தொலைத்தொடர்பு ஊழலில் முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் குற்றமற்றவர் என்று கூறவில்லை என மத்திய புலனாய்வுத் துறை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
திமுகவைச் சேர்ந்த தயாநிதி மாறன் 2004-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தார். இந்த காலகட்டத்தில் ஏர்செல் நிறுவனத்துக்கு தொலைத்தொடர்பு உரிமங்களை வழங்க தயாநிதி மாறன் இழுத்தடித்தார் என்றும், ஏர்செல் நிறுவனத்தை மலேசிய நிறுவனமான மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்ற பின்னர் உடனடியாக தொலைத்தொடர்பு உரிமங்கள் வழங்கப்பட்டதாகவும் தயாநிதி மாறன் மீது புகார் கூறப்பட்டது.
இதை விசாரித்த சிபிஐ இதற்கு ஆதாரம் இல்லை என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த விசாரணை அறிக்கையில் தெரிவித்திருந்தது.
இதையடுத்து தயாநிதி மாறன் விஷயத்தில் சிபிஐ கண்டும்காணாமல் செயல்படுவதாக வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்சநீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் தயாநிதி மாறன் குற்றமற்றவர் என நாங்கள் கூறவில்லை. தொலைத்தொடர்பு ஊழலில் அவரின் பங்கு குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம். அவரை குற்றமற்றவர் என்று சிபிஐ குறிப்பிட்டதாக ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் தவறு என சிபிஐ வழக்கறிஞர் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.



0 Responses to தயாநிதி மாறன் குற்றமற்றவர் என்று கூறவில்லை: சிபிஐ