Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

லிபியா மற்றும் சிரியா ஜனாதிபதிகளுக்கு எதிராக பொதுமக்களைப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுப்பது போன்று மஹிந்த ராஜபக்ஷ மீதும் நடவடிக்கை எடுக்க முடியாதா என்று த கார்டியன் நாளேடு வினா எழுப்பியுள்ளது.

வன்னியில் 40,000 தமிழ் மக்களை படுகொலை செய்த ஸ்ரீலங்கா ஜனாதிபதியும், அவரின் சகோதரர் கோத்தாபய ராஜபக்ஷவும் தமது குற்றங்களில் இருந்து எவ்வாறு தப்ப முடியும்? எனவும் பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த கார்டியன் நாளேடு தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் வரலாற்றில் மிகவும் துன்பமான தொலைக்காட்சி நிகழ்ச்சியாக கடந்த செவ்வாய்க்கிழமை (14) ஒளிபரப்பாகிய “ஸ்ரீலங்காவின் படுகொலைக்களம்” நிகழ்ச்சி அமைந்திருந்தது.

நிர்வாணமாக இழுத்து வரப்பட்ட தமிழ் கைதிகள் கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்படும் காட்சிகள், பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சடலங்களாக காணப்படும் காட்சிகள், வாகனங்களில் இழுத்து வரப்படும் சடலங்கள், வைத்தியசாலைகள் மீதான தாக்குதல்கள் என்பன மிகவும் கொடுமையாக அமைந்திருந்தன. இலட்சக்கணக்கான மக்களை ஒரு சிறிய பிரதேசத்திற்குள் முடக்கிய ஸ்ரீலங்கா படையினர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் மேற்கொண்ட வன்முறைகளில் சிலவே அவையாகும்.

விடுதலைப்புலிகளும், சிறீலங்கா அரசும் போர்க்குற்றங்களை மேற்கொண்டதாக ஐ.நா நிபுணர் குழு கடந்த மாதம் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது காண்பிக்கப்பட்ட காணொளிகளில் சில புதியவை. மனித உரிமை அமைப்புக்கள் மேற்கொள்ளும் பணிகளை செனல்-04 தொலைக்காட்சி சேவை நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

அதன் காட்சிகள் பார்க்கமுடியாதவாறு கொடுமையாக இருந்தாலும் அதனை ஒளிபரப்பியதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று அங்கு சாட்சிகள் அற்ற போரை ஸ்ரீலங்கா மேற்கொண்டிருந்தது. பொஸ்னியாவின் சர்பேனிக்காவை போல யுத்தமுனைகளில் இருந்து ஐ.நாவையும் ஏனைய தொண்டர் நிறுவனங்களையும் அது பலவந்தமாக வெளியேற்றியிருந்தது.

செனல்-04 காணொளி அங்கு நடைபெற்ற சம்பவங்களில் சிறிய பகுதியாக இருந்தாலும், ஸ்ரீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்துலக சமூகம் தவறிவிட்டது.

இரண்டாவது, இது சேர்பேனிக்காவிற்கு நிகரானது என்பதுடன் உண்மையானதும் கூட. வைத்தியசாலைகள் மீது சிறீலங்கா படையினர் திட்டமிட்ட முறையிலேயே எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதாக ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலை மீது 65 தடவைகள் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்களை தாக்குவது போர்க்குற்றமாகும். இந்த குற்றங்கள் உறுதியானால் அதன் தாக்கம் சங்கிலித் தொடர் போன்றது. சிறீலங்கா படைத் தளபதிகளில் இருந்து அரச தலைவர்கள் வரை தண்டனையை எதிர்கொள்ள நேரிடலாம்.

2009 ஆம் ஆண்டு ஜுன் மாதம் இடம்பெற்ற படுகொலைகளுக்காக ஈரான் மீது கண்டனம் தெரிவிக்க முடியுமானால், ஹெக் தொடர்பில் ரட்கோ மிலாட்விக் மற்றும் ரடோவன் கராட்சிக் மீது நடவடிக்கை மேற்கொள்ள முடியுமானால், 1,300 பொதுமக்களை படுகொலை செய்ததற்காக பசீர் அல் அசாத் மீது ஐ.நா தடைகளை கொண்டுவர முடியுமானால், ஸ்ரீலங்கா ஜனாதிபதியும், அவரின் சகோதரர் கோத்தாபய ராஜபக்ஷவும் 40,000 மக்களை படுகொலை செய்ததில் இருந்து எவ்வாறு தப்ப முடியும்?

விடுதலைப்புலிகளும் போர்க்குற்றங்களை மேற்கொண்டவர்கள் என்பது சிறீலங்கா படையினர் மேற்கொண்ட குற்றங்களை நியாயப்படுத்துவதற்கான காரணமல்ல. இதனை சிறீலங்கா வரலாற்றில் மறைத்துவிட முயற்சி செய்கின்றது. ஆனால் அவ்வாறு விட முடியாது. சாட்சியங்களை நாம் புதைத்துவிட முடியாது என்றும் த கார்டியன் கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to ராஜபக்ஷவை விசாரிக்க முடியாதா?: த கார்டியன் நாளேடு வினா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com