாவீரர் நாள் 1990 ம் ஆண்டு தமிழீழ மக்களால் இயன்றளவு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் நினைவு கூரப்பட்டது. மாவீரர் நாள் ஒரு சோக நிகழ்வு அல்ல அது ஒரு தேசத்தின் மலரும் நினைவுகள் எங்கள் விரர்களை போற்றும் நிகழ்வு, எம் தேசத்தை காக்க புறப்படுவதற்காக ஆயிரம் ஆயிரம் போராளிகளால் உறுதி எடுக்கப்படும் நிகழ்வு என தேசியத்தலைவரால் கூறப்பட்டது. அந்த வகையில் எங்கள் காவல் தெய்வங்களுக்காக புதிய கல்லறை தோட்டங்களை நிறுவி, அதனுள்ளே அவர்களை உறங்கவைத்து, அழகு பார்த்து அவர்கள் மீது உறுதியெடுத்து, அவர்கள் நினைவுகளை சுமந்து மக்களும் போராளிகளும் பயணிப்பதற்கான ஆலயமாக துயிலும் இல்லங்கள் உருவெடுத்தன.

1990 ம் ஆண்டின் இறுதி பகுதியில் துயிலும் இல்ல கட்டுமானங்கள் தொடங்கினாலும் 1991 ம் ஆண்டு முற்பகுதியில் பிரபல வரைபட கலைஞர் (பிரித்தானியா, மத்திய கிழக்கு , இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் பணிபுரிந்த அனுபவம் கொண்ட ஒரு நாட்டு பற்றாளர் தாயகத்திற்கு வந்து தேசிய தலைவரின் சிந்தனைக்கு அமைவாக துயிலும் இல்லத்தினை வரைந்து மாதிரி செய்து கொண்டிருந்தார் அதன் படி கட்டுமான பணிகளை போராளிகள் மக்கள் என அனைவரும் ஆரம்பித்தனர்.

இந்த கலைஞருக்கு கொடுத்த வேலை பிடித்து போக தனது வெளி நாட்டு வாழ்க்கையினை கைவிட்டு இதே வேலையில் ஊறிவிட்டார். கிளினொச்சி இராணுவத்தினரால் இந்த வருடம் கைப்பற்றப்படும் வரை அவர் தாயகத்தில்தான் இருந்தார் என்பதனை நாம் கட்டாயம் நினைவு படுத்தவேண்டும்.

இவ்வாறு தமிழீழ காவல்தெய்வங்களுக்காக அமைக்கப்பட்ட அலங்கரிக்கப்பட்ட இல்லங்களில் ஏற்கனவே சண்டை நடந்த இடங்களில் புதைக்கப்பட்ட மாவீரர்களை அகழ்ந்தெடுத்து புதிய இல்லங்களுக்கு கொண்டுவரும் முடிவுகளும் எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இந்திய இராணுவ காலப்பகுதியில் சண்டைகளில் மாண்டுபோன, அந்த இடங்களிலேயே புதைக்கப்பட்ட மாவீரர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் கோப்பாய், வடமராட்சி, மற்றும் வன்னி ஆகிய இடங்களில் துயிலும் இல்லங்களுக்கு கொண்டுவரப்பட்டனர்.

ஆரம்பத்தில்பிராந்தியங்களுக்கு ஒரு துயிலும் இல்லமாக இருந்து பின்னர் மாவட்டங்களுக்கு ஒன்று என விஸ்தரிக்கப்பட்டது அதன் பின்னர் மேலும் பல இல்லங்கள் பிரதேச ரீதியாக அமைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 1989 அம் ஆண்டு மாவீரர் நாளில் நினைவு கூரப்பட்ட 1657 மாவீரர்களது வித்துடல்களை துயிலும் இல்லங்களுக்கு கொண்டுவரும் பணிகள் 1991 இல் தொடங்கப்பட்டாலும் 2005 அம் ஆண்டுவரை அவை முற்றாக இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு 1991 ம் ஆண்டு யாழ் குடா நாடு எங்கும் எழிச்சிகோலமாக இருந்த இந்த நாட்களில் துயிலும் இல்ல பாடலாக “ மொழியாகி எங்கள் மூச்சாகி…….. என தொடங்கி தாயக கனவுடன் சாவினை தழுவிய சந்தணப் பேழைகளே” என்ற பாடல் புதுவை இரத்தினதுரை அவரின் கவிகளில் இசைவாணர் கண்ணனால் இசையூட்டப்பட்ட பாடல் அறிமுகம் செய்யப்பட்டது. மேஜர் சிட்டு, கனிமொழி, வர்ண ராமேஸ்வரன் ஆகியோர் அதனை பாடியிருந்தனர். அன்று தொடக்கம் இந்த பாடல் ஒவ்வொரு மாவீரன் விதக்கப்படும் போதும் இசைக்கப்படும் எனப்து குறிப்பிடதக்கது.

