Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறிலங்கா அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைக் கொண்டுவருவதற்குரிய வகையில் அனைத்துலக சமூகத்தின் அணுகுமுறைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு வலுவானதும் தொடர்ச்சியானதுமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்ரகுதாரன் வலியுறுத்தியுள்ளார்.

நோர்வே, பேர்கனில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம், இடம்பெற்றது. அகவணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நோர்வே பிரதிநிதி தோமஸ் அலோசியஸ் தொடக்கவுரை நிகழ்த்தினார்.

இக்கூட்டத்தில் காணொளி மூலம் உரையாற்றிய போதே ருத்ரகுமாரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். ருத்ரகுமாரன் மேலும் தெரிவிக்கையில்,

2009 ம் ஆண்டில் உருவான நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்பது அரசறிவியலுக்கு தமிழ் மக்கள் வழங்கிய ஒரு கொடை என பேராசிரியர் ஒருவர் குறிப்பிட்டதை நினைவு கூர்ந்தார்.

ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனிதவுரிமைக் கூட்டத் தொடரில் சிறிலங்காவிற்கு எதிராககத் தீர்மானம் கொண்டுவரப்படுமா என்பது பற்றி உறுதியாகக் கூறமுடியாது. ஆனால் நாம் சிறிலங்கா மீது அழுத்தங்களை மேலும் அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.

தீபெத் தொடர்பாக ஐ.நா சபையில் பல தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டபோதும் அவற்றையெல்லாம் சீனா தொடர்ச்சியாகத் தடுத்து வருகிறது. ஆனாலும் உலகின் அபிப்பிராயங்களை மாற்றுவதற்கு இத்தகைய தீர்மானங்கள் அவசியம் என்பதை தீபெத் புரிந்து கொண்டுள்ளது. ஜெனிவா மனிதவுரிமைக் கூட்டத்தொடர் மூலம் மட்டும் எமது இலட்சியத்தை வென்றெடுத்துவிட முடியாது என்பதில் நாம் தெளிவாக உள்ளோம். ஆனாலும் அது ஒரு முக்கியமான படி என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

இன்று சர்வதேச சமூகத்தில் சிறிலங்காவை ஆதரிப்போர் ஒரு பிரிவாகவும் தமது சொந்த நலன்களுக்காக சிறிலங்கா மீது அழுத்தம் கொடுத்து அதனை திசை திருப்புவோர் ஒரு பிரிவுமாகவே உள்ளனர்.

இதில் எந்தப் பிரிவும் தமிழர் நலனுக்காக நிற்கவில்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். ஆனால் எமது நலனும் சர்வதேசத்தின் நலனும் ஒருகோட்டில் சந்திப்பதற்கு நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஜனநாயக ரீதியில் புலம்பெயர் மண்ணில் பலம்பெற்றுவரும் எமது சமூகம், தமது வாக்குப்பலத்தால் அந்தந்த நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றங்களைக் கொண்டுவர முயல வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கட்டமைப்பு மற்றும் குறுகியகால, நீண்டகால வேலைத்திட்டங்கள் தொடர்பாக அவர் விளக்கமளித்தார்.போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை வழங்குதல் மற்றும் தாயகத்திலுள்ள மாணவர்களுக்கான கல்வி உதவிகள் தொடர்பாகவும் மேற்கொள்ள வேண்டிய வேலைத்திட்டங்களை அவர் விளக்கிக் கூறினார்.

எதைச் செய்வதாக இருந்தாலும் மக்களின் பலம் தேவை. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு அரசியல் வலு மையமாக இருப்பது அவசியம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் தனதுரையில் மேலும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகத்துறை துணை அமைச்சர் சுதர்சன் சிவகுருநாதன் (சுதன்ராஜ்) கருத்துத் தெரிவிக்கும்போது,

இன்று நாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எனும் ஒரு ஜனநாயகக் கட்டமைப்பாக மாறி இந்த உலகத்திடம் எம்மை அங்கீகரிக்குமாறு வேண்டுகிறோம். இலங்கையில் நடைபெறுவது ஓர் இனப்படுகொலை என்றே நாம் கருதுகிறோம். இவ்வினப் படுகொலையை உலகத்தின் முன் நிரூபிப்பது எமது கடமை. எமது மக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கு தமிழீழம் அவசியம் என்பதை நிறுவுவதே எமது மூலோபாயம் எனக் குறிப்பிட்டார்.

ஜெனிவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமைக் கூட்டத்தொடரில் சிறிலங்கா மீது அழுத்தங்களைக் கொடுப்பதற்கான முயற்சிகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பரதாலயா மற்றும் பிருந்தாவன சாரங்கா மாணவிகளின் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன.

0 Responses to அனைத்துலக சமூகத்தின் அணுகுமுறையை மாற்றுவதற்கு வலுவான அரசியல் செயற்பாடுகள் அவசியம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com