Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அட்சர கணிதத்தில் இரண்டு மைனஸ், பிளசுக்கு சமமானது, இதன் அர்த்தம் ஒன்றும் இல்லையென்பதே'' மிக்னோன் மக்லோக்ளின் அமெரிக்க பத்திகையாளர் (1913 1983) மூன்று வருட கால இடைவேளையின் பின்னர் 13 பிளஸ் மீண்டும் சந்தைக்கு வந்துள்ளது.

இவ் உற்பத்திப் பொருள் யார் யாருக்கு விற்கப்படப்போகிறது என்பது தான் எல்லோருடைய கேள்வியாகும். முள்ளிவாய்க்காலுக்கு முன் ஓர் முக்கிய காரணத்தினால் இப்பொருள் நன்றாக சர்வதேச ரீதியாக சந்தைப்படுத்தப்பட்டது.

ஆனால் முள்ளிவாய்க்காலுக்கு பின் 13 பிளஸ் என்னும் வாய்ப்பொருளை நம்பி வாங்கியவர்கள் தமக்கு விற்பனை செய்தவரை தேடத் தொடங்கினார்கள். இவர் இறுதியாக தமக்கு 13 பிளஸை விற்றவர், மிகவும் சந்தோஷத்திலும் கேளிக்கைகளிலும் மூழ்கி 13 பிளஸ் விற்பதை நிறுத்திவிட்டு வேறு ஒரு பொருளான ““அபிவிருத்திப் பொருளை'' சந்தைப்படுத்திக் கொண்டிருப்பதைக் கண்டார்கள்.

13 பிளஸை ஏற்கனவே வாங்கியவர்கள் மிகவும் இராஜதந்திரம் தெரிந்தவர்கள். மாற்று உபாயமாக சனல் 4'', “பான் கீ'' ஆகிய பொருட்களை சர்வதேச ரீதியாக சந்தைப்படுத்தி விட்டார்கள். இந்த உபாயத்தை கண்டவர் உடனடியாக ““நல்லிணக்கம்'' என்ற பொருளை சந்தைப்படுத்தினர்.

இதைக் கண்டு ஆச்சரியமடைந்த 13 பிளஸை வாங்கியவர்கள் இது விடயத்தில் கவனம் கொள்ளாவிட்டால் ஜெனீவாவில் உள்ள நீதிமன்றத்திற்கு எதிர்வரும் மார்ச் மாதம் எடுத்துச் செல்லவிருப்பதாகக் கூறி விட்டார்கள். இதனால் மீண்டும் தனது 13 பிளஸ் சந்தைப்படுத்தலை ஆரம்பித்துள்ளார். இதில் வேடிக்கை என்னவெனில், மூன்று வருடம் கடந்த பின்னரும் 13 பிளஸ் ஒரு பேச்சுப் பொருளாகவே இன்னும் உள்ளது.

தமிழர் கூட்டமைப்பு

இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பல சந்தைகளிலும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. பல சர்வதேச முக்கியஸ்தர்கள் இவர்களை நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்ளுமாறு வற்புறுத்துகின்றனர்.

தமிழ் சிவில் சமுதாயம் பிளவுபட்ட புலம்பெயர் வாழ் அமைப்புகளும் தமிழர் கூட்டமைப்புக்கே அழுத்தங்களை பிரயோகிக்கின்றன.

முதலில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவைப் பற்றி ஆராயுமிடத்து, அதில் அங்கம் வகிக்கும் ஒரு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகிறார், ““நீங்கள் சர்வதேச சமூகம் மூலம் கொடுத்துள்ள சகல அழுத்தங்களும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் சமுகமளிக்கவில்லையானால் வீண் விரயமாகிவிடும். ஆகையால் நீங்கள் உங்களிடமுள்ள தகவல்கள், ஆதாரங்கள், புள்ளி விபரங்களுடன் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் வந்து எம்முடன் விவாதியுங்கள். உங்கள் விவாதம் மூலம் சிங்களவர்களாகிய எம்மை நீங்கள் திருப்திப்படுத்துவீர்களானால் நாம் தமிழீழத்தையே ஏற்பதற்கு ஆயத்தமாக உள்ளோம் எனக் கூறியது மட்டுமின்றி, புத்தபிரான் எமக்கு நாம் ஏற்றுக் கொள்ளும் விடயங்களை மட்டும் நடைமுறைப்படுத்துமாறு கூறியுள்ளார். புத்த பிரான் எதையும் பயறுத்தலுக்கும் மிரட்டல்களுக்கும் ஏற்க வேண்டாமெனக் கூறியுள்ளதாகவும் கூறுகிறார்.

