Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐரோப்பாவின் தனி ஆவர்த்தன பயங்கரவாதத்தை அடக்குவது எப்படி..?
உக்ரேனின் முன்னாள் பிரதமர் சிறையில் உண்ணாவிரதம்..
இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா செயலர் கடிதம்.. தொடர்ந்து படியுங்கள்…

ஐரோப்பாவை அச்சுறுத்தும் சோலோ பயங்கரவாதம் எனப்படும் தனிநபர் பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்தும் விசேட மாநாடு லக்சம்பேர்க்கில் நடைபெறவுள்ளது. நோர்வேயில் நடந்த ஆனர்ஸ் பிகார்ஸ் பிறீவிக்கின் 77 பேர் படுகொலை – பிரான்சில் இடம் பெற்ற முகமட் மராச்சின் யூதப் பாடசாலைப் படுகொலைகள் இரண்டும் சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்புக்கு விடப்பட்ட பெரும் சவால்களாக உள்ளன.

தனிநபராக குண்டு வைத்தல், கூட்டமாக சகட்டுமேனிக்கு பொது இடங்களில் துப்பாக்கிப் பிரயோகம் செய்தல் போன்ற விடயங்களைக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது எப்படி என்ற கலந்துரையாடல் முன்னெடுக்கப்படவுள்ளது. முதலாவதாக குண்டுகளை தனிநபராக தயாரிப்பதற்கு ஏதுவான மூலப் பொருட்களை தனியார் வேண்டுவதை தடுப்பது அவசியம். நோஸ்க் பயங்கரவாதி இணையத்தின் மூலமாக குண்டு உருவாக்கச் செயன்முறைகளைப் படித்து, தானே வெடிகுண்டை உருவாக்கி ஒஸ்லோ நகரத்தில் குண்டு வெடிக்கச் செய்து ஏழு பேரைக் கொன்றமை இதற்கு நல்லதோர் உதாரணமாகும். ஆகவே சட்டரீதியாகவும், உளவுப்பிரிவினருடன் இணைந்தும் இறுக்கமான நடவடிக்கைகளை வடிவமைக்க வேண்டிய கடப்பாடு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பாவை அச்சுறுத்தும் தனிநபர்களின் தனி ஆவர்த்தன பயங்கரவாதம் போல அரசுகள் செய்யும் செயல்களிலும் அதே பயங்கரத் தன்மைகள் இருந்துவிடுவதுண்டு. இதற்கு உதாரணமாக உக்ரேன் நாட்டிலும், பகரினிலும், சிரியாவிலும், இஸ்ரேலிலும் பல சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

உக்ரேனில் முன்னாள் பிரதமர் யூலியா ரிமோஸ்யென்கோவை அந்த நாட்டு ஆட்சியாளர் சிறையில் போட்டுள்ளார்கள். தலைநகர் கிஜேவ்விற்கு 500 கி.மீ கிழக்கே உள்ள கார்கீவ் நகரத்தில் உள்ள சிறைக் கொட்டடியில் இவர் வாடி வருகிறார். தற்போது வேறு வழியற்ற நிலையில் முன்னாள் பிரதமர் அரசுக்கு எதிராக உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார். சிறை சென்று இவரைப் பார்வையிடுவதற்கும் அவருடைய கட்சியின் தொடர்பாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனவேதான் இந்த உண்ணாவிரதம் தொடர்பான அனைத்து ஆழமான உண்மைகளையும் தமக்கு தரவேண்டும் – உடனடியாக தரவேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. இத்தகைய இழி செயல்களை சட்டத்தின் பேரில் செய்து கொண்டு, ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு நாடு இடம்பெற விரும்ப முடியாது என்பதும் தெரிந்ததே. உக்ரேன் சிறீலங்கா அரசு நடாத்திய போர்க்குற்ற நடவடிக்கைகளுக்கும் துணை போன நாடு என்பது தெரிந்ததே.

