Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திமுக இன்று வெளியிட்ட கேள்வி - பதில் அறிக்கை :

’’இலங்கை விமானப்படை வீரர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்று அறிக்கை விடுத்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தேவையில்லாமல் உங்களைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறாரே?”

’’முதலமைச்சர் கொடநாட்டிற்குச் சென்று ஓய்வெடுக்கின்ற நேரத்திலும், என்னைத் தாக்கி அறிக்கை விடாவிட்டால் எப்படித்தான் இருக்குமோ? ஜெயலலிதா தமிழகத்தின் முதல் அமைச்சர். இலங்கை விமானப் படை வீரர்களை திருப்பி அனுப்ப வேண்டியது மத்திய அரசு. எனவே தமிழக முதல் அமைச்சர் கேட்க வேண்டியது மத்திய அரசை! அதை விட்டுவிட்டு, “தமிழினத் தலைவர் என்று தனக்குத்தானே தம்பட்டம்

^அடித்துக்கொண்டு, தமிழினத்தை இலங்கை அரசு அழிக்கக் காரணமாக இருந்த தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி” என்று தேவையில்லாமல் என்மீது தா க்குதல் கணை தொடுத்துள்ளார்.

ஜெயலலிதாவுடன் 24 மணி நேரமும் உடன் இருக்கிற உடன்பிறவாச் சகோதரியின் கணவர், ஜெயலலிதாவின் மீதும், அரசின் மீதும் கூறிய புகார்களுக்கு என்ன பதில் என்று கேட்டதற்குப் பதிலளிக்கத் தெம்பில்லாமல், திராணியில்லாமல் வீணாக என் மீது பாய்ந்து குதறுவானேன்? “தமிழினத் தலைவர்” என்று எனக்கு நானே எங்கே தம்பட்டம் அடித்துக் கொண்டேன்? “அம்மா”, “அம்மா” என்றும், “என் தலைமையிலான அரசு” என்றும், “நான் ஆணையிட்டேன்” என்றும், வார்த்தைக்கு வார்த்தை சொல்லிக் கொள்வது யார் என்பது நாட்டுக்குத் தெரியும்! இப்படி என்னைத் தாக்கி அறிக்கை விடுவதைத்தான் அன்றாட அரசுப் பணி என்று ஜெயலலிதா கருதுகிறார்போலும்!

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியிலே இருந்தபோது, இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த வான்படை வீரர்கள் சிலர் தாம்பரத்தில் உள்ள வான்படை பயிற்சிக்கூடத்திற்கு வந்த செய்தி கேள்விப்பட்டதும், நான் தலைமைச் செயலாளரை அழைத்து உடனடியாக மத்திய அரசின் பாதுகாப்புத் துறையிடம் தொடர்பு கொண்டு அவர்களைத் திருப்பியனுப்பிட கேட்டுக் கொள்ளுமாறு கூறினேன். அவரும் மத்திய அரசிடம் அவ்வாறே கேட்டுக் கொண்டவுடன் மத்திய அரசு இலங்கை ராணுவ வீரர்களை தமிழகத்திலிருந்து திருப்பி அனுப்ப உத்தரவிட்டதோடு, அந்தச் செய்தியை எனக்குத் தெரிவிக்கும்படி தலைமைச் செயலாளரிடம் கூறியது.

இந்தச் செய்தியை நான் கேள்வி-பதில் பகுதியில் எழுதியதோடு, அதற்கு முன்பே செய்தியாளர்கள் என்னிடம் இலங்கை விமானப் படையைச் சேர்ந்த சிலருக்கு தாம்பரத்தில் பயிற்சி அளிப்பதாகச் சொல்லப்படுகிறதே என்று கேட்டபோது, அந்தச் செய்தி உண்மையாக இருக்குமானால், அப்படி பயிற்சி அளிப்பது கண்டிக்கத்தக்கது.

