முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை சதிக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை குடியரசு தலைவர் தள்ளுபடி செய்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மத்திய அரசு பரிந்துரையின் அடிப்படையில் குடியரசு தலைவர் மேற்கொண்டுள்ள இந்த முடிவு வருத்தமும், வேதனையும் அளிக்கிறது.
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை வழங்கி விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை 1999-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
இதைத் தொடர்ந்து இந்த மூவரும் தாக்கல் செய்த கருணை மனுக்களை கடந்த 2001-ம் ஆண்டில் அப்போதைய குடியரசு தலைவர் கே.ஆர். நாராயணன் ஆய்வு செய்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான சிவராசன், தணு ஆகியோர் உயிரிழந்துவிட்ட நிலையில், கொலை சதிக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கத் தேவையில்லை என்று கே.ஆர். நாராயணன் கூறிவிட்டார்.
பின்னர் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டதன் பேரில் 2003-ம் ஆண்டில் இவர்களின் கருணை மனுக்களை மீண்டும் ஆய்வு செய்த அப்போதைய குடியரசு தலைவர் அப்துல்கலாமும், அதே காரணங்களை கூறி மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யும்படி உள்துறை அமைச்சகத்துக்கு ஆணையிட்டார். அதன் மீது எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் 8 ஆண்டுகள் கழித்து இந்த மூவரையும் தூக்கிலிட வேண்டும் என்று தற்போது உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்ததாகவும், அதை ஏற்றே குடியரசு தலைவர் கருணை மனுக்களை தள்ளுபடி செய்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் தங்களது வாழ்க்கை எந்த நொடியில் முடிவுக்கு வருமோ என்ற கவலையுடன் 20 ஆண்டுகளை தனிமைச் சிறைக் கொட்டடியில் கழித்துள்ளனர். இது தூக்குத் தண்டனையை அனுபவிப்பதைவிட மிகவும் கொடுமையானது. ஏற்கனவே 20 ஆண்டுகளை சிறையில் கழித்துவிட்ட இவர்களை தூக்கிலிட்டால் அது இரட்டை தண்டனையாக அமைந்துவிடும். இது இயற்கை நீதிக்கு முற்றிலும் எதிரானதாகும்.
மரண தண்டனை என்பதையே ஒழிக்க வேண்டும் என்ற முழக்கம் உலகம் முழுவதும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. உலகில் உள்ள 95 நாடுகளில் தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது. மேலும் 40 நாடுகளில் இத்தண்டனை செயல்படுத்தப்படுவதில்லை. இத்தகைய சூழலில் ஏற்கனவே இரண்டு குடியரசு தலைவர்களால் தூக்கில் இடப்பட வேண்டாம் என்று பரிந்துரைக்கப்பட்ட மூவரை தூக்கிலிடுவது மனிதாபிமானம் உள்ள செயலாக இருக்காது.
மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கைக்கு பெருமை சேர்ப்பதாகவும் இருக்காது. எனவே, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை தள்ளுபடி செய்யும் முடிவை மறு ஆய்வு செய்து அவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
முருகன், சாந்தன், பேரறிவாளனினை விடுவிக்க வேண்டும் ராமதாஸ் கோரிக்கை
பதிந்தவர்:
தம்பியன்
13 August 2011
0 Responses to முருகன், சாந்தன், பேரறிவாளனினை விடுவிக்க வேண்டும் ராமதாஸ் கோரிக்கை