ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் சார்பில் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மரண தண்டனையை ரத்துச் செய்யும்படி மனுத்தாக்கல் செய்யப்படும் என சட்டத்தரணி ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள தினத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 30 ஆயிரம் சட்டத்தரணிகளை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வரவழைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவிக்கின்றார்.
இதேவேளை, இந்த மூவரது தூக்குத் தண்டனையையும் ரத்துச் செய்யக்கோரி தமிழகம் எங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழக அரசியல்வாதிகளான கலைஞர் கருணாநிதி, வைகோ, திருமாவளவன், டாக்டர் ராமதாஸ், கிருஷ்ணமூர்த்தி பழ.நெடுமாறன், அ.வீரமணி, சீமான் ஆகியோர் உட்பட பெருமளவான பிரமுகர்கள் தூக்குத்தண்டனையை ரத்துச் செய்யும்படி வலியுறுத்தி வருகின்றனர்.
இதேவேளை, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.ஏ.தங்கபாலு, பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தூக்குத்தண்டனையை நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவிக்கின்றனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டால், திட்டமிட்டபடி செப்ரம்பர் 9ஆம் திகதி தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படுவது இடைநிறுத்தப்படலாம் என சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, சென்னையைச் சேர்ந்த மனித உரிமைகள் தொடர்பாகப் போராடும் மூன்று சட்டத்தரணிகள் இந்த மூவரது மரண தண்டனையையும் ரத்துச் செய்யும்படி கோரி உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.



0 Responses to மூவரின் தண்டனை: 30.000 சட்டத்தரணிகள் வாதாடுவர்