Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் அவர்களுக்கு சுயாட்சியுடன் கூடிய சம அந்தஸ்துடனான நியாயமான ஒரு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற உண்மையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்வார் என்ற நம்பிக்கை உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு ஒரு உறுதியான அரசியல் தீர்வு கிடைக்க வேண்டுமென்ற அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகின்ற நிலையில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் யாரை ஆதரிப்பார்கள் என்று சர்வதேசம் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் ஒருபோதும் நாட்டினை பிரிக்கும்படி கூறவில்லை. இந்த நாட்டில் சமஷ்டி ஆட்சிமுறை வேண்டுமென்று கூட நாங்கள் கேட்கவில்லை. மாறாக தமிழ் மக்களுக்கு ஒரு நியாமான அரசியல்தீர்வு அவசியமாகும்.

ஒருநாட்டில் பிரச்சினைகள் தொடர்கதைகளாக இருக்க முடியாது. ஒரு கட்டத்தில் முடிவுகள் வந்தாக வேண்டும். எம்மைப் பொறுத்தவரை அவ்வாறான முடிவு வரவேண்டிய காலம் கனிந்துள்ளது என்றும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேசத்தில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் நாடு தீர்க்கமானதொரு கட்டத்தை அடைந்துள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அதாவது தமிழ் மக்களுக்கு அவர்களது வரலாற்று ரீதியான பிரதேசங்களில் தீர்வு வழங்கப்பட வேண்டுமென்ற விடயத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்வார் என்ற நம்பிக்கையை கூட்டமைப்பின் தலைவர் வெளியிட்டுள்ளார்.

அரசியல் தீர்வு என்பது தமிழ் மக்களை பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயமாகும்.

காரணம் தமிழ் மக்களுக்கு நியாமானதொரு அரசியல்தீர்வை வழங்குவதில் பெரும்பான்மை மக்கள் மத்தியில் காணப்படும் நம்பிக்கையின்மையும் சந்தேகப் பார்வையும் கடந்த காலம் முழுவதும் மிகப்பெரிய பிரச்சினைகளாக காணப்பட்டு வந்தன. அந்த நிலை தற்போது கூட தொடர்ந்து கொண்டிருப்பதை நாம் அவதானிக்கின்றோம்.

தென்னிலங்கையில் பெரும்பான்மை மக்கள் மத்தியில் தமிழ் மக்களுக்கான அரசியல்தீர்வு தொடர்பான தவறான வழிகாட்டல்களும், சந்தேகத்திற்குரிய செயற்பாடுகளும் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இதனால் தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கப்படுமிடத்து எங்கே நாடு இரண்டாகப் பிரிந்துவிடுமோ என்ற அச்சம் பெரும்பான்மை மக்கள் மத்தியில் பாரிய அளவில் வேரூன்றியுள்ளது.

இவ்வாறான பின்னணியிலேயே அதனை போக்கி தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வை வழங்கக்கூடிய தலைவராக மைத்திரிபால சிறிசேன உருவெடுப்பார் என்ற நம்பிக்கையை கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

நாட்டின் சுதந்திரத்திற்குப் பின்னரான காலகட்டத்திலிருந்தே தமிழ் மக்கள் தமக்கு நியாயமான அரசியல் தீர்வு ஒன்று கிடைக்கவேண்டுமென்பதில் உறுதியாக இருந்து வந்துள்ளனர்.

இதற்கான போராட்டங்கள் கடந்த காலங்களில் பல வடிவங்களைப் பெற்றிருந்தன. எனினும் அனைத்து விதமான முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்த வரலாற்றையே தமிழ் மக்கள் தமதாக்கிக் கொண்டுள்ளனர்.

உதாரணமாக அண்மைக்கால வரலாற்றைப் பார்க்கும் போது 2002 மற்றும் 2003ம் ஆண்டுகளில் இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் வந்த போதும் அவை இறுதியில் வெற்றியடையவில்லை.

இந்த இடத்தில் பதவியிலிருந்த அரசாங்கங்கள் இதயசுத்தியுடன் செயற்படாத நிலையில் தமிழ் மக்கள் தரப்பிலும் சரியான முறையில் விடயங்கள் அணுகப்பட்டதா என்ற கேள்விக்குறியும் எழுப்பப்படுகின்றது.

2003 ஆம் ஆண்டு ஒஸ்லோ பிரகடனம் வெளியிடப்பட்ட போது தமிழ் மக்களுக்கு சமஷ்டி முறையிலான தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. எனினும் இறுதியில் அனைத்து முயற்சிகளும் தோல்வியை சந்தித்தமையையே காணமுடிந்தது.

மாறாக அன்று சமஷ்டி குறித்து பேசிய நாடு இன்று அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை தாண்டுவதற்கு அச்சமடையும் நிலைக்கு சூழல் மாறிவிட்டது.

