Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் நவம்பர் 27 அன்று பிரித்தானியாவில் நடைபெறவுள்ள தேசிய நினைவெழுச்சி நாளை பிரித்தானியா வாழ் ஈழத்தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் நடாத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று தேசிய நினைவேந்தல் அகவத்தினால் நேற்று (16-10-2011) ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்பட்டது.

வடமேற்கு லண்டன் பகுதியின் 366A, STAG LANE, KINGSBURY, LONDON, NW9 9AA எனும் முகவரியில் அமைந்துள்ள RNB VENUE மண்டபத்தில் மாலை 3:00 மணி முதல் மாலை 6:00 மணிவரை நடைபெற்ற இவ் முக்கிய கலந்துரையாடலில் பிரித்தானியாவின் பல பாகங்களிலும் இருந்து இருநூறிற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

அகவணக்கத்தோடு ஆரம்பித்த இக் கலந்துரையாடலை தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் சார்பில் அதன் தலைவி திருமதி. இரத்தினேஸ்வரி சண்முகசுந்தரம், DR. வசந்தன், தமிழ் இளையோர் ஒருங்கிணைப்பாளர் திரு. கபில் ஆகியோர் தலைமை தாங்கி நடாத்தினர். முதலில் உரையாற்றிய திருமதி. இரத்தினேஸ்வரி சண்முகசுந்தரம் அவர்கள் இந்த தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் 2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இன்றுவரையான அதன் நிலைப்பாடு மற்றும் செயற்பாடு தொடர்பாக எடுத்து விளக்கினார்.

குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக (2009, 2010) பிரித்தானியாவில் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தினால் நடாத்தப்பட்ட தமிழ்த் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வில் சில தவறுகளும் , பல குழப்பங்களும் ஏற்பட்டுள்ளதை மக்கள் அவதானித்ததுபோல் தானும் அவதானித்ததாகவும் அதிலும் இவ் நினைவெழுச்சி நாள் நிகழ்வில் தமிழ்த் தேசியத்திற்காக உழைக்கின்ற அமைப்புக்கள் புறக்கணிக்க்பட்டதும், அங்கு சேர்க்கப்பட்ட நிதி தொடர்பான வரவு, செலவுகள் என்ன என்பது தொடர்பாக தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் பதிவுகளோடு முன்னின்று நிகழ்வை நடாத்தியவர்கள் இன்றுவரை அவ் வரவு செலவு அறிக்கையினை நினைவேந்தல் அகவத்திற்கு கையளிக்காததுமே இன்றைய இச் சூழலுக்கான காரணமாக இருக்கிறது.

அதற்காக நாம் தேசப்புதல்வர்களுக்கான நிகழ்வை நடாத்தாது விட முடியாது. எமக்காகவும், எம் மண்ணின் விடுதலைக்காகவும், எதிர்கால தமிழ்ச் சந்ததியினரின் சுதந்திர வாழ்வுக்காகவும் தமது இன்னுயிர்களை ஈர்ந்த அந்த மாவீரச் செல்வங்களை நினைவுகொள்ளும் தமிழ்த் தேசிய நினைவெழுச்சி நாளை நாம் மிகவும் எழுச்சியாகவும், உணர்வுபூர்வமாகவும் நடாத்த வேண்டிய கடமை மாவீரர்களைப் பெற்ற பெற்றோர் உட்பட அனைத்து தமிழ் உறவுகளுக்கும் உண்டு.

அதனாலேயே குழப்பங்கள் இன்றி தெளிவான முறையில், மக்களுக்கு நம்பிக்கையான வழிவகைகளை பின்பற்றி அதனூடாக இம்முறை முதல் இத் தேசிய நினைவெழுச்சி நாளை நடாத்துவது என முடிவு செய்தோம்.

அதன் அடிப்படையில் மக்கள் சந்திப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு அதனூடாக கிடைத்த ஆரோக்கியமான கருத்துக்களை உள்வாங்கி சட்டவாளர்கள், கணக்காளர்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், பிரித்தானியத் தமிழர் பேரவை, தமிழ் இளையோர் அமைப்பு போன்ற அமைப்புக்களைச் சார்ந்தவர்களும், அதனோடு இணைந்து பணியாற்றுபவர்களும், மற்றும் கடந்த பல வருடங்கள்ஆக தமிழ்த் தேசிய செயற்பாடுகளில் முன்னின்று உழைத்தவர்களில் சிலருமாக தெரிவுசெய்யப்பட்டு அதனூடாகவே பதினொரு பேர் கொண்ட ஒரு செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது.

எனவே அச் செயற்குழு கடந்த கால கசப்பான அனுபவங்களைக் கருத்தில் கொண்டு சரியானதும், தெளிவானதுமான செயற்திட்டங்களோடு தற்போதுள்ள குழப்பகரமான நிலையினை கடந்து அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் உணர்வுபூர்வமாக தேசிய நினைவெழுச்சி நாளை நடாத்த முயற்சிக்கிறது. ஆகவே அனைத்து பிரித்தானியா வாழ் தமிழ் மக்களும் வழமைபோல் பிரித்தானியாவின் மாபெரும் மண்டபமான எக்சல் மண்டபத்தில் இம்முறையும் நடைபெறவுள்ள தமிழ்த் தேசிய நினைவெழுச்சி நாளில் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் சார்பில் பணிவாக கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய தமிழ் இளையோர் ஒருங்கிணைப்பாளர் திரு.கபில் கூறுகையில் தமி̀ழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் தலைவியும், மூன்று மாவீரர்களின் தாயாருமான திருமதி. இரதினேஸ்வரி சண்முகசுந்த்அரம் அவர்கள் கூறியது போல் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து இத் தேசிய நினைவெழுச்சி நாளை சிறப்பாகவும்,கவும் செய்து முடிக்கவேண்டும்.

