Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டிசம்பர் 16 - 31 வரை பன்னிரு ராசிகளுக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

இங்கு தரப்படும் பலன்கள் அனைத்தும் கோசார ரீதியான பொதுப் பலன்கள் என்பதனையும், உங்கள் தசாபுத்திகளினடிப்படையிலும், கிரகநிலைகளினடிப்படையிலும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும்.

 மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

உழைப்பால் உயரும் மேஷ ராசி வாசகர்களே!

ராசிநாதன் செவ்வாய் 10ல் இருக்கும் அம்சம் மிகவும் விசேடமானது. இந்த காலகட்டத்தில் உங்களுடைய செயல்திறனும் சிந்தனையும் பெரிதும் பாராட்டப்படும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர்களை அடையப் பெறுவார்கள். உங்களைவிட தனவந்தர்களாக இருக்கிறவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.

வங்க்யில் பணத்தை சேமிக்கலாம். பெற்றோர்களால் அனுகூலம் அடையப் பெறுவீர்கள். மக்களால் மகிழ்ச்சி ஏற்படும். சினிமா நாட்டியம் நாடகம் சித்திரம் சிற்பம் முதலிய கலைத்துறை சம்பந்தப்பவர்களுக்கு அமோகமான வரவெற்பு ஏற்படும். பொன்னும் பொருளும் பரிசாகப் பெறுவார்கள். அரசியல்வாதிகளுக்கு வெற்றி தரும் காலமிது. உங்களை விட வலியவர்கள் உங்களுக்குத் தேவையானவற்றைச் செய்ய முன்வருவார்கள். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். ராகு கேது சஞ்சாரத்தல் குடும்பத்தில் சிறு சிறு சலசலப்புகள் வந்து வந்து போகும். குரு பலத்தால் அது சரியாகி விடும்.

சர்ப்ப சாந்தி செய்து கொள்வது நல்லது. விநாயகர் வழிபாடு செய்வதும் நன்மையைத் தரும். மகிழ்ச்சியின் மிகுதியால் அலட்சியமாகப் பேசுவதை தவிர்ப்பது நல்லது. நாவடக்கம் மிகத்தேவை. கேளிக்கை வினோதங்களில் அதிகமாக ஈடுபட்டு உடலைக் கெடுத்துக் கொள்ள நேரிடலாம். உலோகங்கள் சம்பந்தப்பட்ட துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். மாஸ் மீடியா எனப்படும் கம்யூனிகேஷன் துறைகளை சார்ந்தவர்களுக்கு சாதனை புரியும் காலமிது. வெளிநாட்டி பயணத்திட்டம் போட்டிருப்பவர்கள் அதற்கான ஆயுத்தங்களை இப்போதிருந்தே ஆரம்பிக்கலாம்.

ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

அனைவரையும் தனது நேர்மையால் கவர்ந்து இழுக்கும் ரிஷப ராசி வாசகர்களே !

ராசிநாதனாகிய சுக்கிரன் 9ம்வீட்டில் இருப்பதும் 4ம் ராசியில் குரு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்தபடியாக சூர்யன் 8ல் இருப்பதும் நன்மையே. எனினும் பஞ்சம ஸ்தானத்தில் சனி இருப்பது சரியல்ல. மிகவும் வரவேற்கத்தக்க பலன்களை எதிர்பார்க்க முடியாது.  சில சங்கடங்களை அனுபவிக்க வேண்டி இருக்கும். அலைச்சல் கடுமையாக இருக்கும். ஓரிரு பெரியவர்களை பகைத்துக் கொள்ள நேரிடலாம்.

சனிப்ரீதி செய்து குருவுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். சுமங்கலி பூஜை செய்வதும் நல்லதே. குடும்பத்தில் எந்தவிதமான சங்கடங்களும் இராது. கணவன் மனைவியிடையே நல்லுறவு நீடிக்கும். அடிக்கடி மறதி ஏற்படலாம், கவனம் தேவை. ஆதலால் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். கூடிய மட்டும் நெடுந்தூர பயணங்களை திட்டமிட்டு செய்வது நன்மை. கலைத்துறையினர் மேன்மை பெறுவார்கள். வரவேண்டிய பணபாக்கிகள் வசூலாகும். வியாபாரிகள் எச்சரிக்கையாக நடக்க வேண்டிய காலகட்டமிது. சொந்த தொழில் புரிவோர்கள் பணமுடக்கத்திலிருந்து வெளிவருவதற்குண்டான பணிகளை ஆரம்பிப்பார்கள்.

வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. விஷ ஜந்துக்கள் மூலம் தொல்லைகள் வரலாம். பாதுகாப்பாக இருத்தல் நலம். பொதுவாக அன்றாடப் பணிகளில் சிரத்தையுடன் செய்வீர்கள். பொருளாதார நெருக்கடி ஏற்படாமல் இருக்கும். ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் விவசாயிகளுக்கு சாதாரண பலன்கள் கிட்டும்.

மிதுனம்: (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

எதிலும் நிதானத்தை கடைபிடிக்கும் மிதுன ராசி வாசகர்களே !

6ல் சனியும், ராசிநாதனும் அவ்வப்போது தங்களை சறுக்கி விழச் செய்வார்கள். பூர்வ புண்ணிய பலம் என்பது தங்களுக்கு சாதகமாக இருக்கின்ற காரணத்தால் மீண்டு விடுவீர்கள். வியாபாரிகளுக்கு வசந்த காலம் இது. தங்கள் பொருட்களை வாக்கு சாதுர்யத்தால் விற்று சாதனை புரிவீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நகைக்கடை, துணிக்கடை வியாபாரிகள் நிறைய சம்பாதிப்பார்கள். ஒன்றிற்கு மேற்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கும் பொன்னான காலமிது.

கலைத்துறையினருக்கு நன்மைகள் கூடும் காலமிது. சினிமா, நாடகம், நாட்டியம் துறைகளை சார்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும். கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக் சம்பந்தப்பட்ட துறையினருக்கு லாபம் கிடைக்கும் காலமிது. வெளிநாட்டி வியாபாரம் ஆதாயம் தரும். 4ல் உள்ள ராகு அலைச்சல்கள் கூடும். தீப்புண் காயம் ஏற்படலாம். கவனமாக செயல்படவும். இயந்திரங்களாலும் சிற்சில காயங்கள் ஏற்படலாம்.

மாணவர்கள் உற்சாகமாகக் கானப்படுவார்கள். நாவலாசிரியர்கள், எழுத்தாளர்கள் புத்தக வெளியீட்டாளர்களுக்கு லாபம் கூடும். காவல், இராணுவம் சட்டம் ஆகிய துறைகளை சார்ந்தவர்களுக்கு சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். நிலம், வீடு, மனை சம்பந்தப்பட்ட இனங்களில் வழக்கு வியாஜ்ஜியங்கள் ஏற்படலாம். பங்குதாரர்களிடையே கருத்து வேறுபாடுகள் வந்து மறையும். துர்க்கையை வழிபடுவது நல்லது.

கடகம்: (புனர் பூசம் 4ம் பாதம்,பூசம், ஆயில்யம்)

 இயல்பிலேயே தலைமை தாங்கும் பண்புடைய கடக ராசி வாசகர்களே !

தற்போது இருக்கும் கிரக அமைப்பு நன்மையை அளிக்கக்கூடிய அமைப்பு ஆகும். அன்னியர் தொடர்பால் ஆதாயம் உண்டு. கேது 9ல் இருப்பது சிற்சில தொல்லைகளைத் தரலாம். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கவனம் தேவை. சந்திர சஞ்சாரமும் திருப்திகரமாக உள்ளது. ஆக மொத்தத்தில் இந்த காலகட்டம் நன்மை, தீமைகள் என இரண்டுமே ஏற்படும். அலுவலகத்தில் பொறுப்பும், சுமையும் அதிகரிக்கும். சகிப்புத் தனமையுடன் உழைக்க வேண்டியிருக்கும். சோம்பலால் கடமையைப் புறக்கணித்தால் நஷ்டம் ஏற்படலாம்.

கலைத்துறையினருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களில் வரவேற்பு கிடைக்கும். பலரது பாராட்டுகளும் கிடைக்கப் பெறுவீர்கள். இன்னும் இந்த ராசியை சேர்ந்தவர்களுக்கு ஒரு வகையில் பயணத்தால் இன்பம் ஏற்படுமென்றாலும் இன்னொரு வகையில் பொருள் இழப்பும் ஏற்படலாம். 3ல் உள்ள ராகு மக்கள் நலத்தைக் கெடுக்கலாம். வரவேண்டிய பொருள் வராமல் கால தாமதமாகும். முக்கியமான தருணத்தில் முறையாகப் பேசமுடியாத ஒரு தடை ஏற்படலாம். இதனால் காரியத்தடை ஏற்படக்கூடும்.