எனவே இந்த அரசியல் தீர்வு முயற்சியில் இரண்டு தரப்புக்களும் சரிவர தமது அர்ப்பணிப்பை வெளிக்காட்ட வேண்டியது அவசியமாகும்.

தென்னிலங்கையில் அரசாங்கம் இதய சுத்தியுடனான முறையிலும் ஆக்கபூர்வமான வழியிலும், தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்க முன்வரவேண்டுமென்பது வலியுறுத்தப்படுகின்ற அதேவேளை தமிழர் தரப்பிலும், இதய சுத்தியுடனான அர்ப்பணிப்பு இருக்கவேண்டியது அவசியமாகும்.

கடந்த மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் போது சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது அவை கைகூடவில்லை.

குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் கடந்த அரசாங்கத்திற்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிவடைந்தன.

இந்த பேச்சுவார்த்தையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாரிய அர்ப்பணிப்பை வெளிக்காட்டியிருந்த போதும் கடந்த அரசாங்கமானது இதயசுத்தியுடன் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

பேச்சுவார்த்தைகள் திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்டன. ஒரு கட்டத்தில் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள சென்றிருந்த போதும் ஆளும் தரப்பு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளாமல் ஏமாற்றிய வரலாறும் காணப்படுகிறது.

இந்நிலையிலேயே தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் பதவியில் உள்ள நிலையில் தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினையான அரசியல் தீர்வு விவகாரத்திற்கு ஆக்கபூர்வமான தீர்வொன்றை பெற முடியும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தாங்கள் நாட்டை இரண்டாகப் பிரிப்பதற்கு ஒருபோதும் முயற்சிக்க மாட்டோம் என்றும் ஐக்கிய இலங்கைக்குள் சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை எதிர்பார்ப்பதாகவும் வலியுறுத்தி வருகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்த நிலைப்பாட்டை பயன்படுத்தி நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் அரசியல் தீர்வுப் பிரச்சினைக்கு ஆரோக்கியமான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிர்வாகம் முன்வர வேண்டியது அவசியமாகும்.

அதேபோன்று தீர்வொன்றைக் காண்பதற்கு தற்போது கிடைத்துள்ள பொன்னான சந்தர்ப்பத்தை தமிழர் தரப்பும் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதும் முக்கியமானதாகும்.

இந்த விடயத்தில் அனைத்துத் தரப்புக்களும் தீர்க்கமான முறையிலும் ஆழமான அர்ப்பணிப்பின் ஊடாகவும் நியாயமான தீர்வொன்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதே பிரதான தேவையாகவுள்ளது .

கடந்த கால வரலாற்றில் இடம்பெற்ற தவறுகளில் சிறந்த பாடங்களைக் கற்றுக்கொண்டு எதிர்காலத்தில் திட்டமிட்ட ரீதியில் செயற்பட்டு தீர்வைக் காண வேண்டியது மிகவும் அவசியமாகும்.

தற்போது அரசியலமைப்பில் காணப்படுகின்ற 13வது திருத்தச் சட்டமானது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இறுதி தீர்வாக அமையாது என்பது ஒரு பொதுவான கருத்தாகும்.

எனவே 13 ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் சென்றோ அல்லது பிரச்சினைக்கான தீர்வில் புதுவிதமான அணுமுறைகளைப் பின்பற்றியோ தீர்வொன்றைக் காணவேண்டும்.

எனவே நாட்டில் தற்போது காணப்படுகின்ற புதிய அரசியல் சூழலைப் பயன்படுத்தி தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காண்பதற்கு சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புக்களும் முன்வரவேண்டும்.

இந்த விடயத்தில் அரசாங்கமும் சரி, தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளும் சரி இதய சுத்தியுடனும் பொறுப்புடனும் நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும். தீர்வொன்றைப் பெற்றுக் கொள்வதற்காக தற்போது கிடைத்துள்ள இந்த பொன்னான சந்தர்ப்பத்தை எவரும் தவறவிட்டுவிடக்கூடாது.

தற்போதைய அரசாங்கத்தை உருவாக்குவதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகப் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளதால் தீர்வு விடயத்தில் குரலெழுப்பும் தார்மீக உரிமை கூட்டமைப்பிற்கு உள்ளது.

எனவே இந்த அனைத்து விதமான சூழலையும் பயன்படுத்தி ஆக்கபூர்வமான தீர்வொன்றுக்காக அனைத்துத் தரப்பினரும் பயணிக்க வேண்டியது கட்டாயமாகும்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேச சமூகம் என்றுமில்லாதவாறு அவதானத்தை செலுத்தியுள்ள நிலையில் அதனை உரிய முறையில் பயன்படுத்தி தீர்வைக் கண்டுவிடவேண்டும்.

இந்த விடயத்தில் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு எந்தத் தரப்பும் முயற்சிக்கக்கூடாது. அதேநேரம் தமிழர் தரப்பும் மிகவும் நிதானத்துடனும் பொறுப்புடனும் நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.

0 Responses to தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனின் எதிர்பார்ப்பு

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com