Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“பனை, தென்னை மரங்களில் இருந்து ‘கள்’ இறக்குவதற்கு தடை விதிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தலானது, தமிழின அழிப்பின் நீட்சியாகும். தமிழர்களின் வாழ்வாதாரத்தை முடக்கிப்போடும் இச்சட்டத்திருத்தத்தினை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.” என்று வடக்கு மாகாண கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் வலியுறுத்தியுள்ளார்.

அனந்தி சசிதரன் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவரின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “பனை, தென்னை மற்றும் கித்துள் தவிர்ந்த வேறு எந்த மரத்தில் இருந்தும் கள்ளுச் சீவுவது, எடுப்பது, இறக்குவதனை தடைசெய்யும் வகையில் ஏற்கனவே இருந்த சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தத்தின் மூலம் கித்துள் தவிர்ந்த வேறு எந்த மரத்திலும் கள்ளுச் சீவுவது, எடுப்பது, இறக்குவது தடைசெய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி 01ஆம் திகதி (01.01.2018) முதல் நடைமுறைக்கு வரும் வகையிலான சட்டத்திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 20ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

எந்தவித முகாந்திரமும் இன்றி எதேச்சதிகாரப் போக்கின் வெளிப்பாடாக கொண்டுவரப்பட்டிருக்கும் இச்சட்டத் திருத்தமானது தமிழர்களின் முதுகெலும்பை உடைக்கும் விதத்தில் அமைந்துள்ளது என்பதை ஆணித்தரமாக சுட்டிக்காட்டுகின்றேன்.

தமிழர் தாயகத்தின் தனிப்பெரும் அடையாளமாக பன்நெடுங்காலமாக நீடித்து நிலைபெற்றிருக்கும் பனை மரமானது, தமிழர்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு என்பவற்றில் ஆழமாக இழையோடி தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக்கலந்த ஒன்றாகும்.

நீங்கள் வேறு நாடய்யா… நாங்கள் வேறு நாடய்யா… என்ற ஈழத்து பெருங்கவியின் பாடல் வரிகளில் முத்தாய்ப்பாக அமைந்திருக்கும் ‘கித்துள்வெல்லம் உங்களுக்கு பனைவெல்லம் எங்களுக்கு’ என்ற வரியின் ஊடே இந்த நாசகார சதித்திட்டத்தின் ஆழத்ததை புரிந்துகொள்ள முடியும். உலகில் எத்தனையோ நாடுகளில் பனை மரம் இருந்தாலும் ஒரு இனததின் அடையாளமாக பனை மரம் அடையாளப் படுத்தப்படுகின்றதொன்றால் அது தமிழினத்தின் சார்பாக மட்டுமே.

அந்த வகையில் தமிழர்களின் பெருமை மிகு அடையாளமாகவும் பொருன்மியத்தின் பலமாகவும் திகழ்ந்துவரும் பனை வளத்தை முற்றிலும் இல்லாதொழிக்கும் நோக்கிலேயே இச்சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழின அழிப்பு யுத்தம் நடந்தேறிய காலகட்டத்தில் பல இலட்சம் பனை, தென்னை மரங்கள் அழித்தொழிக்கப்பட்ட நிலையில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் பனை, தென்னை மரங்களை இலக்கு வைத்தான செயற்பாடுகள் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு பகுதிகளில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் மரமேறி விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக தற்போது பனை, தென்னைகளில் இருந்து கள் இறக்குவதை முற்றிலும் தடைசெய்வதற்கு வழியேற்படுத்தும் சட்டத்திருத்தம் அமைந்துள்ளது.

இதன் மூலம் மிச்சம் மீதியாயிருக்கும் பனை தென்னை வளங்களை முற்றிலும் அழித்தொழிப்பதுடன் தமிழர்களை பொருளாதார ரீதியில் நிரந்தரமாகவே முடக்கும் நோக்கில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பொறுத்த வரையில் பனை, தென்னையில் இருந்தே கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. இதனை நம்பியே பல்லாயிரம் தமிழ் குடும்பங்களின் வாழ்வாதாரம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

குறிப்பாக பனை மரமானது பல்வேறுபட்ட வழிகளில் பயனுள்ளதாக அமைந்துள்ளது. கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்ற வருமானம் ஈட்டக்கூடிய விளைபொருட்களை தருவதுடன் கள் பானமானது உடல் நலனிற்கு உகந்ததாகவும் அமைந்துள்ளது.

அவ்வாறே தென்னையும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருகின்றது. இந்நிலையில் இச்சட்டம் நடைமுறைக்கு வருமானால் பனை, தென்னைகளில் இருந்து கள் இறக்கும் தொழில் சார்ந்திருக்கும் குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.

அத்துடன், தமிழ் நாட்டில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் தனியார் முதலாளிகளுக்கு சொந்தமான மதுபான சாலைகளில் உற்பத்தியாகும் சாராயத்தினை விற்பனை செய்வதற்கு ஏதுவாக கள் இறக்குவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதைப் போன்று இங்கும் தென்னிலங்கையில் உற்பத்தி செய்யப்படும் சாராய விற்பனையை முழு அளவில் ஊக்குவிக்கும் நோக்கில் மதுவரித் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக சந்தேகிக்க வேண்டியுள்ளது.

தமிழர்களின் கூன் நிமிர்த்தும் கற்பக தருவாக விளங்கி வரும் பனை மற்றும் தென்னை வளத்தை முற்றிலும் அழித்தொழித்து அது சார்ந்து கட்டமைக்கப்பட்டிருக்கும் தமிழர்களின் பொருளாதாரத்தினை முடக்கி தென்னிலங்கையிடம் கையேந்தும் நிர்க்கதி நிலைக்கு தமிழர்களை இட்டுச்செல்லும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்புத் திட்டத்தின் நீட்சியாகவே இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழர்களின் தொன்மத்தின் அடையாளமாக தமிழர் தாயகத்தின் நிலப்பரப்பெங்கும் நிமிர்ந்தோங்கி வளர்ந்து முரசறைந்து நிற்கும் பனை வளங்களில் இருந்து பெறும் உற்பத்திகளை பாதுகாப்பதன் மூலமே எமது இருப்பினையும் பொருன்மிய பலத்தினையும் தக்கவைக்க முடியும். ஆகவே, தமிழர்கள் ஒன்றுபட்ட குரலாக இச்சட்டத்தினை எதிர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ” என்றுள்ளது.

0 Responses to பனை, தென்னை மரங்களில் ‘கள்’ இறக்கத் தடை விதிப்பது தமிழின அழிப்பாகும்: அனந்தி சசிதரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com