Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐரோப்பா வாழ் ஈழத்தமிழ் மக்கள் சங்கமிக்கும் மாபெரும் மக்கள் ஒன்றுகூடலாக 'நீதிக்காய் ஒன்றுபடுவோம்' எழுச்சி நிகழ்வு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் போராட்டத்தின் ஒர் அங்கமாக லண்டனில் இருந்து ஜெனீவா வரைக்குமான நீதிக்கும் அமைதிக்குமான நடைப்பயணம் தொடங்குகின்றது. இம்மாதம் 28 ஆம் திகதி லண்டனில் இருந்து தொடங்கும் இந்த நடைப்பயணம் ஐ.நாவின் மனித உரிமைக் கூட்டத் தொடர் தொடங்கின்ற நாளான பெப்ரவரி 27 ஆம் திகதி ஜெனீவா ஐ.நா முன்றலில் நிறைவடையவுள்ளது.

நடைப்பயணம் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கை பின்வருமாறு,

கடந்த வருடம் மார்கழி மாதம், அமெரிக்காவின் 'பப்லோ' நகரில் நிறைவுபெற்றிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது அமர்வானது, 2012ஆம் ஆண்டில் சிறீலங்காவிற்கான சுயாதீனமான சர்வதேச விசாரணைப் பொறிமுறை' ஒன்றின் அவசியத்தினை வலியுறுத்தி இருந்ததோடு, 2012ஆம் ஆண்டினை 'சர்வதேச, சுயாதீனமான விசாரணைக்குரிய ஆண்டு' ஆகவும் பிரகடனப்படுத்தியிருந்தது.

சமீபத்தில் சிறீலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையானது, அதன் ஒருபக்க அரசு சார்ந்த ஆய்வின் முடிவுகளுக்காக சர்வதேச மனித உரிமைகளுக்கான அமைப்புக்கள் பலவற்றின் பலத்த கண்டனத்திற்கு ஆளாகி இருந்ததோடு, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா போன்ற நாடுகள் இந்த அறிக்கையின் மீதான தமது ஏமாற்றத்தையும் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தன. மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை, பிரித்தானிய சனல்4 ஊடகம் ஆகியன, தமிழீழத்தில் போரின்போது இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களை பக்க சார்பு அன்றி நடுநிலைமையுடன் ஆராய்வதற்காக ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணையின் அவசியத்தை சர்வதேச அளவில் மீண்டும் வலியுறுத்த ஆரம்பித்து விட்டன.

ஆகவே, எதிர்வரும் 27ஆம் நாள் மாசி மாதம் 2012 ஆரம்பிக்கவிருக்கின்ற ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 19ஆவது கூட்டத்தொடரின் போது, சிறீலங்காவின் மனித உரிமை மீறல்கள் மீதான ஐ.நா. நிபுணர்கள் குழுவின் அறிக்கையானது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கான அதிகூடிய சாத்தியம் தற்போது எழுந்துள்ளது. எனவே, ஐ.நா.வின் அறிக்கையானது இச்சபையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தமிழீழத்தில் ஈழத்தமிழர்களின் மீது சிறீலங்காவின் பேரினவாத அரச பயங்கரவாதப் படைகளினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் போன்ற பாரிய சர்வதேச குற்றங்களை விசாரிப்பதற்காக ஒரு 'சுயாதீனமான, சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அல்லது குழு' ஒன்றினை நிறுவுவது சம்பந்தமாக ஆராயப்படுவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் அதிகமாகவே தென்படுகின்றது.

இன்னமும் இரண்டே மாதங்களில் நடைபெறவிருக்கின்ற ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 19ஆவது கூட்டத்தொடரானது, ஈழத்தமிழர்களுக்கு அவர்களின் நீண்டகால தமிழீழ சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக அமையவிருக்கின்றது. இவ்வகையில், 19ஆவது கூட்டத்தொடரானது, எதிர்காலத்தில் தமிழீழத்தில் ஈழத்தமிழினத்தின் 'இருப்பினையே' தீர்மானிக்கவல்ல ஒரு வரலாற்று நிகழ்வாக அமையவிருக்கின்றது என்பது மட்டும் உறுதி. 19ஆவது கூட்டத்தொடரும் அதனையடுத்து வரும் அண்மைய காலங்களில் நடக்கவிருக்கின்ற சர்வதேச அரசியல் நிகழ்வுகளும் தமிழீழத்தில் ஈழத்தமிழினத்தின் தலைவிதியையே நிர்ணயிக்கவிருக்கின்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்களாக அமையப்போகின்றன என்றால் அது மிகையாகாது.

