இலங்கை மீது மத்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக
சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார் முதல்வர் ஜெயலலிதா.
இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’உலகத்தமிழர்களின் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ற வகையில் தமிழக அரசு இன்று சட்டப்பேரவையில் சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதை விடுதலை சிறுத்தைகள் மனதார வரவேற்கிறது.
ஐநா பேரவையால் நியமிக்கப்பட்ட ஆய்வுக்குழு சிங்கள இனவெறி அரசின் போர்க்குற்றத்தை குறிப்பாக ராஜபக்சேயின் போர்க்குற்றங்களை அண்மையில் அம்பலப்படுத்தியது.
அதன் அடிப்படையில் ராஜபக்சேவையும் சிங்கள இனவெறி அரசின் இதரப் போர்க்குற்றவாளிகளையும் சர்வதேச
நீதிமன்றத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை வழங்க வேண்டும் என தமிழகத்தில் இருந்தும் உலகின் பிற நாடுகளில் இருந்தும் கோரிக்கைக்குரல்கள் எழுந்தன.
அத்துடன் புதிதாக ஆட்சிப்பொறுப்பேற்றுள்ள அதிமுக தலைமையிலான தமிழக அரசும் இக்கோரிக்கையை சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றி இந்திய அரசை வற்புத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் அதிமுக அரசு இத்தகைய தீர்மானத்தை
நிறைவேற்றி யிருப்பது ஆறுதலை அளிப்பதாக அமைந்துள்ளது.
ஆனால் கடந்த காலங்களில் தமிழக மக்களின் உணர்வுகளையும் ஒட்டுமொத்தத் தமிழினத்தின்
அவலங்களையும் ஒரு பொருட்டாகவே மதிக்காத இந்திய அரசு தமிழக அரசின் இந்தத்தீர்மானத்தையும் ஒரு பொருட்டாக மதித்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்க இயலாத நிலையே உள்ளது.
ஈழத்தமிழர்கள் தொடர்பாக இது வரை தமிழக மக்கள் நடத்தியிருக்கிற போராட்டங்களையோ, விடுத்திருக்கிற வேண்டுகோள்களையோ அல்லது சட்டப்பேரவைத் தீர்மானங்களையோ இந்திய அரசு கடுகளவும் மதித்ததில்ல என்பதுதான் கடந்த கால வரலாறாக உள்ளது.
குறிப்பாக ஈழத்தமிழர்கள் தமிழக மீனவர்கள் மற்றும் கச்சத்தீவு தொடர்பாக ஏராளமான தீர்மானங்கள் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன. அவையெல்லாம் சட்டப்பேரவையில் அவைக்குறிப்பில் இடம்பெறும் தகவல்களாக மட்டுமே அமைந்துவிட்டன.
அத்தகைய தீர்மானங்களையொட்டி இந்திய அரசு கடந்த காலத்தில் எத்தகைய நடவடிக்கையையும்
மேற்கொள்ளவில்லை என்பதை நாடறியும்.
எனவே தற்போது தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத்தீர்மானத்தின் அடிப்படையில் இந்திய அரசைச்செயல்பட வைக்கிற அளவுக்கு அதிமுக அரசு தனது வலிமையை முழுமையாகப்பயன்படுத்த வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு பொருளாதாரத் தடை - விடுதலை சிறுத்தைகள் மனதார வரவேற்கிறது
பதிந்தவர்:
Anonymous
08 June 2011



0 Responses to இலங்கைக்கு பொருளாதாரத் தடை - விடுதலை சிறுத்தைகள் மனதார வரவேற்கிறது