இவ்வாறான கொடுமையான சந்தர்ப்பங்களை கடந்த 15 ஆண்டுகள் ஊடகப் பணியில் பல தடவை சந்திக்க நேர்ந்தமை இந்தத் துறையில் இருந்து ஒதுங்கி விடுவோம் என்று எண்ணியபோதிலும், இதே இழப்புக்கள்தான் இன்னும் செய்ய வேண்டும் என்ற ஓர்மத்தையும் தக்க வைத்துக்கொண்டிருகின்றன.
மயில்வாகனம் நிமலராஜன், நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன் (ஜி.நெல்லை நடேசன்), மாமனிதர் தர்மரட்ணம் சிவராம் (தராகி) வரிசையில் நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தியின் இழப்பு பற்றிய செய்தியையும் எமது உறவுகளுக்கு அறிவிக்க நேர்ந்த காலகட்டம் மிகவும் இக்கட்டானது.
முன்னயை ஊடகயவிலாளர்கள் போன்று நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தியும் மிக இக்கட்டான காலகட்டத்தில் மக்களுடன் நின்று மக்களிற்காகப் பணியாற்றியவர். அதுவும் இறுதிப்போரை சிறீலங்கா அரசாங்கம் வன்னிமீது தொடுத்த நிலையில் இடம்பெயர்ந்தவாறே தனது ஊடகப் பணியைத் தொடர்ந்தவர்.
2009ஆம் ஆண்டு இதே நாளில் (பெப்ரவரி 12) அவர் முல்லைத்தீவு தேவிபுரத்தில் குடும்பத்துடன் இடம்பெயர்ந்து தங்கியிருந்தபோது சிறீலங்கா படையினர் வீசிய எறிகணை அவரது உயிரைப் பலியெடுத்தது.
இதில் கொடுமை என்னவென்றால், தனது தந்தை சாவைத் தழுவிக்கொண்டதைக்கூட அறியாத அவரது மூன்று அகவை மகள் அவரது உடலத்தின் அருகில் இருந்து அப்பா, அப்பா என தட்டியெழுப்பிக் கொண்டிருந்தது.
1990 களில் தனது ஊடகப் பணியை ஆரம்பித்து 19 வருடங்கள் தமிழ் மக்களிற்குப் பணியாற்றிய இந்த ஊடகன், மக்களிற்கு நன்றாக விளங்கும் வகையிலும், இயல்பான மொழிநடையிலும் தனது ஆய்வுகள் முன்வைப்பது மிகவும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
ஊடக அடக்குமுறை உச்சக்கட்டத்தில் இருந்து, ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் வன்னி செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்த காலத்தில், வன்னிக்கு வெளியே இருந்த ஊடகவியலாளர்கள் உயிரச்சுறுத்தல் காரணமாக உண்மையைச் சொல்ல முடியாது தவித்தபோது, உள்ளே இருந்து மக்களின் அவலங்களை உலகறியச் செய்தது மட்டுமன்றி, போர் முறைகள் பற்றி நன்கு அறிந்திருந்த காரணத்தினால் அதன் போக்கு பற்றியும் பக்குவமாய் எடுத்துக் கூறியவர்.
இவரது இழப்பின்போது வழமைபோன்று அறிக்கை வெளியிட்டிருந்த பிரான்சின் எல்லைகளற்ற ஊடயகவிலாளர் அமைப்பும், கொழும்பின் தமிழ். சுpங்கள, ஆங்கில ஊடக அமைப்புக்களும் இன்றுவரை தொடரும் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகளை தடுத்த நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்பதுதான் யதார்த்தம்.
நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி அவர்களை நாம் இழந்தபோது அவரைப் பற்றிய தாயக ஊடகவியலாளர்களின் நினைவுப் பகிர்வுத் தகவல்களைக் கொண்டு நான் எழுதிய செய்தியை கீழே இணைத்திருக்கின்றேன். இந்தச் செய்தி சத்தியமூர்த்தி அவர்கள் தமிழ் ஊடகத்துறைக்கு விட்டுச் சென்ற பணியையும், வெற்றிடத்தையும் எமக்கு உணர்த்தும் என நம்புகின்றேன்.
பரா பிரபா
paraprabha@hotmail.com






0 Responses to ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தியின் 2ஆம் ஆண்டு நினைவு