மேலும் சிரிய சர்வாதிகாரி ஆஸாட் ஐ.நாவின் நிபந்தனைகளை அடியோடு சீரழித்து வருவதாக கொபி அனானின் அதிகாரி ஐ.நா பாதுகாப்பு சபைக்கு தகவல் வழங்கியுள்ளார். ஐ.நாவிடம் ஒப்புக் கொண்ட யாதொரு நிபந்தனைகளையும் அவர் மதித்து நடக்கவில்லை என்றும் அறிவித்துள்ளார். மேலும் சிரியாவின் கள நிலவரங்கள் தொடர்பான சற்லைற் படங்களும் பாதுகாப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அப்படங்களில் சிரிய ஆட்சியாளரின் படுகொலைக் கவச வாகனங்கள் நகர மத்தியில் நிலை கொண்டிருப்பது தெட்டத்தெளிவாகத் தெரிகிறது. சற்லைற் உலகத்தின் அபார முன்னேற்றங்களை அறியாது பாமரத்தனமாக அவர் நடப்பதும் இன்றைய உலகக் காலைச் செய்திகளில் இடம் பிடித்துள்ளன.

அதேவேளை சிரிய அதிபர் ஐ.நாவினால் அனுப்பப்பட்ட யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழுவின் 450 பேரில் பலரில் பூரண திருப்தி கொண்டவராக இல்லை. இந்தக் குழுவில் சிரியாவுக்கு எதிரான 14 நாடுகளின் கண்காணிப்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களை சிரிய அரசு அடியோடு விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்தக் குழுவில் உள்ள பெயர் குறிப்பிடப்படாத ஒரு நாட்டின் உறுப்பினரை கண்காணிப்பு பணிகளை செய்யவிடாது விரட்டியடித்துள்ளனர். இவர்களின் மேற்கண்ட பொறுப்பற்ற செயலை ஐ.நா அடியோடு நிராகரித்துள்ளது.

மறுபுறம் நேற்று முன்தினம் காஸா வட்டகையில் அத்து மீறிய குடியேற்றங்களை அமைத்துவிட்டு அதை சட்டரீதியாக இஸ்ரேல் ஊர்ஜிதம் செய்தது தெரிந்ததே. இஸ்ரேல் – பாலஸ்தீன பேச்சுக்கள் நல்லபடியாக முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது. இந்த நிலையை உணராது அத்துமீறிய குடியேற்றங்களுக்கு சகட்டுமேனிக்கு சட்ட அங்கீகாரம் வழங்கியது மடைத்தனமான செயல் என்பதை ஐ.நா செயலரின் கண்டனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் தாம் 1990 லேயே அமைத்த குடியேற்றங்கள் இவை என்றும் 22 வருடங்கள் ஆகிவிட்டதால் அவை தமக்குரியவை என்று இஸ்ரேலிய பிரதமர் நெட்டன் யாகு கூறியுள்ளார்.

இந்தக் குடியேற்றங்களை சட்டரீதியாக உறுதிப்படுத்தாவிட்டால் பேச்சுக்களின் போது இழுத்து மூட உடன்பட வேண்டும் என்பதால் இஸ்ரேல் இப்படிச் செய்துள்ளது. இனி இதை மாற்றுவதானால் பாராளுமன்ற அங்கீகாரம் பெற வேண்டுமென ஏமாற்று வேலை செய்யலாம் என்றும் கணக்கு போட்டுள்ளது தெரிகிறது. மாறாக இப்போது ஐ.நா செயலர் வெளியிட்டுள்ள கண்டனம் உண்மையா இல்லை போலி நாடகமா என்பதை வரும் பேச்சுக்கள் வெளிச்சம்போட்டுக் காட்டும். இதுபோல ஒரு மோசடியே இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியை இணைக்கும் விவகாரத்திலும் மறைந்துள்ளது.

