இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்குமாறு கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக்கு இலங்கை அரசே பொறுப்புக் கூற வேண்டும். எனவே, இனியாவது அரசு தனது பிழைகளைத் திருத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண இழுத்தடிப்பது, காணாமல் போனோர் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை விடுவிக்காது, மனித உரிமைக் குற்றச்சாட்டுகள், ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை ஆகிய விடயங்களுக்குப் பதிலளிக்காமல் அரசு மௌனப் பாதையில் பயணிப்பது ஆகிய காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுகளிலும் இந்தியாவுடனான பேச்சுகளிலும் உறுதியளித்த பல விடயங்களை இலங்கை அரசு நிறைவேற்றவேண்டும் எனக் கூட்டமைப்பினால் சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன், இலங்கை அரசு மேற்கொள்ளவேண்டிய பொறுப்புகள் குறித்து ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தும், இலங்கை அரசு அவை அனைத்தையும் கவனத்தில் கொள்ளவில்லை.
இதன் பின்னணியிலேயே, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கக் கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் மற்றும் காணாமல் போனோர் குறித்து விசாரணை அவசியம் என வலியுறுத்தி வருகின்றனர். இதனை அரசு மேற்கொள்ளாததினால் இலங்கை மீது வெளிநாட்டு அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.
இனியாவது, அரசு தனது பிழைகளைத் திருத்திக்கொள்ள வேண்டும். எதிர்காலத்திலாவது இவ்வாறு அழுத்தங்கள் அதிகரிக்காத வண்ணம் உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.



0 Responses to இனிமேலாவது அரசு பிழையைத் திருத்திக் கொள்ள வேண்டும்!: சுரேஷ்