Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”
Showing posts with label Special News. Show all posts
Showing posts with label Special News. Show all posts

இதயம் ஒரு கோவில்! (ஜீ உமாஜி)

பதிந்தவர்: தம்பியன் 21 November 2017

“இதயம் ஒரு கோவில்..” - பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.

உச்சஸ்தாயியில் ஆரம்பிக்கும் ஆலாபனையில், எஸ்.பி.பி.யின் குரல் அப்படியே கீழே இறங்கி வரும்போது சாரல் தெறிப்பதுபோல ஒரு உணர்வு. அப்படியே வேகம் குறைந்து தாலாட்டுவதுபோல சீராகப் போகும். பாடல் முழுவதும் சிறு சந்தோஷமும், ஒரு புத்துணர்ச்சியும் இழையோடியபடி இருக்கும். ஒருவேளை எனக்கு மட்டும் அப்படியிருக்கிறதோ என்னவோ. எனக்கு நினைவு தெரிந்து கேட்ட முதல் பாடல். அதிகமாகக் கேட்ட பாடல். அதனால்தானோ என்னவோ அந்தப் பாடலுக்கென்று தனியாக சில குணங்கள் இருப்பதாகத் தோன்றுகிறது.
இந்தப்பாடல் எப்போதும் எனக்குப் பிரத்தியேகமானதாகவே இருப்பதை உணர்கிறேன். தனிமையில் மட்டுமே கேட்க விரும்புகிறேன். இந்தப்பாடல் எப்போதும் என்கூடவே இருந்ததுபோல, என்னைச் சூழ்ந்திருந்தது போல ஓருணர்வு. முன்பள்ளி சென்றபோதும், முதன்முதலாக பாடசாலை சென்றபோதும் அந்தப்பாடல் கூடவே காற்றில் வந்திருக்கிறது.

முதன்முறை விடிகாலைப் பொழுதில் ஊரை விட்டுச் சென்றபோது முதல்நாள் காலைப்பொழுதில் கேட்ட பாடலாக இருந்தது. திரும்பி வந்து உடைந்த வீட்டைத் திருத்தத் தொடங்கிய அந்த முதல்நாளில் அதே பாடல்தான் ஒலித்திருக்க வேண்டும். மறுபடியும் தொண்ணூறாம் ஆண்டில் நிரந்தரமாக ஊரைவிட்டுப் பிரிந்த அந்தக் கடைசி நாளின் காலைப் பொழுதிலும் நிச்சயமாக ‘இதயம் ஒரு கோவில்’ தான் முதற்பாடலாக ஒலித்திருக்க வேண்டும்.

தாய்நிலம் விட்டுப் பிரிந்தபின் அவ்வளவாகக் கேட்க வாய்க்கவில்லை. எப்போதாவது கேட்க நேரும்போதெல்லாம் சடுதியாக என் சொந்தமண்ணுக்கு, பால்யகாலத்துக்கு அழைத்துச் சென்றுவிடும். அதற்காகவே பின்னிரவு நேரங்களில், என் அறையை மட்டும் நிறைக்கும் மெல்லிய சத்தத்தில், கண்களை மூடிக் கேட்டபடியே நினைவுகளில் மூழ்கிக் கிடந்திருக்கிறேன்.

இப்போதும் அப்படித்தான். சொந்தமண்ணில், பலவருடப் பிரிவால் ஒருவருக்கொருவர் அந்நியமாகிப் போய்விட்ட எனக்கும், எங்கள் வீட்டுக்குமான உறவினைப் பரிச்சயம் செய்துகொள்வதுபோல ஹெட் செட்டை மாட்டி பாடலைக் கேட்கத் தொடங்கியிருந்தேன்.

இந்தப்பாடல் ஒலிக்கும் போதெல்லாம் சோதிலிங்கம் மாமாவின் ஞாபகமும் கூடவே வரும். என் சிறுபிராயத்தில் கேட்ட பாடல்களையும் அவரையும் பிரித்துப் பார்க்க முடிவதில்லை. அப்படியே முன்வாசலில் வந்து நின்றுகொள்கிறேன். அதோ இடது பக்கமாக மண்டிக்கிடக்கும் சிறு இப்பிலிப்பில் மரங்களுக்கப்பால் சோதிலிங்கம் மாமா வீடு தெரிகிறது. அயலில் எல்லா வீடுகளும் சில திருத்தப்பட்டு, பல புதிதாக கட்டப்படுகையில் அந்த வீடு மட்டும் அப்படியே இருகிறது.

பச்சை நிறப் பெயிண்ட் அடித்த வெளிப்புறம் நிறம் மங்கிப் போய் இடையிடையே திட்டுத் திட்டாக மட்டும் வெளிறிய பச்சை தெரிகிறது. வழக்கம்போலவே கதவு யன்னல்கள் நிலையோடு கழற்றப்பட்டு, சுவர் சில இடங்களில் பூச்சுக் கழன்று தெரிந்தது. ஓட்டுக் கூரை போடப்பட்டிருந்ததால் மேற்கூரை பிழைத்திருக்கிறது.

பாடல் இப்போது அந்த வீட்டிலிருந்தே கேட்பதாக ஒரு பிரமை. அல்லது அப்படி நினைத்துக் கொள்கிறேன். அதோ ஃபிளாட் போட்ட அந்த முன் கூடத்தின் அரைச்சுவருக்கப்பால்தான் செட் என அழைக்கப்படும் ரேடியோ வைக்கப்படிருக்கும். அம்ப்ளிஃபயர் இணைத்து, எங்கள் சுற்று வட்டத்தில் ஆறேழு வீடுகளுக்கு தரமான ஒலியில் கேட்க அதுவே போதுமானது. முக்கிய தேவை ஏற்படின், வீட்டிலிருந்து நீண்ட வயரின் மூலம் பெரிய ஒலிபெருகிப் பெட்டி இணைத்துப் பிரதான வீதியும், ஒழுங்கையும் சந்திக்கும் பகுதியில் வைக்கப்ப்பட்டு ஏரியா முழுக்கக் குரல் கொடுக்கப்படும்.

ஒரு பெரிய சைஸ் தீப்பெட்டி போல உயரமான, தட்டையான ஒரு ரேடியோ அவரிடமிருந்தது. ஒரு த்ரீ வீலரின் சில்லின் அளவில் இரண்டு செப்பு நிறத்தில் ஃபிரேம் போட்ட ஸ்பீக்கர்கள் இருபக்கமும் பொருத்தப்பட்டிருக்க நடுவில் கசெட்! அப்போதைய பிரபலமான மொடலாக இருக்கவேண்டும். வேறுசில வெளிநாட்டுக்காரர்களின் வீடுகளில் சப்பட்டையாக உயரம் குறைந்த, நீளம் அதிகமான ஆர்.எக்ஸ். ரேடியோக்கள் புழக்கத்திலிருந்தன.

சோதிலிங்கம் மாமாவுக்குக் கடவுள் நம்பிக்கை இருந்ததா இல்லையா என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால் இளையராஜாவை கடவுளாகக் கொண்டு எண்பதுகளில் இயங்கிவந்த திரையிசை மதத்தை எங்கள் மாமாக்கள், சித்தப்பாக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பின்பற்றி வந்ததை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். பார்த்திருக்கிறோம்.சோதிலிங்கம் மாமாவும் அவர்களில் ஒருவர். காலையில் 'இதயம் ஒரு கோவில்' பாடலைத்தான் எங்கள் ஏரியாவின் திருப்பள்ளியெழுச்சியாக மாற்றி வைத்திருந்தார்.

நடுத்தர உயரம். சற்றே நீளமாக வளர்ந்த நெளியான தலைமுடியை ஒருபக்கம் சரித்து வாரியிருப்பார். அன்றையகால ரஜினி ஸ்டைலாக இருக்கலாம். அப்போதைய ரஜினி மட்டுமல்ல இளையராஜாவும்கூட அப்படித்தான் இருந்ததாகப் பார்த்த ஞாபகம். முகத்தில் சிறு புன்னகையும் கழுத்தில் ஒரு தங்கச்சங்கிலியும் அணிந்திருப்பார். கட்டம் போட்ட சாரத்தைச் சற்றுத்தூக்கிக் கட்டியிருப்பார். மொத்தத்தில் 'சுப்பிரமணியபுரம்' படத்தில் வரும் அதே ஸ்டைல். அன்றைய நாட்களில் மாமாக்கள், பெரிய அண்ணன்கள எல்லோருமே அப்படித்தான் இருந்ததாக ஞாபகம்.யாருடனும் அவர் அதிர்ந்து பேசிப் பார்த்ததில்லை. மெதுவான குரலில் சிறுவர்கள் எங்களுடன் அன்பாகவே பள்ளிக்கூடம், படிப்பு என்று பேசுவார். பின்னாளில் அவரும் ஒரு சண்டியர் என்று சொல்லக் கேட்கையில் நம்ப முடிந்ததில்லை, இப்போதும்கூட.

‘இதயம் ஒரு கோவிலி’ல் தொடங்கி இளையராஜாவின் ராஜாங்கம்தான் தினமும். அவ்வப்போது, 'நினைக்கத் தெரிந்த மனமே', 'சொன்னது நீதானா' என அவருடைய அப்பா காலத்துக்கும் அழைத்துச் செல்வார். அவருக்கு வாசிப்புப் பழக்கமும் இருந்தது. குமுதம், ராணிமுத்து என்று புத்தகங்கள் வாங்கிப்படிப்பார். பின்னர் யாரோ ஒருவர் இரவல் வாங்கி, ஏரியா முழுவதும் ஒரு சுற்று வலம்வரும். அக்காக்கள் பலரும் அவரின் இலக்கிய சேவையால் பயனடைந்தார்கள். அப்போது படம் மட்டும் பார்க்கும் வயதிலிருந்த எனக்கு குமுதத்தில் 'ஆவி ராச்சியம்' என்கிற தொடர் வெளிவந்ததாக ஞாபகம்.

ஊரில் இருக்கையில், எப்போதாவது ஓரிரு பாரிய வெடிச்சத்தம் கேட்கும். ‘பலாலில இருந்து ஷெல் அடிக்கிறாங்கள். கொஞ்சம் தள்ளிப் போயிருந்துட்டு வரலாம்’ எனக்கிளம்பிச் சென்று, பின்னர் நிலைமை சீராக மறுநாள் காலையில் மீண்டும் வருவது வழக்கம்.

அப்போது இரவில் டோச் லைட்டைப் பிடித்துக் கொண்டு ஷெல்துண்டு, துப்பாக்கி ரவைக் கோதுகள் சேகரிக்கும் விசித்திரமான வீரப் பழக்கம் எங்கள் பகுதியில் சிலருக்கு இருந்தது.நம் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு பிடிவாத குணம் இருக்கும். எங்களுக்கே தெரியாமல், யாருக்காவும் மாற்றிக் கொள்ளாத, விட்டுக் கொடுக்காத இயல்பாக இருக்கும். மற்றவர்களுக்கு அது சிறுபிள்ளைத்தனமாகவும் முட்டாள்தனமாகவும் இருக்கும்.

சோதிலிங்கம் மாமாவுக்கும் ஒரு பிடிவாத குணம் இருந்தது. அயலவர்கள் ஏதும் ஷெல்லடி, பிரச்சினை என்று கிளம்பிச்செல்லும்போதெல்லாம், சுயாதீனமான இளவட்டங்களில் ஒருவரான சோதிலிங்கம் மாமா வீட்டை விட்டுச் செல்வதில்லை.

ஓர் சிவராத்திரி நாளின் அதிகாலைப் பொழுதில், ஹெலிகொப்டர் ஒன்று சுற்றிச் சுற்றிச் சுட்டுக் கொண்டிருக்க, துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கும் ஓசையும், அவ்வப்போது ஷெல் சத்தமும் முழங்கிக் கொண்டிருந்த ஒரு அசுபமுகூர்த்த வேளையில் கைக்கு அகப்பட்டதை எடுத்துக் கொண்டு ஊரே மொத்தமாக ஓடியபோதும் அவர் அசையவில்லை. காலை பத்து மணிக்கு இயக்கம் ‘ஃபீல்டில’ இறங்கி, மதியம்போல ‘கிளியர்’ பண்ணி இருதரப்பும் ஓய்வெடுத்த நேரத்தில் பெடியளுக்கு தேநீர் போட்டுக் கொடுத்து, சோறு சமைத்து சேர்ந்து சாப்பிட்டு அங்கேயே இருந்தாராம். ஓரிரு நாட்களில் இனியும் தாக்குப் பிடிக்க ஏலாது என்று இயக்கம் பின்னகர்ந்தபோதுதான் மாமாவும் சேர்ந்து 'விட்ரோ' பண்ணியிருந்தார்.

இங்கேதான் சோதிலிங்கம் மாமாவின் தனித்தன்மையான ஒரு வினோதமான பழக்கம் வருகிறது. பின்வாங்கிச் சென்ற இயக்கம் கொல்லன்கலட்டியில் ஒரு இடத்தில கவர் எடுத்து நிலைகொண்டிருந்தது. அந்தப் பொயிண்டுக்கு மிகச் சமீபமாகத்தான் அவரும் நிலைகொண்டிருந்தாராம். ஆமிக்கும், இயக்கமும் நூறு மீட்டர் இடைவெளியில் பங்கர் அடிச்சு பொசிஷன்ல இருந்ததாம். இயக்கத்தின்ர பங்கர்ல இருந்து இரண்டு மூன்று வீடு தள்ளித்தான் மாமாவின் பொசிஷன். அதற்குப் பிறகு அரைக் கிலோமீட்டராவது தாண்டித்தான் பொதுசனம் குடியிருந்தது. ஆமி இயக்கத்தைத் தாண்டி வந்தாலும், சோதிலிங்கம் மாமாவை எதிர்கொண்டுதான் சனத்தை நெருங்க வேணும் என்பதுபோல இந்த ஏற்பாட்டை அவர் கடைப்பிடித்திருக்கலாம். அந்த இடம்பெயர்வுக்குப் பின்னரும்கூட அவர் அப்படியேதான் இருந்தார்.மாற்றிக் கொண்டதில்லை.

இந்திய அமைதிப்படையின் காலம். ஆரம்பத்தில் விதவிதமான விநோதமாக வேடிக்கையாகத் தோன்றிய ஆமியும், கடலைப்பருப்பு, கடலை எண்ணெய் பற்றிய தேடல்கள் மக்களுக்கு முடிந்து போயிருந்தது. இராணுவமும் பெரிய வீடுகள், வீட்டுக்கொரு கிணறு, கிணறு நிறையத் தண்ணீர் என்று யாழ்ப்பாணத்தைப் பிரமித்துப் பாராட்டி ஓய்ந்துபோய் வந்த வேலையான ‘அமைதியைக் கவனிக்கத்’ தொடங்கியபோது எங்களூரிலும் சிலர் கவனிக்கப்பட்டார்கள்.

அன்று காலை வேளை அமைதியாக இருந்தது. ‘சோதிலிங்கத்தைப் பிடிச்சுக்கொண்டு போட்டாங்களாம்’ செய்திவந்தது. அன்றும் மறுநாளும் எந்தப் பாட்டுச் சத்தமும் கேட்கவில்லை.ஊரில பெயர் சொல்லும் அளவுக்கு சண்டியர்தானே, அதனால் ஏதோ தனிப்பட்ட பகையை, நாட்டுப் பிரச்சினையாக்கி தீர்வு காணும் நோக்கத்தில் யாரோ காட்டிக் கொடுத்துவிட்டதாக ஒரு பேச்சு. முக்கியமான சமயங்களில் சந்தியில் சத்தமாக இயக்கப்பாட்டுக்கள் போடுறதுதான் காரணம் என்றும் ஒரு சாரார் சந்தேகம் தெரிவித்தார்கள்.

"ஆ..." என்று ஆரம்பித்த இளையராஜாவின் குரல் தொடர்ந்து, "தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே..." காலையின் அமைதியை வருடிக் கலைத்தது.

‘ஆமி சோதிலிங்கம் மாமாவை விட்டுட்டாங்கள்!’ அயலுக்குத் தெரிவித்துக் கொண்டதாகவேபட்டது. "யார் அடித்தாரோ.." வழமைக்கு மாறாக திரும்பத் திரும்பக் கேட்டதாக ஒரு பிரமை. ‘நல்ல அடியாம்’ என்று பேசிக் கொண்டார்கள். ‘யாரையோ கேட்டு விசாரிச்சாங்களாம். கட்டி வச்சு அடிச்சவங்களாம். ரெண்டு காதுக்குப் பக்கத்தாலையும் உரசிக் கொண்டு போறமாதிரி சுட்டவங்களாம். ஒண்டுக்குமே வாயே திறக்கேல்லயாம். அவங்களும் களைச்சுப் போய் விட்டுட்டாங்களாம்’- பலவாறாகப் பேசிக் கொண்டார்கள். பலவாறான பேச்சுக்கள் உலாவின. சோதிலிங்கம் மாமா அதுபற்றி எதுவும் பேசவில்லை. எதுவும் நடக்காதது போல அமைதியாக இருந்தார்.

மறுநாள் காலை கிணற்றடியில் தோளில் துவாயும், வாயில் டூத் பிரஷ்ஷையும் வைத்துக் கொண்டு சற்றே தலையைச் சரித்து ஒரு தினுசாக மேலே பார்த்துக் கொண்டு ஆழ்ந்த யோசனையுடன் நின்றிருந்தார். பின்னணியில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது, 'வானத்தைப் பார்த்தேன் பூமியைப் பார்த்தேன் மனுஷரை இன்னும் பார்க்கலையே!'

நல்லூரின் வீதியில் திலீபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தபோது, ஊர் முழுவதும் ஒருவித சோகம் கவிந்திருந்தது. சோதிலிங்கம் மாமா ஒழுங்கையும், கீரிமலை வீதியும் சந்திக்கிற இடத்தில் பெரிய பொக்ஸ் எல்லாம் செட் பண்ணி தொடர்ந்து எழுச்சிப் பாடல்களை ஒலிபரப்ப ஆரம்பித்தார். என்னதான் எழுச்சிப் பாடல்கள் எனினும் முதலில் கடவுள் வணக்கத்துடன் ஆரம்பிப்பதுதானே முறை. அது அப்போது எனக்குப் புரியவில்லை. முதலாவதாக ஒலிக்கும் பாடல், 'முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே..'

அப்போதெல்லாம் என் வயதொத்தவர்கள் போலவே எனக்கும் சில நம்பிக்கைகள் இருந்தன. 'அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்', 'தோல்வி நிலையென நினைத்தால்' பாடல்களெல்லாம் இயக்கபாடல்கள்தான் என்பதில் நானும் தெளிவாக இருந்தேன். ஆனால் இந்த 'முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே' பாட்டும் இயக்கப்பாட்டுத்தானோ என நான்மட்டும் தீவிரமாகச் சந்தேகப்பட்டதற்குக் காரணம் சத்தியமாகச் சோதிலிங்கம் மாமாதான். 'பாடும் பறவைகள் வாருங்கள்' என்றொரு பாடலும் அப்போதுதான் புதிதாக ஒலிக்க ஆரம்பித்தது. ஓர் அதிகாலைப் பொழுதில் பாடல்கள் நின்றுபோய் ஷெனாயும், சித்தாரும் நிகழ்ந்துவிட்ட ஒருபெரும் சோகத்தை அறிவித்தன.

இந்திய இராணுவம் வெளியேறியபோது சந்திக்குச் சந்தி ஒலிபெருக்கி கட்டி, கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 'பரணி பாடுவோம்' பாடலோடு எங்கள் ஏரியாவும் கலகலத்தது. அடுத்துவந்த நாட்கள், மாதங்கள் மிக வேகமாக கடந்து போயின. நாங்களும் நிரந்தரமாக ஊரை விட்டு எங்கெங்கோ பிரிந்துபோனோம்.

ஊரை வீட்டு பிரிந்த பிறகு நீண்ட நாட்களாக, இல்லை பல வருடங்களாகவே 'இதயம் ஒரு கோயில்' பாடலைக் கேட்ட ஞாபகம் இல்லை. ஏனோ தெரியவில்லை அந்தப் பாடல்மட்டும் கேட்ட ஞாபகம் இல்லை.

சோதிலிங்கம் மாமா தொடர்ந்தும் கேட்டுக் கொண்டிருந்தாரா எனவும் தெரியவில்லை. அவரிடமிருந்த ஏராளமான பாடல் காசெட்டுகள் என்னவாயின? நிச்சயமாகத் தன்னுடன் எடுத்துச் வந்திருக்கக்கூடும். சோதிலிங்கம் மாமா ஏ.ஆர்.ரஹ்மான் இசையைக் கொண்டாடியிருப்பாரா? அல்லது அதுவரை தீவிர இளையராஜா ரசிகராயிருந்த மாமாக்கள் பலரைப்போல ரஹ்மானை ஏற்றுக் கொள்ளமுடியாமல் ஒரு மனத்தடை உண்டாகியிருக்குமா? நான் அப்படி நம்பவில்லை. 'சின்ன சின்ன ஆசை' அவரது காலையின் முதற்பாடலாக மாறியிருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக 'காதல் ரோஜாவே' அவர் அன்றாடம் கேட்கும் பாடல்களில் இடம்பிடித்திருக்கும்.