வேடிக்கை என்னவெனில் இவர் முன்னைய சரித்திரங்கள், மறுக்கப்பட்ட உடன்படிக்கைகள் யாவற்றையும் ஏற்றுக் கொள்கிறார். இதேவேளை, சிங்களவர்கள் திருப்திப்பட்டால் மட்டுமே எதுவும் செய்ய சம்மதிப்பார்களெனவும் கூறுகிறார்.

அப்படியானால் பண்டாரநாயக்க, டட்லி சேனாநாயக்க, ஜே.ஆர். ஜெயவர்தன போன்றோர் அன்று எந்தச் சர்வதேச அழுத்தங்களும் இல்லாத நிலையில் எதற்காக உடன்படிக்கைகளை சம்மதித்து கையெழுத்திட்டார்கள்? என்பதை சிந்திக்க வேண்டும். இப்போது தமிழீழத்தையும் நாம் தருவதற்கு சம்மதிப்போம் என்பது ஓர் கண்துடைப்பே.

தமிழ்ச் சிவில் சமுதாயம்

தமிழ்ச் சிவில் சமுதாயத்தினால் தமிழர் கூட்டமைப்பிற்கு எழுதப்பட்ட மனு உண்மையைக் கூறுவதானால் பல அருமையான விடயங்கள் தமிழர் கூட்டமைப்பிற்கு நினைவூட்டப்பட்டுள்ளன. ஆனால், இவை யாவும் ““குதிரை தப்பிச் சென்ற பின்னர் கதவைப் பூட்டியதற்கு சமமானது''. காரணம் இந்தத் தமிழ் சிவில் சமுதாயம், தமிழர் கூட்டமைப்பு அனுபவம் அற்ற அரசியல்வாதிகளினால் கூறு போடப்பட்டபொழுது எங்கிருந்தார்கள்? எங்கு சென்றார்கள்? இன்று தமிழர் கூட்டமைப்பு பலவீனமான நிலையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கூட்டமைப்பில் ஏற்பட்ட பிரிவே முக்கியமான காரணம் என்பதை தமிழ் சிவில் சமுதாயம், இதைப் பிரித்தவர்களும் முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்று ஈ.பி. டி.பி. தனி அணியாக நிற்பதற்கு தமிழர் கூட்டமைப்பில் ஏற்பட்ட பிளவே காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இதேவேளை, இப்போதைய தமிழ் சிவில் சமூகத்தின் மனு மேலும் தமிழர் கூட்டமைப்பை பல பிரிவுகளாக எதிர்காலத்தில் பிரிந்து செல்வதற்கு வழிவகுக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

எனினும், தமிழ் சிவில் சமுதாயத்தின் செயற்பாடுகள் காலத்தின் தேவைகளில் ஒன்றாகும். இவர்களது செயற்பாடுகள் வடக்கு, கிழக்குடன் மட்டும் நின்று விடாது மலையக மக்கள், முஸ்லிம் மக்களின் விடயங்களிலும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டுமென்பது மிக அவசியம். தமிழ் சிவில் சமூகம், மக்கள் பிரதிநிதிகளான கூட்டமைப்பை பலப்படுத்த பங்காற்ற வேண்டும். காரணம் சர்வதேச சமுதாயம் மக்கள் பிரதிநிதிகளான தமிழர் கூட்டமைப்புடனேயே சகல தொடர்புகளையும் பேண விரும்புகிறார்களென்பதை யாவரும் தெரிந்திருக்க வேண்டும்.

