முறிகண்டி, இந்துபுரம், சாந்தபுரம் ஆகிய கிராமங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதும் மீள்குடியேற்றம் செய்யப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ள அதேவேளை, குறிப்பிட்ட பகுதிகளில் இரண்டாவது நாளாக நேற்றும்; இராணுவம் வீதிகளை அமைத்து வருவதாக மக்கள் தெரிவித்தனர்.இதனால் இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மக்கள் பெரும் குழப்பத்திற்கும், அச்சத்திற்கும் உள்ளாகியிருக்கின்றார்கள்.
முறிகண்டி, இந்துபுரம், சாந்தபுரம் ஆகிய கிராமங்களின் ஏ9 வீதிக்குக் கிழக்குப் பகுதி பிரதேசத்தை இராணுவம் தனது தேவைக்காக எடுக்கப் போவதாகவும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கடந்த பல வாரங்களாகவே தெரிவிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மக்களில் ஒரு தொகுதியினர், மெனிக் பாம் முகாமில் இருந்து மீள்குடியேற்றத்திற்கென அழைத்து வரப்பட்டு கிளிநொச்சி மத்திய கல்லூரியில் தங்க வைக்கப்பட்டதன் பின்னர் கடந்த 3 வாரங்களாக சாந்தபுரம் பாடசாலையில் அதிகாரிகளினால் தங்கவைக்கப் பட்டுள்ளனர்.
மீள்குடியேற்றத்திற்கென இவர்கள் அழைத்து வரப்பட்டு சுமார் 3 மாதங்களாகின்றன. ஆயினும் இவர் களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இந்த விடயம் குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிடப்பட்ட போதிலும் இதுவரையில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
திட்டமிட்டபடியே இராணுவத்தினர் குறித்த பகுதியினை தமது தேவைகளுக்கே பயன்படுத்துவர் என்று பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ அதிகாரி ஒருவர் கிளிநொச்சியில் தெரிவித்துள்ளார்.



0 Responses to "மகிந்தவின் வாக்குறுதிக்கு என்ன ஆனது?: முறிகண்டி மக்கள் கவலை