எனவே, எதிர்வரும் 27ஆம் நாள் மாசி மாதம் 2012 ஆரம்பிக்கவிருக்கின்ற ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 19ஆவது கூட்டத்தொடரினை மையப்படுத்தி, புலம்பெயர் தமிழ் மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு புதிய வேகத்துடன், ஒரு புதிய எழுச்சியுடன், பல்லாண்டுகளாக அநீதிகள் இழைக்கப்பட்டு வரும் எங்கள் மக்களுக்கு சர்வதேச சமூகத்தினரிடம் நீதி கேட்டும், எங்கள் மக்களின் அடிப்படை மனித உரிமைகளுக்காக உலக அரங்கினில் ஓங்கி உரத்துக் குரல் கொடுக்கும் முகமாகவும், நாங்கள் 'நீதிக்கும் அமைதிக்குமான நடைப்பயணம்' ஒன்றினை எதிர்வரும் சனிக்கிழமை 28-01-2012 இலிருந்து திங்கட்கிழமை 27-02-2012 வரைக்கும், லண்டனிலிருந்து ஜெனீவாவை நோக்கி மேற்கொள்ளவிருக்கின்றோம். நீதிக்கும் அமைதிக்குமான நடைப்பயணத்தில் எங்களுடன் இணைந்து பங்குபற்ற விரும்பும் அனைவரையும் நாங்கள் அன்புடன் வரவேற்று நிற்கின்றோம். அத்துடன், எங்களது இந்த நடைப்பயணத்திற்கு உங்கள் அனைவரது தார்மீக ஆதரவினையும், உங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து உதவுமாறும் நாங்கள் உங்கள் அனைவரையும் அன்புடனும், உரிமையுடனும் பணிவுடன் வேண்டி நிற்கின்றோம்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தலைவருக்கும், அதில் அங்கத்துவம் வகிக்கின்ற நாடுகளின் பிரதிநிகளுக்கும் மற்றும் அக்கூட்டத்தொடரில் பங்கேற்கவிருக்கின்ற மனித உரிமைகள் அமைப்புக்கள் உட்பட ஏனைய அரசு சார்பற்ற அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகளிடமும் நாங்கள் எங்களது நடைப்பயணத்தின் முடிவின் போது கையளிக்கவிருக்கின்ற எங்களது மூன்று கோரிக்கைகள் ஆவன:-

1) ஈழத்தமிழர்களின் மீதான சிறீ லங்காவின் பேரினவாத அரச பயங்கரவாதிகளின் இனப்படுகொலையையும், போர்க்குற்றங்களையும், மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் விசாரிப்பதற்காக ஒரு சுயாதீனமான, சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட்டு, மனிதத்திற்கு எதிராக மாபெரும் குற்றங்களைப் புரிந்தவர்களையும், இவற்றுக்குக் காரணமானவர்களையும் சர்வதேச சமூகம் தண்டிக்க வேண்டும்.

2) சிறிலங்காவின் பேரினவாத அரசினால் தமிழீழத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இனப்படுகொலை, சிங்களக் குடியேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்புக்கள், சட்டத்துக்குப் புறப்பான கடத்தல்கள், காணாமல் போதல்கள், கொலைகள், கற்பழிப்புக்கள், பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், சித்திரவதைகள் போன்ற அனைத்தையும் உடனடியாக நிறுத்துவதற்காகவும், மேலும் தமிழீழத்தில் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பையும், இருப்பையும் உறுதிப்படுத்துவதற்காகவும், ஐ.நா.சபையானது தாமதியாது, தமிழீழத்தில் 'மனித உரிமைகள் பாதுகாப்புக் கண்காணிப்பகம்' ஒன்றினை உடனடியாக நிறுவ வேண்டும்.

3) ஈழத்தமிழர்களை ஒரு முற்றான இனஅழிப்பிலிருந்து காப்பாற்றும் முகமாகவும், சிங்கள பேரினவாத அரச பயங்கரவாதத்தின் கொடுமைகளை ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வரும் ஈழத்தமிழர்களுக்கு நிவாரணம் அளிக்கும் முகமாகவும், தமிழீழத்தில் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை சர்வதேச சமூகம் அங்கீகரிப்பதோடு, ஐ.நா.சபையின் மத்தியஸ்தத்துடன் கூடிய சர்வசன வாக்கெடுப்பு ஒன்றும் தமிழீழத்தில் நடாத்தப்படல் வேண்டும்.

நீதிக்கும் அமைதிக்குமான நடைப்பயணத்தின் இறுதி நாளன்று, எதிர்வரும் மாசி மாதம் 27ஆம் நாள், ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு முன்னராக மாபெரும் 'நீதிக்கான மக்கள் ஒன்றுகூடல்' ஒன்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏனைய தமிழ் தேசிய அமைப்புக்களுடன் கூட்டாக ஒன்றிணைந்து ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

நீதிக்கும் அமைதிக்குமான நடைப்பயணத்திலும், நீதிக்கான மக்கள் ஒன்றுகூடலிலும் கலந்து கொண்டு 'ஆண்டாண்டு காலமாக அநீதிகள் இழைக்கப்பட்ட ஈழத்தமிழினத்திற்கு நீதி கிடைக்கும் வரையில் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் என்றென்றைக்குமே ஓய மாட்டார்கள்' என்பதனை சிறீலங்காவின் பேரினவாத அரசிற்கும், உலக நாட்டின் தலைவர்களுக்கும், சர்வதேச சமூகத்தினருக்கும் நாங்கள் இடித்துரைப்போமாக!!

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

0 Responses to லண்டன், ஜெனீவா: நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com