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய
சந்தனப் பேழைகளே! – இங்கு
கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா?
குழியினுள் வாழ்பவரே!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்
உறவினர் வந்துள்ளோம் – அன்று
செங்களம் மீதிலே உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம்.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே
நாமும் வணங்குகின்றோம் – உங்கள்
கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு
சத்தியம் செய்கின்றோம்
சாவரும் போதிலும் தணலிடை வேகிலும்
சந்ததி தூங்காது – எங்கள்
தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின்
தாகங்கள் தீராது.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது
உரைத்தது தமிழீழம் – அதை
நிரை நிரையாகவே நின்றினி விரைவினில்
நிச்சயம் எடுத்தாள்வோம்
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்
தனியர(சு) என்றிடுவோம் – எந்த
நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின்
நினைவுடன் வென்றிடுவோம்.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

மாவீரர் வாரத்தின் இரண்டாம் நாள்

பதிந்தவர்: தம்பியன் 22 November 2016

இன்று மாவீரர் வாரத்தின் இரண்டாம் நாள் இந்த நாளில் பெண் போராளி ஒருவரின் நினைவினை பகிர்வது பொருத்தமாக இருக்கும் ஏனென்றால் 1990 ம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் திகதி மாங்குளம் தாக்குதல் னடைபெற்று கொண்டிருந்தது. இரண்டு மாதமாக வட தமிழீழத்தின் மையப்பகுதியினை ஆக்கிரமித்து இருந்த சிங்களப்படை முகாமினை தாக்கி அழிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

ஆகவே மாவீரர் வாரத்தின் இரண்டாவது நாளான இன்றைய நாளில் மாங்குளத்தின் காட்டுப்பகுதியில் இரண்டு மாதமாக சிங்கள முகாமை தாக்குவதற்கான பயிற்சியினை எடுத்துக்கொண்டிருந்த, சண்டையில் பங்குபற்றிய பெண்கள் படையணியில் இருந்த இருக்கின்ற இந்த போராளியின் (தேவா) பதிவு இங்கு தரப்படுகின்றது.

ஒரே வகுப்பில் 13 போராளிகள் அதில் 09 மாவீரர். 75 பேர் கொண்ட அணியில் 2 பேர் தான் தப்பினார்கள். என்றாலும் அவர்களுக்காக அந்த காலப்பகுதியில் வீரஅணக்கம் செலுத்த முடிந்திருக்கவில்லை ஆம் அதுதான் இந்த பதிவின் முக்கியம்.

1989 ம் ஆண்டு இந்திய இராணுவ ஆக்கிரமிப்பில் சிக்கி தவித்தது எங்கள் தேசம் அதே நேரம் எந்தவித பிரச்சாரமோ அன்றி நிகழ்ச்சிகளோ இடம்பெறாமலேயே தாயகத்தின் பல இடங்களில் இருந்தும் புதிய போராளிகளாக இளைஞர்கள் யுவதிகள் தம்மை இணைத்தவண்ணம் இருந்தனர். அந்த காலப்பகுதியில் இயக்கத்திற்கு இணைந்து ஒழுங்காக பயிற்சி முகாமுக்கு காட்டுக்கு செல்வதென்றாலே ஒரு போராட்டம் தான். அதே நேரம் பெற்றோர்களின் பார்வையில் படாமல் செல்வது முதலாவது களம். இந்திய இராணுவம் அடிக்கடி சுத்தி திரிவதால் வீட்டில் இருந்து வெளியில் கண்டபடி வெளிக்கிட பெற்றோர்கள் விடுவதில்லை. எனவே இயக்கத்திற்கு போவது பற்றி கூடி முடிவு எடுப்பது பாடசாலையில் ஆகும். முடிவு எடுத்தபின் இயக்கத்திற்கு போக புறப்படும் நாளாக கோயில் திருவிழா அல்லது ஊரில் டி.வி. இல் சினிமா படம் ஓடும் நாள் அல்லது ஏதாவது விசேட நாட்கள் தான் தெரிவு செய்யவேண்டும் அப்படி எண்டால்தான் பெற்றோர்கள் கண்ணில் படாது செல்லமுடியும்.

