ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கு நியாயமானதும் நிரந்தரமானதுமான அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதற்கு இலங்கை அரசு முன்வருமானால் அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருக்கிறது என நேற்று யாழ்ப்பாணத்தில் வைத்து பகிரங்கமாக அறிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன். கூட்டமைப்பின் இந்த நிலைப்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு ஐ.தே.க. உள்ளடங்கலான எதிர்க் கட்சிகளின் கூட்டு தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த எதிர் கட்சிகளின் கூட்டு மே தின நிகழ்வில் கலந்துகொண்டு தலைமை உரை ஆற்றும் போதே சம்பந்த இவ்வாறு குறிப்பிட்டார்.
கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் இந்த அறிவிப்பைத் தாம் ஏற்றுக்கொள்கிறார் என அடுத்துப் பேசிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர் கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க ஆமோதித்து உரையாற்றினார்.
பதின்நான்கு எதிர் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்த கூட்டு மே தின நிகழ்வு நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந்த மே தின நிகழ்வில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். நாட்டின் வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் தெற்குப் பகுதிகளில் இருந்து வந்த மக்கள் இந்த மே தின நிகழ்வில் திரண்டனர்.
இந்த நிகழ்வில் தலைமை உரை நிகழ்த்திய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மேலும் தெரிவித்ததாவது:
இந்த நாட்டில் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி உள்ளனர். 25 வீதமாக உள்ள தமிழ் மக்களில் 5 வீதமானவர்களுக்கே அரச துறையில் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. மஹிந்த அரசு பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறது. அநீதியான இந்த அரசுக்கு முடிவுகட்ட வேண்டும். இதற்கு நாம் ஒன்றிணைந்து போராடுவது அவசியம். தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் ஒத்துழைக்கும்.
நாம் யாழ்ப்பாணத்தில் தனியான மே தினத்தை கொண்டாட ஏற்பாடு செய்தோம். அப்போது எதிர்க்கட்சிகள் இணைந்து மே தினத்தைக் கொண்டாடுவது என்று ஒரு கருத்துத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு நாம் சம்மதித்தோம். தமிழ் பேசும் மக்களுக்கும் பெரும்பான்மை இன மக்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இந்த மே தினம் ஒன்றைத் தெளிவுபடுத்தியிருக்கின்றது. நாட்டிலுள்ள அனைத்து இன மக்களும் ஒருமித்து ஒற்றுமையாக வாழ விரும்புகிறார்கள் என்பதை அது தெளிவாக கூறியிருக்கிறது. இந்த மே தின நிகழ்வில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் இணைந்துகொண்டு இதனையே வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
எனினும் சில அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் பிரிவினை வாதத்தை ஏற்படுத்த விரும்புகிறார்கள். அதன் மூலம் அவர்கள் அரசியல் சுய லாபம் தேடுகிறார்கள். இவ்வாறான தீய சிந்தனைகளுக்கு யாரும் இடம்கொடுக்க வேண்டாம். அதற்கு இந்த மே தினம் ஆரம்பப் படியாக அமையட்டும். கடந்த 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் பின்பு மக்களின் உடனடித் தேவைக்காக தேசியப் பிரச்சினைக்க உடனடித் தீர்வுகாண அரசுடன் ஒத்துழைக்கத் தயார் என நாம் அறிவித்தோம். ஒருமித்த நாட்டுக்குள்ளே நியாயமானதும் நிரந்தரமானதும் நடைமுறைச்சாத்தியம் ஆனதுமான அரசியல் தீர்வை பெறுவதில் தொடர்ச்சியாக ஆர்வம் காட்டி வருகின்றோம். 2011 ஆரம்பம் முதல் இந்த வருடம் ஜனவரி வரை அரசுடன் இந்த விடயம் தொடர்பாக பலமுறை பேசினோம். எந்த முன்னேற்றமும் இல்லை. எமது ஒத்துழைப்பை அரசு உதாசீனப்படுத்தாமல் இருந்திருந்தால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை ஓரளவேனும் மேம்பட்டிருக்கும்.
எமது மக்களின் துன்பம், துயரம் தொடர்பாக போதிய அறிவு எமக்கு உள்ளது. இந்த மக்களுக்கு உதவ அரசு முன்வந்திருந்தால் வெளிநாட்டு மற்றும் புலம்பெயர் சமூகத்தின் உதவிகளும் அதிகரித்திருக்கும். ஆனால் குறுகிய நோக்கம் கொண்ட அரசு எமது அழைப்பை உதாசீனம் செய்தது. இதன் காரணமாக அரசு தமிழ் மக்களை தொடர்ந்தும் துன்பப்படுத்துகிறது. இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும். அதற்காக எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணை ந்துள்ளோம் என்றார்.
முன்னதாக நேற்றுப் பிற்பகல் ஒரு மணியளவில் நல்லூர் கைலாச பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமான கூட்டு மே தின பேரணி கோயில் வீதி வழியாக குருநகர் சென்.றோக் விளையாட்டு மைதானத்தை நோக்கி நகர்ந்தது. இதில் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஏனைய எதிர்க்கட்சிகளின் தலைவர்களான மனோ கணேசன், சிறிதுங்க ஜயசூரிய, விக்கிரமபாகு கருணாரட்ண, சரத் மன்மேந்திரா ஆகியோருடன் எதிர் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் முன்னே செல்ல பேரணி ஆரம்பமானது. உணவுப் பொருள்கள், எரிபொருள் விலையேற்றம் என்பவற்றைக் கண்டித்தும், வேலைவாய்ப்பு வழங்கக் கோரியும், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறும் பேரணியில் கலந்துகொண்டவர்கள் கோஷங்களை எழுப்பியதுடன் பதாதை களையும் தாங்கியிருந்தனர். சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர். நேற்றுக் காலை முதல் பேரணியில் கலந்து கொள்வதற்காக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பஸ்களில் வந்த மக்கள் நல்லூர் ஆலய சுற்றாடலில் குவிந்தனர்.
பேரணி குருநகர் சென்.றோக் விளையாட்டு மைதானத்தை அடைந்ததும் அங்கு கூட்டம் ஆரம்பமானது. இதில் இரா. சம்பந்தன், ரணில் விக்கிரமசிங்க உட்பட கட்சிகளின் தலைவர்கள் உரையாற்றினார்கள்.



0 Responses to இணைந்த நாட்டுக்குள் தீர்வு எதிர்க் கட்சிகள் இணக்கம்