Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கைக்கு புதிய அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் "சிறிலங்காவின் கொலைக்களம்" என்னும் ஆவண திரைப்படம் காண்பிக்கப்பட்டமையை அடுத்தே இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த வார ஆரம்பத்தில் பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியின் போர்க்குற்ற காணொளிகள் உண்மையானவை என்று மனித உரிமைகள் பேரவையில் நிரூபிக்கப்பட்டிருந்தது.

சட்டவிரோத கொலைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் Christof Heyns இதனை நிரூபித்திருந்தார். இந்தநிலையில் நேற்று காண்பிக்கப்பட்ட திரைப்படம் இலங்கைக்கு பொறுப்புக்கூறல் கடப்பாட்டை அதிகரித்துள்ளது.

இந்த திரைப்படக் காட்சிகள் காண்பிக்கப்பட்டமை அடுத்து கருத்துரைத்த, சர்வதேச மன்னிப்பு சபையின் ஆசிய நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் Saman Zia-Zarifi, இந்தக் காட்சிகளின் மூலம் இலங்கை அரசாங்கம் போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிட்டார்.

மருத்துவமனைகளின் மீது ஒரு தடவையல்ல, 65 தடவைகள் இலங்கைப் படையினரால் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். எனினும் இந்த திரைப்படக் காட்சிகளை நிராகரித்த இலங்கையின் பிரதி சட்டமா அதிபர் A.M.D. Nawaz இந்த விடயங்கள் தொடர்பில் விசாரணையை மேற்கொள்ள கால அவகாசம் தேவை என்று கோரினார்.

இதற்காகவே இலங்கையில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, விசாரணைகளை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

ஐக்கிய நாடுகளின் அமெரிக்காவுக்கான தூதுவர் Eileen Donahoe கருத்துரைக்கையில், சர்வதேச மனித உரிமை மீறல்களுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று தெரிவித்தார். இலங்கை இந்த விடயத்துக்கு விரைந்த முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பில் இலங்கை ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் பான் கீ மூனின் நிபுணர் குழு பரிந்துரைகளை பின்பற்றுதல் அவசியம் என்றும் Eileen Donahoe குறிப்பிட்டார்.

இதேவேளை, இலங்கை ஜனாதிபதியால் அமைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வரும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகளை விசாரணை செய்யும் அதிகாரத்தை கொண்டிருக்கவில்லை என்று சர்வதேச மன்னிப்பு சபையின் பிரதிநிதி Peter Splinter சுட்டிக்காட்டினார்.

நல்லிணக்க ஆணைக்குழு நல்லிணக்கத்தை பற்றியே பேசுகிறது. அது வடக்கில் பொதுமக்களுக்கு நடந்தவைகள் தொடர்பி;ல் ஆராயவில்லை படையினர் பொதுமக்கள் தாக்குதல் நடத்தியமையை, அந்த ஆணைக்குழு விசாரணை செய்யாவிட்டால் அந்த ஆணைக்குழு எவ்வாறு மக்கள் நம்புவார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

வடக்கில் பொதுமக்கள் கொல்லப்பட்டமை, சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டமை, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை என்பன தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுவது அவசியம் என்றும் Peter Splinter கோரிக்கையை முன்வைத்தார்.

0 Responses to இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கைக்கு மேலும் அழுத்தங்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com