அவ்வாறு 1989 ம் ஆண்டு முற்பகுதியில் எங்கள் வகுப்பை சேர்ந்தவர்கள் 05 பேர் பெண்கள் முடிவு எடுத்து ஒரு அணியாக இயக்கத்திற்கு சென்று விட்டோம் அதன் பின்னர் ஒரு மாத காலப்பகுதிக்குள் எமது வகுப்பில் படித்த் 13 பேர்வரை இயக்கத்திற்கு வந்துவிட்டார்கள். நாங்கள் எமது கிராமத்தில் இருந்து படகு வழியாக சென்று செம்மலையில் இறங்கி அதன் பின்னர் காட்டிற்குள் நடந்து போகவேண்டும். ஆனால் வடமராட்சி கிழக்கில் இருந்து எம்மை ஏற்றிக்கொண்டு படகு பருத்துறை பக்கமாக சென்றது எமக்கு அதிசயமாக இருந்தது ஆனால் கேள்வி கேட்கவில்லை.

பருத்தித்துறையினை படகு அடைந்ததும் நாங்கள் இறங்கினோம் இறங்கி ஒரு வீட்டில் இரவு இருந்துவிட்டு விடியகாலையிலேயே வல்வெட்டிதுறை நோக்கி நடக்கதொடங்கினோம் நான் நினைக்கின்றேன் ஒரு குச்சு ஒழுங்கையும் மிச்சமில்லை எல்லா இடமும் அளந்து கட்டிகொண்டு போனோம். எல்லா இடமும் இந்திய இராணுவம் அதனால்தான் சுத்தி சுத்தி நடந்தோம். வல்வெட்டிதுறை சென்றதும் அன்று இரவே மீண்டும் படகில் ஏறி செம்மலை அடைந்தோம். எம்மைஅழைத்து சென்றோர்கள் இன்று மாவீரர்களாகவும், முகமறியா கரும்புலி மாவீரர்களாகவும் ஆகிவிட்டார்கள்.ஒருவர் மட்டுமே போராளியாக இன்னமும் இருக்கின்றார்.

செம்மலையில் இருந்து காட்டிற்கு பயிற்சி முகாம் நோக்கி நடக்க தொடங்கினோம் 36 மணித்தியாலங்கள் தொடர்ந்து நடை சாப்பிடுவதற்கு மட்டும் கொஞ்ச நேரம் ஒரே நடைதான் கடற்பயணம், நடைபயணம் எல்லாமே புதிது ஆனாலும் எங்களுக்கு சோர்வு இருக்கவில்லை. சோர்வு காட்டினால் பயிற்சிக்கு கூட்டி செல்லமாட்டார்கள் என்ற பயம் வேறு. பயிற்சி முடிந்து சண்டைகள் பிடிக்க ஆரம்பித்தோம் இந்திய இராணுவத்துடன் இரண்டு சிறிய சண்டை பின்னர் சிங்கள இராணுவத்துடன் ஒரு சிறிய சண்டை அதனை தொடர்ந்து கொக்காவில், கோட்டை ஆகிய சண்டைகளுக்கு சென்ற பின்னர் பலாலி காவலரண் கடமையில் எல்.எம்.ஜி நிலையில் நின்றேன். இந்த காலப்பகுதியில் எனது வகுப்பு சக மாணவர்களான சிட்டு, நேசன், மாக்கிரட், எலெசபெத், வரதன்,அச்சுதன்,வெண்ணிலா,பத்தி, சாந்தி என போராளிகள் ஆங்காங்கே சண்டையில் நின்றார்கள்.சிலர் வீரச்சாவும் அடைந்தார்கள் லெப்ரினன்ட் மாக்கிரெட், 2ம் லெ எலிசபெத், லெப் நேசன், வெண்ணிலா போன்றோர் கோட்டை, கொக்காவில், பலாலி சண்டைகளில் வீரச்சாவு அடைந்து விட்டார்கள். ஆனால் அவர்களது வீரச்சாவுக்கு என்னால் செல்லமுடியாது போய்விட்டது காரணம் களப்பணி. ஆனால் முதன் முதலாக எங்கள் கட்டுப்பாட்டில் மாவீரர்னாளை சிறப்பாக கொண்டாடுவதற்காக ஏற்பாடு நடைபெறுவதாக கேள்விப்பட்டேன். 1990 ம் ஆண்டு இதே நாளில் நெல்லியடி பாடசாலை, கரவெட்டி பாடசாலைகளில் மாவீரர் பெற்றோர்கள் கெளரவிக்கும் நிகழ்வு தடல்புடலாக நடக்குதாம் என்றும் கேள்வி பட்டேன். ஆகவே அந்த நாள் நான் சென்று எல்லா நண்பிகள் நண்பர்களுக்கும் வீரவணக்கம் செலுத்திவிட்டு அவர்களது பெற்றோரையும் சந்தித்து விட்டு வருவம் என்று பெரிய பிளான் போட்டு வைத்திருந்தேன்.