புலம்பெயர் வாழ் மக்கள்

புலம்பெயர் வாழ் மக்களில் பெரும்பாலானோர் ஜனநாயக நாடுகளில் வாழ்ந்தாலும் உணர்ச்சி வச அரசியலில் ஈடுபட்டுள்ளார்கள். சிலர் கூடிய விரைவில் ““தமிழீழம்'' பிறந்து விடும் எனக் கூறுகிறார்கள், வேறு சிலர் மீண்டும் ஆயுதப் போராட்டம் ஆரம்பமாகப் போகிறது என்கிறார்கள்.இன்னுமொரு சாரார் இந்தியாவிற்கு சவால் விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

உண்மையைக் கூறுவதானால் மீண்டும் ஆயுதப் போராட்டம் மீண்டும் பிறப்பெடுப்பதோ, அல்லது தமிழீழம் பெறுவதோ யாவும் இந்தியாவின் துணையுடன் தான் எதிர்காலத்தில் நடைபெற முடியுமே தவிர, இந்தியாவை புறக்கணிப்பதன் மூலமோ, சவால் விடுவதன் மூலமோ ஒரு பொழுதும் நடைபெற முடியாது. ஆகையால் எமது உணர்ச்சி வார்த்தைகள் மூலம் நாம் எதையும் சாதிக்க முடியாது. இதேவேளை, தேவையற்ற எமது வார்த்தைகள் மூலம் இலங்கையால் முன் வைக்கப்படும் பல குற்றச்சாட்டுகளுக்கு சர்வதேச ரீதியாக நாம் துணை போகிறோம் என்பதை உணர வேண்டும். எம்மிடையே உணர்ச்சி வச அரசியல் செய்யும் நண்பர்களிடம் ஒரே ஒரு கேள்விதான் நாம் கேட்க விரும்புகிறோம். இன்று எமது அரசியல் பிரச்சினை ஏறக்குறைய 60 வருடங்களைத் தாண்டியுள்ளது. இந்த நிலையில் உலகில் ஏதாவது ஒருநாடு இதுவரையில் எம்மை ஆதரிக்கின்றதா? ஆனால், இந்தியாவிற்கு ஓர் பாரிய கடமை உண்டு என்பதை அவர்கள் 1987 ஆம் ஆண்டு இந்தியா இலங்கை உடன்படிக்கை மூலம் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

இந்தியா என்பது ஒரு பிராந்திய வல்லரசு மட்டுமல்லாது தற்பொழுது உலகில் விஞ்ஞான பொருளாதார வளர்ச்சியில் மற்றைய வல்லரசுகளுடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் ஒரு மாபெரும் நாடு.

நாடு அற்றது மட்டுமல்லாது நாடுகளின் ஆதரவு அற்ற ஓர் தேசிய இனமான நாம், இந்த பிராந்திய வல்லரசுடன் கங்கணம் கட்டி நிற்பது தொடர்ந்து எம்மை இன அழிவுப் பாதையிலேயே இட்டுச் செல்லும்.

புலம்பெயர் வாழ் மக்களில் ஒரு சிலர் தமது நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் வீரம் பேசுவதற்காக இந்தியாவை புறக்கணிக்குமாறு பரப்புரை செய்வதோ, எந்த ஆய்வுமின்றி இந்தியா எமது காலடிக்கு வரட்டுமென கூறுவதோ ஒரு மிலேச்சத்தனமான செயல். யாவும் புலம்பெயர் வாழ்வில் சுலபமாக இருக்க முடியும்! இந்த நபர்கள் இவ் வேண்டுகோள்களை வடக்கு, கிழக்கில் சீவிப்பவர் கூறுகிறார்களா என்பதை ஒரு கணம் சிந்திக்க வேண்டும்! தயவு செய்து யாரும் நான் உட்பட விளங்காத விடயங்களில் வாயைத் திறக்காதீர்கள். இவை மற்றவர்களுக்கு விபரீதங்களை ஏற்படுத்தும்.

ஆகையால் நாம் தொடர்ந்து இந்தியாவுடன் கங்கணம் கட்டி நிற்பதன் மூலம் எதையும் உருப்படியாக சாதிக்கமாட்டோம் என்பது தான் யதார்த்தம்.

