இலங்கைத் தமிழ் மக்களின் மனிதவுரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கடமைப்பாடு இந்தியாவுக்கு உண்டு என இந்தியாவின் முன்னாள் நீதியரசர் ரஜீந்தர் சஸார் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்வுரிமையை நிலைநிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் இந்தியாவும் இதுவரை எதுவும் செய்யவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அவர் எழுதிய கட்டுரை ஒன்றிலேயே அவர் இது குறித்து தெரிவித்துள்ளார். இக்கட்டுரையில் உள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,இலங்கையில் இடம்பெற்ற போரின்போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் காத்திரமான விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவையும் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவும் இதுவரை மேற்கொள்ளவில்லை.
இப்போரின்போது போரில் ஈடுபட்ட இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்களை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு காத்திரமான ஆதாரங்களுடன் முன்வைத்துள்ளது.
நிபுணர்கள் குழுவினால் காத்திரமான ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்ட சர்வதேச போர் நியமங்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமான, வெளிப்படையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றம் இழைத்தவர்கள் எவராயினும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
இலங்கை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு இத்தகைய விசாரணைகளை மேற்கொள்வதற்கான சர்வதேச நியமங்களைக் கொண்டிருக்கவில்லை.
அத்துடன் இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்குத் தடையாகவிருந்த காரணிகள் குறித்து உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு ஆராயவில்லை.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான மூல காரணிகள் கண்டறியப்படாது அங்கு இனங்களுக்கிடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என அவர் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழ் மக்களின் விடயத்தில் இந்தியா மெளனம் காக்க கூடாது: இந்திய முன்னாள் நீதியரசர்
பதிந்தவர்:
Anonymous
29 May 2011



0 Responses to ஈழத்தமிழ் மக்களின் விடயத்தில் இந்தியா மெளனம் காக்க கூடாது: இந்திய முன்னாள் நீதியரசர்