நீண்டகாலத்தின் பின்னர் 'இதயம் ஒரு கோயில்' பாடலைத் திரும்ப ஓர் பின்னிரவு வேளையில் லயித்துக் கேட்டபோது, கொழும்பில் வேலைக்குச் சேர்ந்து விட்டிருந்தேன். அப்படி முதன்முதல் கேட்டபோதும், அதன்பின் எப்போது கேட்டாலும் அது என்னைச் சடுதியாக என் பால்ய காலத்துக்கு கொண்டு சேர்த்துவிட்டதுபோல உணர்கிறேன்.

இதோ சோதிலிங்கம் மாமா வீடு, அதே பழைய அடையாளங்களின் எச்சத்தோடு, அயற்சூழலுக்கு முற்றிலும் மாறானதாகதனித்திருக்கிறது. இன்னும் சில காலம் அப்படியே இருக்கக் கூடும். யாரவது திருத்துவர்களா? இடித்துவிடுவார்களா? தெரியவில்லை. அவர் இப்போது இங்கே இருந்தால் என்ன பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும்? விடை தெரியாத பல கேள்விகள் எப்போதும் எம்மைச் சூழ்ந்தவாறே இருக்கின்றன.

தொண்ணூற்று ஐந்தில் 'முன்னேறிப் பாய்தல்' என்கிற பெயரில் இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது. அப்போது, அளவெட்டியில் முன்னேறி நிலைகொண்டிருந்தது இராணுவம். வழக்கம்போல புலிகளின் முன்னரங்க நிலைக்கு சமீபமாக சோதிலிங்கம் மாமாவும் நிலைகொண்டிருந்தாராம்.

இராணுவம் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருந்தது. புலிகளின் வழமைக்கு மாறாக ஒரு பௌர்ணமி இரவின் வெளிச்சத்தில் 'புலிப்பாய்ச்சல்' என்கிற பதில் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. மீண்டும் புறப்பட இடத்துக்கே இராணுவம் திருப்பியனுப்பப்பட்டது. எங்கும் 'முன்னேறிப் பாய்வதென்ன அம்மா' பாடல் உற்சாகமாக ஒலிக்க, இடம்பெயர்ந்தவர்கள் மீண்டும் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப, வழமைக்கு மீண்டது யாழ்ப்பாணம்.

சோதிலிங்கம் மாமா பற்றி ஒருதகவலும் இல்லை. அவர்தங்கியிருந்த வீட்டில் அவரது சைக்கிள் மட்டும் கிடந்ததாம். நிச்சயமாக அந்தச் சைக்கிளில் டைனமோ ஒன்று பொருத்தி இருந்திருக்கும்.

அவர் கடைசியாகக் கேட்ட பாடல் எதுவாயிருக்கும்?!

தமிழீழத்தின் தளபதிகளில் ஒருவனாகவும், அரசியல் தலைவனாகவும் இருந்து தமிழர்களின் வாழ்வில் விடிவைப்பெற்றுத்தர துடியாய் துடித்து உலகெலாம் ஓடித்திரிந்த எமது அன்புக்குரிய பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் வீரச்சாவை அணைத்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன.

தமிழினத்தின் இருப்புக்காக, அதன் மூச்சுக்காக உழைத்த அந்த உத்தமன் இன்று எம்மத்தியில் இல்லாவிட்டாலும், அனைவரினதும் மனங்களில் குடிகொண்டுள்ளான். இவனது நினைவுடன் நாம் ஒன்றுபட்டு இறுதிவரை விடுதலைக்காக உழைப்போம். அதுவே விடுதலைக்காக போராடி களத்தில் வீழ்ந்த மாவீரர்களுக்கு செய்யும் அஞ்சலியாகும்.



மேலும் சு.ப.தமிழ்ச்செல்வன் காணொளிகள்

பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனின் வீரமரணம் குறித்து தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் 03.11.2007 அன்று விடுத்த செய்தியை காலத்தின் தேவை கருதி மீள் பிரசுரம் செய்கின்றோம்.
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
03-11-2007.

எனது அன்பான மக்களே!

சமாதான வழியில், நீதியான முறையிலே எமது மக்களது தேசியப் பிரச்சினைக்கு அமைதித்தீர்வு காணுமாறு அனைத்துலகம் அடுத்தடுத்து அழைப்புவிடுத்தபோதும், சிங்கள தேசத்திலிருந்து நல்லெண்ணம் வெளிப்படவில்லை. பௌத்தத்தின் காருண்யத்தைக் காணமுடியவில்லை. சிங்கள தேசம் தனது இதயக் கதவுகளைத் திறந்து, சமாதானத் தூதும் அனுப்பவில்லை. மாறாக, போர்க்கழுகுகளை ஏவி, இராட்சதக் குண்டுகளை வீசியிருக்கிறது. எமது அமைதிப்புறாவைக் கொடூரமாக, கோரமாகக் கொன்றழித்திருக்கிறது.

தமிழுலகமே ஆழமாக நேசித்த ஒரு அரசியல் தலைவனைச் சிங்கள தேசம் இன்று சாகடித்திருக்கிறது. தமிழீழ மக்களின் மனங்களை வென்ற ஒரு தன்னிகரற்ற தலைவனைச் சிங்களம் பலிகொண்டிருக்கிறது. எமது சுதந்திர இயக்கத்தின் அரசியற்றுறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனையும் ஏனைய ஐந்து போராளிகளையும் இழந்து இன்று தமிழீழ தேசம் வரலாற்றில் என்றுமில்லாத ஒரு பேரிழப்பைச் சந்தித்திருக்கிறது. இந்த மாபெரும் சோக நிகழ்வு எம்மக்களை அதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.

தமிழ்ச்செல்வன் எமது சுதந்திர இயக்கத்தில் இணைந்த காலத்திலிருந்தே என்னோடு ஒன்றாக, நெருக்கமாக வாழ்ந்தவன். நான் அவனை ஆழமாக அறிந்து, ஆழமாகவே நேசித்தேன். எனது அன்புத் தம்பியாகவே வளர்த்தேன். அவனது அழகிய சிரிப்பும் அதனுள் புதைந்த ஆயிரம் அர்த்தங்களையும் அவனுள் அடர்ந்து கிடந்த ஆற்றல்களையும் ஆளுமைகளையும் நான் ஆரம்பத்திலிருந்தே கண்டுகொண்டேன். இலட்சியப் போராளியாக, தலைசிறந்த தானைத் தளபதியாக, மாபெரும் அரசியல் பொறுப்பாளனாக, அனைத்துலகோடும் உறவாடிய இராஜதந்திரியாக, பேராற்றல்மிக்க பேச்சுவார்த்தையாளனாக அவனை வளர்த்தெடுத்தேன்.

தான் நேசித்த மண் விடுதலை பெறவேண்டும், தான் நேசித்த மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்று சதா சிந்தித்தான். தான் நேசித்த அந்த மக்களது விடுதலைக்காக, விடிவிற்காகத் தன்னையே ஊனாக உருக்கி, உறுதியாக உழைத்த ஒரு இலட்சிய நெருப்பு அவன்.

நீண்ட நெருப்பு நதியாக நகரும் எமது விடுதலை வரலாற்றில் அவன் ஒரு புதிய நெருப்பாக இணைந்திருக்கிறான். இந்த இணைவிலே, எமது கனத்த இதயங்களில் ஒரு பெரும் இலட்சிய நெருப்பை மூட்டியிருக்கிறான். எமது இலட்சிய உறுதிக்கு உரமேற்றியிருக்கிறான். இந்த உறுதியில் உரம்பெற்று, நாம் எமது இலட்சியப் பாதையில் தொடர்ந்தும் உறுதியோடு பயணிப்போம்.

‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’

வே. பிரபாகரன்
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.

ஒட்டுமொத்தத் தமிழ்ப்பரப்புக்கூடாகப் பார்த்தால் ஜெயலலிதா மிக அரிதான ஒரு பேராளுமை. ஈழத்தமிழ் நோக்குநிலையில் இருந்து பார்த்தால் அவர் ஒரு காலகட்டத்தில் எதிரானவராகத் தோன்றுகிறார். இன்னொரு காலகட்டத்தில் நட்பானவராகத் தோன்றுகிறார்.

ஒட்டுமொத்தத் தமிழ்ப்பரப்பில் ஆங்காங்கே துருத்திக் கொண்டு தெரியும் பெண்ணிலை வாதிகளோடு ஒப்பிடுகையில் ஜெயலலிதா தன்னை ஒரு பெண்ணியவாதியாகக் காட்டிக்கொண்டவரல்ல. அவர் உருவாகி வந்த பாதையும் அதாவது தென்னிந்தியச் சினிமாப் பாதையும் பெருமளவிற்கு அதற்குரியதல்ல. பெண்ணை ஒரு போகப் பொருளாக, கவர்ச்சிப் பொருளாக சித்திரிக்கும் ஒரு சினிமா மரபிற்கூடாகவே ஜெயலலிதா மேலெழுந்தார். அவர் ஏற்று நடித்த பாத்திரங்களில் பெரும்பாலானவை மேற்சொன்ன மரபிற்குரியவைதான். அந்த மரபின் ஓர் உற்பத்தியாகிய எம்.ஜி.ஆர் தான் அவரை அரசியலுக்குள் இழுத்தார்.

பெண்ணிலை வாதம் தொடர்பில் ஜெயலலிதா பெரியளவிற்கு கோட்பாட்டு விளக்கங்களைக் கொண்டவராக தோன்றவில்லை. இந்தியாவில் பெண்ணியவாதிகளாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் பேராளுமைகளோடு அவர் கோட்பாட்டு ரீதியிலான தோழமையைப் பேணியவராகவும் தெரியவில்லை. ஆனால் ஆண் மைய உலகில் ஒரு பெண் என்பதற்காகவே அவர் நசுக்கப்பட்ட போதெல்லாம் அதற்கெதிராக வன்மத்தோடும், றாங்கியோடும் அவர் மேலெழுந்தார். அங்கேதான் ஜெயலலிதா என்ற ஒரு பெண் ஆளுமை பெருமளவிற்கு ஆண் மைய தமிழ் உலகில் அரிதான ஒன்றாக உருவாகியது.

எம்.ஜி.ஆர் தான் அவரை அரசியல்வாதி ஆக்கினார். ஆனால் அதற்கு முன்னரே அவர் ஒரு நட்சத்திரமாக பிரகாசித்துக் கொண்டிருந்தார். சினிமாவில் தான் பெற்ற பிரபல்யத்தை அவர் அரசியலில் முதலீடு செய்தார் என்பதே சரி. ஆனால் அவருடைய அரசியல் பாதை இலகுவானதல்ல. நவீன இந்திய அரசியலில் இறங்கிய பெண் ஆளுமைகளோடு ஒப்பிடுகையில் ஜெயலலிதாவைச் செதுக்கிய அனுபவங்கள் அவமானகரமானவை. கொடுமையானவை.

அவரை அரசியலுக்குள் இறக்கிய எம்.ஜி.ஆர் அவரை தன் உத்தியோகபூர்வ வாரிசாகப் பிரகடனப்படுத்தவில்லை. எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையில் இருந்த நெருக்கம் பகிரங்கமானது. ஆனால் உத்தியோகபூர்வமானதல்ல. இந்தியப் பண்பாட்டுக் கண் கொண்டு நோக்கும் போது அந்த உறவுக்கு உயர்வான அங்கீகாரம் இருக்கவில்லை. அவ்வாறான ஓர் அங்கீகாரத்தை அவருக்குப் பெற்றுக் கொடுக்க எம்.ஜி.ஆரும் துணியவில்லை. இப்படிப் பார்த்தால் ஆண் மைய உலகில் அவரைச் சுரண்டிய ஆண் ஆளுமைகளுக்குள் எம்.ஜி.ஆரும் அடங்குவார். எம்.ஜி.ஆரின் மரணச்சடங்கில் ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட அவமானங்களுக்கும், காயங்களுக்கும் அதுவும் காரணம்.

சட்டசபையில் எதிர்க்கட்சிக்காரர்கள் அவரைத் துகில் உரிந்ததற்கும் அதுவே காரணம். முதலாவதாக அவர் ஓர் அங்கீகரிக்கப்பட்ட உறவுக்கூடாக மேலெழாதவர் என்பது. இரண்டாவது அவர் ஒரு பெண்ணாக இருந்தது. எம்.ஜி.ஆர் பெற்றுக் கொடுக்கத் தவறிய அங்கீகாரத்தை பெறுவதற்கான ஒரு போராட்டமாகவே அவருடைய அரசியல் வாழ்வின் பெரும்பகுதி அமைந்து விட்டது.

பாலியல் சுதந்திரம் அதிகமுடைய மேற்கத்திய ஜனநாயகப் பரப்புக்களில் குறிப்பாக அமெரிக்காவில் ஒருவர் அரசுத் தலைவராக வர விரும்பினால் அவரது குடும்ப வாழ்வு உற்றுக் கவனிக்கப்படும். அவர் ஒரு மகிழ்ச்சியான இல்லறத்தை கொண்டவரா என்பது அவரை தெரிவு செய்வதற்கான முக்கிய தகுதிகளில் ஒன்றாக பார்க்கப்படும். ஆனால் பாலியல் சுதந்திரம் மிகக் குறைந்ததும் இல்லறத்தை உயர்வாகப் போற்றுவதுமாகிய இந்திய சமூகத்தில் ஒரு தலைவரைத் தெரிவு செய்யும் பொழுது அவரது குடும்ப வாழ்க்கை முக்கிய முன் நிபந்தனையாக கொள்ளப்படுவதில்லை.

இந்தியப் பண்பாட்டில் இல்லறத் தலைவியாக இருப்பது என்பது ஒரு பெண்ணுக்கு அதிகம் பாதுகாப்பானதாகப் பார்க்கப்படுகிறது. திருமணம் ஒரு பெண்ணின் வாழ்வில் மிகப்பிரதான திருப்பமாகக் கருதப்படுகிறது. இந்தியக் காப்பிய மரபில் பிரகாசித்த பெரும்பாலான பெண் ஆளுமைகள் குடும்பப் பெண்களே. ஆனால் நவீன இந்திய அரசியலில் துருத்திக் கொண்டு மேலெழுந்த எல்லாப் பெண் ஆளுமைகளும் திருமண வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் என்பதல்ல. ஜெயலலிதா மேற்கு வங்கத்தின் மம்தா பனெர்ஜி உத்தர பிரதேசத்தின்; மாயாவதி போன்றோர் தனியன்களே.

இந்தியக் காப்பியங்களும், இதிகாசங்களும் அநேகமாக ஆண் மைய, குடும்ப மைய நோக்கு நிலையிலிருந்து எழுதப்பட்டவைதான். அவற்றில் ஆண்களே மையப் பாத்திரங்கள். இவ்வாறான ஆண் மைய இதிகாச மரபில் ஒரு பெண் மையப் பாத்திரத்தை கட்டியெழுப்பியவர் அரவிந்தர். இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு அதில் ஈடுபட்டு சிறை சென்றவர். அங்கிருந்து ஆன்மீக வாதியாக வெளிவந்து பாண்டிச்சேரியில் தனது ஆச்சிரமத்தை நிறுவியவர். அவர் மகாபாரதத்தில் உள்ள சத்தியவான் சாவித்திரி என்ற கிளைக் கதையில் வரும் சாவித்திரியை மையமாகக் கொண்டு சாவித்திரி என்ற பெயரில் ஒரு காப்பியத்தை உருவாக்கினார்.

மரணத்தை வென்றவள் சாவித்திரி. கணவனின் உயிரிற்காக அவள் மரணத்தோடு மோதினாள். காதல் எப்படி மரணத்தை வெல்ல முடியும் என்பதற்கு அவள் ஒரு காப்பிய உதாரணம். அரவிந்தர் சாவித்திரியை மரணத்தை வெற்றி கொண்ட காதலின் குறியீடாக மட்டும் காணவில்லை. ஆண் மையக் காப்பியப் பரப்பில் ஒரு பெண்ணை மையமாக வைத்து அவர் தனது காப்பியத்தைக் கட்டியெழுப்பினார். அவருடைய சாவித்திரி ஒரு விடுதலையின் குறியீடு. அது லௌகீக விடுதலையையும் குறிக்கும் ஆன்மீக விடுதலையையும் குறிக்கும். சாவித்திரியை முன்வைத்து அரவிந்தர் மனிதனின் ஆன்மீகக் கூர்ப்பை அதன் அறிவியல் மற்றும் ஆன்மீகத் தளங்களில் விவாதிக்கின்றார்.

அரவிந்தரைப் போலவே பாரதியாரும் மகாபாரதத்தில் இருந்து பாஞ்சாலியை தனித்தெடுத்தார். அவளை மையமாகக் கொண்டு பாஞ்சாலி சபதத்தை எழுதினார். அதுவும் ஒரு பெண்மையக் குறுங்காவியம்தான். பாரதியின் பாஞ்சாலி பெண் விடுதலையின் குறியீடாக வருகின்றாள். பெண்ணை சூதாட்டத்தில் பகடைக்காயாக வைக்கும் ஒரு பாரம்பரியத்தையும் மரபையும் அவள் உடைத்துக் கொண்டு மேலெழுகிறாள். பாஞ்சாலியின் சபதம் இல்லையேல் பாரதப் போரும் இல்லை. ஒரு பெண்ணுக்கு உண்டாகிய அவமானத்தின் விளைவே பாரதப் போர் எனலாம்.

சாவித்திரியும் சரி பாஞ்சாலியும் சரி குடும்பப் பெண்களே. ஆனால் ஜெயலலிதாவோ, மம்தா பனெர்ஜியோ மாயாவதியோ அவ்வாறல்ல. பூலான் தேவியும் அவ்வாறல்ல.

இந்தியப் பண்பாட்டு நோக்கு நிலையில் இருந்து பார்த்தால் ஜெயலலிதாவின் குடும்பவாழ்க்கை வெற்றிகரமானதல்ல. முன்னுதாரனமானதுமல்ல. தாயின் மரணத்தின் பின் அவர் நட்புக்கே முன்னுரிமை கொடுத்தார். சசிகலாவுக்கும் அவருக்கும் இடையிலான உறவு அதிகம் சர்ச்சைகளுக்குள்ளாகியது. இடைக்கிடை உடைந்து அதன் பின் ஒட்டும் வகையிலானது. பண்பாட்டு நோக்கு நிலையில் அதிகம் விமர்சனத்திற்குள்ளாகியது. ஆனால் அந்த சர்ச்சைகள் விமர்சனங்களுக்காக ஜெயலலிதா சசிகலாவைக் கைவிடவே இல்லை. இது விடயத்தில் அவர் இந்தியப் பண்பாட்டு அளவு கோல்களுக்குள் அடங்க மறுத்த ஒரு முரணியாகவே மேலெழுந்தார்.

இவ்வாறு ஒரு பண்பாட்டு முரணியாக காணப்பட்ட ஒரு தலைவி ஜனவசியம் மிக்கவராகவும் மேலெழுந்தமை என்பது மிக நூதனமான ஒரு புறநடைதான். ஒரு குடும்பப் பெண்ணாக அவரால் வெற்றி பெற முடியவில்லை. ஆண் மைய உலகம் ஒரு செல்வியாக வாழுமாறு அவரை நிர்ப்பந்தித்தது. அவரும் ஒரு செல்வியாகவே தனது தலைமைத்துவத்தை ஸ்தாபிப்பதில் வெற்றியடைந்து இறுதியாக அம்மாவாக உயிரை நீத்தார். அவர் செல்வியாக வாழ்ந்தமை என்பது ஆண்மைய உலகில் அவர் ஒரு பாதிக்கப்பட்ட பெண் என்பதை மட்டும் காட்டவில்லை. கூடவே எல்லாவிதமான பாதிப்புக்களுக்குப் பின்னாலும் ஒரு செல்வியாக தன்னால் நின்று நிலைக்க முடியும் என்பதை அவர் நிரூபித்துக் காட்டினார். திருமணம் தான் ஓர் இந்தியப் பெண்ணுக்கு பாதுகாப்பானது, கௌரவமானது என்றிருந்த ஒரு பாரம்பரியத்தை உடைத்துக் கொண்டு ஒரு செல்வியாக நிமிர்ந்தவர் ஜெயலலிதா.

