Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் ஜனவரி மாதம் 24ஆம் திகதிக்குள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இயற்கையாக மரணிப்பார் என்றும், அதன் பின்னரான ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வெற்றிபெறுவார் என்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த சோதிடர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவரின் சோதிட கணிப்புக்கள் அடங்கிய வீடியோ காட்சி இணையத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில்,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மரணிப்பார் என்றும் கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாவார் என்றும் சோதிடரினால் கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளமையாது, சாஸ்திர சதியாகும் என்று ஊடகத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பாக வெளியாகியுள்ள சோதிடரின், ஜாதகக் கணிப்பின் பின்னணியைக் கண்டறிவதற்காக அது தொடர்பான வீடியோ பதிவு, பொலிஸ்மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும் அவ்வமைச்சு அறிவித்துள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே, பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் நிமால் போபகே தெரிவித்துள்ளார். 

சமூக இணையத்தளங்களின் ஊடாக, தொடர்ச்சியாகத் தரவேற்றப்படும் இவ்வாறான வீடியோ காட்சி தொடர்பாக ஆழமாக ஆராய்ந்தால் இதன் உள்நோக்கத்தினை நாம் கண்டறியமுடியும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த ஜாதக கணிப்பு உண்மைக்கு புறம்பானதாகும். இந்தக் கணிப்பு தொடர்பான ஆவணங்களைக் கொண்டு ஒப்பிட்டுப் பார்த்ததன் மூலம், இது உண்மைக்குப் புறம்பானது என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

சமூக வலைதளங்களில் தரவேற்றப்பட்டுள்ள விஜித் விஜயமுனி என்ற சோதிடரின் அந்த வீடியோவில், ஜனவரிக்குள், தற்போதையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இயற்கையாகவே மரணமடைந்துவிடுவார். அதன் பின்னர் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாட்டின் பிரதமராகத் தெரிவு செய்யப்படுவார் என்றும் அந்த சோதிடர் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இயற்கையாக மரணமடைவது உண்மையாகும். அதனை எக்காரணம் கொண்டும் தடுத்துநிறுத்த முடியாது என்றும் அந்த சோதிடம் உறுதியாகக் கூறியுள்ளார்.

அந்த வீடியோவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“நான், கணித்திருந்த எந்தவொரு விடயமும் இதுவரையிலும் தவறவில்லை. 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் திகதியன்று நான், கணித்திருந்த ஏழு விடயங்கள் உண்மையாகியுள்ளன.

ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோற்பார், மஹிந்தவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் இடம்பெறும் போட்டியில் மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டுவார். ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்படுவார். அதன் பின்னர் நடைபெறும் பொதுத் தேர்தலில், ரணில் விக்ரமசிங்க பிரதமராக தெரிவு செய்யப்படுவார் என்று கணித்திருந்தேன்.

இந்தியாவில், நரேந்திர மோடி தனிப்பலத்துடன் ஆட்சியமைப்பார் என்றும் இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களில் மேல் மாகாண சபைத் தேர்தலின் பலத்தை மஹிந்த ராஜபக்ஷ கைப்பற்றுவார் மற்றும் பாராளுமன்ற தேர்தலின் போது சரத் பொன்சேகா, ஓர் ஆசனத்தையேனும் பெறமாட்டார் என்றும் கணிப்பிட்டிருந்தேன்.  என்ன நடந்தது. இவையாவும் உண்மையாகிவிட்டன. இறுதியில், சரத் பொன்சேகா அமைச்சராக்கப்பட்டுள்ளார். 

மைத்திரிபால சிறிசேனவின் மரணம், 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் இடம்பெறும். அந்த இயற்கை மரணத்தை தடுக்கமுடியாது என்று நான், கணிப்பிட்டிருந்தேன். 

என்னுடைய குரலில் பேஸ்புக்கில் தரவேற்றப்பட்ட அந்த வீடியோ காட்சி அடங்கிய ஒளிப்பதிவை யாரோ, ஹெக் செய்து அழித்துவிட்டனர். அதனால்தான், மற்றுமொரு புதிய வீடியோவை தரவேற்றம் செய்துள்ளேன். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவில், பேஸ்புக்கை ஹேக் செய்பவர்கள் கைது செய்து, விளக்கமறியலில் வைக்கின்றனர். பின்னர் பாராட்டி விடுவித்தும் உள்ளனர். என்னுடைய, ஒளிநாடாவுக்கு என்ன நடந்தது என்பது எனக்கு பெரும் பிரச்சினையாகும். 

துலாம் இராசியில் பிறந்த மைத்திரிபால சிறிசேனவின் கேந்திரத்து அமைவாக, அவரின் இயற்கையான மரணத்தை யாராலும் தடுக்கமுடியாது. ஏனெனில், விருச்சகம் ராசியானது சனியில் இருக்கும் போதுதான் பண்டாநாயக்க மற்றும் பிரேமதாஸ ஆகியோர் பதவியேற்றனர். 

அந்த ராசியிலிருந்து சனி கடக்கும் முன்னரே அவ்விருவரும் படுகொலைச் செய்யப்பட்டனர். அதேபோலதான், இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியும் மரணமடைந்தார். இவற்றையெல்லாம் கணிப்பிட்டே நான் கூறியிருக்கின்றேன்.

மைத்திரிபால சிறிசேனவும் விருச்சக ராசியானது சனியில் இருக்கும் போதுதான், பதவியேற்றார். சனி கடக்கும் முன்னர் அவரது மரணம் நிகழும்.

மஹிந்த ராஜபக்ஷவின் சாஸ்திரத்தைப் பார்த்தை போலவே இவரின் சாஸ்திரத்தையும் பார்த்தேன். அரச தலைவர்களின் சாஸ்திரத்தை மிகவும் ஆழமாக, அவதானமாகவே நான் கணிப்பேன். 

மைத்திரிபால சிறிசேனவே ஆட்சிப்பீடம் ஏறுவார் என்று நான்தான் கணித்துக் கூறினேன். அதேபோலதான் இதனையும் கூறுகின்றேன் என்றும் அவர் சொன்னார். 

மரண சக்கரத்தை தடுத்து நிறுத்தமுடியாது. மரணத்துடன் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும். அதில், கோத்தபாய ராஜபக்ஷவை கைதுசெய்யமுடியாது. அவர், தமிழ், முஸ்லிம்கள் வாக்குகள் இன்றி, வெற்றியீட்டுவார். அதன்பின்னர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக தெரிவுசெய்யப்படுவார்.

ஜனாதிபதியினால், பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்குள் கலைக்க முடியாது என்று எனக்கு தெரியும். எனினும், ஜனாதிபதிக்கு பதிலாக பிரதமருக்கு மூன்று மாதங்கள் மட்டுமே இருக்கமுடியும். லெனினின் நட்சத்திரமும் கோத்தபாயவின் நட்சத்திரமும் ஒன்றாகும்.” என்றுள்ளார்.

0 Responses to எதிர்வரும் ஜனவரி 24ஆம் திகதிக்குள் மைத்திரி மரணிப்பார்; கோத்தபாய ஜனாதிபதியாவார்: சோதிடர் விஜித் விஜயமுனி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com