பயிற்சிக்கு வந்தவர்களை உடனடியாக மத்திய அரசு திருப்பி அனுப்புவதே சரியாக இருக்கும் என்று பதில் அளித்து அதுவும் ஏடுகளில் வெளிவந்துள்ளது. நான் கேட்டுக் கொண்டதைப்போலவே தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சிகளும் அந்த வேண்டுகோளை மத்திய அரசுக்கு விடுத்தார்கள்.

அந்த நிலையில் தான் செய்தியாளர்கள் என்னிடம் “இலங்கை ராணுவத்திற்கு தமிழகத்திலே பயிற்சி அளிக்காமல், வேறு மாநிலங்களிலே பயிற்சி அளித்தால்?” என்று கேட்ட போதுகூட, “அப்படி பயிற்சி அளிக்க முன்வந்தால் அப்போது பார்ப்போம்” என்று சொன்னேன்.

அதன் பிறகுதான் தாம்பரத்தில் பயிற்சி அளிக்க வந்தவர்களை மத்திய அரசு கர்நாடகாவிற்கு அனுப்பியதாக செய்தி வந்தவுடன், தமிழக மக்களின் எதிர்ப்பை உடனடியாக கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லச் செய்தேனே தவிர, ஜெயலலிதாவைப் போல அந்தத் தகவலை ஏடுகளிலே வெளிவரச் செய்யவில்லை.

பத்திரிகையாளர்களும் அதைப் பற்றி என்னிடம் கேட்காததால், அதனைச் சொல்லவில்லை. அதனால் எனக்கு தமிழ் உணர்வே இல்லையென்று, ஜெயலலிதா நேற்றைய அறிக்கையில் சொல்லியிருக்கிறார்.

எனக்கு தமிழ் உணர்வு இருக்கிறதா இல்லையா என்று முடிவு செய்திட இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதாவின் சான்றிதழ் தேவையில்லை.

அதுபோலவே இலங்கைத் தமிழர்கள் மீது எனக்கு அன்பு உண்டா என்பதை 1956ஆம் ஆண்டில் இருந்து அவர்களுக்காக நான் கொடுத்து வரும் குரலை அறிந்த தமிழர்கள் அறிவார்கள். அதுமாத்திரமல்ல; இலங்கைத் தமிழர்களுக்காக உண்மையாக குரல்
கொடுப்பது நானா? அல்லது “போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான்” என்று கூறிய ஜெயாவா?

தமிழகச் சட்டப் பேரவையிலே பிரபாகரனை கைது செய்து இந்தியாவிற்கு அழைத்து வர வேண்டுமென்று தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றியவர் யார்? என்பதையெல்லாம் உண்மையான தமிழர்கள் நன்றாகவே அறிவார்கள். மேலும் இலங்கைத் தமிழர்களுக்காக தி.மு.கழக ஆட்சி ஆதரவாக உள்ளது என்ற காரணத்தைக் காட்டித்தான் 1991ஆம் ஆண்டு மத்திய அரசு தமிழக தி.மு.கழக ஆட்சியையே கலைத்தது என்பதையும் அனைவரும் அறிவார்கள்.

இதையெல்லாம் உண்மையான தமிழ்மக்கள் மறந்திருப்பார்கள் என்று எண்ணித்தான் அம்மையார் ஜெயலலிதா இப்படி அடாவடித் தனமாக அறிக்கை விட்டிருக்கிறார். இனியாவது அவர் இலங்கை விடுதலைப் போராளிகள் மீது கடந்த காலத்தில் காட்டிய காழ்ப்பு, விரோதம், வெறுப்பு - இவற்றை மறந்துவிட்டு பண்பார்ந்த முறையில் பதிலும் விளக்கமும் அளித்திடக் கற்றுக் கொள்வாராக!’’

0 Responses to தமிழினத் தலைவர் என்று எனக்கு நானே எங்கே தம்பட்டம் அடித்துக் கொண்டேன்?: ஜெ.,வுக்கு கலைஞர் கேள்வி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com