ஜெயலலிதா, மம்தா, மாயாவதி ஆகிய மூவரையும் ஒப்பிட்டு இந்தியன் எக்ஸ்பிரசில் ராதிகா ஐயங்கார் எழுதிய ஒரு கட்டுரையில் ஒரு முக்கிய விடயத்தைச் சுட்டிக் காட்டுகிறார். தமிழகத்தில் ஜெயலலிதா தன்னை “அம்மா”வாக ஸ்தாபித்துக் கொண்டார். மேற்கு வங்கத்தில் மம்தா தன்னை didi ஆக அதாவது “மூத்த அக்கா”வாக ஸ்தாபித்துக் கொண்டார். உத்தர பிரதேசத்தில் மாயாவதி தன்னை behenji ஆக அதாவது “மூத்த அக்காவாக” ஸ்தாபித்துக் கொண்டார் என்று ராதிகா ஐயங்கார் சுட்டிக் காட்டுகிறார். இந்த மூவருமே தங்களுக்குப் பின் அரசியல் வாரிசுகளை உருவாக்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இல்லறந்தான் ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்பானது என்று நம்பும் ஒரு சமூகத்தில் இல்லறத்தில் நாட்டங் காட்டாத இந்த மூன்று பெண் ஆளுமைகளும் எந்தப் பாரம்பரியத்துக்கு முரணாக தனியன்களாக மேலெழுந்தார்களோ அதே பாரம்பரியத்தின் ஓர் அம்சமாகக் காணப்பட்ட பெண்மையின் அரவணைக்கும் பண்பை தமது அரசியலுக்கு நன்கு பயன்படுத்திக் கொண்டார்கள். இந்தியப் பண்பாட்டில் அம்மா, மூத்த அக்கா ஆகிய பெண் பாத்திரங்களுக்குள்ள உணர்ச்சிகரமான உறவுமுறை முக்கியத்துவத்தை தமது அரசியலுக்கு முதலீடு ஆக்கினார்கள். எந்தப் பண்பாட்டுப் பரப்பில் முரணிகளாக அவர்கள் மேலெழுந்தார்களோ அந்தப் பண்பாட்டினால் அவர்களுக்குப் போர்த்தப்பட்ட மென்னாடையை கிழித்தெறிந்து விட்டு அந்தப் பண்பாட்டின் தாக்குதல்களிலிருந்தும் தமது அரசியல் எதிரிகளின் தாக்குதல்களிலிருந்தும் தமது உட்கட்சி போட்டியாளர்களின் தாக்குதல்களிலிருந்தும் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இரும்புக் கவசங்களை அணிந்து கொண்டார்கள்.

ஜெயலலிதா ஒரு விதத்தில் இந்திய அரசியலின் பொதுப் பண்புகளில் ஒன்றாகிய வாரிசு அரசியலின் விளைவாக அரசியலுக்குள் வந்தவர்தான். ஆனால் அவருடைய விசயத்தில் கொடுமையான புறநடை என்னவென்றால் அவர் ஒரு உத்தியோகபூர்வ வாரிசோ அங்கீகரிக்கப்பட்ட வாரிசோ அல்ல என்பதுதான். புறக்கணிப்புக்களும், அவமதிப்புக்களுமே அவரைச் செதுக்கின. அங்கீகாரத்திற்கான ஒரு போராட்டமாகவே அவருடைய அரசியல் வாழ்வு அமைந்து விட்டது. அதில் ஏற்பட்ட சவால்களையும், காயங்களையும் அவர் றாங்கியோடு எதிர்கொண்டார். றாங்கிதான் அவருடைய அடையாளம் அதுதான் அவருடைய பலம் அதுதான் அவருடைய பலவீனமும். தன்னை அவமதித்த புறக்கணித்த உதாசீனம் செய்த அங்கீகரிக்க மறுத்த ஒரு பண்பாட்டின் பிரதானிகளை தனது காலில் விழ வைத்தார். ஆனால் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் அந்த வழக்கத்தை இல்லாதொழித்தார்.

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை அவரிடம் கொள்கைத் தொடர்ச்சி இருக்கவில்லை. எம்.ஜி.ஆருக்குப் பின் அவரை ஈழத் தமிழர்கள் எம்.ஜி.ஆரின் வாரிசு என்பதற்காக அதிகம் எதிர்பார்ப்போடு பார்த்ததுண்டு. ஆனால் ரஜீவ்காந்தி கொல்லப்பட்ட பின் அவர் தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பில் ஆதரவான நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை. மிகவும் நெருக்கடியான தருணங்களில் அவர் ஈழத்தமிழர்கள் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் இலங்கை அரசாங்கத்துக்கு உற்சாகமூட்டுபவையாகக் காணப்பட்டன. கருணாநிதியால் தொடக்கப்பட்ட சிறப்பு முகாம்களை அவர் தொடர்ந்தும் பேணினார்.

ஆனால் இந்தியாவில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் மத்தியில் ஓர் அபிப்பிராயம் உண்டு. கருணாநிதி இணக்கமானவரைப் போலத் தோன்றினாலும் அவருடைய ஆட்சிக் காலங்களில் ஈழத் தமிழர்களுக்கு ஒப்பீட்டளவில் அதிகம் நெருக்கடிகள் ஏற்படுவதுண்டு. ஆனால் ஜெயலலிதா வெளித்தோற்றத்திற்கு இறுக்கமானவராகத் தோன்றினாலும் அவருடைய ஆட்சிக் காலங்களில் நடைமுறையில் ஈழத் தமிழர்களின் மீதான நெருக்கடிகள் ஒப்பீட்டளவில் குறைவாகக் காணப்படுவதுண்டு என்பதே அந்த அபிப்பிராயமாகும்.

புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சிக்குப் பின் ஈழத்தமிழர்களை தத்தெடுக்க முயற்சித்த பலருள் ஜெயலலிதாவும் ஒருவர். தோல்வியினாலும் இழப்புக்களினாலும் கூட்டுக் காயங்களினாலும் சுருண்டு போய்க்கிடந்த ஈழத் தமிழர்களுக்கு அவருடைய தீர்மானங்களும் அவர் பகிரங்கமாகத் தெரிவித்த கருத்துக்களும் ஆறுதல் அளித்தன உற்சாகமூட்டின. சீமான் அவரை ஈழத்தாய் என்றும் அழைத்தார். ஈழத் தமிழ் நோக்கு நிலையிலிருந்து அவர் மீதான எதிர்பார்ப்புக்கள் அதிகரித்துச் சென்ற ஒரு காலப்பகுதியில் அவர் உயிர்நீத்திருக்கிறார்.

இந்தியப் பண்பாட்டுப் பரப்பில் அவர் ஒரு முரணிதான். ஒரு தனியன்தான். பல்லாயிரக்கணக்காண ஆண்டுகால பாரம்பரியம் ஒன்றின் கைதியாக இருக்க அவர் விரும்பவில்லை. அதே சமயம் அரசியலைப் பொறுத்தவரை இந்தியப் பேரரசின் நன்கு ஸ்தாபிக்கப்பட்ட ஒரு சிஸ்ரத்தின் கைதிதான் அவரும். அதை மீறி எழும் அளவிற்கு புரட்சிகரமான கோட்பாட்டு உள்ளடக்கம் எதுவும் அவரிடம் இருக்கவில்லை. அந்தப் பேரரசு சிஸ்ரத்தின் கைதியாக இருந்த படியால்தான் ஈழத் தமிழருக்கான அவருடைய ஆதரவு எனப்படுவது துணிச்சலான தீர்மானங்களுக்கும் அப்பால் நகரவில்லை. அத் துணிச்சலான தீர்மானங்கள் கூட ஒரு விதத்தில் அவருடைய அரசியல் எதிரிகளை தோற்கடிக்கும் நோக்கிலானவைதான்.

ஈழத் தமிழர் விவகாரத்தை தமிழ் நாட்டில் வேறு எந்தக் கட்சியும் அல்லது செயற்பாட்டு இயக்கங்களும் தத்தெடுக்க முடியாதபடிக்கு அவர் எல்லாரையும் விடக் கடுந் தீவிரமான தீர்மானங்களை நிறைவேற்றினார். அதன் மூலம் தமிழ் நாட்டில் ஈழத்தமிழர் விவகாரத்தை தனது கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருக்க முற்பட்டார். இதனால் கட்சி எதிரிகளை மட்டும் அவர் மேவி எழவில்லை. அதோடு சேர்த்து ஈழத்தமிழர் விவகாரத்தை செயற்பாட்டு இயக்கங்கள் கைப்பற்றுவதையும் அவர் தவிர்த்தார். மிகவும் உணர்ச்சிகரமான ஈழத்தமிழர்கள் விவகாரமானது தமிழ் நாட்டில் கட்சி அரசியலுக்குள் சிக்குண்டிருப்பதையே இந்தியப் பேரரசுக்கட்டமைப்பும் விரும்பியது. ஜெயலலிதா தெரிந்தோ தெரியாமலோ அதைத்தான் செய்தார். அதாவது அந்த சிஸ்ரத்திற்குள்தான் அவரும் நின்றார்.

அவர் நோய்வாய்ப்பட்டிருந்த போது அது ஒரு பரம ரகசியமாகவும் மர்மக் கதை போலவும் பேணப்பட்டது. இது ஏறக்குறைய கெடுபிடிப் போர் காலகட்டத்தில் கொமியூனிஸ்ற் தலைவர்கள் நோய்வாய்ப்பட்டாலோ அல்லது இறந்தாலோ அந்தச் செய்தி எவ்வாறு கையாளப்பட்டதோ அதற்கு நிகரானது. இப்பொழுதும் சில மாதங்களாக வடகொரியத் தலைவரின் மனைவியைக் குறித்து ஊடகங்களில் வெளிவரும் ஊகங்களை இங்கு சுட்டிக் காட்டலாம். ஆனால் ஜெயலலிதா தலைவியாக இருந்தது ஒரு ஜனநாயக கட்டமைப்புக்குள் ஆகும். அவர் நோய்வாய்ப்பட்டிருந்த காலம் தொடக்கம் இறப்பு வரையிலுமான காலகட்டம் எனப்படுவது வதந்திகளையும் ஊகங்களையும் உற்பத்தி செய்யும் ஒரு காலகட்டமாகவே காணப்பட்டது. இதற்குக் காரணம் உலகின் மிகப்பெரிய ஜனநாயக கட்டமைப்பு ஒன்றுக்குள் ஓர் இரும்புக் கோட்டையை நிர்மாணித்து அதற்குள் ஓர் இரும்பு மனுஷியாகவும் அம்மாவாகவும் அவர் வீற்றிருந்தார் என்பதுதான்.

இது ஒரு விதத்தில் இந்திய ஜனயநாயகத்தின் நூதனப் பண்புகளில் ஒன்று எனலாம். அதற்குள் இந்திராகாந்தியும் இருக்கிறார், பூலான் தேவியும் இருக்கிறார், மாயாவதியும் இருக்கிறார், மம்தா பனெர்ஜியும் இருக்கிறார், ஜெயலலிதாவும் இருக்கிறார்.

4tamilmedia.com

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின்  உருவத்தை தாலியில் செதுக்கி  திருமணம் ஒன்று கனடாவில்  நடை பெற்று உள்ளது.

கனடாவில் வாழந்து வரும் ஈழத்து தமிழர்களான கார்த்திக் மற்றும் மீரா ஆகியோரின் திருமணத்தில் இவ்வாறாக  நடை பெற்றுள்ளது.

இப்படி தமிழீழ தேசியத் தாலியில் இணைத்தமை பலராலும் வியப்பாக பேசப்பட்டாலும் தமிழர்களின் அடையாளமாக மாறி விட்டமை குறிப்பிடத் தக்கது.




சுகவீனம் காரணமாக சாவினை அணைத்துக் கொண்ட கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் குயிலன் (ராயூ) அவர்களின் 14ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்கான பயணத்தில் விழிமூடிய இந்த வீரவேங்கையை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

புற்றுநோய் காரணமாக சிங்கப்பூரில் பண்டுவம் பெற்றுவரும் வேளை 25.08.2002 அன்று கேணல் ராயூ (அம்பலவாணர் நேமிநாதன் – ஏழாலை, யாழ்ப்பாணம்) அவர்கள் சாவைினை அணைத்து கொண்டார்.

ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் நேமிநாதன் என்ற இயற்பெயருடைய ராயூ அண்ணை, புலிகளின் இந்தியா-03 பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றிருந்தார்.

நேரிய பார்வை, எதையும் தீர்க்கமாக ஆராய்ந்தறியும் தன்மை, ஓயாத உழைப்பு, இவைகள் ராயூ அண்ணையின் அடையாளங்கள். போராளிகளோ பணியாளர்களோ யாரையும் சாதுரியமாக வேலை செய்விப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். கொடுக்கப்பட்ட பணிகள் உரிய நேரத்தில் செய்துமுடிக்கப்படாத பட்சத்தில் அவருடைய கோபங்களையும் பார்க்க முடியும்.

ஆனாலும் அதிலொரு நிதானமிருக்கும். கொடுக்கப்படும் தண்டனைகள் போராளிக்கு வேதனையைக் கொடுப்பதாக இருக்கக்கூடாது, பதிலாக விழிப்பைக் கொடுப்பதாக இருக்கவேண்டும் என்று அடிக்கடி கூறுவார். அவர் கற்றறிந்த விடயங்களை இயலுமானவரை அவரின்கீழ் செயற்படும் போராளிகளுக்குக் கற்றுக்கொடுக்க அவர் தவறியதில்லை.

அதேபோல் போராளியொருவர் புதிய விடயம் ஒன்றை அவருக்குச் சொல்ல விளையும்போது ஒரு மாணவனின் மனநிலையோடு அவற்றைச் செவிமடுத்துக் கற்றுக்கொள்ளவும் அவர் தவறியதில்லை. அவருடைய இந்தக் குணாம்சமே பொறியியற்றுறைப் போராளிகளிடமிருந்து பல புதிய கண்டுபிடிப்புக்கள் வெளிவரக் காரணமாக அமைந்தது.

“முடியாது என்றால் முயற்சிக்கவில்லை” என்பதே ராயூ அண்ணையின் வாக்காக இருந்தது. புதிய முயற்சிகளை ஆதரித்து ஊக்குவிக்கும் அதேவேளை தேவையற்ற பொருள் மற்றும் வள விரயங்கள் எவற்றையும் அவர் அனுமதித்ததே கிடையாது. அதுமட்டுமல்லாமல் அவர் எந்தவொரு வேலையிலும் முழுத்திருப்தி அடைந்துவிட மாட்டார்.

ஒவ்வொரு கருவியையும் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதாகத்தான் அவருடைய அறிவுரைகள் எப்போதும் இருக்கும். போராளிகளிடம் வேலைகளை ஒப்படைத்துவிட்டு அந்த வேலைக்குரிய நுட்பங்கள் அப்போராளிகளின் சுய சிந்தனையிலிருந்து வெளிப்படவேண்டும் என்று எதிர்பார்ப்பார். அவ்வாறு அவர்களின் சிந்தனையில் உருவாகும் நுட்பங்களை அவர்களிடம் கற்றறிந்து அவற்றை மேம்படுத்துவது பற்றிக் கலந்தாலோசிப்பார்.

ராயூ அண்ணை தன்னுடைய போராட்ட வாழ்க்கையை லெப்.கேணல் ராதா அவர்களுடன் ஒரு தொலைத்தொடர்பாளராகத் தொடங்கினார். அவ்வாறு தொடங்கிய அவரது போராட்டச் செயற்பாடு அவரை ஒரு மாபெரும் சாதனையாளனாக உயர்த்தியது எனில் அவரின் அறிவினை நோக்கிய விடாத தேடலே மிகமுக்கிய காரணமாகும்.

விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகள் நிகழ்த்திய இமாலயச் சாதனைகள் பலவற்றின் பின்னால் ராயூ அண்ணையின் வெளித்தெரியாத செயற்பாடுகள் பல இருந்தன. தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவான “கேணல் ராயூ படைய அறிவியல் தொழிநுட்ப ஆய்வு நிறுவன”த்தின் ஆணிவேர் ராயூ அண்ணை என்றால் அது மிகையன்று.

விடுதலைப் புலிகளின் தொடக்ககாலத் தொலைத்தொடர்புத் துறையின் வளர்ச்சியில் ராயூ அண்ணையின் பங்கு அளப்பரியது. ஒரு தொலைத்தொடர்பாளனாக இருந்தபோது தான் பெற்றுக்கொண்ட அனுபவம் மற்றும் தான் கற்றறிந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தொலைத்தொடர்புக்கான ஒரு தனித்துறையினைக் கட்டியெழுப்பும் பணியினை மேற்கொண்டார்.

உலகமே வியந்துபார்த்த விடுதலைப் புலிகளின் தொலைத்தொடர்புக் கட்டமைப்பின் வளர்ச்சியில் ராயூ அண்ணையின் உழைப்பு ஒவ்வொரு கட்டத்திலும் மறைபொருளாக இருந்தது.

இந்தியப் படையினருடனான போர்க்காலப் பகுதி. மணலாற்றுக் காட்டுப்பகுதியில் இந்தியப் படையினர் தமது இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருந்த நேரம். இராணுவத்தினரின் நகர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்காக தலைவரின் சிந்தனையில் உதித்த “ஜொனி” மிதிவெடிக்கு அப்போதிருந்த இக்கட்டான சூழ்நிலையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு வடிவம் கொடுத்த பெருமை ராயூ அண்ணையையே சாரும்.

கடலிலே முதலாவது கடற்கரும்புலித் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் தலைவர் அவர்களால் போடப்பட்டு அதற்கான பணிகள் ராயூ அண்ணையிடமும் அப்போதைய கடற்புறா (கடற்புலிகள் என்று பெயர் பெறுவதற்கு முன் இயங்கிவந்த விடுதலைப் புலிகளின் கடல் நடவடிக்கை அணி) தளபதியிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

முன்னெப்போதும் நடத்தப்படாத ஒரு புதியவகைத் தாக்குதலாக அப்போது அந்தக் கடற்கரும்புலித் தாக்குதல் இருந்தது. வெடிபொருள் தொகுதியை எவ்வாறு படகில் பொருத்துவது, எந்த வடிவில் பொருத்துவது என்பன தெரியாமல் இருந்த விடயங்கள். ஆயினும் ராயூ அண்ணை அவற்றைச் செய்து முடித்தார்.

பலகட்டப் பரிசோதனைகளைச் செய்து அவற்றிலிருந்து ஒரு வடிவத்தினைச் செய்து உருவாக்கியிருந்தார். ராயூ அண்ணை இதனை திறம்பட முடித்துவிடுவார் என்ற தலைவரின் நம்பிக்கையை நிரூபித்துக் காட்டினார். அன்றிலிருந்து தன்னுடைய இறுதிக் காலம்வரை கடற்கரும்புலிகளின் தாக்குதற் படகுகளிற்கான வெடிமருந்துத் தொகுதியினை மேம்படுத்துவதற்காக அயராது உழைத்துக் கொண்டிருந்தார்.

தொடக்க காலத்திலிருந்து மோட்டார் மற்றும் எறிகணைகளின் செயற்பாடுகளைக் கற்றறிந்து புலிகளின் சுயதயாரிப்பான “பசிலன்” எனும் எறிகணைச் செலுத்தியின் தயாரிப்புக்கு அடித்தளமிட்டுக் கொடுத்தார். இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியபோதே புலிகளின் பசிலன் பீரங்கிகள் சிறிலங்கா இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக அமைந்திருந்தன. யாழ்.கோட்டை, மாங்குளம் போன்ற முகாம்கள் கைப்பற்றப்பட்ட தாக்குதல்களில் இப்பீரங்கிகளின் பங்கு அளப்பரியன.

1996 ஆம் ஆண்டு “ஓயாத அலைகள்-01” இராணுவ நடவடிக்கை மூலம் புலிகள் முல்லைத்தீவு இராணுவ முகாமைக் கைப்பற்றியபோது இரண்டு ஆட்லறிகள் புலிகள்வசம் வீழ்ந்தன. இயக்கத்தைப் பொறுத்தவரை அவை அப்போது பரிச்சயமற்ற பொருட்களாகவே இருந்தன.

இராணுவத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட மட்டுப்படுத்தப்பட்டளவிலான கையேடுகள் மற்றும் இதர அறிவியல் ஏடுகள் என்பவற்றின் உதவியுடன் அவ்விரு ஆட்லறிகளையும் பரிச்சயமிக்க போராயுதங்களாக மாற்றியதில் ராயூ அண்ணையின் பங்கே முதன்மையானது. முதன்மையானது என்பதைவிட முழுமையானது என்பதே பொருத்தமாக இருக்கும்.

அக்காலப் பகுதியில் அவர் இரவில் நித்திரை கொள்வதே அரிதான விடயம். பொதுவாக ஆட்லறிகளுக்கான சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதிகள் (Fire Control) அவ் ஆட்லறிகளின் தயாரிப்பு நிறுவனங்களினால் வழங்கப்பட்டவையாகவே இருக்கும். முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியும் அவ்வாறானதொன்றே. நிறைவான ஆட்லறிச் சூட்டுக்கு அவற்றின் செயற்பாடு போதுமானதாகவே இருக்கும்.

ஆயினும் ராயூ அண்ணை அதனோடு திருப்திப்பட்டு விடவில்லை. சுயமாக ஆட்லறிக்கான சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியினை உருவாக்கும் பணியில் போராளிகளை ஈடுபடுத்தினார். சாதாரண சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியைவிட மேம்பட்ட பல வசதிகளோடு சூடுகளை வேகமாகவும் மேலும் துல்லியமாகவும் வழங்கக்கூடியவாறு பல்வேறுபட்ட வசதிகளுடன் புதிய சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதி அவரின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்டது.

சிறிலங்கா படையதிகாரிகளாலேயே விடுதலைப் புலிகளின் ஆட்லறி சுடுதிறன் வியப்பாகப் பார்க்கப்படும் அளவுக்கு அதை வளர்த்தெடுத்த பெருமை ராயூ அண்ணையையே சாரும். வேகமான செயற்பாடு மற்றும் துல்லியமான சூடு என்பவற்றினூடாக பீரங்கிப் படையணியின் நம்பகத்தன்மை போராளிகளிடமும் வளர்ந்திருந்தது.