மஹாலக்ஷ்மி வழிபாடு விமோசனம் தரும். அருகிலுள்ள அம்மன் ஆலயத்திற்கு சென்று எண்ணெய் தீபம் ஏற்றுங்கள். உங்கள் வாழ்க்கையில் இருள் அகன்று வெளிச்சம் பரவும். அரசியல்வாதிகளுக்கு இது நல்ல நேரம்.

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

எடுத்த காரியத்தில் உறுதியாக இருக்கும் சிம்ம ராசி வாசகர்களே !

ராசிநாதனாகிய சூரியன் 5ல் இருப்பதும் இம்மாத மத்தியில் சனி பெயர்ச்சி ஆவதும் நன்மையைத் தரும் காலகட்டம் என உரைக்கின்றது. இந்த நேரத்தில் ஏதெனும் ஒரு புதிய துறையில் காலடி எடுத்து வைப்பீர்கள். அதில் உற்சாகமும் நீடித்திருக்கும். உடனே பயன் கிடைக்காவிட்டாலும் நாளடைவில் கிடைக்கும். வேற்றுமதத்தவரால் நன்மைகள் கிடைக்கும். அவசரப்பட்டு பேசுவதை மெதுவாக குறைக்கப் பாருங்கள். உஷ்ணாதிக்கம் ஏற்படலாம் கவனம் தேவை.

நிலபுலன்களால் ஆதாயம் உண்டு. பொறியியல் துறையில் ஏற்றம் தரும். விவசயிகள் நற்பலன்கள் அடைவார்கள். சுரங்கங்கள், ஆலைகளில் பணிபுரிவோர் மற்றும் தொழிலாளர்களுக்கு நற்காலமிது. உழைத்த உழைப்பு வீண் போகாது. வாகன கஷ்டம் ஏற்படலாம். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு பணியில் உள்ள போது விபத்துகள் நேரிடலாம் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு வெற்றிக்கனியைப் பறிக்கும் காலகட்டமிது. ஆதிக்கமும் அதிகரிக்கும். எனினும் சிற்சில நேரங்களில் செயல்களை தவறவிட நேரிடலாம்.

தினமும் காலையில் அதிகாலை எழுந்திருந்து சூரியனை வழிபட வந்த வினைகள் அனைத்தும் தீரும். சுமங்கலிகளுக்கு வெற்றிலை பாக்கு தாம்பூலம் கொடுப்பதும் நன்மையைத் தரும்.

கன்னி:  (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

உழைப்பினை உலகிற்கு சொல்லும் கன்னி ராசி வாசகர்களே !

3ம் ராசியில் சனி, ராசிநாதன் புதன் என ஒரு குழப்பமான காலகட்டத்தில் இருக்கிறீர்கள். எனினும் குருவின் பார்வையால் அனைத்திலும் வெற்றிபடிகளில் ஏறி பயணிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இடையிடையே சிறுசிறு சலனங்கள் ஏற்பட்டு மறையும். சுறுசுறுப்பு குறையும்.யோகா செய்வதால் அந்த குறைபாடு நீங்கும். மனநிலை சீராக இருக்கும். மக்கள் நலம் சிறப்பாக இருக்கும். பெற்றோர் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டியிருக்கும்.

கலைத்துறையினர் சிறப்பு பெறுவார்கள். குறிப்பாக நட்சத்திரங்கள், சங்கீத வித்வான்கள் ஆகியோருக்கு புகழ் ஓங்கும். டீவி போன்ற இனங்களில் மக்கள் தொடர்பு கொண்டிருப்பவர்கள், சிறப்பான பாராட்டைப் பெறுவார்கள். வெளிநாட்டு பயணம் ஆதாயம் தரும்.  ஓரிரு பெரியவர்கள் எதிர்பாராத வகையில் சன்மானம் வழங்குவார்கள். மருத்துவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் ஏற்ற காலகட்டமிது.

புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். பொருளாதாரச் சூழ்நிலைகள் செழிப்பாக மாறும். ஏழைகள் மீது கருணை கொண்டு உதவிகள் செய்தால் இறைவனின் அருள் உங்களுக்கு கிட்டும். குரு வழிபாடும் நன்மையைத் தரும். ஆற்றலும் ஐஸ்வர்யமும் கூடும். துணிவும் தன்னம்பிக்கை உள்ளவர்கள் நீங்கள். இப்போதும் அதற்கு பங்கமில்லை. அதன்மூலம் சாதனைகளை துணிந்து செய்வீர்கள். மாணவர்களுக்கு உற்சாகமான காலகட்டமிது.

துலாம்: (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

யாரையும் எளிதில் நம்பிவிடாமல் ஆராய்ந்து பேசும் துலாம் ராசி வாசகர்களே!

‘ஓஹோ’ என்று பாராட்டத்தக்க வகையில் எந்த சிறப்பும் இராது என்றாலும் ஓரிரு நற்பலன்கள் ஏற்படவே செய்யும். அவற்றால் மனதில் உற்சாகம் பிறக்கும். 4ம் ராசியில் உள்ள செவ்வாயால் சில மாற்றங்கள் வந்து சேரும். பதவி உயர்வுக்குரிய அறிவிப்பு வந்து சேரும். சிலருக்கு வெளியூருக்கு மாற்றலும் வரும். உடனே கைகூடா விட்டாலும் அதற்கான விதையை இப்போது ஊன்றா வேண்டிய காலகட்டமிது.

பெற்றோர் நலம் கவனிக்கப்பட வேண்டிய காலமிது. மக்கள் நலனிற்கு எந்த குறைபாடும் இருக்காது. 12ல் உள்ள ராகு, 6ல் உள்ள கேது சரியான இடம் இல்லை. பொருட்கள் திருட்டு போகலாம். ஜாக்கிரதை. ஞாபக சக்தியை இழக்காமல் இருபதற்கு மனதை சஞ்சலத்தில் ஆழ்த்த கூடாது. பயிற்சியினால் அது சாத்தியமாகும்.

கலைத்துறையினருக்கு ஓரளவு நன்மைகள் வந்து சேரும். ஓரளவு சோதகளும் இருக்கும். முன்னோர்கள் வழிபாடு மிகவும் முக்கியம். நம்பிக்கையுடன் செய்யும் இந்த வழிபாட்டால் நேர்மறையான செயல்கள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். நிலம், வீடு, வாகனங்கள் சம்பந்தப்பட்ட பிரச்ச்னைகளிலிருந்து உங்களை விடுவிப்பதற்கு வழிகள் வந்து சேரும். ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புகளும் வந்து சேரும். மாணவர்களுக்கு பொன்னான காலகட்டமிது.

எதிர்கால படிப்புகளுக்கான பணிகளை இப்போதே ஆரம்பிக்கலாம். குடும்பத்தில் நடைபெற இருந்த நற்காரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெறும். நண்பர்கள் அனுகூலமாக இருப்பர்கள். கூடிய மட்டிலும் அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிருங்கள். பெரியோர்கலை ஆலோசனைகளைக் கேட்டே எதையும் செய்வது நல்லது. தம்பதிகளிடம் ஒத்த கருத்து ஏற்படும்.

விருச்சிகம்: (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

 எதிலும் நேர்படப் பேசும் விருச்சிக ராசி வாசகர்களே !

எதிர்பார்த்த இனங்களில் வெற்றியை அடைய முடியும். குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் லச்டுமி கடாக்ஷம் கிடைக்கும். எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கக் கூடிய சந்தர்ப்பம் வாய்க்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்கள் நிகழும். விவசாயிகள், தொழிலாளர்களும் நன்மைகள் வந்து சேரும். ஆனால் ராசியில் சனி இருக்கிறார். இதனால் சிற்சில திண்டாட்டங்களும் வந்து வந்து போகும்.

நண்பர்களுக்குள் விரோதம் ஏற்பட வாய்ய்பிருப்பதால் கவனம் தேவை. இவற்றிக்கெல்லாம் அப்பாற்பட்டு குருவருள் காரணமாக வியக்கத்தக்க வகையில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழ்ந்தவண்ணமிருக்கும். அரசியல்வாதிகளுக்கு வெற்றிகள் வந்து சேரும். மருத்துவர்கள்,  பேராசியர்கள், விஞ்ஞானிகள், காவல், ராணுவம் துறைகளில் உள்ளவர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் ஆகியோருக்கெல்லாம் நல்ல வளர்ச்சி காணப்படும்.

