தமிழரசுக் கட்சியின் இளைஞரணி அங்குராட்பண நிகழ்வுகள் வடக்கு கிழக்கில் தமிழசுக் கட்சியினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழரசுக் கட்சியின் இளைஞரணித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் செயற்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற தமிழரசுக்கட்சி இளைஞரணி அங்குராட்பண நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறீதரன், யோகேஸ்வரன் ஆகியோரும் பங்கு கொண்டிருந்தனர்.
நிகழ்வில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா,
தமிழ் மக்களுக்கான உண்மையானதும் சரியானதுமான தலைமைத்துவம் தமிழரசுக் கட்சி மட்டுமே, தமிழரசுக் கட்சி ஆயுதக் கலாசாரத்தினை முற்றாக நிராகரித்தே வந்துள்ளது. தற்போதும் அதனை முற்றாக நிராகரிக்கின்றது. இனிவருங்காலங்களிலும் ஆயுதக் கலாசாரத்தினை தமிழரசுக் கட்சி ஏற்றுக் கொள்ளப்போவதில்லை.
கடந்த காலங்களில் தமிழ் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இனிவருங் காலத்தில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க தமிழரசுக்கட்சியினால் மட்டுமே முடியும். தமிழரசுக் கட்சியினை வலுப்படுத்துவதற்கான இராஜாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்று தெரிவித்துள்ளார்.
இதன் போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், கடந்த காலங்களில் தமிழ்த் தலைமைகள் மேற்கொண்ட தவறான வழிநடத்தல்களாலேயே எமது மக்கள் பல்வேறு இழப்புக்களைச் சந்தித்தனர். இனிவருங்காலங்களிலும் இவ்வாறான வன்முறை அரசியலை நடத்த முடியாது.
எனவே தமிழரசுக்கட்சியினைப் பலப்படுத்தி எமது உரிமைகளை வென்றெடுக்க இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்டத்திற்கான இளைஞரணி அங்குரார்ப்பண நிகழ்விற்கு வவுனியா நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அழைக்கப்படவில்லை என்றும் குறித்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற சொல் வராமல் பார்த்து அவதானமாக உரை நிகழ்த்தப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
தற்போதைய புதிய முன்னகர்வாக கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் அவரது செயலாளர் உட்பட்டவர்கள் தற்போது வேட்டிகளுடனேயே மக்களைச் சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு சில மாதங்களுக்குப் பயணம் செய்த மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறீதரன் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாம் பங்குகொண்ட நிகழ்வுகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை அழைத்திருக்கவில்லை என்பதுடன் அங்கும் தமிழரசுக்கட்சி வலுவாக்கல் தொடர்பில் கருத்துக்களைத் தெரிவித்திருந்தமை தொடர்பில் கிழக்கு மக்கள் விசனம் தெரிவித்திருந்தமை தெரிந்ததே.
இதேவேளை வவுனியா தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணியின் உபதலைவராக தெரிவுசெய்யப்பட்ட ஜெயக்குமார் என்பவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இளைஞர் அணியென கூறி கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு ஏமாற்றப்பட்டுவிட்டதாக ஊடகங்களுக்கு அனுப்பிய அறிக்கையில் தெரவித்துள்ளார்.
தமிழ்தேசிய கூட்டமைப்பு என்ற தமிழருக்கான கட்டமைப்பை விட்டு வேறொரு அணியை ஏற்படுத்துவதை தான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் எனவும் அவர் தனது கடிதத்தில் மேலும் கூறியுள்ளார்.
தமிழ் மக்களின் ஒட்டுமொத்த சக்தியாக பயணிக்கவேண்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏன் இவ்வாறு தனிவழி தேடுகின்றது என்பது புரியவில்லை என்கிறார்கள் நோக்கர்கள்.



0 Responses to தமிழரசுக்கட்சி எனக்கூறி தமிழ் தேசிய கூட்டமைப்பை சிதைக்கும் முயற்சி!