ஜெயசிக்குறு எதிர்ச்சமர், ஓயாத அலைகள் என்ற குறியீட்டுப் பெயரிலமைந்த தொடர் நடவடிக்கைகள், ஆனையிறவுக்கான சமர் போன்றவற்றில் ராயூ அண்ணையின் கட்டளையில் செயற்பட்ட பீரங்கிப் படையணியின் செயற்பாடு முக்கியமான பங்கினைப் பெற்றிருந்தது.

சிறிலங்கா அரசினை சமாதானம் நோக்கி இழுத்துவந்த சமரான தீச்சுவாலை முறியடிப்புச் சமரில் எதிரியின் தீச்சுவாலையை எதிரியை நோக்கியே திருப்பிவிட்டதில் ஒருபுறத்தில் ராயு அண்ணையின் கட்டளையில் செயற்பட்ட பீரங்கிப்படை பெரும் பங்காற்றியது எனில் மறுபுறத்தில் ராயூ அண்ணையின் சிந்தனையில் உருவான கவச எதிர்ப்புக் கண்ணிகள் தம்பங்கினையும் ஆற்றின.

அப்போதிருந்த சூழலில் கண்ணிவெடிகளை உருவாக்குவதற்குத் தேவையான பொருட்களை உடனடியாகப் தருவிக்கமுடியாத நிலை. ராயூ அண்ணையின் சிந்தனையோ கண்ணிவெடி தயாரிப்பதற்கு என்ன பொருட்கள் தேவையென்ற நிலையிலில்லாமல், இருக்கும் பொருட்களைக்கொண்டு எவ்வாறு கண்ணிவெடி தயாரிக்கலாம் என்பதாக இருந்தது.

பல்வேறு காரணங்களால் வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட எதிரியின் எறிகணைகள் எதிரிகளின் கவசங்களையே குறிவைக்கும் கண்ணிவெடிகளாக உருவெடுத்தன. ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எதிரியின் கனவு அப்போது தகர்க்கப்பட்டது.

1992 ம் ஆண்டின் நடுப்பகுதி. யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த பிரிவுகளுக்குரிய போராளிகள் சிலர் சிறுத்தைப் படையணியின் பயிற்சிக்குச் செல்வதற்காக மாவட்டத் தலைமைச் செயலகத்திற்கு அனுப்பப்பட்டிருந்தோம். அங்குதான் சிறுத்தைப் படையணியின் முதலாவது ஆண்கள் அணிப் போராளிகளுக்கான தெரிவு நடைபெற்றது.

சிறுத்தைப் படையணியின் சிறப்புத் தளபதியாகவிருந்த ராயூ அண்ணையே படையணிக்கான போராளிகளைத் தெரிவு செய்வதற்கு வந்திருந்தார். அன்று ராயூ அண்ணையின் மூலம் தெரிவாகி, சிறுத்தைப் படையணி, பின்னர் பொறியியற்றுறை ஆகியவற்றில் அவரின் கீழ் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. ஒரு தந்தையாய், சகோதரனாய் அவர் போராளிகளை வழிநடாத்தினார்.

ஒவ்வொரு விடயங்களைக் கவனித்துக்கொள்வதற்கும் அவர் பொறுப்பாளர்களை நியமித்திருந்த போதிலும், போராளிகளுக்கான உணவு, உடை என்று அனைத்து விடயங்களிலும் கவனமெடுத்து நடந்துகொண்டார். போராளிகள் தமக்குள் கதைக்கும் போது அவரை “அப்பா” என்றே விழிப்பது வழமை. அந்தளவிற்கு அவர் ஒரு தந்தையாக போராளிகள் மனதில் இடம்பிடித்திருந்தார்.

அவருக்குத் தலைவரால் வழங்கப்பட்டிருந்த பல்வேறுபட்ட பணிகளுக்கு மத்தியில் தன்னால் வளர்த்தெடுக்கப்படும் போராளிகள் என்ற கரிசனையோடு எம்மை உருவாக்கிய விதம் என்றுமே நெஞ்சை விட்டகலா நினைவுகள்.

1993 ம் ஆண்டின் இறுதிப்பகுதி. தென்மராட்சியில் ஓரிடத்தில் எமக்கான சிறப்புப் பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. திசைகாட்டி நகர்வுப் பயிற்சிகளை நாம் முகாமிற்கு வெளியேதான் மேற்கொள்வதுண்டு. தென்மராட்சி மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் காணப்படும் சதுப்புநிலக் காடுகளே இவ்வாறான நகர்வுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன. நகர்வுகளுக்கான தொடக்க மற்றும் முடிவுப் புள்ளிகளாக இப்பகுதிகளில் அமைந்திருக்கும் சிறிய கோவில்களே தெரிவுசெய்யப்படும்.

அனைத்து அணிகளதும் நகர்வுகளை தானே நேரில் வந்து கண்காணிப்பதுடன் அந்தந்த இடங்களிலேயே நகர்வு உத்திகளைக் கற்றுத்தருவார். நகர்வில் ஈடுபடும் போராளிகளுக்கான உணவுப் பொருட்களை தானே எடுத்துவருவார். இருந்தபோதிலும், போராளிகளைக் கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிக்கவும் தண்டிக்க வேண்டிய இடத்தில் தண்டிக்கவும் அவர் தவறுவதில்லை.

ஒருமுறை எமது நகர்வு புத்தூரிலிருந்து தென்மராட்சியின் வரணிப் பகுதி நோக்கி இருந்தது. இவ்விரு பகுதிகளுக்கும் இடைப்பட்ட சதுப்புநிலக் காடுகளே நகர்வுப் பகுதியாக பயிற்சி ஆசிரியரால் தேர்வுசெய்யப்பட்டிருந்தது. எமது நகர்வுக்காக ஒவ்வோர் அணிக்கும் குறிப்பிட்டளவு குடிநீரே தரப்படும். மேலதிகத் தண்ணீரை நாம் எங்கும் பெறக்கூடாது என்பது கட்டளை.

அன்று எமது நகர்வுகளைக் கண்காணிப்பதற்காக வந்த ராயூ அண்ணையின் வாகனம் சேற்றில் புதைந்துவிட எமது அணியினரே அதனை வெளியெடுக்கும் பணியினையும் செய்யவேண்டியதாகிவிட்டது. அந்தக் களைப்பின் காரணமாக எமக்கு வழங்கப்பட்ட தண்ணீரையும் குடித்து முடித்துவிட்டோம்.

ஆனால் போகவேண்டிய மீதித்தூரமோ இன்னும் அதிகமிருந்தது. இடையிலிருந்த கோவில் கிணறு ஒன்றில் மேலதிக தண்ணீரை நிரப்பிவிட்டோம். பயிற்சி ஆசிரியர் தண்டனை வழங்கினாலும் ராயூ அண்ணை காப்பாற்றிவிடுவார் என்று எமக்கு நாமே சமாதானமும் சொல்லிக்கொண்டோம்.

பயிற்சி ஆசிரியருக்கும் விடயம் போய்விட்டது. நாம் காரணத்தைக்கூறி தண்டனையிலிருந்து தப்பலாம் என முயற்சித்தோம். ஆனால் ராயூ அண்ணையின் பதில் எம்மால் நிராகரிக்க முடியாததாக இருந்தது. அவர் கூறியது இதுதான். “நீங்கள் சிறப்புப் படையணிப் போராளிகள். நீங்கள் நடவடிக்கையில் ஈடுபடும் இடங்களில் போதியளவு வளங்கள் கிடைக்குமென்று எதிர்பார்க்க முடியாது.

நீங்கள் நடவடிக்கையில் ஈடுபடும்போது திட்டமிடப்படாத எதிர்பாராத பணிகள் காத்திருக்கலாம். அதற்கெல்லாம் உங்களை நீங்கள் தயார்ப்படுத்த வேண்டுமாயின் நீங்கள் இவ்வாறான சாக்குப்போக்குகள் சொல்ல முடியாது”. இதன்பிறகும் எம்மால் அவருடன் எதைக் கதைக்க முடியும்? தண்டனை உறுதி. எமதணிக்கான அடுத்துவந்த நகர்வு குடிநீரின்றி முடிந்தது.

1993 ம் ஆண்டு பலாலிப் படைத்தளத்தினுள் கரும்புலித் தாக்குதல் ஒன்றினை நடாத்துவதற்குத் தலைவரினால் திட்டமிடப்பட்டிருந்தது. கரும்புலிகளுக்கான வெடிமருந்துத் தொகுதிகளை உருவாக்குவதற்கான பணி ராயூ அண்ணையினால் அவரின் கீழிருந்த வெடிமருந்துப் பயிற்சிபெற்ற போராளியின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அவருடன் அப்போது வெடிமருந்துப் பயிற்சியினை மேற்கொண்டிருந்த நாமிருவரும் அவ்வேலையில் இணைக்கப்பட்டிருந்தோம். ராயூ அண்ணையோ, வேலையை ஒப்படைத்ததோடு நில்லாமல் வேலையின் ஒவ்வொரு கட்டத்திலும் தானும் எம்முடன் கூடவிருந்து அந்த வேலைகள் நிறைவடைந்தபோது, நாமே தனித்து அவ்வேலைகளைச் செய்யுமளவிற்கு எம்மை உருவாக்கி விட்டிருந்தார்.

ஒவ்வொரு விடயங்களைச் செய்யும்போதும், அவ்விடயங்களில் அவர் காட்டும் ஈடுபாடு மிகவும் நேர்த்தியானது. அதே நேர்த்தியினையே போராளிகளிடமும் வேலைகளில் எதிர்பார்ப்பார்.

எனது உடல்நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இயலாமை காரணமாக என்னால் பயிற்சியினைத் தொடர முடியவில்லை. சிலகாலம் வைத்தியசாலையில் இருக்கவேண்டியிருந்தது. இனிமேல் பயிற்சியில் ஈடுபடவே முடியாது என்ற நிலை. அடுத்து என்னவென்று தெரியாத சூழல்.

அவ்வாறான சூழ்நிலையிலிருந்து என்னை மீட்டு எனக்குப் பொருத்தமான பணிகளில் என்னை ஈடுபடவைத்து, எனது உடல்நிலையில் ஏற்பட்ட இயலாமை என்னையும் எனது போராட்டச் செயற்பாட்டையும் பாதிக்காது காத்தது ராயூ அண்ணையே. அவரின் அணுகுமுறைகள் எப்போதுமே போராளிகளிடமிருந்து அவர்களது செயற்பாடுகளைத் தனித்தன்மையோடு வெளிக்கொணர்வதாகவே இருக்கும்.

ஒவ்வொரு போராளியிடமும் இருக்கும் தனித்தன்மைகளைச் சரியான முறையில் இனங்கண்டு அதனை வெளிக்கொணர்வதில் அவருக்கு நிகர் அவரேதான். ஆயினும் கொடிய புற்றுநோய் அவரைச் சிறிதுசிறிதாக அரித்துக்கொண்டிருந்த விடயத்தை அவரால் அறிந்துகொள்ள முடியாததாகவே காலம் அவருக்குத் தீர்ப்பெழுதி விட்டது.

அடிக்கடி வந்துபோகும் வயிற்றுவலியினை அவர் சாதாரண வயிற்றுவலியாக எண்ணியே மாத்திரைகளைப் பாவிப்பதோடு நிறுத்திக்கொண்டார். நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் இருந்தபோதுகூட அவர் இயங்கிக்கொண்டேயிருந்தார், அனைவரையும் இயக்கிக்கொண்டுமிருந்தார்.

தீச்சுவாலை முறியடிப்புச் சமரின்போதே ராயூ அண்ணையால் முழு உற்சாகமாகப் பணியாற்ற முடியாதபடி அவரது உடல்நிலை தளர்ந்திருந்தது. ஆனாலும் அந்த மூன்று நாட்களும் அவர் முழுமையாகப் பாடுபட்டார். நோய் முற்றியநிலையில் அவர் அவதிப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் வடகடலில் ஒரு கடற்கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் நின்ற இராணுவத்தினருக்கான எரிபொருள் வழங்கலைச் செய்த எரிபொருள் தாங்கிக் கப்பல் மீதே அத்தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தது போல் அக்கப்பல் தீப்பிடிக்கவுமில்லை, மூழ்கிப் போகவுமில்லை.

வழமையாகவென்றால் ராயூ அண்ணையிடம் ஓடிவந்து நடந்த சிக்கல்களை ஆராய்ந்து அதற்குரிய மாற்றுத் திட்டங்களை அறிந்துகொள்வார்கள். ஆனால் இப்போது ராயூ அண்ணையின் உடல்நிலை மிகமிக மோசமாக இருந்தது.

இந்நிலையில் எப்படி அவரைப் போய்க் கரைச்சல் படுத்துவது என்று கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை நினைத்தார். ஆனாலும் தாக்குதல் பிசகியதைக் கேள்விப்பட்ட ராயூ அண்ணையே நேரடியாக தளபதி சூசையையும் தொடர்புடைய மற்றப் போராளிகளையும் அழைத்து விடயத்தைக் கேட்டறிந்தார்.

படுத்த படுக்கையில் இருந்தும்கூட அக்கப்பலை மூழ்கடிப்பதற்கான வெடிபொருள் நுட்பம் பற்றிய ஆலோசனையைக் கடற்புலிகளுக்குச் சொல்லிக் கொடுத்தார். பின்னாளில் அவர் சொல்லிக் கொடுத்த அந்த நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு கடற்கரும்புலித் தாக்குதல் மூலம் படையினரின் எண்ணெய்த் தாங்கிக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.

பின்னாளில் அவரின் பெயரிலேயே தலைவரால் உருவாக்கப்பட்ட ‘கேணல் ராயூ படைய அறிவியல் தொழிநுட்ப ஆய்வு நிறுவனப் பொறுப்பாளர்களில் ஒருவரிடம் தலைவர் சொன்ன வார்த்தைகள் “நீங்கள் அனைவரும் சேர்ந்தாவது ராயுவின் இடத்தினை நிரப்ப முயற்சிக்க வேண்டும்”.

ஆம்! அவரின் இழப்பு ஒருவரால் மட்டும் ஈடுசெய்யப்பட முடியாததுதான்.

கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 14ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற தளபதி கேணல் ராயூ அவர்கள் புற்றுநோயின் காரணமாக 25-08-2002 அன்று வீரச்சாவடைந்தார்.

ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் நேமிநாதன் என்ற இயற்பெயருடைய ராயு அண்ணை, புலிகளின் இந்தியா-03 பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றிருந்தார்.

நேரிய பார்வை, எதையும் தீர்க்கமாக ஆராய்ந்தறியும் தன்மை, ஓயாத உழைப்பு, இவைகள் ராயு அண்ணையின் அடையாளங்கள். போராளிகளோ பணியாளர்களோ யாரையும் சாதுரியமாக வேலை செய்விப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். கொடுக்கப்பட்ட பணிகள் உரிய நேரத்தில் செய்து முடிக்கப்படாத பட்சத்தில் அவருடைய கோபங்களையும் பார்க்க முடியும்.

ஆனாலும் அதிலொரு நிதானமிருக்கும். கொடுக்கப்படும் தண்டனைகள் போராளிக்கு வேதனையைக் கொடுப்பதாக இருக்கக்கூடாது, பதிலாக விழிப்பைக் கொடுப்பதாக இருக்க வேண்டும் என்று அடிக்கடி கூறுவார். அவர் கற்றறிந்த விடயங்களை இயலுமானவரை அவரின்கீழ் செயற்படும் போராளிகளுக்குக் கற்றுக்கொடுக்க அவர் தவறியதில்லை.

அதேபோல் போராளியொருவர் புதிய விடயம் ஒன்றை அவருக்குச் சொல்ல விளையும் போது ஒரு மாணவனின் மனநிலையோடு அவற்றைச் செவிமடுத்துக் கற்றுக்கொள்ளவும் அவர் தவறியதில்லை. அவருடைய இந்தக் குணாம்சமே பொறியியற்றுறைப் போராளிகளிடமிருந்து பல புதிய கண்டுபிடிப்புக்கள் வெளிவரக் காரணமாக அமைந்தது.

முடியாது என்றால் முயற்சிக்கவில்லை என்பதே ராயு அண்ணையின் வாக்காக இருந்தது. புதிய முயற்சிகளை ஆதரித்து ஊக்குவிக்கும் அதேவேளை, தேவையற்ற பொருள் மற்றும் வள விரயங்கள் எவற்றையும் அவர் அனுமதித்ததே கிடையாது. அதுமட்டுமல்லாமல் அவர் எந்தவொரு வேலையிலும் முழுத்திருப்தி அடைந்துவிட மாட்டார்.

ஒவ்வொரு கருவியையும் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதாகத்தான் அவருடைய அறிவுரைகள் எப்போதும் இருக்கும். போராளிகளிடம் வேலைகளை ஒப்படைத்து விட்டு அந்த வேலைக்குரிய நுட்பங்கள் அப்போராளிகளின் சுய சிந்தனையிலிருந்து வெளிப்படவேண்டும் என்று எதிர்பார்ப்பார். அவ்வாறு அவர்களின் சிந்தனையில் உருவாகும் நுட்பங்களை அவர்களிடம் கற்றறிந்து அவற்றை மேம்படுத்துவது பற்றிக் கலந்தாலோசிப்பார்.

ராயு அண்ணை தன்னுடைய போராட்ட வாழ்க்கையை லெப்.கேணல் ராதா அவர்களுடன் ஒரு தொலைத்தொடர்பாளராகத் தொடங்கினார். அவ்வாறு தொடங்கிய அவரது போராட்டச் செயற்பாடு அவரை ஒரு மாபெரும் சாதனையாளனாக உயர்த்தியது எனில் அவரின் அறிவினை நோக்கிய விடாத தேடலே மிகமுக்கிய காரணமாகும்.

விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகள் நிகழ்த்திய இமாலயச் சாதனைகள் பலவற்றின் பின்னால் ராயு அண்ணையின் வெளித்தெரியாத செயற்பாடுகள் பல இருந்தன. தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவான “கேணல் ராயு படைய அறிவியல் தொழிநுட்ப ஆய்வு நிறுவன”த்தின் ஆணிவேர் ராயு அண்ணை என்றால் அது மிகையன்று.

விடுதலைப் புலிகளின் தொடக்ககாலத் தொலைத்தொடர்புத் துறையின் வளர்ச்சியில் ராயு அண்ணையின் பங்கு அளப்பரியது. ஒரு தொலைத்தொடர்பாளனாக இருந்தபோது தான் பெற்றுக்கொண்ட அனுபவம் மற்றும் தான் கற்றறிந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தொலைத்தொடர்புக்கான ஒரு தனித்துறையினைக் கட்டியெழுப்பும் பணியினை மேற்கொண்டார். உலகமே வியந்துபார்த்த விடுதலைப் புலிகளின் தொலைத்தொடர்புக் கட்டமைப்பின் வளர்ச்சியில் ராயு அண்ணையின் உழைப்பு ஒவ்வொரு கட்டத்திலும் மறைபொருளாக இருந்தது.

இந்தியப் படையினருடனான போர்க்காலப் பகுதி. மணலாற்றுக் காட்டுப்பகுதியில் இந்தியப் படையினர் தமது இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருந்த நேரம். இராணுவத்தினரின் நகர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்காக தலைவரின் சிந்தனையில் உதித்த “ஜொனி” மிதிவெடிக்கு அப்போதிருந்த இக்கட்டான சூழ்நிலையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு வடிவம் கொடுத்த பெருமை ராயு அண்ணையையே சாரும்.

கடலிலே முதலாவது கடற்கரும்புலித் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் தலைவர் அவர்களால் போடப்பட்டு அதற்கான பணிகள் ராயு அண்ணையிடமும் அப்போதைய கடற்புறா (கடற்புலிகள் என்று பெயர் பெறுவதற்கு முன் இயங்கிவந்த விடுதலைப் புலிகளின் கடல் நடவடிக்கை அணி) தளபதியிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

முன்னெப்போதும் நடத்தப்படாத ஒரு புதியவகைத் தாக்குதலாக அப்போது அந்தக் கடற்கரும்புலித் தாக்குதல் இருந்தது. வெடிபொருள் தொகுதியை எவ்வாறு படகில் பொருத்துவது, எந்த வடிவில் பொருத்துவது என்பன தெரியாமல் இருந்த விடயங்கள். ஆயினும் ராயு அண்ணை அவற்றைச் செய்து முடித்தார்.

பலகட்டப் பரிசோதனைகளைச் செய்து அவற்றிலிருந்து ஒரு வடிவத்தினைச் செய்து உருவாக்கியிருந்தார். ராயு அண்ணை இதனை திறம்பட முடித்துவிடுவார் என்ற தலைவரின் நம்பிக்கையை நிரூபித்துக் காட்டினார். அன்றிலிருந்து தன்னுடைய இறுதிக் காலம்வரை கடற்கரும்புலிகளின் தாக்குதற் படகுகளிற்கான வெடிமருந்துத் தொகுதியினை மேம்படுத்துவதற்காக அயராது உழைத்துக் கொண்டிருந்தார்.

தொடக்க காலத்திலிருந்து மோட்டார் மற்றும் எறிகணைகளின் செயற்பாடுகளைக் கற்றறிந்து புலிகளின் சுயதயாரிப்பான “பசிலன்” எனும் எறிகணைச் செலுத்தியின் தயாரிப்புக்கு அடித்தளமிட்டுக் கொடுத்தார். இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியபோதே புலிகளின் பசிலன் பீரங்கிகள் சிறிலங்கா இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக அமைந்திருந்தன. யாழ்.கோட்டை, மாங்குளம் போன்ற முகாம்கள் கைப்பற்றப்பட்ட தாக்குதல்களில் இப்பீரங்கிகளின் பங்கு அளப்பரியன.