பலாலி காவலரணனில் நின்ற போது தான் மாங்குளம் முகாம் தாக்கி அழிப்பிற்காக பயிற்சிக்கு சென்றோம் செப்ரெம்பர் மாதம் மாங்குளம் காட்டுபகுதியில் ரட்னம் முகாமிற்கு சென்று இரண்டு மாதமாக பயிற்சி எடுத்தோம் அந்த முகாமில் இருந்தே 15 மைல்கள் காடுகளுக்கு ஊடாக நடந்து மாங்குளம் சண்டைக்கு வந்து சண்டை ஆரம்பமாகி அது வெற்றிகரமான தாக்குதலாக நிறைவடைந்தது. என்றாலும் என்னால் தாங்க முடியாத சோகமும் ,நெருடலும், குமுறலுமாக இருந்தேன்.

காரணம் முதலாவது 1990 இல் மாவீரர் நாளை சிறப்பாக கொண்டாட களைகட்டி நின்றது தமிழீழம் ஆனால் என்னுடன் 10 வருடங்களாக படித்த எனது நண்பர்களின் வீரச்சாவுக்கு கூட போகவில்லை ஆனால் அவர்களுக்கு முதல்முறையாக வீரவணக்கம் கூட செலுத்த முடியவில்லை என்ற ஏக்கமும் தவிப்பும் எனது நெஞ்சத்தை உண்மையில் வாட்டி எடுத்தது.

அடுத்ததாக மாங்குளம் சண்டை களத்தில் நிற்கின்ற இடத்திலாவது வீரவணக்கம் செலுத்தலாம் என்று நினைத்தேன் அதுவும் முடியவில்லை வெற்றி ஒலியினை விட என் நெஞ்சம் வேதனை ஒலியினால் தவித்தது. ஏனென்றால் மாங்குளம் தெற்கு பக்க காவலரண்களை ஊடுருவி தாக்கியளித்து கைப்பற்றும் பொறுப்பு 75 பேர் கொண்ட எங்கள் பெண்கள் அணிக்கும் தரப்பட்ட முக்கியமான பணி. நான் பிறண் எல்.எம்.ஜி வைத்திருந்தேன் சண்டை அகோரமாகத்தான் இருந்தது. அணியில் ஒவ்வொன்றாக வீரச்சாவும் காயங்களும் என்றாலும் விடவில்லை நானும் இன்னொரு பெண்போராளியும் வேறு நான்கு ஆண்போராளிகளும் இறுதியாக மாங்குளம் கோவில் பக்க வலுவான காவலரணை தாக்கி அழித்து கைப்பற்றினோம் அதுதான் அந்த பக்கத்தில் இறுதி காவலரண்.

அதன்பின்னர் பின்னுக்கு சென்று தற்காலிக முகாமில் இருந்து அழுது கொண்டிருந்தேன் ஏனென்றால் இரண்டு மாதமாக நாங்கள் 75 பெண் போராளிகள் பயிற்சி எடுத்து எவ்வளவு சந்தோசமாக இருந்தது ஆனால் இன்று அவர்கள் இல்லை உண்மையில் அந்த சண்டையில் எங்கள் 75 பேரில் நானும் இன்னொரு பெண்போராளியும் தான் மிஞ்சினோம் 52 பேர் வீரச்சாவு ஏனையோருக்கு காயம்.

