ஈழத்தமிழ் மக்களிற்கான போராட்டங்கள் தொடரும் என தமிழ்நாடு தலைவர்கள் சூழுரைத்துள்ளனர்.
ஈழத்தில் தடுப்பு முகாமில் அவதிப்படும் இலங்கைத் தமிழர்களை மீள் குடியமர்த்த வலியுறுத்தி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை மெமோரியல் அரங்கம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ, பா.ம.க நிறுவனத் தலைவர் இராமதாஸ், பா.ம.க தலைவர் ஜி.கே.மணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ம.க.சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்தில், ஈழப் போரில் உயிர் நீத்தவர்களுக்கு ஒரு நிமிடம் அக வணக்கம் செலுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முகாமில் முள்வேலிகளுக்கு உள்ளே வதைபடும் ஈழத் தமிழர்களை விடுவித்து மீண்டும் அவர்களது குடியிருப்புகளில் குடியமர்த்த வேண்டுமென முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இலங்கைத் தமிழர் படுகொலைக்கு ஆதரவளித்த இந்திய அரசுக்கும், உலக நாடுகளுக்கும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ம.க.சிவாஜிலிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேசிய வீரபாண்டியன் ஆகியோர் இலங்கையில் தமிழீழம் அமைவது உறுதி என்று கூறினர்.
இலங்கை தமிழர் பகுதியில் சிங்களவர்கள் குடியமர்த்தம்: பழ.நெடுமாறன்
இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில். அவர்கள் குடியிருந்த இடங்களில் சிங்களர்கள் குடியேறி வருகின்றனர். இதனால் அங்குள்ள தமிழர்கள் வீதிகளில் பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அகதிகள் முகாம்களில் சுமார் 3 இலட்சம் தமிழர்கள் சித்ரவதை செய்யப்படுகின்றனர். அங்கு எந்த சுகாதார வசதியும் இல்லை. சுமார் 3 ஆயிரம் பேருக்கு ஓர் கழிவறை என்ற ரீதியில் உள்ளது. இதனால்இ அகதிகள் முகாம்களில் தினந்தோறும் 200 பேர் செத்துக்கொண்டிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
இலங்கையில் விடுதலைப்புலிகள் பதித்து வைத்துள்ள கண்ணிவெடிகளை அகற்றிய பின்னர் தமிழர்கள் அவர்களது வீடுகளில் குடியமர்த்தப்படுவார்கள் என்று ஓர் பொய்யான தகவலை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
ஆனால், தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் தற்போது சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இந்தியா கொடுத்த பணத்தை வைத்து, சிங்களர்களுக்கு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதனால், அங்குள்ள தமிழர்கள் வீதியில் பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை தமிழர்களை அகதிகள் முகாமிலிருந்து மீட்டு, அவர்களை மீள் குடியமர்த்த வேண்டும். இதற்கு தமிழர் பாதுகாப்பு இயக்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தமிழினம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இலங்கை தமிழரை பாதுகாக்க அனைத்து வழிகளிலும் போராடுவோம்: வைகோ
இலங்கை தமிழரை பாதுகாக்க அனைத்து வழிகளிலும் போராடுவோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். உலக வரலாற்றில் இதுபோன்ற ஓர் இனப்படுகொலை நடந்ததில்லை. ஆனால் இந்த படுகொலை நாம் வாழும் காலத்திலேயே நடந்துள்ளது.
இலங்கை தமிழர்களை படுகொலை செய்ய இந்திய அரசு ஆயுதம் கொடுத்தது. பணம் கொடுத்தது. இந்திய தளபதிகளே இலங்கை அரசுக்கு ஆலோசனைகளை வழங்கினர். இதனால் தமிழக மக்கள் கொதித்தெழுந்தனர். இதன் விளைவாகத்தான் தமிழக சட்டமன்றத்தில் கட்சி பாகுபடின்றி 234 எம்.எல்.ஏ.க்களின் ஒப்புதலுடன் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், இலங்கை அரசு இந்த தீர்மானத்தை குப்பைத்தொட்டியில் போட்டது. அடுத்த 2வது நாளே பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, போர் தொடரும் என கொக்கரித்துவிட்டு சென்றார் இலங்கை அதிபர் ராஜபக்சே. ஆனால், தீர்மானம் போட்ட முதல்வர் கருணாநிதி அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் இன்றும் நாடகமாடி கொண்டிருக்கிறார். இந்திய அரசும் இதுவரை போர் நிறுத்தம் செய்யும்படி வலியுறுத்தவில்லை.