1996 ம் ஆண்டு “ஓயாத அலைகள்-01” இராணுவ நடவடிக்கை மூலம் புலிகள் முல்லைத்தீவு இராணுவ முகாமைக் கைப்பற்றியபோது இரண்டு ஆட்லறிகள் புலிகள்வசம் வீழ்ந்தன. இயக்கத்தைப் பொறுத்தவரை அவை அப்போது பரிச்சயமற்ற பொருட்களாகவே இருந்தன.

இராணுவத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட மட்டுப்படுத்தப்பட்டளவிலான கையேடுகள் மற்றும் இதர அறிவியல் ஏடுகள் என்பவற்றின் உதவியுடன் அவ்விரு ஆட்லறிகளையும் பரிச்சயமிக்க போராயுதங்களாக மாற்றியதில் ராயு அண்ணையின் பங்கே முதன்மையானது. முதன்மையானது என்பதைவிட முழுமையானது என்பதே பொருத்தமாக இருக்கும்.

அக்காலப் பகுதியில் அவர் இரவில் நித்திரை கொள்வதே அரிதான விடயம். பொதுவாக ஆட்லறிகளுக்கான சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதிகள் (Fire Control) அவ் ஆட்லறிகளின் தயாரிப்பு நிறுவனங்களினால் வழங்கப்பட்டவையாகவே இருக்கும். முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியும் அவ்வாறானதொன்றே. நிறைவான ஆட்லறிச் சூட்டுக்கு அவற்றின் செயற்பாடு போதுமானதாகவே இருக்கும்.

ஆயினும் ராயு அண்ணை அதனோடு திருப்திப்பட்டு விடவில்லை. சுயமாக ஆட்லறிக்கான சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியினை உருவாக்கும் பணியில் போராளிகளை ஈடுபடுத்தினார். சாதாரண சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியைவிட மேம்பட்ட பல வசதிகளோடு சூடுகளை வேகமாகவும் மேலும் துல்லியமாகவும் வழங்கக்கூடியவாறு பல்வேறுபட்ட வசதிகளுடன் புதிய சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதி அவரின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்டது.

சிறிலங்கா படையதிகாரிகளாலேயே விடுதலைப் புலிகளின் ஆட்லறி சுடுதிறன் வியப்பாகப் பார்க்கப்படும் அளவுக்கு அதை வளர்த்தெடுத்த பெருமை ராயு அண்ணையையே சாரும். வேகமான செயற்பாடு மற்றும் துல்லியமான சூடு என்பவற்றினூடாக பீரங்கிப் படையணியின் நம்பகத்தன்மை போராளிகளிடமும் வளர்ந்திருந்தது.

ஜெயசிக்குறு எதிர்ச்சமர், ஓயாத அலைகள் என்ற குறியீட்டுப் பெயரிலமைந்த தொடர் நடவடிக்கைகள், ஆனையிறவுக்கான சமர் போன்றவற்றில் ராயு அண்ணையின் கட்டளையில் செயற்பட்ட பீரங்கிப் படையணியின் செயற்பாடு முக்கியமான பங்கினைப் பெற்றிருந்தது.

சிறிலங்கா அரசினை சமாதானம் நோக்கி இழுத்துவந்த சமரான தீச்சுவாலை முறியடிப்புச் சமரில் எதிரியின் தீச்சுவாலையை எதிரியை நோக்கியே திருப்பிவிட்டதில் ஒருபுறத்தில் ராயு அண்ணையின் கட்டளையில் செயற்பட்ட பீரங்கிப்படை பெரும் பங்காற்றியது எனில் மறுபுறத்தில் ராயு அண்ணையின் சிந்தனையில் உருவான கவச எதிர்ப்புக் கண்ணிகள் தம்பங்கினையும் ஆற்றின.

அப்போதிருந்த சூழலில் கண்ணிவெடிகளை உருவாக்குவதற்குத் தேவையான பொருட்களை உடனடியாகப் தருவிக்கமுடியாத நிலை. ராயு அண்ணையின் சிந்தனையோ கண்ணிவெடி தயாரிப்பதற்கு என்ன பொருட்கள் தேவையென்ற நிலையிலில்லாமல், இருக்கும் பொருட்களைக்கொண்டு எவ்வாறு கண்ணிவெடி தயாரிக்கலாம் என்பதாக இருந்தது.

பல்வேறு காரணங்களால் வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட எதிரியின் எறிகணைகள் எதிரிகளின் கவசங்களையே குறிவைக்கும் கண்ணிவெடிகளாக உருவெடுத்தன. ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எதிரியின் கனவு அப்போது தகர்க்கப்பட்டது.

1992 ம் ஆண்டின் நடுப்பகுதி. யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த பிரிவுகளுக்குரிய போராளிகள் சிலர் சிறுத்தைப் படையணியின் பயிற்சிக்குச் செல்வதற்காக மாவட்டத் தலைமைச் செயலகத்திற்கு அனுப்பப்பட்டிருந்தோம். அங்குதான் சிறுத்தைப் படையணியின் முதலாவது ஆண்கள் அணிப் போராளிகளுக்கான தெரிவு நடைபெற்றது.

சிறுத்தைப் படையணியின் சிறப்புத் தளபதியாகவிருந்த ராயு அண்ணையே படையணிக்கான போராளிகளைத் தெரிவு செய்வதற்கு வந்திருந்தார். அன்று ராயு அண்ணையின் மூலம் தெரிவாகி, சிறுத்தைப் படையணி, பின்னர் பொறியியற்றுறை ஆகியவற்றில் அவரின் கீழ் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. ஒரு தந்தையாய், சகோதரனாய் அவர் போராளிகளை வழிநடாத்தினார்.

ஒவ்வொரு விடயங்களைக் கவனித்துக்கொள்வதற்கும் அவர் பொறுப்பாளர்களை நியமித்திருந்த போதிலும், போராளிகளுக்கான உணவு, உடை என்று அனைத்து விடயங்களிலும் கவனமெடுத்து நடந்துகொண்டார். போராளிகள் தமக்குள் கதைக்கும் போது அவரை “அப்பா” என்றே விழிப்பது வழமை. அந்தளவிற்கு அவர் ஒரு தந்தையாக போராளிகள் மனதில் இடம்பிடித்திருந்தார். அவருக்குத் தலைவரால் வழங்கப்பட்டிருந்த பல்வேறுபட்ட பணிகளுக்கு மத்தியில் தன்னால் வளர்த்தெடுக்கப்படும் போராளிகள் என்ற கரிசனையோடு எம்மை உருவாக்கிய விதம் என்றுமே நெஞ்சை விட்டகலா நினைவுகள்.

1993 ம் ஆண்டின் இறுதிப்பகுதி. தென்மராட்சியில் ஓரிடத்தில் எமக்கான சிறப்புப் பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. திசைகாட்டி நகர்வுப் பயிற்சிகளை நாம் முகாமிற்கு வெளியேதான் மேற்கொள்வதுண்டு. தென்மராட்சி மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் காணப்படும் சதுப்புநிலக் காடுகளே இவ்வாறான நகர்வுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன. நகர்வுகளுக்கான தொடக்க மற்றும் முடிவுப் புள்ளிகளாக இப்பகுதிகளில் அமைந்திருக்கும் சிறிய கோவில்களே தெரிவுசெய்யப்படும்.

அனைத்து அணிகளதும் நகர்வுகளை தானே நேரில் வந்து கண்காணிப்பதுடன் அந்தந்த இடங்களிலேயே நகர்வு உத்திகளைக் கற்றுத்தருவார். நகர்வில் ஈடுபடும் போராளிகளுக்கான உணவுப் பொருட்களை தானே எடுத்துவருவார். இருந்தபோதிலும், போராளிகளைக் கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிக்கவும் தண்டிக்க வேண்டிய இடத்தில் தண்டிக்கவும் அவர் தவறுவதில்லை.

ஒருமுறை எமது நகர்வு புத்தூரிலிருந்து தென்மராட்சியின் வரணிப் பகுதி நோக்கி இருந்தது. இவ்விரு பகுதிகளுக்கும் இடைப்பட்ட சதுப்புநிலக் காடுகளே நகர்வுப் பகுதியாக பயிற்சி ஆசிரியரால் தேர்வுசெய்யப்பட்டிருந்தது. எமது நகர்வுக்காக ஒவ்வோர் அணிக்கும் குறிப்பிட்டளவு குடிநீரே தரப்படும். மேலதிகத் தண்ணீரை நாம் எங்கும் பெறக்கூடாது என்பது கட்டளை.

அன்று எமது நகர்வுகளைக் கண்காணிப்பதற்காக வந்த ராயு அண்ணையின் வாகனம் சேற்றில் புதைந்துவிட எமது அணியினரே அதனை வெளியெடுக்கும் பணியினையும் செய்யவேண்டியதாகிவிட்டது. அந்தக் களைப்பின் காரணமாக எமக்கு வழங்கப்பட்ட தண்ணீரையும் குடித்து முடித்துவிட்டோம்.

ஆனால் போக வேண்டிய மீதித் தூரமோ இன்னும் அதிகமிருந்தது. இடையிலிருந்த கோவில் கிணறு ஒன்றில் மேலதிக தண்ணீரை நிரப்பிவிட்டோம். பயிற்சி ஆசிரியர் தண்டனை வழங்கினாலும் ராயு அண்ணை காப்பாற்றிவிடுவார் என்று எமக்கு நாமே சமாதானமும் சொல்லிக்கொண்டோம்.

பயிற்சி ஆசிரியருக்கும் விடயம் போய்விட்டது. நாம் காரணத்தைக்கூறி தண்டனையிலிருந்து தப்பலாம் என முயற்சித்தோம். ஆனால் ராயு அண்ணையின் பதில் எம்மால் நிராகரிக்க முடியாததாக இருந்தது. அவர் கூறியது இதுதான். “நீங்கள் சிறப்புப் படையணிப் போராளிகள். நீங்கள் நடவடிக்கையில் ஈடுபடும் இடங்களில் போதியளவு வளங்கள் கிடைக்குமென்று எதிர்பார்க்க முடியாது.

நீங்கள் நடவடிக்கையில் ஈடுபடும்போது திட்டமிடப்படாத எதிர்பாராத பணிகள் காத்திருக்கலாம். அதற்கெல்லாம் உங்களை நீங்கள் தயார்ப்படுத்த வேண்டுமாயின் நீங்கள் இவ்வாறான சாக்குப்போக்குகள் சொல்ல முடியாது”. இதன்பிறகும் எம்மால் அவருடன் எதைக் கதைக்க முடியும்? தண்டனை உறுதி. எமதணிக்கான அடுத்துவந்த நகர்வு குடிநீரின்றி முடிந்தது.

1993 ம் ஆண்டு பலாலிப் படைத்தளத்தினுள் கரும்புலித் தாக்குதல் ஒன்றினை நடாத்துவதற்குத் தலைவரினால் திட்டமிடப்பட்டிருந்தது. கரும்புலிகளுக்கான வெடிமருந்துத் தொகுதிகளை உருவாக்குவதற்கான பணி ராயு அண்ணையினால் அவரின் கீழிருந்த வெடிமருந்துப் பயிற்சிபெற்ற போராளியின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அவருடன் அப்போது வெடிமருந்துப் பயிற்சியினை மேற்கொண்டிருந்த நாமிருவரும் அவ்வேலையில் இணைக்கப்பட்டிருந்தோம். ராயு அண்ணையோ, வேலையை ஒப்படைத்ததோடு நில்லாமல் வேலையின் ஒவ்வொரு கட்டத்திலும் தானும் எம்முடன் கூடவிருந்து அந்த வேலைகள் நிறைவடைந்தபோது, நாமே தனித்து அவ்வேலைகளைச் செய்யுமளவிற்கு எம்மை உருவாக்கி விட்டிருந்தார்.

ஒவ்வொரு விடயங்களைச் செய்யும்போதும், அவ்விடயங்களில் அவர் காட்டும் ஈடுபாடு மிகவும் நேர்த்தியானது. அதே நேர்த்தியினையே போராளிகளிடமும் வேலைகளில் எதிர்பார்ப்பார்.

எனது உடல்நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இயலாமை காரணமாக என்னால் பயிற்சியினைத் தொடர முடியவில்லை. சிலகாலம் வைத்தியசாலையில் இருக்கவேண்டியிருந்தது. இனிமேல் பயிற்சியில் ஈடுபடவே முடியாது என்ற நிலை. அடுத்து என்னவென்று தெரியாத சூழல்.

அவ்வாறான சூழ்நிலையிலிருந்து என்னை மீட்டு எனக்குப் பொருத்தமான பணிகளில் என்னை ஈடுபடவைத்து, எனது உடல்நிலையில் ஏற்பட்ட இயலாமை என்னையும் எனது போராட்டச் செயற்பாட்டையும் பாதிக்காது காத்தது ராயு அண்ணையே. அவரின் அணுகுமுறைகள் எப்போதுமே போராளிகளிடமிருந்து அவர்களது செயற்பாடுகளைத் தனித்தன்மையோடு வெளிக்கொணர்வதாகவே இருக்கும்.

ஒவ்வொரு போராளியிடமும் இருக்கும் தனித்தன்மைகளைச் சரியான முறையில் இனங்கண்டு அதனை வெளிக்கொணர்வதில் அவருக்கு நிகர் அவரேதான். ஆயினும் கொடிய புற்றுநோய் அவரைச் சிறிதுசிறிதாக அரித்துக்கொண்டிருந்த விடயத்தை அவரால் அறிந்துகொள்ள முடியாததாகவே காலம் அவருக்குத் தீர்ப்பெழுதி விட்டது.

அடிக்கடி வந்துபோகும் வயிற்றுவலியினை அவர் சாதாரண வயிற்றுவலியாக எண்ணியே மாத்திரைகளைப் பாவிப்பதோடு நிறுத்திக்கொண்டார். நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் இருந்தபோதுகூட அவர் இயங்கிக்கொண்டேயிருந்தார், அனைவரையும் இயக்கிக்கொண்டுமிருந்தார்.

தீச்சுவாலை முறியடிப்புச் சமரின்போதே ராயு அண்ணையால் முழு உற்சாகமாகப் பணியாற்ற முடியாதபடி அவரது உடல்நிலை தளர்ந்திருந்தது. ஆனாலும் அந்த மூன்று நாட்களும் அவர் முழுமையாகப் பாடுபட்டார். நோய் முற்றியநிலையில் அவர் அவதிப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் வடகடலில் ஒரு கடற்கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் நின்ற இராணுவத்தினருக்கான எரிபொருள் வழங்கலைச் செய்த எரிபொருள் தாங்கிக் கப்பல் மீதே அத்தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தது போல் அக்கப்பல் தீப்பிடிக்கவுமில்லை, மூழ்கிப் போகவுமில்லை.

வழமையாகவென்றால் ராயு அண்ணையிடம் ஓடிவந்து நடந்த சிக்கல்களை ஆராய்ந்து அதற்குரிய மாற்றுத் திட்டங்களை அறிந்துகொள்வார்கள். ஆனால் இப்போது ராயு அண்ணையின் உடல்நிலை மிகமிக மோசமாக இருந்தது.

இந்நிலையில் எப்படி அவரைப் போய்க் கரைச்சல் படுத்துவது என்று கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை நினைத்தார். ஆனாலும் தாக்குதல் பிசகியதைக் கேள்விப்பட்ட ராயு அண்ணையே நேரடியாக தளபதி சூசையையும் தொடர்புடைய மற்றப் போராளிகளையும் அழைத்து விடயத்தைக் கேட்டறிந்தார்.

படுத்த படுக்கையில் இருந்தும்கூட அக்கப்பலை மூழ்கடிப்பதற்கான வெடிபொருள் நுட்பம் பற்றிய ஆலோசனையைக் கடற்புலிகளுக்குச் சொல்லிக் கொடுத்தார். பின்னாளில் அவர் சொல்லிக் கொடுத்த அந்த நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு கடற்கரும்புலித் தாக்குதல் மூலம் படையினரின் எண்ணெய்த் தாங்கிக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.

பின்னாளில் அவரின் பெயரிலேயே தலைவரால் உருவாக்கப்பட்ட ‘கேணல் ராயு படைய அறிவியல் தொழிநுட்ப ஆய்வு நிறுவனப் பொறுப்பாளர்களில் ஒருவரிடம் தலைவர் சொன்ன வார்த்தைகள் “நீங்கள் அனைவரும் சேர்ந்தாவது ராயுவின் இடத்தினை நிரப்ப முயற்சிக்க வேண்டும்”.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்கான பயணத்தில் விழிமூடிய இந்த வீரவேங்கையை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.















தேர்தல் அரசியலில் பலத்தை நிரூபிக்காதவரையில், புதிய கட்சியின் மீதான எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கும் என்பது பழைய வரலாறு. அப்படிதான் சீமானின் நாம் தமிழர் கட்சியும் பார்க்கப்படுகிறது. தமிழக அரசியலில் அவ்வப்போது புதிய கட்சிகள் தோன்றினாலும், அவைகள் பழைய கட்சிகளை சற்று பலவீனப்படுத்தியே வந்துள்ளன. 1957-ம் ஆண்டு அண்ணாதுரை தி.மு.கவைத் தொடங்கியபோது, கம்யூனிஸ்ட்டுகள் பலவீனப்பட்டார்கள். 96-ம் ஆண்டு ம.தி.மு.க உதயமானபோது, தி.மு.கவுக்கு மாற்று என முன்வைக்கப்பட்டது.

89-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பா.ம.க மாற்று சக்தியாக முன்வைக்கப்பட்டது. கால ஓட்டத்தில் அதுவும் கரைந்துபோனது. 2006-ம் ஆண்டு தே.மு.தி.க கால் பதித்தபோது, பா.ம.கவும், ம.தி.மு.கவும் பலவீனப்பட்டது. அதுவே, பாக்யராஜ், டி.ராஜேந்தர் போன்றோர் தொடங்கிய கட்சிகளை மக்கள் ஆராதிக்கவில்லை. 234 தொகுதிகளிலும் மாற்றை முன்னிறுத்தும் கட்சிகளுக்கு மக்கள் வரவேற்பைக் கொடுத்தே வந்துள்ளனர். அந்த வகையில், 'தமிழனா... திராவிடனா?' என்ற கோஷத்தோடு களமிறங்கும் சீமானும் கவனிக்கப்படுகிறாரா? என்ற கேள்விக்கு மே 19 பதில் தரும்.

புதிய மாற்று என தே.மு.தி.க வந்தபோது பா.ம.க, ம.தி.மு.கவை பலவீனப்படுத்த வேண்டும் என விஜயகாந்த் எண்ணவில்லை. அரசியல் ஓட்டத்தில் அனைத்தும் இயல்பாகவே நடந்தன. அண்ணா கால்பதித்தபோது கம்யூனிஸ்ட்டுகள் பலவீனமடைவார்கள் என அவர் நினைத்துப் பார்க்கவில்லை. அந்த வகையில், 2016 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க, தே.மு.தி.க, பா.ம.க என பிரதான கட்சிகளுக்கு எதிராக சீமான் முன்வைக்கும் அரசியல் ஆச்சர்யத்தை அளிக்கிறது.

'தமிழ்நாட்டின் சிவசேனா, பாசிஸ்ட் சீமான்' என கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதைக் கண்டு சீமான் கொதித்தாலும், பிரதான கட்சிகளுக்கு எதிராக அவர் முன்வைக்கும் வியூகங்கள் கவனிக்கப்பட வேண்டியவை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

1. மக்கள் நலக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 25 இடங்களில் போட்டியிடுகிறது. திருமாவும் கிருஷ்ணசாமியும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவதில்லை. அவர்கள் போட்டியிடாத மற்ற தொகுதிகளில், பட்டியல் இனத்து மக்களின் வாக்குகளை, தமிழன் என்ற அடிப்படையில் கவர்வதற்காக, 20 அட்டவணை பிரிவு மக்களை பொதுத் தொகுதியில் நிறுத்தியுள்ளார். தமிழக அரசியலில் இதுபோன்று யாரும் இதுவரையில் செய்ததில்லை. ஓரிரு தொகுதிகளில் வேண்டுமானால் இதுபோல் செய்வார்கள். அதிரடியாக 20 பேரை களத்தில் நிறுத்துவது என்பது, திருமா போட்டியிடாத இடங்களில் உள்ள அவரது வாக்குகளை அப்படியே நாம் தமிழர் பக்கம் திருப்புவதற்காக மட்டும்தான். தமிழ்நாட்டில் 20 சதவீதம் பெரும்பான்மையாக உள்ள மக்களை நோக்கி சீமான் வைத்த முதல் குறி இது.

