தமிழ் மக்கள் மீது சிறீலங்கா படையினர் மேற்கொண்ட போர்க் குற்றங்கள், மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, தமிழ் மக்கள் சாட்சியம் அளிப்பதற்கு அடிப்படை உதவிகளைச் செய்வதற்கு பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் செயலர் நாயகம் பான் கி-மூனால் ஆலோசனை வழங்க அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழு எதிர்வரும் டிசம்பர் 15ஆம் நாளுக்கு முன்னர் தமிழ் மக்களிடம் சாட்சியங்களைக் கோரி நிற்கின்றது.
இவ்வாறான பின்புலத்தில் பிரித்தானியாவில் உள்ள தமிழ் மக்கள் தமது சாட்சியங்களை அனுப்புவதற்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகளை பிரித்தானிய தமிழர் பேரவை மேற்கொண்டு வருகின்றது.
இது பற்றிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ள தமிழர் பேரவை, போர்க் குற்றம் புரிந்த சிறீலங்கா அரசு மீது அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தும் வகையில் மக்கள் தமது சாட்சியங்களை வழங்க முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.
சாட்சியம் வழங்குவோரின் விபரங்கள் மிக இரகசியமாகப் பேணப்படும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது போன்று சாட்சியம் அளிக்க தம்மிடம் உதவி கோரிவோர் பற்றிய விபரங்களும் இரகசியமாக பேணப்படும் என பிரித்தானிய தமிழர் பேரவை அறிவித்துள்ளது.
பிரித்தானியாவிலுள்ள தமிழ் அமைப்புகளையும் இணைத்து இந்தச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், அங்குள்ள தமிழ் அமைப்புக்களும், தமிழ் மக்களும் தம்முடன் தொடர்புகொள்ளுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to போர்க்குற்ற சாட்சியங்களை வழங்க பிரித்தானிய தமிழர் பேரவை உதவி