எனது வகுப்பில் ஒட்டு மொத்தமாக 13 பேர் போராளிகள் அதில் 09 பேர் வீரச்சாவு (பல சண்டைகளில்) இருவர் இருக்கின்றோம். ஒருவர் விலத்திவிட்டார். எனது பெண் போராளிகள் அணியில் 1990 ம் ஆண்டு இதே நாளில் வீரச்சாவு 52 பேர். ஆனால் இதே நாளில் 1990 ம் ஆண்டு என்னால் எவருக்குமே வீரவணக்கம் செலுத்தமுடியாத நிலையில் இருந்தேன். ஏன் இப்பவும் கூடத்தான் என் படையணி தோழிகளும் என் பள்ளி தோழிகளும் உறங்கும் அந்த ஆலயங்களுக்கு செல்லமுடியவில்லையே… ஆனால் நான் அவர்களை என்றோ ஒரு நாள் தரிசிப்பேன் என்ற நம்பிக்கையில் எனது பணியினை தொடர்கின்றேன்.

நன்றி தேவா

மாவீரர் வாரம் ஆரம்ப நாள் இன்று 21 -27

பதிந்தவர்: தம்பியன் 21 November 2016

1982 ம் ஆண்டு நவம்பர் 27 தாயகத்தின் முதல் வித்து 2ம் லெப்ரினன்ட் சங்கர் சத்திய நாதன் இந்தியாவில் தலைவர் மடியில் சாய்ந்தான் அந்த நாளே மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழுச்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மாவீரர் வாரத்தின் தொடக்க நாளான இன்று 1989 ம் ஆண்டு இந்த காலப்பகுதியில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று இங்கு பதியப்படுகின்றது.

1989 ம் ஆண்டு ஐப்பசி மாதம் முதல்வாரம் அளவில் இரண்டு போராளிகள் அந்த குளிர்கால கும் என்ற இருட்டிலும் கூட வீட்டை ஒருவாறு தேடி கண்டுபிடித்து வந்து சேர்ந்து விட்டனர். எங்குமே இந்திய அமைதி காக்கும்படை என்ற பெயரில் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் அதற்கிடையே காட்டிகொடுப்போர்கள், துணை இராணுவ குழுக்கள் என நிறைந்திருந்திருந்தது தேசம். இரண்டு போராளிகளில் ஒருவர் எமது ஊர்காரர் மற்றவர் முல்லை மாவட்டம் என சொன்னார் ஆனால் இடம் சொல்லவில்லை. ஒருவர் சந்திரன் மற்றவர் பெயர் ஞாபகம் இல்லை. சந்திரன் அரைகாற்சட்டையும் சேட்டும் மற்ற போராளி சாரம் கையில் டோர்ச் லைட் ஆனால் ஆயுதம் எதுவும் கைகளில் இல்லை களைத்து விழுந்தடித்து வந்தவர்கள் எனது அப்பாவையும் அம்மாவையும் தான் சந்திக்கவேண்டும் என கேட்டனர்.

நான் அவர்களை எங்கள் வீட்டிற்கு உள்ளேயே இருக்க சொல்லிவிட்டு குசினிக்குள் இருந்த அம்மா அப்பா ஆகியோரை கூப்பிட்டு கொண்டு வந்து அவர்கள் முன் விட்டேன் ஆச்சரியம் எதுவும் இல்லை ஏனென்றால் அவ்வளவு நெருக்கடிக்குள்ளும் கிழமைக்கு இரண்டு தடவை போராளிகள் வந்து போவார்கள் ஆகையால் அம்மா கேட்டார் என்ன ஐய்யாக்கள் இந்த நேரம் ஏதும் பிரச்சினையோ என்று சி..சீ அப்படி ஒண்டும் இல்லை அம்மா இந்த கடிதத்தை உங்களிட்ட கொடுக்க சொன்னவை அண்ணையின்ர இடத்தில் இருந்து வந்தது. சரி நாங்கள் போவிட்டு வாறம் என்றனர்.

அவசரப்படவேண்டாம் ஏதாவது சாப்பிடுங்கோ அல்லது தேத்தண்ணியாவது குடிச்சிட்டு போங்கோ என்றார் அம்மா. அப்பா சொன்னார் இந்த இருட்டுக்க எங்க போகப்போறியள் மழையும் இருட்டு கட்டி கிடக்கு என்றார். ஆனால் அவர்கள் இல்ல இல்ல நாங்கள் போகவேண்டும் என அடம்பிடித்தனர்; சென்றனர். ஆனால் ஏன் அடம் பிடித்தார்கள் என்பது எனக்கு அடுத்த நாள் தான் எனக்கு தெரிந்தது. அத்தோடு எங்கள் வீட்டில் அழுகை ஒலியும் கேட்கவே அயலவர்கள் வீட்டில் கூடிவிட்டனர்.