2. பா.ம.கவை திட்டமிட்டு காலி செய்யும் வகையில் வன்னியர் வாக்குகளை குறிவைக்கிறார். மற்ற அரசியல் கட்சிகள் நிறுத்தாத இடங்களில் நாம் தமிழர் சார்பில் 36 வன்னியர்கள் போட்டியிடுகின்றனர். அதிலும், 'வீரப்பனுக்கு மணிமண்டபம்' என்ற சீமானின் கோரிக்கை வன்னியர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. வீரப்பனை அரக்கன் என்ற ரஜினி அழைத்தபோது, ராமதாஸ் கொந்தளித்துப் போனார். பல இடங்களில் பா.ம.கவினர் ரஜினிக்கு எதிராக கொந்தளித்தார்கள். ஆனால் ஜெயலலிதா, வீரப்பனை அரக்கன் என்று சொன்னபோது, ராமதாஸ் எந்த மறுப்பையும் வெளிக்காட்டவில்லை. அ.தி.மு.கவோடு மோதல் போக்கையும் கடைபிடிக்கவில்லை. ராமதாஸ் கோட்டைவிட்ட இடத்தை பிடித்துக் கொண்டு, 'இப்போது அரக்கன் என்று ஜெயலலிதா சொல்வாரா?' என சவால்விடுகிறார் சீமான். நகர்ப்புற வாக்காளர்கள் பக்கம் அன்புமணி ஓடும்போது, கிராமப்புற வன்னியர்களை குறிவைத்து 25 வயதுள்ள இளைஞர்களை களத்தில் நிறுத்தியிருக்கிறார். இதன் மூலம் பா.ம.கவை பலவீனப்படுத்த முடியும் என நம்புகிறார் சீமான்.

3. " 'ரஜினி தமிழரே இல்லை என விஜயகாந்த் சொல்லும்போது, 'நாங்கள்தான் மாற்று' எனச் சொல்ல விஜயகாந்த்துக்கு அருகதை இல்லை. 2011 தேர்தலில் மாற்று எனச் சொல்லும் தகுதியை விஜயகாந்த் இழந்துவிட்டார். இவர் சொல்லும் மாற்று என்பதே ஏமாற்றுதான்" எனப் பேசுகிறார் சீமான். 'ரஜினி நேர்மையானவர். மராட்டி என வெளிப்படையாகச் சொல்லக் கூடியவர். அவரை விமர்சிக்க விஜயகாந்துக்கு என்ன தகுதி இருக்கிறது?' என குறிவைப்பதன் மூலம், விஜயகாந்த் எதிர்ப்பை கூர்மையாக்கி, ரஜினி வாக்குகளை தன்பக்கம் இழுக்கும் நோக்கம்தான். அதிலும், தே.மு.தி.கவும் பா.ம.கவும் அணிசேர்ந்த கட்சிகள்தான் என்ற பிரசாரத்தின் மூலம் வடபுலத்தில் உள்ள இவர்களுக்கு எதிரான வன்னியர் வாக்குகளை நாம் தமிழர் பக்கம் திருப்புகிறார்.

4. சீமானின் தி.மு.க-காங்கிரஸ் எதிர்ப்பு என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஈழ மக்களை படுகொலை செய்த கட்சி, ஊழல் கட்சி, தரகர்கள் கூட்டணி என கடுமையாக விமர்சனம் செய்கிறார். அதிலும், காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை தன்பக்கம் இழுக்க, 'காமராஜர் ஆட்சியை கொடுப்போம்' என்று சொல்வதும், காமராஜருக்குத் தளபதியாக இருந்த சிவாஜி கணேசனை தமிழர் என முன்னிறுத்துவதும் மிக முக்கியமான தந்திரங்கள். பா.ஜ.கவின் விநாயகர் கலாசாரத்தை எதிர்கொள்ள முருகனை முன்னிறுத்துகிறார். இதன்மூலம், 'இந்து வாக்கு வங்கியும் தன்பக்கம் வரும்' என்பதுதான்.

5. அ.தி.மு.கவின் வாக்காளர்களில் முக்குலத்தோர் கணிசமாக இருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் தமிழர்களின் சுயமரியாதையைப் பற்றிப் பேசுகிறார். 'ரோட்டில் விழுந்தால் அ.தி.மு.க, வீட்டில் விழுந்தால் தி.மு.க' என தமிழன் சுயமரியாதை இழந்து தவிப்பதை நையாண்டி செய்கிறார். அ.தி.மு.க, தி.மு.க விமர்சனத்தைக் கூர்மையாக்குவதன் மூலம், 'நாம் தமிழரே மாற்று' என மக்கள் மத்தியில் பதிய வைக்க முயற்சிக்கிறார். தவிர, 'மக்கள் நலக் கூட்டணி என்பதே ஏமாற்றுதான். இவர்களுக்குள் என்ன ஒற்றுமை இருக்கிறது? திருமாவும் வைகோவும் முன்வைக்கும் ஈழ விடுதலையை சி.பி.எம், சி.பி.ஐ கட்சி ஏற்குமா? கொள்கையில்லாத கூட்டணி' என கடுமையாகத் தாக்குகிறார்.

6. தேர்தலில் மதுவிலக்கு மிக முக்கியமான முழக்கமாக இருக்கும்போது, 'செயற்கை மது கூடாது. இயற்கை மது வேண்டும்' என்கிறார். ஒவ்வொரு தேர்தலிலும் தி.மு.கவும் அ.தி.மு.கவும் கொங்கு மண்டலம் மற்றும் ராமநாதபுரத்தில் பேசும்போது, 'கள்ளை பானமாக அறிவிப்போம்' என வாக்குக்காகச் சொல்வார்கள். ஆனால், சீமானோ, 'இயற்கை பானமாக கள்ளைக் கொண்டு வருவோம்' என உறுதியாக நிற்கிறார். இது பனைமரத் தொழிலாளர்கள் மத்தியில் வரவேற்கக் கூடிய வாக்குறுதியாக இருக்கிறது.

தேர்தல் முடிவுக்குப் பிறகும் இரட்டை மெழுகுவர்த்தி பிரகாசமாக எரியுமா அல்லது பத்தோடு பதினொன்றாக கரைந்து போகுமா? என்பதற்கான விடை தெரிய இன்னும் முப்பது நாட்கள் இருக்கின்றன.

ஆ.விஜயானந்த்

ஆனந்தபுரம் விடிவெள்ளிகள்

பதிந்தவர்: ஈழப்பிரியா 04 April 2016

முப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக – 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் - முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் நிகழ்ந்த சமர் கணிக்கப்படுகின்றது.

விடுதலைப்புலிகள் எதிர்பார்த்தற்கு மாறாக - பாரிய ஆள் இழப்புக்களுக்கு பின்னரும் - தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான சிங்கள தேசத்தின் படைவீரர்கள் களத்திற்கு அனுப்பப்பட்டிருந்தனர். அதேவேளை விடுதலைப்புலிகளுக்கான படைக்கல வளங்கள் தமிழீழ கடற்பரப்பினூடாக தாயகத்திற்கு கொண்டுசெல்லப்படுவதை தடுப்பதற்கான முழுமையான ”கடற்தடுப்புச் சுவரை” வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள தேசம் அமைத்திருந்தது.


அத்தோடு பாரிய படைக்கல பிரயோகத்துடனும் வல்லாதிக்க அரசுகளின் புலனாய்வு தகவல்களையும் உள்வாங்கியவாறு சிங்கள தேசத்தின் இராணுவ பூதம் தமிழீழ தாயகத்தை முழுமையாக அழிக்கும் வகையில் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.

வரையறுக்கப்பட்ட போர்த் தளபாடங்களுடனும் ஆட்பல வளத்துடனும் போரிட்ட தமிழர் சேனை வன்னிப்பெருநிலத்தின் பெரும்பகுதியை கைவிட்டு பின்வாங்கியிருந்தது. எனினும் இறுதிவரை ஏதோ ஒரு இடத்திலிருந்து மீண்டும் - ஆக்கிரமித்து வரும் படைகளை தடுத்து - முறியடிப்பு தாக்குதலை செய்து தமிழீழ தாயகத்தை மீட்டுவிடலாம் என்றே அனைத்து மக்களும் நம்பியிருந்தனர்.

புதுக்குடியிருப்பு பிரதேசம் சிறிலங்கா படைகளிடம் வீழ்ந்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகளின் அசாத்திய பலத்தை முழுமையாக நம்பிய மக்களும் விடுதலைப் புலிகளும் தங்களுக்கு ஒரு சிறிய இடைவெளி கிடைத்தாலும் அதனை சாதகமாக பயன்படுத்தி வெற்றியை பெற்றுவிடமுடியும் என்றே முழுமையாக நம்பியிருந்தனர்.

அந்தவகையில் தான் ஆனந்தபுரம் பகுதியில் – இறுதியாக அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்திற்கு வெளிப்புறமாக – விடுதலைப்புலிகளின் இறுதிப்போருக்கான அவசர போரரங்கு ஒழுங்குபடுத்தப்பட்டது.

தமிழீழ தேசிய தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் உட்பட விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள் பலரும் அடங்கலாக தளம் அமைத்து பெருமளவிலான முறியடிப்பு தாக்குதல் ஒன்றை திட்டமிட்டுக்கொண்டிருந்தனர்.

விடுதலைப்புலிகளின் பிரதான போர்க்கலங்கள் அனைத்தையும் உள்வாங்கி திட்டமிடப்பட்ட இத்தாக்குதலுக்காக பெருமளவு விடுதலைப் புலிகளும் நிலைப்படுத்தப்பட்டிருந்தனர். தொலைதூர தாக்குதலுக்கேயென வடிவமைக்கப்பட்ட போர்க்கலங்கள் அனைத்தும் குறுந்தூர தாக்குதலுக்காக நிலைப்படுத்தப்பட்டு இருந்தது.

விடுதலைப்புலிகளின் இத்திட்டமிடலை ஏதோ ஒரு வகையில் அறிந்துகொண்ட சிறிலங்கா படையினர் எத்தனை இழப்பை சந்தித்தேனும் தடை செய்யப்பட்ட போர் ஆயுதங்களை பயன்படுத்தி என்றாலும், அத்தாக்குதலை முறியடிக்க முடிவெடுத்திருந்தார்கள்.

அதன்படி ஆனந்தபுரம் பகுதியை சுற்றிவளைத்து அப்பகுதியில் நிலைகொண்டிருந்த விடுதலைப்புலிகளை தனிமைப்படுத்தி முற்றுகை பாணியிலான தாக்குதலை சிறிலங்கா படைகள் முன்னெடுத்தன.

தமிழீழ தேசிய தலைவரை பாதுகாப்பாக பின்னகர்த்திய விடுதலைப் புலிகள், சிறிலங்கா படைகளின் முற்றுகையை முறியடிப்பதற்காக உறுதியுடன் போர் செய்துகொண்டிருந்தார்கள்.

இத்தளத்தில் நிலைகொண்டு இறுதிவரை உறுதியோடு போரிட்டு பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் ஆதவன் / கடாபி, பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா உட்பட விடுதலைப் புலிகளின் பல முக்கிய தளபதிகள் உட்பட பல நூற்றுக்கணக்கான போராளிகள் மாவீரர்களாக ஆனந்தபுரம் மண்ணில் வீழ்ந்து தமிழீழ தாயகத்தின் விடிவெள்ளிகளாக போனார்கள்.

//////////


விடுதலைப்புலிகளின் மூத்த தளபதியான பிரிகேடியர் தீபன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு ஒப்புயர்வற்ற தளபதி. ஜெயசிக்குறு போர்க்களத்தில் சிறிலங்கா படைகளுக்கு சிம்மசொப்பனமாக அறியப்பட்ட தளபதி பிரிகேடியர் தீபன்.

வவுனியாவிலிருந்து முன்னேறி, கிளிநொச்சியிலுள்ள படைகளுடன் இணைப்பை செய்து, வன்னி பெருநிலத்தை கூறுபோடும் திட்டத்துடன், முன்னேறிய சிறிலங்கா இராணுவத்தை, புளியங்குளத்தில் - 1997 ஆம் ஆண்டில் - தடுத்துநிறுத்தி புளியங்குளத்தை புலிகளின் புரட்சிக்குளமாக்கிய தளபதிதான் பிரிகேடியர் தீபன்.

புளியங்குளத்தை சுற்றிவளைத்து அதற்கான வழங்கல் பாதைகளை துண்டித்தபோதும், தளராமல் நாங்கள் ”இங்கேயே சமைத்து சாப்பிடுவோம். ஆனால் ஒரு போதும் பின்வாங்ககூடாது.” என உறுதியோடு கூறி அங்கேயே நிலைகொண்டிருந்து முன்னேறிவந்த டாங்கிகளையும் தகர்த்து ஒரு துருப்புக்காவி கவசவாகனத்தையும் கையகப்படுத்தினார்.

அதற்கு பின்னர் நடைபெற்ற ஓயாத அலைகள் - 2 நடவடிக்கையிலும் போர்த்தளபதி பிரிகேடியர் தீபனின் தந்திரோபாயமான படைநகர்த்தல் மிகப்பிரசித்தமானது.

சிறிலங்கா படைகள் இன்றுவரை அமைத்த முன்னரங்க பாதுகாப்பு நிலைக் கட்டமைப்புக்குள், மிகவும் பாதுகாப்பானதும் அதற்குள் ஊடுருவி தாக்குதலை செய்வது என்பது சாத்தியமற்றது என்ற நிலையிலான பலமான பாதுகாப்பு அரணாக அன்றைய கிளிநொச்சி சிறிலங்கா இராணுவ தளம் இருந்தது.

அப்படியான இறுக்கமான தளத்தை கைப்பற்றும் சமரை வழிநடத்தியவர் தளபதி தீபன் அண்ணை. அதற்கு பின்னர் ஓயாத அலைகள் – 3 படைநடவடிக்கையின்போது பரந்தன் படைத்தளத்தை கைப்பற்றும் நடவடிக்கையின்போது பட்டப்பகலில் மரபுவழி இராணுவமாக தமிழர் சேனையை வழிநடத்தி பல மூத்ததளபதிகளின் பாராட்டை பெற்றவர்.

ஆனந்தபுரம் தளத்தை தக்கவைக்கவேண்டும் அல்லது அங்கேயே வீரமரணம் அடையவேண்டிவரும் என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு இறுதிவரை உறுதியுடன் போரிட்ட தளபதியின் இறுதி மூச்சும் ஆனந்தபுரம் மண்ணில் அமைதியாய் போனது.

//////////


பிரிகேடியர் ஆதவன் அல்லது கடாபி அவர்கள் விடுதலைப் புலிகளின் இன்னொரு முக்கிய தளபதி. சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக தமிழீழ தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான கரும்புலி தாக்குதல்களை திட்டமிட்டு நெறிப்படுத்திய சிறப்புநடவடிக்கைக்கான தளபதி.

தமிழீழ தேசிய தலைவரின் பாதுகாப்பு பணிகளுக்காக தனது போராட்ட வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவழித்த இத்தளபதி, படைக்கட்டுமானங்களான தொடக்கப்பயிற்சி கல்லூரிகளையும் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிகளையும் நிர்வகித்து வந்திருந்தார்.

தமிழீழ தாயகத்தை விடுவிக்கும் போரில், குறைந்தளவு ஆளணி வளங்களுடன் சமரை வெல்வதற்காக, தமிழீழ தாயகத்திலிருந்த எதிரிகளின் தளத்திற்குள், ஆழ ஊடுருவி மேற்கொள்ளப்படும் கரும்புலித்தாக்குதல்கள் பெரும்பாலும் இவரது நெறிப்படுத்தலிலேயே நடந்திருக்கிறது.

நவீன மரபு வழிக்கட்டமைப்புகளுக்கு அமைவாக சிறப்பு இராணுவ நடவடிக்கைகளை நெறிப்படுத்திய இத்தளபதி புதிய போராளிகளை உருவாக்கும் பயிற்சிக் கல்லூரிகளையும் நேரடியாக கண்காணித்துவந்தார்.

வன்னியில் போர் இறுக்கமான கட்டத்தை அடைந்தபோது களமுனையிலிருந்தே நேரடியாக படை நகர்த்தலை மேற்கொண்ட இத்தளபதியும் ஆனந்தபுரம் சமரில் விழுப்புண் அடைந்தார். பின்னர் களமுனையிலிருந்து இவரை அகற்றுவதற்கு போராளிகள் பலத்த முயற்சிகள் மேற்கொண்டபோதும் அதுமுடியாமல்போக தமிழீழ தாயகத்தை விடுவிக்கும் போரில் தன்னையும் இணைத்துக்கொண்டார்.

//////////


விடுதலைப்புலிகளின் போராட்டவலுவை அடுத்த கட்ட பரிணாமத்திற்குள் நகர்த்திய மோட்டார் பீரங்கிகளும் ஆட்லறி பீரங்கிகளும் தான், ஆட்லறி பீரங்கிப்படையணி தளபதி பிரிகேடியர் மணிவண்ணனின் போராட்டவாழ்க்கையாக இருந்தது.

"ஐஞ்சிஞ்சி" என செல்லமாக அழைக்கப்பட்ட 120 மிமீ பீரங்கிகள் தான் ஓயாத அலைகள் – I நடவடிக்கையின் போது பாரிய படைக்கல சக்தியாக விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்தது.

முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட 122 மிமீ ஆட்லறிகளுடன் ஆரம்பமான விடுதலைப்புலிகளின் கேணல் கிட்டு ஆட்லறி படையணி வெளிநாடுகளில் கொள்வனவு செய்யப்பட்ட இன்னும் பல ஆட்லறிகளுடன் பெருவளர்ச்சி கண்டிருந்தது.

இரண்டு ஆட்லறிகளுடன் ஆரம்பித்த ஆட்லறிபடையணி பல பத்து ஆட்லறிகளை கொண்டதாக வளர்ச்சியடைந்தபோதும், அதனை சரியான முறையில் பயன்படுத்தி தமிழீழ போராட்டத்தை முழுமையான மரபு வழி இராணுவமாக்கி முழுமைப்படுத்திய பெருமை இத்தளபதிக்கு சேரும்.

மரபுவழியான முறையில் ஆட்லறிகளை பயன்படுத்தினாலும் நேரடிச் சூடுகளை வழங்கி எதிரிகள் மீது திகைப்புத்தாக்குதலை நடத்தி தரைவழியாக முன்னேறும் புலிகளுக்கு காப்பரணாக ஆட்லறிகளை பயன்படுத்தியமை இப்படையணியின் சிறப்பாகும்.

ஆனந்தபுரத்தில் நடைபெற்ற அந்தச்சமரின்போது ஆட்லறிப்படையணியை உருவாக்கி வளர்த்தெடுத்த பிரிகேடியர் மணிவண்ணன் அவர்களும் தமிழீழ காற்றோடு காற்றாக கலந்துபோனார்.

//////////


மிழீழ பெண்களின் போர்முகத்தை உலகத்திற்கு காட்டிய விடுதலைப்புலிகளின் மகளிர் படையணிகளின் மூத்த தளபதிகளான 2ஆம் லெப்ரினன்ற் மாலதி படையணியின் சிறப்புதளபதியுமான பிரிகேடியர் விதுசா அவர்களும், மேஜர் சோதியா சிறப்பு படையணியின் சிறப்புத்தளபதியான துர்க்கா அவர்களும் விடுதலைப்புலிகளின் பெரும்பாலான அனைத்து போரங்குகளிலும் தமது படையணிகளை நேரடியாக வழிநடத்தியிருந்தார்கள்.

ஆனையை அடக்கிய அரியாத்தை என வரலாறு தேடிக்கொண்டிருக்கும் எம்மவர் மத்தியில் அரியாத்தைகளையே உருவாக்கி காட்டிய பெருமை இவ்விரு தளபதிகளையுமே முக்கியமாக சேரும். ஆண் போராளிகளுக்கு நிகராக பெண் போராளிகளையும் போர்க்களத்தில் நகர்த்திய இப்போர்த்தளபதிகள், தமிழீழ தேசிய தலைவரின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து, உலகப் பெண்களுக்கு முன்னுதாரணமாக தமிழீழ பெண்களை உருவாக்கினார்கள்.

ஆனந்தபுரம் சமரின்போது இவர்களும் ஆனந்தபுரத்தின் விடிவெள்ளிகளாக தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்து வீரகாவியம் படைத்தார்கள்.

/////////


னந்தபுரம் சமரில் மூத்த தளபதிகள் பலரையும் களமுனைத்தளபதிகள் பலரையும் நூற்றுக்கணக்கான போராளிகளையும் இழந்த அந்தச்சமர் தமிழ் மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

தமிழீழ விடுதலைப் போரினை வழிநடத்திய தலைவனையும் போராளிகளையும் உலுப்பிவிட்ட, அந்த இழப்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இராணுவ சமநிலையை எதிரிக்கு சாதகமாக்கி விடுதலைக்காக விரைந்த பயணத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.

ஆனாலும் தர்மத்தின் அடிப்படையில் பயணித்த தமிழீழ விடுதலைப் போராட்டம் மீண்டும் எழுச்சியோடு புதிய பரிணாமத்தில் புதுவீச்சோடு பயணிக்க தோள்கொடுப்போம் என உறுதியெடுப்போம்.