இதேபோல பகரினில் இன்றுடன் 77 தினங்களை தொட்டுவிட்ட உண்ணா நோன்புக் கைதி அல் காவ்யாவிடமிருந்து தமக்கு நேற்று யாதொரு தகவலும் கிடைக்கவில்லை என்று அவருடைய மனைவி ரிவிற்றரில் தெரிவித்துள்ளார். அவர் கோமா நிலையை அடைந்திருக்கலாம் என்ற அச்சத்தையும் வெளியிட்டுள்ளார். அல் காவ்யாவுடனான அனைத்து தொடர்புகளையும் இராணுவ முகாம் துண்டித்துள்ளது. ஒரு கட்டத்தில் இந்தியப் பாணியில் பலாத்காரமாக அவர்கள் உணவை உட்செலுத்த வழியிருப்பதையும் மறுக்க முடியாது.

பொருளாதார நெருக்கடியை பேசித் தீர்க்க வழியற்ற கொலன்ட் அரசு பதவி கடந்த சனியன்று விலகியிருப்பது தெரிந்ததே. பதவி விலகிய பிரதமர் மார்க் றூற் அரச பிரதிநிதிகளிடையே நேற்று உரையாற்றும்போது வரும் செப்டெம்பர் 12 ம் திகதி தேர்தல் நடக்கலாம் என்று தெரிவித்துள்ளார். கொலன்ட் அரசியல்வாதி கியட் வில்டாசின் வலதுசாரி மக்கள் விடுதலைக் கட்சியுடன் பேசி இணக்கப்பாடு காண முடியாத நிலையில் ஆட்சி பருவம் வர முன்னஆர வெம்பிப் பழுத்து, கொலகொலத்து கொட்டுப்பட்டது தெரிந்ததே.

சூடான் – தென்சூடான் இரண்டும் பிரிந்து போனாலும் இரு தரப்பிற்குமிடையே முரண்பாடுகள் முடிவடைந்தபாடாக இல்லை. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இரு நாடுகளின் எல்லைப் பகுதியிலும் நடைபெறும் மோதல்களை இனி முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென சூடான் அறிவித்துள்ளது. உலகில் நடைபெற்றுவரும் புதிய மாற்றங்களை உணர்ந்து நடக்க சூடான் முடிவு செய்துள்ளது. தற்போது உலகில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை பின்தங்கிய சூடானே உள்வாங்கியிருப்பதை இந்தியா – சிறீலங்கா போன்ற நாடுகள் சிந்திக்குமா என்பது கேள்விக்குறியே.

அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் பராக் ஒபாமாவுடன் போட்டியிடுவதற்கான றிப்பப்ளிக்கன் வேட்பாளரை தேர்வு செய்ய தொடர்ந்து நடைபெற்று வரும் வாக்களிப்பில், நேற்று ஐந்து மாநிலங்களில் மிற் றொம்னி வெற்றி பெற்றார். இதன் மூலம் இவருக்கு 234 டெலிகேட்ஸ் வாக்குப் புள்ளிகள் கிடைத்துள்ளன. ஒருவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட வேண்டுமானால் பெற வேண்டிய 1140 டெலிகேட்ஸ் புள்ளிகளை றொம்னி ஏறத்தாழ நெருங்கிவிட்டார்.

இந்த ஆண்டு முதல் மூன்று மாதங்களில் அமெரிக்க ஆப்பிள் நிறுவனம் 11.6 பில்லியன் டாலர்களை நிகர இலாபமாக உழைத்துள்ளது. இந்த மூன்றுமாத காலத்திலும் ஆப்பிளின் மொத்த வருமானம் 40 பில்லியன் டாலர்களாகும். இது ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் எட்டிய சாதனைத் தொகையாகும்.

அலைகள்

0 Responses to ஐரோப்பாவை அச்சுறுத்தும் சோலோ பயங்கரவாதம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com