வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் மாபெரும் அரசியல் சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு விளங்குவதால்தான், அரசாங்கம் இனப்பிரச்சினை தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசி வருகின்றதே தவிர இது முஸ்லிம் மக்களை புறக்கணிப்பதாக அர்த்தமில்லை என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
மட்/கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு பல தடவைகளாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றது இந்தப் பேச்சு வார்த்தைகளில் முஸ்லிம் மக்கள் சார்பாக அவர்களின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ள வேண்டுமெனவும் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் சிலர் கூறி வருகின்றனர்.
தென்பகுதி மக்கள் எவ்வாறு ஜனாதிபதி அவர்களுக்கு தங்களது ஆதரவை தெரிவிக்கின்றனரோ அதே போன்றுதான் வடக்கு கிழக்கு மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினை ஆதரிக்கின்றனர் எனவே வடக்கு கிழக்கு மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு கிடைக்குமாக இருந்தால் அந்தத் தீர்வு முஸ்லிம் மக்களையும் உள்ளடக்கியதாவவேதான் இருக்கிகுமே தவிர முஸ்லிம் மக்களை புறந்தள்ளிவிட்டு தமிழ் மக்களுக்கு மாத்திரம் தீர்வை பெறுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் எத்தனிக்காது என தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று விளையாட்டுப் போட்டி நடைபெறும் இந்தப் பிரதேசம் கடந்த காலங்களில் யுத்தம் இடம்பெற்ற பிரதேசமாகும் இங்குள்ள பாடசாலைகளுக்கு சிறந்த விளையாட்டு மைதானோ விளையாட்டு உபகரணங்களோ இல்லை இருந்தும் இப்பாடசாலைகள் தங்களிடமிருக்கின்ற வளங்களைக் கொண்டு சிறந்த முறையில் விளையாட்டுப் போட்டிகளை நடாத்துகின்றன.
இங்குள்ள மாணவர்கள் அருகில் இருக்கின்ற வில்லுக் குளத்தில் நீச்சல் பயிற்சி பெற்று தேசிய நீச்சல் போட்டியில் பங்குபற்றி இருக்கின்றனர் இது அவர்களின் திறமைகளை வெளிக்காட்டுவதைக் காணலாம்.
விளையாட்டென்பது ஒருவரது உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக மாற்றி ஒழுக்கத்தை ஏற்படுத்துகின்றது. பெற்றோரும் ஆசிரியர்களும் ஒழுக்கமுள்ள மாணவர்களை உருவாக்குவதில் முக்கியமானவர்களாக திகழ்கின்றனர் என அவர் மேலம் தெரிவித்தார்.
பாடசாலை அதிபர் தேவராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சுபைர், பிரதேச செயலாளர் திருமதி.வாசுகி அருள்ராஜா, மட்டக்களப்பு மேற்கு வலய கல்விப் பணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச சபை தவிசாளர் பேரின்பராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் முஸ்லிம்கள் ஒருபோதும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்
பதிந்தவர்:
தம்பியன்
03 February 2012



0 Responses to தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் முஸ்லிம்கள் ஒருபோதும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்