முதல்வர் ஜெயலலிதா தொடர்பாக செய்தி வெளியிட்ட வழக்கில் நக்கீரன் கோபாலை கைது செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகின்றது.
முன்னர் இவ்விவகாரம் தொடர்பில் சென்னை உயர் நீதிமன்றில் நக்கீரன் கோபால் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் "முதல்வர் ஜெயலலிதா மாட்டுக்கறி உண்டது குறித்து கடந்த ஜனவரி 7-ந் தேதி நக்கீரன் பத்திரிகையில் செய்தி வெளியானது. அதைத்தொடர்ந்து நக்கீரன் அலுவலகத்தை அ.தி.மு.க.வினர் தாக்கினர். மேலும் அந்த செய்தி குறித்து என்மீது ஜாம்பஜார் போலீசில் புகார் செய்யப்பட்டு, வழக்குப் பதிவும் செய்யப்பட்டது.
செய்தி வெளியிட்ட அதே நிகழ்வு தொடர்பாக என்மீது தமிழகம் முழுவதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டு, அவற்றின் அடிப்படையில் வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதா பற்றி செய்தி வெளியிட்டதற்காக, எங்கள் மீது ஆபாச படங்களை வெளியிட்டதாகவும், மத உணர்வை புண்படுத்தியதாகவும், மத மோதலை ஏற்படுத்தியதாகவும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் என்மீது பதிவாகியுள்ளது. ஒரே குற்றத்தன்மை கொண்ட புகாருக்காக 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே தமிழகம் முழுவதும் என்மீது பதிவாகியுள்ள அனைத்து வழக்குகளையும், ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ள ஜாம்பஜார் போலீஸ் நிலையத்துக்கு மாற்ற டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும்," என்று குறிப்பிடபட்டிருந்தது.
இந்நிலையில் இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதிகளான எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் 'இந்த வழக்கில் ஏற்கனவே கோபால் முன்ஜாமீன் வாங்கியுள்ளார். எனவே அதே குற்றச்சாட்டின்கீழ் பதிவான மற்ற வழக்குகளில், அவரை கைது செய்யக்கூடாது' என்று உத்தரவிட்டனர். வழக்கு 2 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.



0 Responses to நக்கீரன் கோபாலின் கைதுக்கு நீதிமன்றம் தடை