இலங்கையில் இடையூறுகள் எதுவுமின்றி பணியைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அனுமதிப்பதாக கணிசமானளவு உறுதிமொழிகளை இலங்கை அரசாங்கம் வழங்கியிருப்பதாக ஐ.நா. இணைப்பேச்சாளர் பர்ஹான் ஹக் கூறியுள்ளார்.கடந்த வெள்ளிக்கிழமை நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் மதியவேளை செய்தியாளர் மாநாட்டின்போது இன்னர்சிற்றி பிரஸ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே பர்ஹான் ஹக் இதனைத் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக இன்னர்சிற்றி பிரஸின் செய்தித்தளத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இன்னர்சிற்றி பிரஸ்: நீல்புனேயின் பதவிக்காலம் முடிவடைவதாக இந்த வார முற்பகுதியில் தெரிவிக்கப்பட்டதாகத் தோன்றியது.அவர் இப்போது இங்கிருக்கும் நிலையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா? அவர் திரும்பிச் செல்வாரா?
இணைப்பேச்சாளர் பர்ஹான் ஹக்: கடந்த வாரம் நாங்கள் வெளியிட்ட அறிக்கை உங்களுக்கு ஞாபகமிருக்கும். குழப்பங்கள் மற்றும் ஐ.நா. பணியாளர்கள் தமது வேலையை மேற்கொள்ள முடியாமல் இருந்தமை என்பவை தொடர்பாக நாங்கள் அறிக்கை விடுத்திருந்தோம். நீல்புனே திருப்பி அழைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தோம்.
கடந்த வாரம் அவர் இங்கிருந்தார். அச்சமயம் இலங்கை தரப்பிலிருந்து கணிசமானளவு உறுதிமொழிகளை நாங்கள் பெற்றுக்கொண்டுள்ளோம். இதனடிப்படையில் எமது பணியை மேலும் இடையூறின்றித் தொடர முடியும். அதனைவிட நீல்புனே இலங்கை அரசாங்கத்துக்கு செய்தியொன்றைக் கொண்டு செல்வார் என்பது பற்றிய விடயத்தை நான் இப்போது வாசித்திருந்தேன். அதனை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.
இன்னர்சிற்றி பிரஸ்: நிச்சயமாகக் கேட்டுள்ளேன். ஆனால், இந்த வார முற்பகுதியில் காணப்பட்ட சிந்தனை குறித்து என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. நிலைமை அபாயகரமானதாக இருந்தால் தனிப்பட்ட ஒருவரை மட்டும் நீங்கள் ஏன் திருப்பியழைக்க வேண்டும். பணியாளர்கள் முழுப்பேருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகத் தென்பட்டதே.இப்போது நிலைமையில் ஏதோ மாற்றம் ஏற்பட்டிருக்கின்றதா என்பது குறித்து நான் ஆச்சரியமடைந்துள்ளேன். கூறப்பட்டது போன்று அவரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளதா? அல்லது ஏதோவொரு வழியில் நீடிக்கப்பட்டிருக்கிறதா?
பேச்சாளர்: இந்த விடயம் குறித்து நான் இப்போது வாசித்ததில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறேன். உங்களுக்காக திரும்ப வாசிக்க முடியும். ஆனால், நான் முதலில் கூறியதே அடிப்படை விடயமாகும்.
இன்னர்சிற்றி பிரஸ்: இந்த வார முற்பகுதியில் என்ன கூறப்பட்டது என்பதுடன்,இதனை எவ்வாறு ஒப்பிட முடியும். அதனையே நான் கேட்கிறேன்.
பேச்சாளர்: ஆம்,நான் அதனை விளங்கிக்கொள்கிறேன். நாங்கள் என்ன கூறியிருந்தோம் என்பதை நீங்கள் அவதானித்திருந்தால் அதாவது அவர் கொழும்புக்குத் திரும்பிச் செல்வாரென நான் கூறியிருந்தேன்.
அடுத்த முக்கியமான விடயமாகவிருப்பது இலங்கை மக்களுக்கு ஐ.நா. உதவுவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்தும் மேற்கொள்ளும் விடயமாகும். குறிப்பாக வடபகுதியில் மீள்கட்டுமானம்,புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு உதவுவதாகும். ஆதலால் அந்த இலக்கு தொடரும். அதேசமயம், செயலாளர் நாயகத்தின் கடுமையான எதிர்பார்ப்புகளை நீல்புனே கொண்டுசெல்வார் என்று நான் சுட்டிக்காட்டியிருந்தேன். அதாவது இலங்கையிலுள்ள ஐ.நா. குடும்பம் சிறப்பான முறையில் நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பான செயலாளர் நாயகத்தின் வலுவான செய்தியை நீல்புனே எடுத்துச் செல்வார்.
இன்னர்சிற்றி பிரஸ்: நிபுணர் குழுத் தொடர்பாக இலங்கை குறித்த சரத்தொன்றில் விடயமொன்று கூறப்பட்டுள்ளது. செயலாளர் நாயகத்துடன் நீல்புனே மேற்கொண்ட கலந்துரையாடல்களின் பெறுபேறாக இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நிபுணர் குழுவின் பணிகளின் விஸ்தீரணத்தை மேலும் மட்டுப்படுத்துவதற்கான சரத்தாக அது காணப்படுகிறது.
சாட்சிகளிடமிருந்தோ அல்லது அதனைப் போன்ற ஏதாவதொன்றிடமிருந்தோ பெறும் தகவல்களை நிபுணர்குழு பரிசீலிக்கமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நிபுணர் குழுவின் பணியாளர்கள் தொடர்பாக நான் கேள்வி கேட்க விரும்புகிறேன். இந்த அலுவலர்கள் குழுவிற்கு யசிகா நியூவேர்த் தலைமைதாங்குகிறாரா?
பேச்சாளர்: பணியாளர்கள் தொடர்பாக உங்களுக்கு தகவல்களை வழங்குவதற்கான விபரத்தை நான் வைத்திருக்கவில்லை. சிறிய செயலகமொன்று இருக்கும். அவர்கள் தமது இலக்கை மேற்கொள்வதற்கு உதவுவார்கள். ஆனால், இப்போது எந்தவொரு பெயர்கள் தொடர்பாகவும் என்னால் உறுதிப்படுத்த முடியாது. ஆனால், நிபுணர்குழுவின் பணிகள் தொடர்பாக எல்லைகள் எதுவும் இல்லை.



0 Responses to ஐ.நா.விற்கு இலங்கை கணிசமான உறுதிமொழிகளை வழங்கியுள்ளது