Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாருக்கு வாக்களிப்பது?

பதிந்தவர்: தம்பியன் 01 May 2010

எதிர்வரும் 2ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதற் தடவையாக இரண்டு தேர்தல்களை ஒரே நேரத்தில் பிரான்சிலுள்ள தமிழர்கள் சந்திக்கவுள்ளனர்.

தமிழீழ மக்கள் பேரவைக்கான செயற்பாட்டாளர்களைத் தெரிவு செய்வது ஒரு தேர்தலாகவும், நாடு கடந்த தமிழீழ அரசு தமது பிரிதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலும் என இரண்டு தேர்தல்களும் ஒரே இடத்தில் பிரான்சில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, பிரித்தானியாவில் நாடு கடந்த அரசுக்கான தேர்தல் மட்டும் நடைபெறவுள்ளது. அத்துடன், புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் ஏனைய ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா, அவுஷ்திரேலியாவிலும் நாடு கடந்த அரசிற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தல் தொடர்பாக தமிழ் மக்கள் பெரும் குழப்பத்தில் இருக்கின்றார்கள். தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதற்கும் முன், எதற்காக வாக்களிக்க வேண்டும் என்ற கேள்வியே அவர்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது. நாடு கடந்த அரசின் தோற்றம், அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள ருத்திரகுமாரனின் செயற்பாடுகள் தொடர்பாக வெளிவந்த பல்வேறு குழப்பகரமான செய்திகள், சந்தேகங்கள், குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இதுவரை தெளிவான பதில்கள் எவையும் வெளிவராத நிலையில், நாடு கடந்த அரசு தேர்தலை ஏற்பாடு செய்துள்ளது.

இந்தத் தேர்தல் போட்டியில் நாடு கடந்த அரசை வரிந்துகட்டி ஆதரிப்பவர்களும், தமிழீழ தேசியத்திற்காக உழைத்துக்கொண்டிருப்பவர்களும் என பல்வேறு தரப்பினரும் குதித்துள்ளனர். தாயகத்தின் அனைத்து நிலப்பரப்பையும் இழந்துள்ளதாகக் கருதப்படும் இந்தவேளையில், புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடொன்றில் நாடு கடந்த ஒரு அரசை அமைக்கவேண்டிய அவசியம் தமிழ் மக்களுக்கு இருக்கின்றது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

எனினும், அந்த நாடு கடந்த அரசை சரியான திசை நோக்கி நகர்த்திச்சென்று, தமிழர்களுக்கான தாயகத்தை அடைவதற்கு இதில் போட்டியிடும் எந்தெந்த வேட்பாளர்கள் உறுதியாக நிற்கக்கூடியவர்கள் என்பதைக் கண்டறிந்து தங்கள் வாக்குகளை அளிக்கவேண்டியது தமிழ் மக்களின் கடமையாகின்றது.

ஏனெனில் தேர்தலில் போட்டியிடும் அனைவருமே தாயகத்தையும் தமிழீழ தேசியத்தையும் ஆதரிப்பதாகக் கூறிக்கொண்டே தேர்தலில் குதித்துள்ளார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தரும் கடந்த காலங்களில் இவ்வாறான கருத்தக்களை வெளியிட்டே தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குக்களைப் பெற்றார்.

தேர்தலில் வென்றதன் பின்னர் ஒரே இலங்கைக்குள் தீர்வுத்திட்டம் என தனது திட்டத்தை வெளியிட்டது மட்டுமல்லாது, பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்த மகிந்த ராஜபக்ச அரசிற்கு தமது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

எனவே, இன்று தேசியம் குறித்துப் பேசும் இவர்கள், வெற்றி பெற்றவுடன் தமது முகமூடிகளைக் கழற்றிவிட்டு, தேசியத்திற்கு எதிரானதும் தமிழீழ தேசத்தை துண்டாடும் செயற்பாடுகளிலும் இறங்கலாம்.

ஆகையால், கடந்த காலங்களிலும், இன்று வரையும் 35 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களின் கனவுகளைச் சுமந்தபடி தமிழ் மக்களின் விடிவிற்காக உழைப்பவர்களையும் தேசியத்தில் உறுதியாக நிற்பவர்களையும் அடையளாம் கண்டு, அவர்களைத் தேர்ந்தெடுப்பதே நாடு கடந்த அரசின் செயற்பாடுகள் சரியான பாதையில் செல்வதற்கு வழிவகுக்கும்.

நன்றி: ஈழமுரசு (30.04.2010)

0 Responses to யாருக்கு வாக்களிப்பது?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com