இக்கட்டான நேரங்களில் வெளிவரக்கூடிய சாதுர்யம் உள்ளவர்கள் நீங்கள். இந்த நேரத்தில் உங்களுடைய சாதுர்யம் வெளிப்படும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி நிலவும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கைகூடும் காலமிது. சந்தாண பாக்கியம் கிட்டும். கேதுப்ரீதி, ராகுப்ரீதி துர்க்கையை வழிபட்டு எளியவர்களுக்கு அன்னதானம் செய்வதால் இந்த காலகட்டம் நன்றாக இருக்கும்.

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

எதிலும் தெய்வநம்பிக்கையுடன் போராடும் தனுசு ராசி வாசகர்களே!

ராசிநாதனின் பார்வை, தன குடும்பஸ்தானாதிபதியின் பார்வை என அனைத்து விதங்களிலும் நன்மைகளையே பெறும் காலகட்டத்தில் இருக்கிறீர்கள். சுப காரியங்களுக்கான வாய்ப்புகள் தேடி வரும். கொடுக்கல் வாங்கலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கண் சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம். கவனம் தேவை. பாக்கியஸ்தானம் வலிமை பெறுவதால் தந்தையின் தொழில் வளம் பெருகும். குடும்ப பிரச்ச்னைகளும் முடிவுக்கு வரும்.

வெளிவட்டாரப் பழக்கங்கள் நன்மையை தரும். நற்செய்திகள் உங்களை தேடி வரும். உடன்பிறப்புகள் அனைவரும் சந்தோஷமாக இருப்பார்கள். அவர்களுக்காக சில தியாகங்களையும் செய்வீர்கள். நான்குக்கு உடையவர் ஆறில் இருப்பதால் வீடு நில புலன்கள் உங்களை வந்தடையும். அதிலுள்ள பிரச்சனைகளும் தீரும். குழந்தைகளின் கல்வி, நடத்தை மிகவும் நன்றாக இருக்கும். பொன் பொருள் ஆபரண சேர்க்கை உண்டு.

வியாபாரிகள் வெளிநாட்டு பயணம் செல்வார்கள். கலைதுறையினர் அயல்நாடு செல்வார்கள். அரசியலில் நல்ல வாய்ப்புகள் தேடி வரலாம். மாணவர்கள் போட்டிகளில் பரிசுகள் வாங்குவார்கள். சகோதர சகோதரிகளுக்கு திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் கை கூடி வரும். மகிழ்ச்சி தரும் தகவல்கள் வந்து சேரும். பிள்ளைகளுக்காக செலவுகள் செய்ய வேண்டி வரும். வீடு, நிலம் வாங்குவதில் சிக்கல்கள் ஏற்படலாம். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். சென்ற நாட்களில் நடைபெறாத சில காரியங்கள் முக்கியஸ்தர்கள் மூலமாக இனிதே நிறைவேறும்.

மகரம்: (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

அடுத்தவரின் உணர்வுகளையும் உணரும் மகர ராசி வாசகர்களே !

ராசிநாதன் சனி செவ்வாய் வீட்டில் அமர யோககாரரான சுக்கிரன் அவருக்கு தனஸ்தானத்தில் இருக்க என கிரகநிலை மிகவும் சாதகமான நிலையில் உள்ளது. எனினும் 12ம் ராசியில் சூரியன் இருப்பது உகந்த இடமல்ல. எனவே உடல்நலத்தில் கவனம் தேவை. அவருடன் புதன் இருக்கவும்,  சுகஸ்தானத்தை செவ்வாய் பார்ப்பதும் குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒத்துப்போக வேண்டியதை காட்டுகிறது.

சகோதர சகோதரிகளுடன் உறவு சிறக்கும். உடன்பிறந்தவர்களுக்கு உயர் பதவி கிடைக்கும். மன உறுதி அதிகரிக்கும். பயணத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.  பாராட்டுகளும் விருதுகளும் கிடைக்கும். மத நம்பிக்கை அதிகரிக்கும். ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். அவர்களுக்கு புதிய வாகனம் வாங்கி கொடுப்பீர்கள். புதிய உத்தியோகம் கிடைக்கும். உங்கள் தொழில் மூலம் பணவரவு அதிகரிக்கும். பத்தில் இருக்கும் செவ்வாயால் எதிரிகள் உங்கள் முன் அடங்குவர்.

