இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவின் நிகழ்ச்சி நிரலுக்குள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சிக்க வைக்க, இலங்கை அரசு எடுத்து முயற்சி பலனளிக்கவில்லை என கூட்டமைப்பு தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ்பாணம் மற்றும் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இன்று பல நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வுகளில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை பங்கெடுக்க வைக்க அரசாங்கம் கடும் முயற்சிகள் மேற்கொண்டிருந்த போதும் அது பலனளிக்கவில்லை என தெரியவருகிறது.
இந்தியாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்களை மையப்படுத்தி இடம்பெற்ற குறித்த நிகழ்வுகளில்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை பங்கெடுத்துக் கொள்ள வைப்பதன் ஊடாக சிங்கள பௌத்த மேலாதிக்க நிலையை தமிழர் தாயகத்தில் நிலைநிறுத்திக் கொள்ள முனையும் அரசாங்கத்தின் திட்டம் பலனளிக்காமல் போயுள்ளது.
அண்மையில், இந்தியாவினால் உழவு இயந்திரங்கள் வழங்கப்படும் நிகழ்வொன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை பங்கெடுக்கச் செய்த அரசாங்கம் அதனை தனது நலனுக்கு ஏற்றவாறு பிரச்சாரங்களை செய்ததோடு தமிழர்களுக்காக வழங்கப்பட்ட ஆயிரக்கணக்கான உழவு இயந்திரங்களை சிங்களப் பகுதிகளுக்க வழங்கியிருந்தது.
இத்தகைய நிலைமை, தற்போது இந்தியாவினால் வழங்கப்படும் உதவிகளுக்கும் நடக்காது என்பதற்கு, எந்தவித உத்தரவாதமும் இல்லாத நிலையில் தாங்கள் பங்கெடுப்பதில் அர்த்தமில்லை என கூட்டமைப்பின் பிரதிநிதியொருவர் தெரிவித்துள்ளார்.
போரின் பெரும் வலியைச் சுமந்து நிற்கின்ற தமிழ் மக்களுக்கு என இந்தியாவினாலும், சர்வதேசத்தினாலும் வழங்கப்பட்ட உதவிகள், பெரும் ஆரவாரத்துடன் தொடக்கப்படுவதும் அது போரின் வலியையே கண்டிராத சிங்கள மக்களுக்கு சென்றடைவதும் வழமையாகியுள்ள நிலையில், எமது மக்களை ஏமாற்றுகின்ற முன்னெடுப்புகளுக்குள் தாங்கள் சிக்கமுடியாது எனவும் கூட்டமைப்பு பிரதிநிதி தெரிவித்தார்.



0 Responses to அரசின் வலையில் சிக்காத கூட்டமைப்பு