Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டின் தேசியக் கொடியை ஏற்ற மறுக்காமல், தனது எதிர்ப்பை வடக்கு மாகாண கல்வி அமைச்சர் வேறு வழிகளில் காட்டியிருக்கலாம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

“என்னைப் பொறுத்தவரையில் தேசியக் கொடியையும் தேசிய கீதத்தையும் புறக்கணிப்பது எமது மக்கள் யாவரையும் புறக்கணிப்பது போலாகும்”என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தேசியக் கொடியை ஏற்ற மறுத்திருந்தார். அது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தேசியக் கொடி என்பது ஒரு நாட்டின் மக்களை அடையாளப்படுத்துகின்றது. மக்களுள் முரண்பாடுகள் இருக்கலாம். கட்சிகளுள் வேற்றுமைகள் இருக்கலாம். ஆனால் அதை வைத்துத் தேசியக்கொடி பிரதிபலிக்கும் மக்களை உதாசீனம் செய்யக் கூடாது.

எமது மன வேதனையை அவ்வாறான புறக்கணிப்பால் எடுத்துக் காட்டாமல் விட்டிருக்கலாம் என்பதே என் கருத்து. தேசியக் கொடி பௌத்தத்துக்கும் பேரினத்துக்கும் மிகக் கூடிய முக்கியத்துவம் அளித்து, தமிழர்களுக்கும் சைவத்துக்கும் போதிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பது உண்மையே. ஆனால் அந்தப் பிழையை தேசியக் கொடியையோ தேசிய கீதத்தையோ உதாசீனம் செய்து வெளிக்காட்டாது வேறு வழிகளில் காட்டியிருக்கலாம் என்பதே எனது கருத்து.

ஆனால் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தேசியக் கொடியை எரிப்பதை ஒரு ஜனநாயக உரித்து என்றே பார்க்கின்றார்கள். அதைக் குற்றம் என்று கண்டு அவ்வாறு செய்வோரை அவர்கள் சிறைப்படுத்துவதில்லை.

எனவே தனது எதிர்ப்பை இவ்வாறு காட்டாமல் வேறு வழிகளில் எதிர்காலத்தில் காட்டுமாறு சர்வேஸ்வரனிடம் கோரிக்கை விடுவனே தவிர, அவருக்கு எதிராக நடவடிக்கை ஏதும் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்பதே என் கருத்து. தமிழ் மக்களின் மன வேதனையை சிங்களப் பெரும்பான்மை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்தில், தேசியக் கொடியை நிராகரித்த வடக்கு மாகாணத்துக்கு அதிகாரங்களை எப்படி வழங்குவது என்று கேட்டுள்ளார். தவறுகளைத் தம்வசம் வைத்துக் கொண்டு இவ்வாறான கேள்விகளை சிங்கள அரசியல் வாதிகள் கேட்கக் கூடாது. அவரின் தவறுகளை அவருக்கு உணர்த்த வேண்டிய கட்டாயம் எனக்குள்ளது.

முதலில் தேசியக் கொடியை நிராகரித்தவரின் மனோநிலையை அவர் புரிந்து கொள்ளட்டும். அவருக்கு அந்த மனோநிலையை வருவித்தவர்கள் குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் உறவின் அரசியல் வாதிகளே என்பதை உணர்ந்து கொள்ளட்டும். இறுதியாக அவரோ அவரின் கூட்டமோ எமக்கு அதிகாரங்களை வழங்குவது என்பது அடாவடித்தனத்தின் உச்ச வெளிப்பாடு என்பதை அவர் புரிந்து கொள்ளட்டும்”என்றுள்ளார்.

0 Responses to எதிர்ப்பை வேறு வழிகளில் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் காட்டியிருக்கலாம்: சி.வி.விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com