அந்த கடிதம் இதுதான் அதாவது ஒரு தபால் அட்டை பருமனில் சிவப்பு ரோஜா படத்தின் அருகே ஊன்றப்பட்ட துப்பாக்கி அதில் மாவீரர் நாள் 1989 கார்த்திகை 27 என அச்சிடப்பட்ட எழுத்துக்கள் என நினைக்கின்றேன். ஆனால் அடுத்த பக்கத்தில் எழுதப்பட்டவைதான் எம்மை எல்லோரையும் எனது குடும்பம் அனைவரையும் தூக்கிவாரிப்போட்டது. ஆம் அதில் எழுதப்பட்டு இருந்தது என்னவென்றால் மேஜர் ———– குடும்பத்தினருக்கு என எழுதப்பட்டு இருந்தது. ஆம் அன்றுதான் எங்கள் சகோதரன் வீரச்சாவு உறுதிப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்பட்ட நாள்.

அதற்கு முன்னர் மேஜர் —– வீரமரணம் என செய்தி வந்தது ஆனால் எவரும் உறுதியாக சொல்லவில்லை என்பதால் அடிக்கடி வரும் வதந்திகள் என்றே வீட்டில் நினைத்தார்கள் ஏனென்றால் எப்போ வீரமரணம்? எந்த சண்டையில்? நாள்? நேரம்? என்ன நடந்தது? என்ற எந்தவிபரமோ அல்லது வித்துடலோ எங்கே அடக்கம் செய்தது என்ற விபரமோ சொல்லவில்லை ஆகையால்தான் வதந்தி என நாம் இருந்துவிட்டோம்.

ஆனால் வதந்தி அல்ல உண்மை 1989 ம் ஆண்டு பங்குனி மாதம் 3ம் திகதி நித்திகை குளத்தில் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்திருந்தார் மேஜர் —– அவர்கள். தமிழீழ தேசிய தலைவருக்கு மெய்பாதுகாவலராக இருந்தவர்களில் இவரும் ஒருவர். இந்த காலப்பகுதியில் இந்தியப்படையினரால் ஒப்பரேசன் செக்மேற் 3 என்ற நடவடிக்கையினை முறியடித்து தாக்கிய சமரில் வீரச்சாவு அடைந்தார். இவரின் வித்துடலும், இவருடன் வீரச்சாவடைந்த ஏனைய போராளிகளினதும் வித்துடல்களும் தலைவர் முன் நிலையில் தேசிய தலைவரின் முகாம்களில் ஒன்றான (பின் நாளில் கமல் பேஸ்) மணலாற்று காட்டுப்பகுதியில் விதைக்கப்பட்டது.

ஆம் முதலாவது தமிழீழ மாவீரர் நாள் நினைவு கூரப்படுவதற்கு முன்பாகவே எமக்கு இந்த விடயம் அனைத்தும் தெரிந்தது. இதனால் எனது அம்மா கட்டாயம் நான் என் பிள்ளை புதைக்கப்பட்ட இடத்தை பார்க்கவேண்டும் என அடம்பிடித்தார். இதனால் 1989 நவம்பர் மாதம் அளவில் சில போராளிகள் வந்து வடமராட்சியில் இருந்து எம்மை அழைத்து சென்றனர். முல்லைதீவு வரை சென்றோம் எங்குமே இந்திய இராணுவம் நின்றாலும் அதைப்பற்றி யாரும் பொருட்படுத்தவில்லை. நாம் முல்லைத்தீவு வரை பஸ் இல் பயணம் செய்து பின்னர் அளம்பில் பகுதி கடற்கரையில் ஒரு தென்னம் தோட்ட பகுதிவரை ஒரு கன்ரர் வானில் சென்றோம். இரண்டு நாள் அங்கு தங்கி இருந்தபின்பு ஒரு பச்சை நிற டற்சன் பிக் அப் வாகனம் வந்து எம்மை அழைத்து சென்றது நீண்ட தூரம் சென்றபின்பு ( இரவு) ஒரு முகாமுக்குள் நுழைந்தோம். பின்னர் அங்கு போராளிகள் எமக்கு தே நீர் தந்தார்கள். அதன்பின்னர் போராளிகள் சொன்னார்கள் இனிதான் கவனமாக இருக்கவேண்டும் என்றார்கள். ஏனென்றால் ஆபத்து நிறைந்ததும், குன்றும் குழியும்,சேரும் சுரியும், மழை நீரும் அதேவேளை கும் என்ற இருட்டும் எனது பெற்றோருக்கு பயத்தினை ஏற்படுத்தினாலும் மகனின் இடத்தை பார்க்கவேண்டும் என்ற வீச்சும், போராளிகள் பக்கத்தில் இருந்ததாலும் பயம் கலைந்தது. 05 அல்லது 06மணித்தியாலம் கழிந்து அந்த முகாமை அடைந்தோம்.

