Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யுத்தம் முடிந்துவிட்டது. இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றி விட்டோம் என்று வெளி உலகுக்கு கூறும் அரசு, தொடர்ந்தும் எமது மக்களை அடிமைகளாக நடத்துவதையே சிந்தனையாகக் கொண்டுள்ளது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்னி மாவட்ட எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் நேற்று நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தினார்.

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என ஜே.வி.பியினால் முன்வைக்கப்பட்ட ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும்போது இதனை அவர் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசும்போது கூறியவை வருமாறு:

கொடுமையான யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எம் மக்களை வெள்ளம் முற்றாக அழித்துவிட்டது. அனுராதபுரத்தில் திறந்துவிடப்பட்ட நீரினாலேயே மன்னார் வெள்ளத்தில் மூழ்கியது.
இந்த இயற்கைகூட தமிழர்களைத் தேடித்தான் வதைக்கின்றது. ஆழிப்பேரலை உயிர்களைக் காவு கொண்டது. இந்த வெள்ளம் எல்லாவற்றையுமே அழித்துவிட்டது.

யுத்த பாதிப்பின் பின் சிறு பயிர்ச்செய்கைகளில் ஈடுபட்ட எமது விவசாயிகள் மிஞ்சி இருந்த நகைகளையும், மாடுகளையும் விற்று கடன் பெற்று விவசாயத்தை ஆரம்பித்தனர். ஆனால், இந்த வெள்ளம் அடியோடு அள்ளிக்கொண்டு போய்விட்டது. வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கு நியாயமான நட்டஈடு வழங்கப்படவேண்டும். இல்லையேல் இவர்களுடைய வங்கிக் கடன்களையாவது ரத்துச் செய்யவேண்டும். மனிதாபிமான அடிப்படையில் இதனை நடைமுறைப்படுத்தினால் இவர்களை தற்கொலை முயற்சிகளில் இருந்து காப்பாற்ற முடியும்.

தென்பகுதி மீனவர்கள் மன்னார் கடலில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இன்றி மீன்பிடிக்கின்றனர். ஆனால், பரம்பரையாக அங்கு தொழில் செய்துவரும் மீனவர்கள் மட்டும் பாஸ் பெறவேண்டும்; அனுமதி பெறவேண்டும் என இழுத்தடிக்கப்பட்டு பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏன் இந்த பாரபட்சம்.

ஏன் எங்களை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துகின்றீர்கள். யுத்தம் முடிந்துவிட்டது. சமாதானம் ஏற்பட்டுவிட்டது. எல்லா மக்களையும் சமத்துவமாக நடத்துகின்றோம். மீளக் குடியமர்த்திவிட்டோம் என்று வெளி உலகுக்குக் கூறுகின்றனர். ஆனால், இன்னும் விசாரணைகள், கைதுகள், பாஸ் முறைகள் தொடர்கின்றன. மக்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை.

மீள்குடியேற்றம் என்ற பெயரில் குடிசைகளுக்குள் முடக்கிவைக்கப்பட்டுள்ள எமது மக்கள் விசாரணை, தேடுதல் என்ற பெயரில் துன்பப்படுத்தப்படுகின்றனர். கதவுகளோ, ஜன்னல்களோ இல்லாத குடிசைகளுக்குச் சென்று நள்ளிரவில் தேடுதல் என்று கூறிக்கொண்டு இராணுவத்தினர் கொடுமைப்படுத்துகின்றனர்.

இவை எல்லாவற்றையும் விட கொடுமை இராணுவத்தினால் வசூலித்துவரும் கட்டாய வரி. அதாவது கிராம உத்தியோகத்தர்கள், அரச அதிபர்கள் ஊடாக அனுமதி பெற்று மரங்கள், மணல் என்பனவற்றை ஏற்றிவரும் போது இராணுவத்தினர் வைத்துள்ள பெட்டியில் 500 ரூபாவை கட்டணமாகப் போடவேண்டும்.

முன்பு புலிகளுக்கு வரி கொடுத்த நீங்கள் இப்போது எங்களுக்கு வரி செலுத்த வேண்டும் என்று அச்சுறுத்துகின்றனராம்.

இவை எல்லாம் தமிழ் மக்களை தொடர்ந்தும் அடிமைகளாக நடத்தவேண்டும் என்ற சிந்தனையைத்தான் வெளிப்படுத்துகின்றது. எனவே, அவசரகாலச் சட்டத்தை நீக்கிவிட்டு, சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கடந்த பல வருடங்களாக எந்தவிதமான விசாரணைகளும் இன்றி சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் எமது இளைஞர் யுவதிகளை விடுதலை செய்யவும் இந்த அவசரகாலச் சட்டம்தான் தடையாக இருக்கின்றது.

எனவே, தமிழ் மக்களின் நல்லெண்ணத்தைப் பெறவேண்டுமானால் உடனடியாக அவசரகாலச் சட்டத்தை நீக்கி விடுங்கள்.

இவ்வாறு செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்தார்.

0 Responses to தமிழ் மக்களை அடிமைகளாக நடத்துவதே அரசின் நோக்கம்: செல்வம் அடைக்கலநாதன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com