இலங்கை அகதிகள் முகாம்களில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. ஓர் சிறைச்சாலையில் இருக்கும் அடிப்படை உரிமைகள்கூட அந்த முகாம்களில் இல்லை.
இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பக்கூடாது. இலங்கை ஒருமைப்பாட்டை காப்பாற்ற போவதாக கூறி, இந்திய ஒருமைப்பாட்டுக்கு வேட்டுவைக்கக் கூடாது.
இலங்கைக்கு இந்திய இராணுவம் இன்னும் உதவிகள் செய்தால், அங்கு தமிழர்கள் தனி தேசம் அமைக்க எல்லா உதவிகளையும் நாங்கள் செய்வோம். இலங்கை தமிழர்களை பாதுகாக்க அனைத்து வழிகளிலும் நாங்கள் போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
இலங்கை தமிழரை காக்க ஓகஸ்ட் 20இல் புதிய பிரகடனம்: இராமதாஸ்
இலங்கை தமிழர் பிரச்சனையில் உலக தமிழர்களை ஒன்று திரட்டும் வகையில், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆகஸ்ட் 20ஆம் தேதி புதிய பிரகடனம் வெளியிடப்படவுள்ளதாக பா.ம.க நிறுவனர் இராமதாஸ் அறிவித்துள்ளார்.
ஈழத்தில் முகாமில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவித்து, அவர்களை மீள் குடியேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி. இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை மெமோரியல் அரங்கம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மேலும் பேசியதாவது:
இலங்கையில் விடுதலைப் புலிகளை கொன்று குவித்துவிட்ட அந்நாட்டு அரசு, தற்போது அப்பாவி தமிழ் மக்களையும் முள்வேலிக்குள் அடைத்துவைத்து சித்ரவதை செய்கிறது.
இந்த கொடுமை வேறு எந்த நாட்டிலும் நடந்திருந்தால், ஐ.நா.சபை மற்றும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன் போன்ற நாடுகள் ஒன்று சேர்ந்து கொந்தளித்திருக்கும். ஆனால், இலங்கை தமிழர் பிரச்சனையில், இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் ஒன்று திரண்டு அப்பாவி தமிழ் மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன.
அமெரிக்கா அதிபராக பதவியேற்ற பாரக் ஒபாமாவை நாங்கள் நம்பினோம். ஆனால், அவர் எதற்கும் லாயக்கு இல்லாதவர் என்பதை இப்போது புரிந்துக்கொண்டோம். அதேபோன்று, ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூனையும் நம்பினோம். ஆனால், உலக நாடுகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் படைத்தவர் என்று கூறப்படும் அவரும் ஓர் கையாலாகாதவர் என்று நிரூபித்துவிட்டார்.
இலங்கையில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்ற இந்திய இராணுவம் செல்லவுள்ளதாக கூறுகிறார்கள். ஆனால், இந்திய ராணுவத்தினர் இலங்கையில் கண்ணி வெடிகளை அகற்ற செல்லவில்லை. எஞ்சியிருக்கும் போராளிகளை காட்டிக்கொடுக்க போகிறார்கள்.
விடுதலைக்காக போராடும் எந்த ஓர் இனமும் அழிந்ததாக சரித்திரம் இல்லை. அந்த இனம் விடுதலைப் பெற்றதாகத்தான் வரலாறு உள்ளது. இலங்கை தமிழர் பிரச்சனையில் முதல்வர் கருணாநிதியிடம் இனி எந்த கோரிக்கையும் வைக்க மாட்டோம். காரணம், அவரால் எதுவும் செய்ய இயலாது.
இலங்கை தமிழர் பிரச்சனையில் உலக தமிழர்களை ஒன்றிணைக்கும் வகையில், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆகஸ்ட் 20ஆம் நாள் ஓர் பிரகடனம் வெளியிடவுள்ளோம். அதன் மூலம், இலங்கை தமிழருக்கு ஆதரவான போராட்டத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வோம். இவ்வாறு அவர் பேசினார்.
ஈழத்தமிழ் மக்களிற்கான போராட்டங்கள் தொடரும் - தமிழ்நாடு தலைவர்கள் சூழுரைப்பு
பதிந்தவர்:
தம்பியன்
25 July 2009
0 Responses to ஈழத்தமிழ் மக்களிற்கான போராட்டங்கள் தொடரும் - தமிழ்நாடு தலைவர்கள் சூழுரைப்பு