இந்திய முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது கருணை மனுவை நிராகரித்திருப்பதை இந்திய குடியரசுத் தலைவர் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என, பிரித்தானிய தமிழர் பேரவை தயவாகக் கோரிக்கை விடுக்கின்றது.
இந்த மூவரும் தாங்கள் எந்த நேரமும் தூக்கில் இடப்படலாம் என்ற அச்ச உணர்வுடன், கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்ட சிறையில் சொல்லொணா துயரங்களை அனுபவித்துள்ளனர்.
கருணை மனு நிராகரிக்க தாமதம் ஆகிய பல வழக்குகளை, குறித்த கைதிகள் ஏற்கனவே சிறையில் அனுபவித்திருக்கும் துன்பத்தைக் கருத்தில்கொண்டு இந்தியாவின் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை பல தடவைகள் மாற்றியிருக்கின்றது.
இந்தியா ஒரு வன்முறையற்ற கலாசார பாரம்பரியத்தைக் கொண்ட நாடு என்ற அடிப்படையிலும், மனிதாபிமான ரீதியிலும் இந்த மூவரது தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என, பிரித்தானிய தமிழர் பேரவை மிகவும் தாழ்மையாகக் கேட்டுக்கொள்ளுகின்றது.
இந்தியாவை விட மானிட அபிவிருத்தியில் பின்தங்கியுள்ள பல நாடுகள் இவ்வாறான தண்டனைகள் கொடூரமானவை என்பதை உணர்ந்துகொண்டு அவற்றை இல்லாது ஒழித்துள்ளன.
எனவே, பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்களை மதிக்கும், உலகில் முன்னணி நாடாக வளர்ந்துவரும் இந்தியாவிற்கு களங்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்தத் தூக்குத் தண்டனையை இந்தியா ரத்து செய்யும் என நாம் முழுமையாக நம்புகின்றோம்.



0 Responses to தூக்குத் தண்டனையை மறுபரிசீலனை செய்க! பி.த.பே