Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்நாட்டில் 8 கோடி தமிழர்கள் இருந்தாலும், அவர்கள் தமிழர்களாக இல்லாததே, தமிழருக்கென்று ஒரு அரசியல் கட்சி இல்லாததே, இலங்கையில் இந்திய அரசின் துணையோடு தமிழினத்தை சிங்கள இனவெறி ராஜபக்ச அரசு படுகொலை செய்ததை தடுத்து நிறுத்த முடியாததற்குக் காரணம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் கூறினார்.

வந்தவாசி நகரில் நடந்த நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே சீமான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அக்கூட்டத்தில் சீமான் பேசியதாவது:

கச்சதீவு எங்கள் பாட்டன் சேதுபதி அரசுக்கு சொந்தமானது, ஆனால் அதனை தமிழனைக் கேட்காமல் தூக்கி இலங்கைக்கு கொடுக்கிறது இந்திய அரசு. இதனை தட்டிக்கேட்டால் பிரிவினைவாதம் என்றும், இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக பேசுவதாகவும் கூறி சிறையில் அடைக்கிறது.

இலங்கையுடன் நட்பை வளர்த்துக்கொள்ள கச்சதீவை தூக்கி இலங்கைக்குக் கொடுப்பதை எதிர்க்கும் நம்மை பார்த்து பிரிவினைவாதிகள் என்று காங்கிரஸ்காரர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

தமிழ்நாட்டை சுற்றியுள்ள மற்ற மாநிலங்களில் தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா, கம்யூனிஸ்ட் ஆகியன ஆட்சியில் இருந்தாலும், அவைகள் அந்த மாநில உரிமைகளுக்காகவும், அந்த மண்ணின் மக்களின் உணர்வுகளை மதிக்கும் மாநிலக் கட்சிகளாகவே ஆட்சி செய்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் மாநிலக் கட்சிகள்தான் மாறி மாறி ஆட்சி செய்கின்றன.

எனினும் இவைகள் தேச ஒற்றுமையைப் பேசிக்கொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகள் பறிக்கப்படுவதைக் கண்டும் காணாதவை போல நடந்துகொள்கின்றன. அதுதான் முல்லைப் பெரியாற்றில் இருந்து காவிரி வரையிலான நதி நீர்ப் பிரச்சனைகளுக்கும், கச்சதீவு பறிபோனதற்கும் காரணமாகும்.

இலங்கையில் இந்திய அரசின் துணையோடு தமிழினத்தை சிங்கள இனவெறி ராஜபக்ச அரசு படுகொலை செய்ததை தடுத்து நிறுத்த முடியாததற்குக் காரணம், தமிழ்நாட்டில் 8 கோடி தமிழர்கள் இருந்தாலும், அவர்கள் தமிழர்களாக இல்லாததே காரணமாகும்.

மதத்தாலும், சாதிகளாலும் பிளவுண்டு கிடந்த காரணத்தினாலும், நம்மை ஆண்ட கட்சி தமிழின உணர்வற்று, டெல்லியின் அடிமையாக இருந்த காரணத்தினாலும்தான் இலங்கையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலையை நம்மால் தடுத்து நிறுத்த முடியாமல் போனதாகும்.

தமிழ்நாட்டின் உரிமைகள் காக்கப்பட வேண்டும், தமிழினத்தின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டுமென்றால், தமிழ்நாட்டில் தமிழர் ஆட்சி மலர வேண்டும். சாதி, மத பேதங்களை கைகழுவிட்டு, மொத்தத் தமிழரும் சேர்ந்து ஒற்றைத் தமிழரை ஆதரித்தால் மட்டுமே தமிழ்நாட்டில் தமிழர் ஆட்சி சாத்தியம்.

ஒவ்வொரு நாளும் பறிபோகும் தமிழ்நாட்டின் உரிமைகள் காக்கப்பட வேண்டுமென்றால், தமிழ்நாட்டிற்கு மாநில சுயாட்சி வேண்டும். அது நிறைவேற வேண்டுமெனில் இந்தியாவில் உண்மையான கூட்டாட்சி மலர வேண்டும்.

கூட்டாட்சி என்றால் கூட்டணி ஆட்சி அல்ல, அது அரசியல் – பதவி பேரத்திற்கு ஆனது. நாம் வலியுறுத்துவது கூட்டாட்சி. அது ஏற்பட வேண்டுமெனில் காங்கிரஸ் அல்லது பாரதிய ஜனதா ஆகிய கட்சிகளின் தலைமையிலான ஆட்சி அமைவது தடுக்கபட வேண்டும்.

அது தடுக்கப்பட முதலில் தமிழ்நாட்டில் இருந்து இவ்விரு கட்சிகளும் வரும் மக்களவைத் தேர்தலில் முழுமையாகத் தோற்கடிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநிலத்தின் உரிமைகளை காப்பாற்றும் கட்சிகளே ஆட்சிக்கு வரவேண்டும். அப்போதுதான் டெல்லியில் உண்மையான கூட்டாட்சி மலரும். அப்படிப்பட்ட கூட்டாட்சியில்தான் அந்தந்த மாநிலங்களின் உரிமைகள் முழுமையாக கிடைக்கும்.

தமிழினத்தை அழித்தொழித்த இலங்கை அரசுக்கு ஆதரவு தந்ததற்குக் காரணமாம் இந்தியாவின் தென் பகுதியின் பாதுகாப்பு கருதியே என்று இந்திய மத்திய அரசு கூறியது.

ஆனால் தமிழினம் அழித்தொழிக்கப்பட்டு போர் முடிவுற்ற இந்த மூன்றாண்டுக் காலத்தில் சீனாவும், பாகிஸ்தானும் வலிமையாக கால் ஊன்றிவிட்டன.

இலங்கையுடன் நட்பை ஏற்படுத்திக்கொள்ள தூக்கிக் கொடுத்த கச்சதீவில் இன்றைக்கு சீனாவின் கடற்படை காலூன்றியுள்ளது. இதனால் இந்தியாவின் பாதுகாப்பு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இதுதான் இலங்கையுடன் நட்பு கொண்டதற்கு கிடைத்த பரிசு.

நமது நாட்டின் மீனவர்கள் 500க்கும் அதிகமானோரை கொன்றொழித்த இலங்கையை நட்பு நாடு என்று இன்று வரை பேசிக்கொண்டிருக்கிறது டெல்லி அரசு. அதனுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு, ஆட்சியில் பங்கேற்றுக்கொண்டு, இலங்கைத் தமிழர்களின் உரிமை பற்றிப் பேசுகிறது தி.மு.க.

இந்த ஏமாற்று அரசியலை தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு சீமான் பேசினார்.

0 Responses to ஈழத்தமிழர் படுகொலையை தடுத்து நிறுத்த முடியாமைக்கு தமிழருக்கென்று ஒரு அரசியல் கட்சி இல்லாததே காரணம்! சீமான்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com