யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 293 மாணவர்கள் சிறிலங்கா இராணுவத்தினரின் பிடியில் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு படைத்தரப்பினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்களின் சுதந்திரமான நடமாட்டத்தை முடக்கியிருப்பது சட்டவிரோதமானது என்று பல்கலைகழக மாணவர்கள் சம்மேளன தலைவர் உபுல் பிறேமரட்ண தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்த சம்மேளன உறுப்பினர்கள், அங்குள்ள பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கைகள் தொடர்பான விவரங்களை சேகரித்தனர். அப்போது இந்த விடயம் தெரியவந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இராணுவத்தினரின் பிடியில் உள்ள மாணவர்களில் 150 பேர் புனர்வாழ்வு முகாம்கள் என்ற பெயரில் படையினரால் நடத்தப்படும் தடுப்புமுகாம்களில் தடுத்துவைகப்பட்டுள்ளனர் என்றும் இவர்கள் பல்கலைக்கழக நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் -
மேலும் 143 மாணவர்கள் இராணுவத்தினராலும் காவல்துறையினராலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்லப்பட்டும் கடத்தப்பட்டும் இன்னமும் அவர்கள் இருக்குமிடம் தெரியாத நிலைமை தொடர்கிறது என்றும் -
தடுப்பு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட 43 மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்திலேயே தங்கவேண்டும் என்று கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனுமதி இன்றி வெளியேறக்கூடாது என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



0 Responses to யாழ் பல்கலைக்கழத்தின் 293 மாணவர்கள் இராணுவத்தினரின் பிடியில்