செம்பு, தங்க வியாபாரிகள் பெருத்த லாபம் அடைவர். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு வெளிநாடு பயணங்களால் பணவரவு அதிகரிக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு தைரியம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம். முருகனுக்கு பால் அபிஷேகம் செய்வது நன்மையைத் தரும்.

கும்பம்: (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

எதிலும் முழுமையாக ஈடுபடும் கும்ப ராசி வாசகர்களே !

ராசிநாதன் சனி பத்தில் அமர தைரிய வீரிய ராசியை செவ்வாய் பார்க்க குடும்பத்தில் உங்களுக்கு பெரிய பொறுப்பு தேடி வரும். உடல்நலத்தில் சிறு குறைபாடு வரலாம். இரண்டாம் வீடு பத்தாம் வீட்டிற்கு ஐந்தாம் வீடாக அமைவதால் நாவன்மையால் உங்கள் வேலைகளை சாதித்துக் கொள்வீர்கள். எனினும் குடும்ப ஸ்தானத்திற்கு சனி நாடிப்படி சம்பந்தப்படுவதால் சிறிய அளவிலான குழப்பத்தை தரலாம். ஆன்மீக சொற்பொழிவுகள், உபன்யாசங்கள் செய்வோருக்கு உகந்த காலமாகும்.

அரசாங்கத்தால் அனுகூலம் ஏற்படும். உடன்பிறந்த ஒருவருக்கு உங்களால் யோகம் கிடைக்கும். உங்களால் உங்களுக்கு பெருமையும் செல்வமும் கிடைக்கும். வாகன வழிகளில் விரையம் ஏற்படலாம். நிலம் வீடு வாகனம் வாங்கும் போது கவனம் தேவை. முதலீடுகள் செய்யும் போதும் கவனத்துடன் செய்யவும். பிள்ளைகளின் மேல் மிக எச்சரிக்கையாக இருக்கவும். தந்தையாருடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எதிரிகளின் தொல்லைகள், கடன்சுமைகள் அடங்கும். தாய் மாமனால் அனுகூலம் கிடைக்கும். தடைபட்டிருந்த திருமணம் இனிதே நடைபெறும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு பொருளும் புகழும் கூடும். அரசியலில் தொல்லைகள் விலகும். மாணவர்கள் கல்வியில் சாதனைகள் படைப்பர். சிவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்வது கஷ்டங்களை விலக்கி நன்மையைத் தரும்.

மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

 நட்புக்காக உதவிகள் புரியும் மீன ராசி வாசகர்களே !

உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உற்சாகத்துடன் அனைத்து காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். சுக்கிரனால் சுகங்களும், சந்தோஷங்களும் பெருகும். நிலம், வீடு போன்றவற்றில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தந்தையின் ஆதரவும் உண்டு. இரண்டுக்குரியவர் சுயஸ்தானத்தைப் பார்க்கும் அமைப்பு அமைந்துள்ளதால் வழக்கில் வெற்றி அல்லது நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்சினை முடிவில் செல்வம், உரிமை, அதிகாரம் கிடைக்கப் பெறுவீர்கள்.

சுய ஜாதகத்தில் திசாபுக்திகள் அனுகூலமற்றுயிருப்பின் தவறான வழிமுறைகளில் செல்வம் கரையவும் வாய்ப்புண்டு. எச்சரிக்கையாக இருக்கவும். மூன்றாம் வீட்டுக்குரியவர் ஐந்தில் உலவுவதால் சகோதர சகோதரி வேலை நிமித்தம் வெளியூர் செல்ல வேண்டி வரலாம். அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். பிள்ளைகளிடம் அன்பு, பாசம் காட்டுவது நல்லது.

கலைத்துறையினருக்கு மிக சிறந்த காலகட்டமிது. வாய்ப்புகள் தேடி வரும். அரசியலில் குறுக்கு வழிகளில் ஈடுபட வேண்டாம். மாணவர்கள் கல்வியில் சிறப்பான தேர்ச்சியினைக் காண்பார்கள். சனிக்கிழமை தோறும் அருகிலுள்ள சிவன் கோவிலில் சனிக்கு விளக்கு ஏற்றி வர நன்மைகள் தொடரும்.




- 4தமிழ்மீடியா

0 Responses to இருவார ராசி பலன்கள் | சனிப் பெயர்ச்சி பலன்கள் 2014 - (வீடியோ இணைப்பு)

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com