Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மீள்குடியேற்றத்திற்கான அனுமதி மட்டுமே தந்துள்ளனர். வேறு எந்த உதவிகளையும் பெற்றுக் கொடுக்காத நிலையில், அடர்ந்து வளர்ந்த புதர்களுக்குள்ளும், வெடிக்காத வெடிபொருட்களின் அபாயங்களோடும் எப்படி வாழ்வது? என யாழ்.வலிகாமம் வடக்கு, கொல்லங்கலட்டி கிராம மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

அத்துடன் சொந்த இடங்களிற்கு வந்து வாழ்வதற்கு முன்னர் எங்கள் அடிப்படை வசதிகளை மேம்படுத்திக் கொடுங்கள் எனவும் கேட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் கிராம மக்கள் மேலும் தெரிவிக்கையில்,

மீள்குடியேற்றத்திற்கான அனுமதி மட்டும் பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதுவரையில் எந்தவிதமான உதவிகளும் செய்து கொடுக்கப்படவில்லை.

கடந்த 30வருடங்கள் மக்கள் பாவனையில் இல்லாமையினால் காடுகளைப்போல் பற்றைகள் வளர்ந்துள்ளது. மேலும் மிகவும் உக்கிரமான யுத்தம் நடைபெற்றமையினால் வீடுகள் முற்றாகச் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.

இதனால் வீடுகளில் உடனடியாக குடியேறி வாழ முடியாது. இதற்குமேல் சில இடங்களில் இன்னமும் அகற்றப்படாத போர்க்கால மண் அணைகளும், பதுங்கு குழிகளும் காணப்படுகின்றன,

அவற்றினோடு பல இடங்களில் வெடிக்காத வெடி பொருட்கள் பலவற்றை மக்கள் கண்டெடுத்து உரியவர்களிடம் கையளித்துள்ளனர். இதற்கும் மேல் சில இடங்களில் வெடிபொருட்கள் தொடர்ந்தும் இருந்து கொண்டிருக்கின்றது.

எனவே தமது வளவுகளைத் துப்புரவு செய்து குப்பைகளுக்குத் தீ மூட்டக்கூட முடியாத நிலையே காணப்படுகின்றது, மேலும் வீடுகளில் உடனடியாகத் தங்க முடியாத நிலையில் தற்காலிக வீடுகளை உரியவர்கள் வழங்கியிருக்கவேண்டும். ஆனால் அவ்வாறான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

மீளக்குடியமர்ந்த மக்களுக்கான 25ஆயிரம் ரூபா மீள்குடியேற்ற நிதியை வழங்குவதற்க்கும் 5மணித்தியாலங்கள் வேலை செய்யவேண்டும் எனப் பணிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில, மீளக்குடியமர்ந்துள்ள மக்களின் வாழ்வாதார நிலைகள் மேம்படுத்தப்படாத நிலையில் காலையில் இருந்து மக்கள் வேலை செய்வது அனைவருக்கும் சாத்தியப் படாதவொன்றாகவே காணப்படுகின்றது.

இதற்குமேல் மக்கள் பலர் தமது காணிகளை கூட இன்னமும் முழுமையாகத் துப்புரவு செய்யவில்லை. எனவே மீள்குடியேற்றம் என்பது என்றவொன்று பெயரளவில் இங்கே நடந்துள்ளது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக மிக முக்கிய அடிப்படைத் தேவைகளான மலசல கூட வசதி, குடி தண்ணீர் மற்றும் இதர தேவைகளுக்கான தண்ணீர் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் பல சிரமங்களை எதிர் கொள்கின்றனர்.

கடந்த 30 வருடங்கள் பாவனையில் இல்லாமையினால் பல கிணறுகள் இடிந்தும் தூர்ந்தும் போயுள்ளன. இதேபோல் மலசல கூடங்கள் கிராமத்தில் எந்தவொரு இடத்திலும் இல்லை.

இந்நிலையில் பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் உட்பட அனைவருமே பற்றைகளை நம்பியிருப்பதோடு எதிர்வரும் மழை காலங்களிலும் இரவு வேளைகளிலும் மிகவும் இது அபாயகரமானதாக இருக்கும்.

எனவே மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். கிணறுகளைப் பொறுத்தவரையில் கிராமத்தில் துப்புரவு செய்யப்பட்ட ஒரு சில கிணறுகளையே அனைத்து மக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் வீடுகளில் உள்ள கிணறுகள் எவையும் புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றன. இவற்றைப் புனரமைப்பதற்கான வளங்கள் தற்போது மக்களிடம் இல்லை. எனவே தொண்டு நிறுவனங்களை நாடி விடயம் பிரச்சினைகள் குறித்துத் தெரிவித்து உதவி கோரினால் முதலில் சொந்த இடங்களில் எல்லா மக்களையும் குடியமரச் செய்யுங்கள் பிற்பாடு தருகின்றோம் எனத் தெரிவிக்கின்றனர்.

எந்த விதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாத நிலையில் மாற்று வழியில்லாமல் சொந்த இடங்களில் குடிமர்ந்து ஒருவாறு சமாளித்துக் கொள்ளக் கூடியவர்கள் குடியமர்ந்துள்ளனர்.

எனையவர்கள் சமாளிக்க முடியாத பிரச்சினைகள் உள்ளவர்கள் குடியமர்வது எப்படிச் சாத்தியம்? முதலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தித் தொண்டு நிறுவனங்களும், பொறுப்புவாய்ந்த அரச அதிகாரிகளும், பெற்றுக் கொடுங்கள்.

பின்னரே மக்கள் முழுமையாக சொந்த இடங்களில் குடியமர்ந்து வாழக் கூடிய சூழல் ஏற்படும் என மக்கள் மேலும் தெரிவித்தனர்.

0 Responses to வெடிக்காத வெடிபொருட்களின் அபாயங்களோடு எப்படி வாழ்வது?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com