அங்கு மண்குவியலால் கல்லறைகள் அமைக்கப்பட்டு இருந்தது. மழைவெள்ளத்தில் அவை கரைந்தும் இருந்தது. ஒவ்வொரு மாவீரர்களது தலைமாட்டிலும் ஒரு தடி நாட்டப்பட்டு இருந்தது அதில் ஒரு பலகை துண்டில் சிவப்பு பெயின்ற் இனால் ஒவ்வொருவரது பேரும் எழுதப்பட்டு இருந்தது. டோர்ச் வெளிச்சத்தில் ஒவ்வொன்றாக பார்த்துகொண்டிருந்தோம் இதே நேரம் எனது தம்பி (போராளி) சொன்னான் அம்மா அண்ணாவின்ர 7வதாக இருக்கு பாருங்கோ என்றான் ஆம் மேஜர் —– என்ற பெயர் எழுதப்பட்டு இருந்தது. குந்தியிருந்து எல்லா மாவீரர்களது பெற்றோர்கள் போலவும் மண்ணில் அடித்து, நெஞ்சில் அடித்து கதறி அழுதார்கள் எனது பெற்றோர். பூக்கள் தூவினோம். மெழுகுவர்த்தி ஏற்றினோம். எல்லோரும் கவனமா இருங்கோ பிள்ளையள் என்ற எனது பெற்றோரின் எச்சரிக்கையோடு அந்த இடத்தை விட்டு புறப்பட்டோம். ஒரு கிழமை பயணத்துடன் எங்கள் முதலாவது தமிழீழ மாவீரர் நாளை நினைவு கூர்ந்து மணலாற்று காட்டில் இருந்து புறப்பட்டோம் புறப்படும் போது எமது சகோதரர் விதைக்கப்பட்ட வீடியோ பிரதியினையும் தந்தார் எனது இளைய சகோதரர்.

அந்த வீடியோ கொப்பியினை வீட்டிற்கு கொண்டுவந்து எங்களூரில் டி.வி வைத்திருக்கின்ற ஒருவரிடம் சென்று அதனை போட்டு பார்த்தோம். அதில் பெற்றோ மாக்ஸ் வெளிச்சத்தில் கிடங்கு வெட்டி வரிசையாக அதே உடுப்புடன் வீரர்கள் விதைக்கப்படுவதும் அதனை வீடியோ பிடிப்பதனையும்பார்க்கும் போது அதிசயமாக இருந்தது சண்டை உக்கிரமாக நடந்த வேளையிலும் கூட தேசியத்தலைவர் அவர்களுடன் கேணல் சங்கர் அண்ணா, கேணல் கிட்டண்ணா, பிரிகேடியர் சொர்ணம் அண்ணா, மேஜர் சோதியா அக்கா ஆகியோர்கள் இறுதிவரை நின்று 07 மாவீரர்களுக்கும் மண் தூவி வீரவணக்கம் செலுத்தியிருந்தார்கள். அதே போன்றுதான் முள்ளிவாய்க்கால் இறுதி போரிலும் வீரச்சாவடைந்த போராளிகளும் மக்களும் அப்படியே புதைக்கப்பட்டதும் வணக்கம் செலுத்தியதனையும் ஒப்பீடு செய்து பார்க்கின்றேன்.

எங்கள் வீரர்களுக்கு, எங்கள் காவல் தெய்வங்களுக்கு அவர்கள் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று சுதந்திரமாக வீர வணக்கம் செலுத்தும் நாள் இனி எப்போது வரும்? வரவேண்டும். வரும்.

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com