Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணம் வேலணையில் குடும்பநல மருத்துவ மாதுவின் மரணம் தொடர்பில் அவரின் தாய் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தமது மகளான தர்ஜிகா, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டே கொலை செய்யப்பட்டுள்ளதாக அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

எனவே இந்த சம்பவத்தின் பின்னணியை கண்டறிய தமது மகளின் சடலத்தை மீண்டும் தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை மேற்கொள்ளவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தநிலையில், சடலத்தை தோண்டியெடுப்பதா? இல்லையா? என்பதை தீர்மானிப்பதற்காக ஊர்காவற்றுறை நீதிவான் விசாரணையை நாளை வரை ஒத்திவைத்துள்ளார்.

இதேவேளை தமது மகளின் மரணம் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளமையை அடுத்து சட்டமுனைப்புகளுக்கு தாம் நடவடிக்கை எடுக்கும் நிலையில் மோட்டார் சைக்கிளில் வரும் இனந்தெரியாதோர் கைதடியில் உள்ள தமது வீட்டுக்கு வந்து அச்சுறுத்தல் விடுப்பதாகவும் தர்ஜிகாவின் தாயார் மன்றில் முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருடன் தொடர்புகொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிவான் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இதற்கிடையில் இந்த சம்பவத்தில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டு பிணையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிங்கள வைத்தியர் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இதன் போது அவர், சுகவீனம் எனக்கூறி யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது பொலிஸார் வழங்கிய பொய்யான அறிக்கை ஒன்று குறித்து நீதிவான் பொலிஸாரை கண்டித்தார்.

குறித்த வைத்தியர் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தாக்கப்பட்டதன் காரணமாகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக முன்னதாக பொலிஸார் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவர் பணியாற்றிய வேலணை வைத்தியசாலையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

எனினும் அவர் தூக்கில் தொங்கிய போது அவரின் கால் நிலத்தில் தொட்டவாறு இருந்தமையை அடுத்து அவரது மரணம் கொலை என்றும் இதற்கு சிங்கள வைத்தியரே காரணம் என்றும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.

ஏற்கனவே குறித்த வைத்தியர், தர்ஜிகாவை துன்புறுத்தல் செய்ததாக முறைப்பாடுகள் கிடைத்தமையை அடுததே இந்த சந்தேகம் ஏற்பட்டது.

எனினும் சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கையில் தர்ஜிகாவின் மரணம் தற்கொலை என தெரிவிக்கப்பட்டமையை அடுத்து, யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் வைத்தியரை பிணையில் செல்ல அனுமதித்தது.

இந்தநிலையிலேயே தமது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி அவரின் தாயார் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

0 Responses to வேலணை குடும்பநல மாது மரணம் தொடர்பில் தாயார் நீதி கோரி மனு தாக்கல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com