தமிழர்கள் தேசியம், சுயநிர்ணயம் தாயகம் என்ற கோட்பாட்டில் ஆறு சகாப்தத்தின் இழப்பின் விளைவை பெறும் ஆண்டாக உருவாக்க இத்தைத்திருநாளில் சபதம் எடுப்பேம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பா.உ சீ.யோகேஸ்வரன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அவரது பொங்கல் வாழ்த்து் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஈழமணி திருநாட்டின் பூர்வீககுடிகளான தமிழ் மக்கள் மலரும் 2012ம் ஆண்டின் உத்தராயண கால ஆரம்பத்தில் உழவர்களுக்கும், உழவர்களை நம்பி வாழ்வோருக்கும் உணவு உற்பத்தி உட்பட பல வகையிலும் சூரிய பகவான் உதவியமையை நன்றி உணர்வுடன் நினைவு கூர்ந்து பண்டிகையாக கொண்டாடும் அனைத்து தமிழ் மக்களுக்கும் இதயம் கனிந்த தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
நீண்டகாலமாக எம் தமிழ் மக்களின் வாழ்வில் நிலை கொண்டுள்ள துன்பநிலை நீங்கி இவ்வருடத்திலிருந்தே அவர்கள் வாழ்வில் இன்ப ஒளி மலர சூரிய பகவானை சகலரும் பிரார்த்திக்குமாறு வேண்டியுள்ளார்.
துன்புறும் எம் உறவுகளின் துயரங்களில் நாமும் பங்காளர்களாக மாறி இத் தைத்திருநாள் தொடக்கம் அவர்களின் துயரை குறைக்கும் பொன்னாளாக நாம் உருவாக்குவதுடன், கேளிக்கை நிகழ்வுகளை நீக்கி பிராத்தனை நாளாக உருவாக்குவதுடன் வறியோர், பாதிக்கப்பட்டோருக்கு இயன்றளவு உதவிகளை வழங்கி, அத்துடன் கடந்த கால யுத்த சூழலாலும், இயற்கை அனர்த்தங்களாலும் பாதிக்கப்பட்டு அகதிகளாகவும், விசேட தேவைக்குரியவர்களாகவும், பிள்ளைகள், உறவுகள் போன்றோரை இழந்து காண முடியாது தேடி அலையும் எம் தமிழ் மக்கள் வாழ்வில் அவர்களது வேதனை நிலை மறையவும் உறவுகள் சேரவும்,சிறைக்கூடங்களில் அரசியல் கைதிகளாகவும் யுத்தக் கைதிகளாகவும் துன்புறும் உறவுகள் விடுதலையடையவும் எல்லாம் வல்ல சௌரக் கடவுளான பகலவனை நாம் எல்லோரும் வேண்டிக் கொள்வோமாக.
அன்னை பராசக்தியின் கிருபை கிடைக்க பிராத்தித்து சகல தமிழ் மக்களுக்கும் வாழ்த்து கூறுகின்றேன் என பா.உ சீ.யோகேஸ்வரன்; தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தேசியம், சுயநிர்ணயம் பெற்று தாயகம் வெல்லும் ஆண்டாக அமையட்டும்: சீ.யோகேஸ்வரன்
பதிந்தவர்:
Anonymous
14 January 2012



0 Responses to தேசியம், சுயநிர்ணயம் பெற்று தாயகம் வெல்லும் ஆண்டாக அமையட்டும்: சீ.யோகேஸ்வரன்