தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன் வைத்துள்ள கோரிக்கைகளுக்குப் பதிலளிக்காமல் அரசு மௌனம் காத்து வருவது தொடர்பாக சர்வதேச சமூகத்துக்கு தெளிவுபடுத்தும் பணி தொடரும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் பொருட்டு அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இடம் பெற்று வந்த பேச்சுகள் கடந்த மாதம் 4ம் திகதியுடன் முடிவடைந்தன.
மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதற்கு அரசு எழுத்து மூலம் உத்தியோகபூர்வமாகப் பதிலளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தது. இல்லையேல் பேச்சைத் தொடர முடியாது எனவும் அது திட்டவட்டமாக அறிவித்தது.
இந்த நிலையில், அமைச்சர்களான ஜி.எல்.பீரிஸ், சுசில் பிரேமஜயந்த ஆகியோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதற்கு அரசு தயார் என்று அண்மையில் அறிவித்திருந்தனர்.
இது தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன வென்று கேட்டபோதே, தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகளுக்குப் பதிலளிக்க முனையாத அரசு, சர்வதேச சமூகத்தையும், மக்களையும் ஏமாற்றுவதன் நோக்குடனேயே எம்முடன் பேச்சு நடத்தத் தயார் என்று கூறிவருகின்றது.
இந்த விடயத்தில் அவர்களுக்கு உண்மையாகவே அக்கறையிருந்தால் முதலில் நாம் முன்வைத்த மூன்று அம்சக் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கட்டும். இல்லையேல் பேச்சுக்களைத் தொடர மாட்டோம். அவ்வாறு தொடர்வதால் எவ்வித பலனும் ஏற்படப் போவதில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகளுக்குப் பதிலளிக்க முனையாமல் அரசு அசமந்தப் போக்கைக் கடைப்பிடித்து வருவது தொடர்பாக சர்வதேச சமூகத்திற்கு நாம் தெளிவு படுத்தியுள்ளோம். எமது இந்தப் பணி இனியும் தொடரும் என்றார்.
ஆட்சி அதிகார முறைமை, மத்திய மாநில அரசுக்கிடையிலான விடயதானம், செயற்பாடுகள் மற்றும் வரிநிதி அதிகாரங்கள் ஆகிய மூன்று விடயங்களே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளாகும்.
பேச்சுவார்த்தை குறித்து அரசு மெளனம்! - சர்வதேசத்திடம் கூட்டமைப்பு முறையீடு
பதிந்தவர்:
தம்பியன்
07 September 2011



0 Responses to பேச்சுவார்த்தை குறித்து அரசு மெளனம்! - சர்வதேசத்திடம் கூட்டமைப்பு முறையீடு