இதை விடுத்து பிரித்தானியாவில் வேறு இடங்களிலும் பிரிந்து இத் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வு நடக்குமாக இருந்தால் அது புலம் பெயர் தேசத்து தமிழ்ர்களுக்கும், அவர்கள் முன்னெடுக்கும் தார்மீக போராட்டத்திற்கும் ஏற்படும் மற்றூமோர் முள்ளிவாய்க்காலாக அமைந்துவிடும். அது எதிர்காலத்தில் எம்மை எழவிடாது தடுப்பதோடு மட்டுமன்றி சிங்கள அரசிற்கு நாமாகவே தேடிக்கொடுக்கும் பெரு வெற்றியாகவும் அமைந்துவிடும் என்றார்.

எக்சல் மண்டபம் தொடர்பாக மக்களில் இருந்து வந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் முகமாக DR. வசந்தன் அவர்கள் கூறுகையில் கடந்த காலங்களில் எவ்வளவுபேர் கொள்ளக்கூடியதாக மண்டபம் எடுக்கப்பட்டதோ அதே அளவு மக்கள் ஒன்றுகூடக் கூடிய இடமே இம்முறையும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இத் தேசிய நினைவெழுச்சி நாளிற்கு எவ்வளவு மக்கள் வருவார்கள், எப்படி உணர்வுபூர்வமாக கடந்த காலங்களில் நடைபெற்றது என்பது அந்த மண்டப உரிமையாளர்களுக்கும், அங்கு பாதுகாப்புப் பணியில் கடமையாற்றியவர்களுக்கும், பிரித்தானியக் காவல் துறையினருக்கும் நன்கு தெரியும். அவர்களை நாம் ஏமாற்ற முடியாது.

ஆகவே குழப்பங்களை ஏற்படுத்தும் சில ஊடகங்களில் வெளிவருவது போன்று இரண்டாயிரம் பேர் கொள்ளக்கூடிய மண்டபம் அல்ல அது. நீங்கள் அனைவரும் தேசியநினைவெழுச்சி நாளன்று அங்கு வரும்போது நீங்களே பார்த்தும், உணர்ந்தும் கொள்வீர்கள் அதன் உண்மைத் தன்மையை. அன்றைய தினம் ஒரு தமிழ் மகன் கூட மண்டபத்தில் இடம்போதாது என்ற காரணத்திற்காக வெளியில் நிற்கு நிலை ஏற்படாது. அதற்கு ஏற்ற முறையில் தான் பிரம்மாண்டமான மண்டபம் நிகழ்விற்காக எம்மால் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்றார்.

இதன் பின்னர் அங்கு கூடியிருந்த மக்களின் கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்கான நேரம் வழங்கப்பட்டது. இதன் போது பலதரப்பட்ட கருத்துக்கள் வந்திருந்த போதிலும் அனைவரும் ஒரே முடிவாக ஏற்றுக்கொண்ட ஓர் விடையமாக இவ் வருட தமிழ்த் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் ஒரே இடத்தில் அனைத்து மக்களையும் உள்ளடக்கி செய்யப்பட வேண்டும் என்றும் அதற்கான தங்களது சகல ஒத்துழைப்புக்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் கூறினர். அத்தோடு மண்டபத்தில்ஏயே பணியாளர்களாக கடமையாற்ற விரும்பியவர்கள் பலர் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்திடம் தமது பெயர்களை வழங்கியும் சென்றனர்.

இதன் பிரகாரம் பிரித்தானியாவில் நடைபெறவுள்ள தமிழ்த் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்விற்கு கூடும் பல்லாயிரக் கணக்காந தமிழ் மக்களை உள்ளடக்கி ஓரிடமாக செய்ய தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள எக்சல் மண்டபத்தை தவிர வேறு எந்த மண்டபங்களும் தமிழ்த் தேசிய நினைவெழுச்சி நாளை நடாத்துவதற்காக பதிவு செய்து அதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படாத நிலையில் வழமைபோல் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் ஏற்பாடு செய்துள்ள ஓழுங்கிற்கும், நிகழ்ச்சி நிரலுக்கும் உட்பட்டு அதே எக்சல் மண்டபத்தில் நடாத்துவது என்ற முடிவு எடுக்கப்பட்டது.

இவ் முக்கிய கலந்துரையாடலில் பிரித்தானியாவின் குறொய்டன், மிச்சம், ரூட்டிங், வெம்பிளி, ஹெயிஸ், ஈலிங், ஹறோ, சவுத்ஹோல், மில்ரன் கீன்ஸ், லெய்ஸ்டர், நோத்தம்டன், மன்செஸ்டர், லீட்ஸ், லூட்டன், வட்பேர்ட், கிங்ஸ்புறி, ஸ்ரன்மோர், சறே, ஈஸ்ட்ஹாம், இல்பேட், வோல்த்தம்ஸ்ரோ, வேல்ஸ், கொலிண்டேல், பினர், ரேயினஸ்லேன், அல்பேர்டன் என பல பாகங்களிலும் இருந்து மக்கள் வந்து கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஓரிடத்தில் அனைவரும் ஒன்றுகூடி தேசிய நினைவெழுச்சி நாள் எழுச்சியோடு நடைபெற வேண்டும்!: பிரித்தானிய தமிழ் மக்கள் முடிவு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com