வேங்கைச்செல்வன்
ஈழநேசன்

தளபதி தீபன், ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தின் பல வெற்றிக்களங்களின் நாயகனாக, தாக்குதல் ஒருங்கிணைப்பாளனாக, எதிரிக்குச் சவாலாக விளங்கிய தளபதி. அந்த வீரத்தளபதியை எதிரியின் கோழைத்தனமான, வஞ்சகத் தாக்குதலில் இழந்து மூன்று வருடங்கள் ஆகின்றன.
புளியங்குளம், தீச்சுவாலை, ஓயாத அலைகள் எனப் பல சமர்களில் தளபதி தீபன் அவர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறிய சிங்களப்படைக்கு தீபன் எப்போதுமே ஒரு வெல்ல முடியாத சவால். எனவே நயவஞ்சமாகத் தளபதியை வெல்லத் திட்டம் தீட்டிய சிங்களப்படை, 2009 ம் ஆண்டு சமர்க்களத்தில், ஆனந்தபுரம் பெட்டிச்சமர் தாக்குதலைத் தலைமை தாங்கிய தளபதி தீபனின் வலிமைக்கு ஈடுகொடுக்க முடியாமல், அவரையும் அவரது படையணியையும் போரில் தடைசெய்யப்பட்ட நச்சுவாயு ஆயுதங்களைக் கொண்டு அழித்தது. போரியல் விதிகளுக்கு எதிராக, மானுடதர்மத்திற்கு முரணாக அமைந்த சிங்களப்படையின் இச்செயற்பாடானது, அவர்களின் இயலாத்தன்மையையே வெளிப்படுத்தி நிற்கின்றது.
தளபதி பிரிகேடியர் தீபன், ஈழப்போரின் பல இமாலய வெற்றிகளின் நாயகர்களாகப் பரிணமித்த தளபதிகளில் தனியிடம் பதித்த தளபதி.

ஆர்ப்பாட்டமில்லாத ஆளுமையின் வடிவமாக விளங்கிய அவரின் பன்முகப்பட்ட தலைமைத்துவம் விடுதலைப் போராட்டத்தில் காத்திரமான வகிபாகத்தைக் கொண்டிருந்தது. முக்கியமானதும், கடுமையானதுமான சமர்க்களங்களில் தனது ஆளுமையையும் சிறந்த திட்டமிடலையும் வெளிப்படுத்தி, சவாலான களமுனைகளில் தனிமுத்திரை பதித்து, அதனூடாக தன்னை வெளிப்படுத்தி சிறந்த நம்பிக்கையான தளபதியாக பரிணமித்தவர்.

தளபதி தீபன் அவர்களின் தாக்குதல்களையும் அவரின் செயற்பாடுகளையும் சொல்ல விளையும்போது, தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்களையும் சேர்த்தே சொல்லிக் கொண்டு போகமுடியும். ஏனெனில், சமர்க்களச் செயற்பாடுகளினூடாக தனக்கென ஒரு தனித்துவத்தை நிலைநிறுத்திய தளபதியாக மிளிர்ந்த தீபன், தளபதி பால்ராஜ் அவர்களினால் அடையாளம் காணப்பட்டு, அவரது பாசறையில் இருந்து வெளிவந்தவர். தளபதி தீபன் அவர்களின் ஆளுமை என்பது தளபதி பால்ராஜ் அவர்களின் தலைமைத்துவப் பாங்கிலிருந்தும் திட்டமிடும் தன்மையிலிருந்தும் சிறிது மாறுபட்டிருக்கும். ஆனால் இந்த தன்மைகளே இவர்களிருவரும் இணைந்து பல வெற்றிகளை பதிவு செய்வதற்கான தளத்தைக் கொடுத்திருந்தது. அத்துடன் தளபதி தீபன் அவர்கள் தனித்துவமாக பல போரியல் வெற்றிகளைப் பெற்றதனூடாக தனது தனித்துவத்தை பல இடங்களில் பதிவுசெய்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையைப் பிறப்பிடமாக கொண்ட தீபன் அவர்களின் பூர்வீகம் யாழ்மாவட்டம், தென்மராட்சியின் வரணியாகும். சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் விஞ்ஞானப்பிரிவில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில், விடுதலைக்காக கல்வியை இடைநிறுத்திவிட்டு, 1985 வருடம் மேஜர் கேடில்ஸ் அவர்களிடத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து தனது விடுதலைக்கான பயணத்தை ஆரம்பித்தார்.

கிளிநொச்சியில் தனது ஆரம்பகாலப் பணிகளை தொடங்கினார். இலங்கை இராணுவத்திற்கெதிராக கிளிநொச்சியில் நடைபெற்ற தாக்குதல்களில் பங்குகொண்டதுடன் இந்திய இராணுவத்தினருக்கு எதிராக கிளிநொச்சியில் நடத்தப்பட்ட பல தாக்குதல்களில் தளபதி தீபன் அவர்கள் காட்டிய தீவிரத்தன்மையும் செயற்பாடும் அவரை வன்னி மாவட்ட துணைத் தளபதியாக்கியது.

1990 ம் ஆண்டு, தீவிரமடைந்த ஈழப்போர் இரண்டு காலப்பகுதியில், மிகவும் காத்திரமான போரியல் பங்கை வகித்து, முன்னுதாரணமாக விளங்கிய வன்னிக் களமுனையில், மைல் கற்களாக விளங்கிய பல சண்டைகளில் தளபதி பால்ராஜ் அவர்களிற்கு உறுதுணையாக தலைமைதாங்கிய பெருமை தளபதி தீபன் அவர்களையே சாரும். குறிப்பாக, தாக்குதல்கள் நடைபெறும் சமயங்களில் சில முனைகளில் சண்டை நிலைமை இறுக்கமடையும். அப்போது, தளபதி பால்ராஜ் களமுனைக்கு சென்று நிலைமையை சீர்செய்வார். அச்சமயங்களில், தலைமைக் கட்டளைப் பொறுப்பை தளபதி தீபன் அவர்களிடமே கொடுத்துவிட்டு செல்வார். அந்தளவிற்கு தளபதி தீபன் அவர்களின் தலைமைத்துவத்தில், ஒழுங்குபடுத்தலில் நம்பிக்கையுடையவராகவும், பால்ராஜ் அவர்கள் வழிநடாத்திய தாக்குதல்களில் பலவற்றில் முதுகெலும்பாகவும் செயற்பட்டவர்.

1990ம் ஆண்டு, வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட கொக்காவில் இராணுவ முகாம் தாக்குதலை களத்தில் நேரடியாக நின்று வழிநடாத்தினார். இந்த தாக்குதலில், பெரல்களில் மண்ணை நிரப்பி அதனை உருட்டிக்கொண்டு காப்பாகப் பயன்படுத்தி முன்நகர்ந்தே சண்டைசெய்யப்பட்டது. இதன்போது தீபன் அவர்கள் களத்திற்கான தலைமைக்கட்டளையை வழங்கியது மட்டுமல்லாமல், தானும் ஒரு பெரலை உருட்டிக் கொண்டு முன்னேறி சண்டையிட்டார். அவ்வாறு சண்டையிட்டுக் கொண்டிருந்தபோதே கையில் காயமடைந்தார். உடனேயே களத்திற்கு விரைந்த தளபதி பால்ராஜ் அவர்கள் சண்டையை தொடர்ந்து நடாத்தி கொக்காவில் முகாமை வெற்றி கொண்டார்.
பின்னர் மாங்குளம் முகாம் தாக்குதல், வன்னிவிக்கிரம தடுப்புச்சமர் போன்றவற்றிலும் தனது தலைமைத்துவத்தை சிறப்பாக வழங்கியவர் தளபதி தீபன் அவர்கள். 1991 ம் ஆண்டு சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் சிறப்புத்தளபதியாக பால்ராஜ் அவர்கள் பொறுப்பை எடுக்கும் போது, வன்னி மாவட்டத் தளபதியாக தீபன் அவர்கள் நியமிக்கப்பட்டார்.

வன்னி பெருநிலப்பரப்பின் சிறப்புத் தளபதியாக செயற்பாடுகளைத் தொடங்கிய தீபன் அவர்கள், வண்ணாக்குளம், கெப்பிட்டிக்கொல்லாவையில் எல்.3 எடுத்த சமர், முல்லைத்தீவு முகாமின் காவலரண்களைத் தகர்த்து 50 கலிபர் துப்பாக்கி உட்பட பல ஆயுதங்களைக் கைப்பற்றியது போன்ற பல தாக்குதல்களை தனித்துச் செய்தார். மேலும் மின்னல், ஆ.க.வே தாக்குதல், இதயபூமி ஒன்று, தவளைப்பாய்ச்சல், யாழ்தேவி என பல பாரிய சமர்களில் வன்னி மாவட்ட படையணிகளுக்குத் தலைமை தாங்கினார்.

இவற்றில், நான்குமணி நேரத்தில் நடத்தி முடித்த மாபெரும் சமரான யாழ்தேவிச் சமரானது எமது போராட்ட வரலாற்றில், மரபுவழிச் சண்டை முறையில் முக்கியத்துவமானதாக அமைந்த தாக்குதல். இதில் தளபதி தீபன் அவர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. யாழ் குடாநாட்டுக்கு ஏற்படவிருந்த பேரழிவைத் தற்காலிகமாக தடுத்து நிறுத்திய இந்த வரலாற்றுச் சமரில் தளபதி பால்ராஜ் அவர்கள் காயப்பட்ட வேளையிலும், அவரது களமுனையை வழிநடாத்தி வெற்றியை எமதாக்கிய பெருமையில் தீபன் அவர்களிற்கு பெரும் பங்குண்டு.

இத்தாக்குதல் பற்றி தீபன் அவர்கள் தெரிவிக்கையில் 'ஒரு திடீர்த் தாக்குதலைத் தொடுத்து எதிரிப்படையைச் சிதைக்கும் நோக்குடன் இரவோடிரவாக தகுந்த இடத்தைத் தேர்வு செய்ய முயன்றோம். மணற்பாங்கான நில அமைப்புடன் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறுசிறு பற்றைகளையும், புற்கள் அற்ற வரப்புகளையும் தவிர துப்பாக்கிச் சண்டைக்குத் தேவையான அரண்களோ அல்லது உருமறைப்புச் செய்வதற்குரிய பொருட்களோ கிடைக்கவில்லை. நேரமும் விடிந்து கொண்டிருந்தது. எனவே, வரப்போரங்களிலும் பற்றைக் கரைகளிலும் கைகளாலும் தடிகளாலும் உடலை மறைக்கக்கூடிய பள்ளங்கள் தோண்டி, எதிரியின் விமானங்களுக்குப் புலப்படாமலும் நகர்ந்து வரும் படையினரின் கண்களுக்குத் தெரியாமலும் உருமறைப்புச் செய்தோம். விடிந்தபின்பும் எதிரி எமக்கருகில் வரும்வரை நாம் பொறுமையுடன் காத்திருந்து சண்டையிட்டோம்' என்றார். பாரிய இழப்புகளுடன் சிங்களப்படைகள் பின்வாங்கிய இச்சமரில் ராங்கிகள், கவசவாகனங்கள் அழிக்கப்பட்டதுடன் பல இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து பூநகரி தவளை நடவடிக்கையில் பிரதான கட்டளை முகாம் தாக்குதலுக்கான தலைமையைப் பொறுப்பெடுத்து தாக்குதலை வழிநடாத்தினார். பல அடுக்குப் பாதுகாப்பு வியூகத்தைக் கொண்டமைந்த பிரதான முகாமைக் கைப்பற்றும் தாக்குதல் மிகவும் சவாலாக இருந்தது. எதிரி கட்டளை மையத்தை தக்கவைக்க கடுமையாகப் போராடினான். முகாமின் பலபகுதி கைப்பற்றப்பட்டபோதும், இறுதியாக ஒரு பகுதியைக் கைப்பற்றுவதற்காக தொடர்ந்த கடும் சண்டை மறுநாள் விடியும் வரை தொடர்ந்தது. பகல்வேளையில் அங்கு சிதறியிருந்த இராணுவத்தினரும் ஒன்றுசேர, முகாமின் எதிர்ப்பும் மிகவும் வலுப்பெற்றது. என்றாலும் அணிகளை மீள்ஒழுங்குபடுத்தி தாக்குதலை தீவிரப்படுத்தினார். இறுதியில் முகாமிலிருந்து மோட்டார்களை கைப்பற்றவேண்டும் என்ற நிலைப்பாட்டில் நவநீதன் தலைமையில் அணிகளை ஒழுங்கமைத்து மோட்டார்களை கைப்பற்றினார். இச்சம்பவத்தில் லெப் கேணல் நவநீதன் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
1993 ம் ஆண்டு தவளைப்பாய்ச்சல் நடவடிக்கை முடிந்த பின்னர், சிறப்பு வேவுப்பிரிவு தளபதியாக பொறுப்பேற்று யாழ் தீவுப்பகுதித் தாக்குதலுக்கான முழு வேவுப்பணியையும் நிறைவு செய்தார். ஆயினும் அத்தாக்குதல் செயற்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் கொக்குத்தொடுவாய்ப் பகுதி முகாம் வேவு நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

தொடர்ந்து, 1995 ம் ஆண்டு சூரியகதிர் பாதுகாப்புச் சமரில் பல களமுனைகளைத் தலைமை தாங்கினார். இதன்போது தனது கையில் காயமடைந்த நிலையிலும் தொடர்ந்து களமுனைத் தளபதியாக தனது பங்கை வழங்கினார்.

வலிகாமத்திலிருந்து பின்நகர்ந்ததைத் தொடர்ந்து தளபதி தீபன் அவர்கள் முல்லைத்தீவு முகாம் தாக்குதலுக்கான வேவுப்பணியை செய்வதற்காக தலைவரால் பணிக்கப்பட்டார்;. முல்லைத்தீவு முகாம் வேவு சவாலான விடயமாகவே இருந்தது.

இங்கு சிங்களப்படையினர் முகாமின் காவல்நிலைகளை மிகவும் நெருக்கமாக அமைத்து உச்ச அவதானிப்பில் வைத்திருந்தனர். தாக்குதலுக்கான வெளிப்பகுதி வேவுகள் முடிந்திருந்தாலும், சண்டையைத் தீர்மானிக்க முகாமிற்குள் நுழைந்து வேவு பார்க்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வேவுப்பிரிவினர் கடுமையாக முயற்சி செய்தும் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே இதற்கு மாற்றுவழி ஒன்றைச் சொன்னார் தளபதி தீபன் அவர்கள். எதிரியின் 'டம்மிக் காவலரணை' இனம் கண்டு, எதிரியின் ரோந்து செல்லும் நேரத்தைக் கணிப்பிட்டு, அந்த நேர இடைவெளிக்குள் காவரணின் சுடும் ஓட்டைக்குள்ளால் காவலரணுக்குள் உட்புகுந்து, இராணுவத்தின் ரோந்தை அவதானித்துவிட்டு முகாமிற்குள் செல்லுமாறு திட்டம் வகுத்தார். அவ்வாறே உள்முகாம் வேவுகளை துல்லியமாகச் செய்து முடித்தனர்.

முல்லைத்தீவுத் தாக்குதல் நடவடிக்கையின் போது, முகாமின் மேற்குப்பகுதியைக் கைப்பற்றி, முகாமின் மையப்பகுதியைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பொறுப்பு தளபதி தீபன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. லெப் கேணல் தனம், லெப் கேணல் பாக்கியராஜ், லெப்கேணல் ராகவன் தலைமையிலான சாள்ஸ் அன்ரனி படையணியுடன் களமிறங்கினார் தீபன். தாக்குதல் ஆரம்பித்து முன்னணிக் காவலரண் கைப்பற்றப்பட்டவுடன், உட்தாக்குதல் அணியுடன் சென்று மிகவேகமாக முகாமின் மையப்பகுதியில் தாக்குதலை ஆரம்பித்தார். ஏனெனில் எதிரியின் இரண்டாவது காவலரண் தொகுதியானது நீரேரியின் கரையில் அமைந்திருந்தது. கடற்கரைப்பக்கத்தால் உள்ள சிறிய தரைப்பாதையாலேயே படையணிகள் உள்நுழைய வேண்டும். அதில் பலமான காவலரண்களை எதிரி அமைந்திருந்தான்.

அந்தப்பகுதியில் வெடிமருந்து நிரப்பப்பட்ட கரும்புலிப்படகால் வேகமாக வந்து பாய்ந்து வெடிக்கவைப்பதனூடாக எதிரியை அழித்து படையணியை நகர்த்துவதாக திட்டமிருந்தாலும், அந்த நடவடிக்கை சாத்தியமில்லாமல் போகும் நிலையேற்பட்டால் மாற்று வழி படையணிகளிடமே கொடுக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவின் வெற்றியைத் தீர்மானிக்கும் பிரதான களத்தில் தான் நிற்கவேண்டும் என்பதை கருத்தில் வைத்து, முன்னணிக் காவலரண்கள் சரியாக பிடிபடாத நிலையிலும், 2 கிலோ மீற்றர் பின்னால் உள்ள தாக்குதல் முனைக்கு படையணிகளுடன் வேகமாக நகர்ந்து தாக்குதலில ஈடுபட்டார். மையப்பகுதி தாக்கப்பட்டதால் நிலைகுலைந்த சிங்களப்படை, ஆட்லறிகளையும் மையப்பகுதியையும் பாதுகாக்க முடியாமல் விட்டுவிட்டுப் பின்நகர்ந்தது. இராணுத்தினரின் மையக் கட்டளைப்பகுதி ஆட்டங்காணத் தொடங்கியதுடன் இராணுவத்தின் ஒழுங்கமைப்புத்திறன் பாதிக்கப்பட்டது. இதுவே முல்லைத்தீவு முகாமின் தாக்குதல் வெற்றியில் பிரதான பங்கை வகித்தது.

சத்ஜெய – 03 நடவடிக்கையில் பாதுகாப்புச் சண்டையை வழிநடாத்திய போது, குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய முக்கியமான சண்டையாக உருத்திரபுரம் 8ம் வாய்க்கால் எள்ளுக்காட்டுப் பகுதியைக் கைப்பற்றி நிலைகொண்ட சிறப்புப் படையணி மீது நடாத்தப்பட்ட உடனடி ஊடறுப்புத் தாக்குதல் அமைந்தது. உருத்திரபுரம் பகுதியை சிறிலங்கா சிறப்புப்படைகள் கைப்பற்றியபோது அதனால் ஏற்படக்கூடிய பாதக நிலையை உணர்ந்து, உடனடி ஊடறுப்புத்தாக்குதல் ஒன்றை நடாத்த திட்டமிட்டார்.

சிறிலங்காவின் சிறப்புப்படைகள் வாய்க்கால் வரம்பை தமக்கு சாதமாக்கி நிலையெடுத்திருந்தது. எதிரியின் முன்பகுதி வயல் வெட்டை என்பதுடன் அக்காலப்பகுதி நிலவுகாலம். நிலவு கிட்டத்தட்ட அதிகாலை 4.30 மணிக்கு மறையும். 6 மணிக்கு விடிந்துவிடும். அந்த இடையில் கிடைக்கும் 1.30 மணிநேர இடைவெளிக்குள் நகர்ந்து தாக்குதலை நடாத்த வேண்டிய நிலைமை. என்றாலும் தளபதி லெப் கேணல் தனம் தலைமையில் அணிகளை ஒழுங்குபடுத்தி, நிலவிற்குள் நகரக்கூடியளவிற்கு படையணிகளை நகர்த்தி, காப்புச் சூடுகளை ஒழுங்குபடுத்தி, நிலவு மறையும் அத்தருணத்திற்குள் திடீர் ஊடறுப்புத் தாக்குதல் ஒன்றை நடாத்தினார். வேகமான இத்தாக்குதலில் 150 இராணுவத்திற்கு மேல் கொல்லப்பட்டதுடன் இராணுவத்தின் நகர்வு சில காலம் முடக்கப்பட்டது.

தளபதி தீபன் அவர்களின் தொடர்ச்சியான தாக்குதல் பங்கேற்புகளும் அவருடைய தலைமைத்துவமும், ஒருங்கிணைக்கும் தன்மையும், தாக்குதல்களை திட்டமிடும் இலாவகமும் இன்னுமொரு பரிணாமத்தையடைந்தது. களமுனைகளில் நிலைமைக்கேற்றவாறு தாக்குதல் வியூகங்களை வகுப்பது, களங்களில் நேரடியாகச் சென்று வழிநடாத்தும் தன்மை, தனது பொறுப்பை நிறைவேற்றும் பாங்கு, ஒருங்கிணைத்து வழிநடாத்தும் பாங்கு என தளபதியின் ஆளுமை போராளிகளிடத்தில் நல்ல அபிப்பிராயத்தைக் கொடுத்ததுடன் அவருடைய தலைமைத்துவத்தையும் வலுப்படுத்தியது.

1997 ம் ஆண்டு சாள்ஸ் அன்ரனி படையணியின் சிறப்புத் தளபதியாக தீபன் அவர்கள் பொறுப்பேற்றார். சாள்ஸ் அன்ரனி படையணியுடன் தீபன் அவர்களின் போர் நடவடிக்கைகள் இன்னுமொரு கட்டத்திற்குள் நகர்ந்தது. இந்தநேரத்தில்தான் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை ஆரம்பமானது. இந்த இராணுவ நடவடிக்கையைத் தடுக்கும், வவுனியா களமுனையை வழிநடாத்தும் பொறுப்பை தளபதி தீபன் அவர்கள் ஏற்றுக் கொண்டார். ஜெயசிக்குறு எதிர் நடவடிக்கையின் பிரதான போர்முனையான ஏ-09 பாதையால் முன்னேறும் எதிரியைத் தடுக்கும் சண்டையென்பது அந்த எதிர்ச்சமரின் பிரதான பகுதியாக இருந்தது. ஓமந்தையில் தொடங்கிய மறிப்புத்தாக்குதலை வெற்றிகரமாக எதிர்கொண்ட பெருமை நிச்சயமாக தீபன் அவர்களையே சாரும். இப்பாரிய படைநகர்வை எதிர்கொண்டபோது ஓமந்தை, இரம்பைக்குளம், பன்றிக்கெய்தகுளம், பனிக்கநீராவி போன்ற இடங்களில் பல ராங்கிகளை அழித்து சிங்களப்படைக்கு பாரிய இழப்புகளை ஏற்படுத்தினார்.