பேச்சுவார்த்தை

தமிழர் கூட்டமைப்பிற்கும் அரசிற்குமான பேச்சுவார்த்தை இன்று மூன்று வருடமாகியும் அதனால் எந்த முன்னேற்றமும் வரவில்லை என்பது யாவரும் அறிந்த விடயமே. வடக்கு, கிழக்கில் அனர்த்தங்கள் நாளுக்கு நாள் கூடிய வண்ணமாகவுள்ளன.

இதேவேளை, சர்வதேச ரீயாக அரச பிரதிநிதிகளிடம் எப்பொழுது அரசியல் தீர்வு ஏற்படுமென வினவப்படும் வேளைகளில் எல்லாம், ““30 வருட பிரச்சினை 3 வருடங்களில் தீர்க்க முடியாதென'' பதில் வருகின்றது. இது முழுத்தவறான பதில்! முதலில் தமிழர்களுடைய அரசியல் பிரச்சினை என்பது 30 வருடங்களென்பது உண்மையல்ல. தமிழர்களுடைய ஆயுதப் போராட்ட காலமே 30 வருடங்களாகும். தமிழர்களுடைய அரசியல் போராட்டம் என்பது 1919 ஆம் ஆண்டு சேர் பொன்னம்பலம் சகோதரர்கள் காலத்திலேயே ஆரம்பமாகியதுடன் இது 1948 ஆம் ஆண்டு சுதந்திரத்தின் பின்னர் சூடுபிடிக்கத் தொடங்கியது என்பது தான் உண்மை.

இலங்கை ஜனாதிபதியோ, இவரின் ஆலோசகர்களோ எவ்வளவு தூரம் கணிதத்தில் திறமையானவர்களென்பதை நான் அறிந்திருக்கவில்லை. மிகவும் இலகுவான விடயம் என்னவெனில் இரு மைனஸ் (கழித்தல் குறியீடு) அடையாளங்கள் கொண்டதே பிளஸ். இதை வேறுவிதமாக கூறுவதானால் எல்லா எதிர்மறை விடயங்களும் உறுதியானவை போல் காட்சி தரும்.

இதை அமெரிக்கப் பத்திரிகையாளர் மிக்னோன் மக்லோக்ளின், ““பிளஸ் என்பதன் அர்த்தம் ஒன்றுமில்லையென'' அருமையாகக் கூறி முடித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதிக்கு சகல அதிகாரங்களையும் கொண்ட நிலையுடன் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுள்ளது. இச் சந்தர்ப்பத்தில் உண்மை யில் இனப்பிரச்சினைக்கு அரசு தீர்வு காண விரும்பினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்குபற்றாமலே தீர்வு காண முடியும்.

விசேடமாக இவர்களினால் சந்தைப்படுத்தப்படும் 13 பிளஸ் எதற்காக தொடர்ந்து இழுத்தடிக்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள், புத்த மயப்படுத்தல், சிங்கள வியாபார மயப்படுத்தல், இராணுவ மயப்படுத்தல் யாவும் திருப்தியாக செய்து முடிக்கும்வரை இனப்பிரச்சினைக்கு தீர்வு என்ற கதைக்கே இடமில்லை என்பது தான் உண்மை.

தமிழர் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கு கொள்ள வேண்டு மென்பது யாவும் இலங்கையின் சர்வதேச பரப்புரைக்கு வலுச் சேர்பதற்காகவே.

இதன் மூலம் தமிழர் கூட்டமைப்பை தமிழீழ மக்களிடமிருந்தும் புலம்பெயர் வாழ் மக்களிடமிருந்தும் ஒட்டுமொத்தமாக தமிழர்களிடமிருந்து தமிழர் கூட்டமைப்பை அந்நியப்பட வைப்பதே இலங்கை அரசின் உண்மையான நோக்கமாகும்.

ச. வி. கிருபாகரன்
பிரான்ஸ்

0 Responses to இரண்டு மைனஸ், ஒரு பிளஸ் மொத்தத்தில் ஒன்றும் இல்லை ச. வி. கிருபாகரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com