இதில் புளியங்குளம் சண்டை என்பது ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு பலத்த இழப்பைக் கொடுத்த சண்டையாகும். புளியங்குளம் சந்தியை மையப்படுத்தி முகாம் ஒன்றை அமைத்து எல்லாத் திசைகளிலும் இராணுவத்தை எதிர்கொள்ளக்கூடியவாறு படையணிகள் தயார்படுத்தப்பட்டன.

இராணுவம் பல திசைகளிலும் மாறிமாறி புளியங்குளத்தில் விடுதலைப்புலிகளின் படையணியைப் பின் நகர்த்த கடும்பிரயத்தனப்பட்டது. இலகுவில் வன்னியை ஊடறுக்கலாம் என கங்கணம் கட்டிய சிங்களப்படைக்கு புளியங்குளத்தில் தளபதி தீபன் தலைமையில் வீழ்ந்த அடியானது, ஒட்டுமொத்த ஜெயசிக்குறு இராணுவத் தலைமையினதும் சிங்களச் சிப்பாய்களினதும் மனோதிடத்தை பலவீனமாக்கியது. மிகவும் கடுமையான சண்டையாக வர்ணிக்கப்பட்ட இச்சண்டை ஜெயசிக்குறுவின் தலைவிதியை மாற்றியமைத்தது. இந்த கடுமையான போர்க்களத்தை கடும் உறுதியுடன் புலிகள் எதிர்கொண்டனர்.

தளபதி தீபன் அவர்கள் புளியங்குளம் 'பொக்ஸ்' பகுதிக்குள் தனது கட்டளை மையத்தை நிறுவி அங்கிருந்தே தடுப்புத்தாக்குதலை ஒழுங்கமைத்து தெளிவான, நிதானமான, உறுதியான கட்டளையை வழங்கினார். ஒரு பாரிய படைவலுவைக் கொண்ட சிங்களப்படையை நிர்மூலமாக்கியதுடன் மூன்று மாதங்களிற்கு மேல் எதிரியின் நகர்வை தடுத்து நிறுத்தி பாரிய பின்னடைவுக்குள்ளாக்கினார். ஒருதடவை விடுதலைப்புலிகளின் நிலையை ஊடறுத்துவந்த துருப்புக்காவியையும் கைப்பற்றினர். இது சராசரி 60 பேருக்கு மேல் தினசரி காயமடையும் களமுனையாக இருந்தது. அங்கு 3 அல்லது 4 தடவைகளிற்கு மேல் மாறிமாறி காயப்பட்டாலும் தொடர்ந்து 'புளியங்குளத்திற்கு தீபண்ணையிட்ட போகப் போறம், எங்களுக்கு மருத்துவ ஓய்வு தேவையில்லை' என தீவிரமாக போராளிகள் செயற்பட்டு புளியங்குளத்தை புலிகளின் குளமாக மாற்றினர். இதன் நாயகனாக விளங்கியவர் தளபதி தீபன் அவர்களே! ஒரு வருடங்களுக்கு மேல் நடந்த ஜெயசிக்குறுச் சமரில் புளியங்குள மறிப்பு என்பது விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் முதலாவது வெற்றிகரமான தடுப்புச் சமர் என்பது மட்டுமல்ல, சிங்களத்தின் மனோதிடத்தை பாரியளவில் பலவீனப்படுத்திய, எதிரிகளாலும் வியந்து பார்க்கப்பட்ட சமராகும்.

பின்னர், கிளிநொச்சியை மீளக்கைப்பற்ற நடாந்த சமரில் டிப்போச் சந்திவரை கைப்பற்றிய தாக்குதலை தலைமை தாங்கியதுடன், அதைத் தொடர்ந்து ஓயாத அலைகள்-02 எனப் பெயரிடப்பட்ட தாக்குதலில் எதிரியை ஓடவிடாமல் தடுத்து, வரவிடாமலும் மறிக்கும் பொறுப்பை தளபதி பால்ராஜ் அவர்கள் வழிநடாத்த, முற்றுகைக்குள் வைக்கப்பட்ட கிளிநொச்சி முகாம்களைத் தகர்த்தழிக்கும் பொறுப்பை தளபதி தீபன் அவர்கள் வழிநடாத்தினார். கிளிநொச்சி நகரப்பகுதியை மையப்படுத்தி பல அடுக்கு பாதுகாப்பு வேலிகளை கொண்டமைந்த பாதுகாப்பு அரண்களை உடைத்து தாக்குதல் நடைபெற்றது. சில இடங்களில் காவலரண்களைக் கைப்பற்றுவதும் பின்னர் சிங்களப்படைகள் அதை மீளக் கைப்பற்றுவதும் என கடுமையான சண்டைகள் நடைபெற்றன.

தளபதி தீபன் அவர்கள் பூநகரி, முல்லைத்தீவு முகாம் தாக்குதல்களில் ஏற்பட்ட சிரமங்கள், சாதகங்கள் போன்றவற்றிலிருந்து பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் அணிகளை வழிநடாத்தினார். இறுதியாக பிரதான மைய பாதுகாப்பு காவலரண் பகுதியில் கடுமையான எதிர்பை எதிர் கொண்டார். ஏற்கனவே பூநகரி சண்டையில் பிரதான முகாமை கைவிட வேண்டி புலியணிகளுக்கு ஏற்பட்டதன் காரணங்களைப் புரிந்த அவர், இதுபோன்ற ஒரு தோல்வி மீள ஏற்படக்கூடாது என்ற எண்ணப்பாட்டில் இறுதியான ஒரு முயற்சியை செய்யத் தீர்மானித்தார். தளபதி லெப் கேணல் சேகர் தலைமையில், தளபதி லெப் கேணல் வீரமணியின் நேரடி வழிகாட்டலில் எதிரி எதிர்பார்க்காத வண்ணம் பகல் நேர உடைப்புத் தாக்குதல் ஒன்றை ஒழுங்குபடுத்தினார். 'கரணம் தப்பினால் மரணம்' என்ற நிலை இருந்தும் கூட, பகல் நேர உடைப்பை வெற்றிகரமாக செய்யலாம் என திடமாக நம்பி, சாள்ஸ் அன்ரனி படையணியை களமிறக்கி அதில் வெற்றியடைந்தார். ஆனையிறவிலிருந்து உதவியணியும் வரவில்லை என்பதுடன் தங்களது இறுதிப் பாதுகாப்பு அரணும் உடைக்கப்பட்டதை உணர்ந்த இராணுவம் பின்வாங்கலைச் செய்தது. இதில் பெறப்பட்ட வெற்றியானது அவரது தலைமையின் காத்திரத்தன்மையை வெளிப்படுத்தியது.

சமநேரத்தில் கிளிநொச்சியின் வெற்றியை கொண்டாட முடியாத வகையில் சிங்களப்படைகள் கருப்பட்டமுறிப்பு, மாங்குளம் பகுதியைக் கைப்பற்றியது. தலைவரின் திட்டத்திற்கமைவாக, தளபதி பிரிகேடியர் சொர்ணம் தலைமையில் ஓயாத அலைகள் -03 தாக்குதல் நடவடிக்கையின் ஒருபகுதிக் களமுனை ஒட்டிசுட்டானில் திறக்கப்பட்டது. அதன் இன்னுமொரு முனை, தளபதி தீபன் தலைமையில் மாங்குளம் பகுதியில் திறக்கப்பட்டது. பல மாதங்களாக முன்னேறிய ஜெயசிக்குறு படையணி சில நாட்களுக்குள் மீள வவுனியாவிற்கே பின்நகர்த்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து ஓயாத அலைகள்-03 இன் தாக்குதல் முனைகள் பரந்தனிலும் சுண்டிக்குளப் பகுதியிலும் தனங்கிளப்புப் பகுதியிலும் ஆரம்பிக்கப்பட்டன. இதில் பரந்தன் பகுதியிலிருந்து ஆனையிறவை நோக்கிய படைநகர்வு தளபதி தீபன் அவர்களால் தலைமை தாங்கப்பட்டது. பரந்தனில் பகல் பொழுதில் தாக்குதலைத் தொடங்கி, பரந்தன் காவலரண்களைத் தகர்த்து முன்னேறி புலியணிகள் நிலைகொண்டனர். மறுநாள் தாக்குதலுக்கான நகர்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுக் கொண்டிருந்தவேளை, எதிரி பின்னால் உள்ள வீதியில் புதிய அரண்களை அமைத்து நிலையெடுத்தான். தன் பலத்தில் அதிக நம்பிக்கை கொண்டு, தளபதி தீபன் அவர்கள் வோக்கியில் குறுக்கிட்டு 'உன்ர தளபதி 5.2ஜ (லெப் கேணல் ராகவனின் சங்கேதப்பெயர்) ஒட்டிசுட்டானில் போட்டிட்டம், இனி என்ன செய்யப் போகிறாய்' என்று கேட்டான். 'அதுக்குத்தான் இப்ப உன்னட்ட வந்திருக்கிறம், எங்களையென்ன ஒட்டிசுட்டான் ஆமியெண்டு நினைச்சியே, நடக்கப்போறத பொறுத்திருந்து பார், என்று நிதானமாகவும் சவாலாகவும் சொன்ன தளபதி தீபன், மறுநாள் அதை செய்தும் காட்டினார்.

அதைத்தொடர்ந்து ஓயாத அலைகள்-04 நடவடிக்கையில் குடாரப்பில் தளபதி பால்ராஜ் அவர்கள் தரையிறங்கி எதிரியை ஊடறுத்து நிலையமைத்து நிற்கும் மூலோபாய நகர்வின் வெற்றியானது, அச்சமருக்காக தரைவழியாக ஏற்படுத்தப்போகும் விநியோகப் பாதையில் தங்கியிருந்தது. அதற்கான உடனடி வெற்றியை பெறவேண்டிய முக்கியமான களமுனையை தளபதி தீபன் வழிநடத்தினார். ஆனையிறவு வீழ்ச்சியின் அடிப்படைக்கு மிகவும் முக்கியமான களத்தை செயற்படுத்துவது சாதாரணமானதாக இருக்கவில்லை. ஆரம்பத் தாக்குதலில் சில பிரதேசங்களை கைப்பற்றி தக்கவைக்க முடிந்தது. மறுநாள் தாக்குதலுக்கான உத்திகளை வகுத்து தீர்க்கமான முடிவுடன் இருந்த தளபதி தீபன் அவர்கள், தளபதி பால்ராஜ் அவர்களிடம் 'நாளைக்கு விடிய பாதையை திறந்து உங்களுக்கு விநியோகம் அனுப்பி வைப்போம்' என உறுதியுடன் தெரிவித்து அதை செய்து முடித்தார்.

பின்னர் ஆனையிறவுத் தளத்தை தடுக்கும் நோக்குடன் செய்யப்பட்ட ஊடறுப்புத் தாக்குதல் முயற்சிகள் பல செய்தாலும் அவை வெற்றியைத் தரவில்லை. இறுதியில் மருதங்கேணிப் பாலத்தை அண்மித்த பகுதியில் தளபதி தீபன் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் ஒழுங்குபடுத்திய ஒரு ஊடறுப்பு முயற்சி வெற்றியைக் கொடுக்க, நகர்ந்த புலியணிகள் புதுக்காட்டுச் சந்தியை சென்றடைந்தன. தாம் சுற்றிவளைக்கப்படுகின்றோம் என்பதை உணர்ந்த படையினர் ஆனையிறவுத் தளத்தை விட்டுப் பின்வாங்கினர். இச்சமரின் வெற்றிக்கு கணிசமான பங்கை தளபதி தீபன் அவர்கள் வழங்கியிருந்தார். விடுதலைப்புலிகளினால் ஓயாத அலைகள் என்று பெயரிட்டு நடாத்தப்பட்ட தாக்குதல் அனைத்திலும் பங்கு கொண்டவர் என்ற பெருமை பெற்ற ஒரே தளபதி தீபன் அவர்கள் மட்டுந்தான்.

2001 ம் ஆண்டு சிங்களப்படை ஆனையிறவை மீளக் கைப்பற்ற தீச்சுவாலை என்ற பெயரில் பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை திட்டமிட்டிருந்தது. வெற்றிபெற்றேயாக வேண்டும் என்ற நிலையில் இருதரப்பினருக்கும் பலப்பரீட்சையாக அமைந்த தாக்குதல் அது. அதிகாலையில் இரண்டு பக்கத்தால் விடுதலைப்புலிகளின் நிலைகளை ஊடறுத்த படையினர் இரண்டாவது நிலையை அண்மித்து தமது நிலைகளை அமைத்தனர். களத்தின் இறுக்கத்தை உணர்ந்த தளபதி, 'எமது நிலைகளிலில் இருந்து பின்வாங்காமல் அப்படியே இருந்து சண்டையிடுங்கள்' என்ற கட்டளையை வழங்கி அணிகளை ஒழுங்குபடுத்தி கடுமையான சண்டையை மேற்கொண்டார். தளபதி தீபன் அவர்களின் கட்டளை மையத்தைத் தாண்டி இராணுவம் நகர்ந்த போதும் பின்வாங்காமல், எதிரியால் கைப்பற்றப்பட்ட எமது முதலாவது நிலைகளை பக்கவாட்டால் தாக்குதல் செய்து மீளக் கைப்பற்றினார். தாங்கள் உள்நுழைந்த பாதை மூடப்படுகின்றது என்பதை அறிந்த எதிரி, பின்வாங்கி ஓட்டமெடுத்தான். இச்சமரில் பலத்த இழப்பைச் சந்தித்த இராணுவம் நூற்றுக்கு மேற்பட்ட உடல்களை கைவிட்டு பின்வாங்கியது.

இத்தாக்குதல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன் தளபதி தீபன் அவர்கள் முன்னரங்க நிலைகளிற்குப் பொறுப்பாக இருந்தபோது இதேவகையான நகர்வை எதிரி மேற்கொண்டான். இதன்போது விடுதலைப்புலிகளில் 75 பேரின் உடல்கள் விடுபட்டிருந்தது. இந்தச் சம்பவம் தளபதி தீபன் அவர்களின் மனதில் ஆழமான வடுவை ஏற்படுத்தியிருந்தது. இதன்காரணமாக தலைவர் கொடுத்த புதிய கைத்துப்பாக்கியை கழற்றி வைத்துவிட்டு, இராணுவத்தின் 100 உடல்களை எடுக்காமல் அந்தக் கைத்துப்பாக்கியைக் கட்டமாட்டேன் என்ற கொள்கையில் இருந்தார். இந்த சமரில் தனது சபதத்தை நிறைவேற்றினார்.

மீண்டும் ஆரம்பித்த ஈழப்போர்-04 இல் முகமாலைச் சமரின் கட்டளைத்தளபதியாக பல சண்டைகளைத் தலைமை தாங்கினார். எதிரியின் பல நகர்வுகளை முறியடித்து, முகமாலையிலிருந்து பின்வாங்குவதற்கான கட்டளை கிடைக்கும்வரை அந்தக்களமுனையில் இருந்து ஒரு அடிகூட பின்வாங்காமல் களமுனையை வழிநடாத்தியவர் தளபதி தீபன் அவர்கள்.

தளபதி தீபன் அவர்கள் காலமாற்றத்திற்கேற்ப தன்னையும் மாற்றிக் கொண்டு செல்லும் தலைமைப்பாங்கு கொண்டவர். தாக்குதல்களின்போது எந்த இக்கட்டுக்குள்ளும் தெளிவான நிதானமான கட்டளை அவரிடமிருந்து கிடைக்கும். நிலமைகள் இறுக்கமடையும் போது நிதானமாக வரும் கட்டளையானது 'இடத்தைவிட்டு அரக்காமல் சண்டையிடுங்கள்' என்பதாக இருக்கும். பல சிக்கலான சந்தர்ப்பங்களில் தருணத்திற்கேற்றவாறு திட்டங்களைக் கொடுத்து அந்தச் சூழலை தனதாக்கும் தன்மை அவருடையது. அத்தகைய தளபதியை வெல்லமுடியாது என்பதால்தான் கோழைத்தனமாக நச்சுக்குண்டால் எதிரி அழித்தான்.

தீபன் அவர்களின் சகோதரனான கில்மன், ஆரம்பத்தில் பால்ராஜ் அவர்களின் மெய்ப்பாதுகாவலராக இருந்தார். பின்னர் சாள்ஸ் அன்ரனி படையணிக்கு தளபதியாக பால்ராஜ் அண்ணை பொறுப்பெடுக்கும் போது, அவருடன் சாள்ஸ் அன்ரனி படையணிக்குச் சென்று, தனது கடுமையான முயற்சியினாலும் போர்ப் பங்கேற்புகளினாலும் சாள்ஸ் அன்ரனி படையணியின் சிறப்புத் தளபதியானார். 1994 ம் ஆண்டு ஏற்பட்ட சமாதான காலப்பகுதியில் மணலாற்றில் சாள்ஸ் அன்ரனி படையணியுடன் வந்திருந்தார் கில்மன், அச்சமயங்களில் தீபன் அவர்கள் வேட்டைக்குச் சென்று தினசரி மிருகங்களை வேட்டையாடி வருவார். ஆனால் கில்மனும் வேட்டைக்கு போவார், ஆனால் வேட்டையாடுவதில்லை. இதையறிந்த தீபன் அவர்கள், மரையின் படம் ஒன்றை கொடுத்தனுப்பி, 'உண்மையான மரையை சுடமுடியாட்டி இந்த படத்தில இருக்கிற மரையையாவது சுடுமாறு கூறியிருந்தார்'. தமையனின் கிண்டலைப் புரிந்து, எப்படியாவது வேட்டையாடியே ஆக வேண்டும் என முயற்சியெடுத்து இரண்டு மரைகளை வேட்டையாடினார். பின்னர் அம்மரைகளின் 'குரை' களை வெட்டி தீபன் அவர்களிடம் அனுப்பிவைத்தார். பின்னர் கில்மன் திருமலைக்கு படையணிகளுடன் புறப்பட்டபோது தீபன்ணை வழியனுப்பி வைத்தார். அதுவே அவர்களது இறுதிச் சந்திப்பென காலம் தீர்மானித்தது போலும். திருமலையில் பலவெற்றிகரமான தாக்குதல்களை வழிநடாத்திய லெப்.கேணல் கில்மன் திருகோணமலையில் வெடிவிபத்தொன்றில் வீரச்சாவடைந்தார்.

தளபதி தீபன் அவர்களின் ஆளுமையும் வீரமும் தமிழ் இனத்தின் இரத்தத்தில் எப்போதும் கலந்திருப்பவை. இன்றைக்கு ஈழப்போராட்டத்தின் பின்னடைவு நிலையிலும் தளபதி தீபன் அவர்களின் வீரவரலாற்றை மீட்டுப்பார்ப்பது என்பது தமிழர்களின் வீரப்பண்பை, போரிடும் ஆற்றலை நினைவுபடுத்திக் கொண்டிருப்பதற்காகவும், தாம் கொண்ட கொள்கைக்காக எத்தகைய சவால்களை எதிர்கொண்டார்கள் என்பதை தொடர்ச்சியாக நினைவு கொள்ளப்படவேண்டும் என்பதற்காகவும் தான்.

எமது வீரம் சிங்களத்திடம் தோற்றுப் போகவில்லை, உலகத்திடம் தான் தோற்றுப்போனது. ஈழத்தமிழினம் தோல்வியடைந்தது என்ற மனப்பான்மை கொள்ளாது, தொடர்ந்து நம்பிக்கையுடன் தீரமாக விடுதலைக்கான வழிமுறைகளை நோக்கி திடசங்கற்பத்துடன் பயணிக்க வேண்டும். இன்றைக்கு எத்தனையோ ஆயிரம் மாவீரர்களை விதைத்த கல்லறைகள்கூட எதிரியினால் அழிக்கப்படுகின்றன. எமக்காக மரணித்த மாவீரர் கல்லறைகளின் அடையாளங்கள் அகற்றப்பட்டாலும் ஈழத்தமிழினத்தின் நெஞ்சங்களில் வாழும் அந்த ஜீவன்களின் தூய்மையான தியாகத்திற்கு கொடுக்கப்போகும் வெகுமதி என்ன? வெறுமனே நினைவுகூறல்களுடன் முடித்துக் கொள்ளப்போகின்றோமா? அல்லது உண்மையான இலட்சிய மைந்தர்களின் கனவுகளிற்காக தொடர்ந்து ஒற்றுமையாகவும் கடுமையாகவும் உழைக்கப் போகின்றோமா என்பதே எம்முன் உள்ள கேள்வி!

அபிஷேகா
abishaka@gmail.com

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com