""அமைப்புரீதியாக பிரபாகரன் காட்டிய இறுக்கம் வரலாற்று ரீதியாக தமிழ்ச்சமூகம் பற்றின அவரது புரிதலில் இருந்தே பிறக்கிறது. அவரைப் பொறுத்தவரை கூட்டு மனப்பான்மையற்ற, நான் எனும் தன்முனைப்பு கொண்ட, பொது நன்மைக்காய் தியாகம் செய்யும் பண்பாட்டுக் குணாம்சமற்ற, எளிதில் துரோகம் செய்யும் பலவீனம் கொண்ட தமிழ்ச் சமூகத்தை துப்பாக்கி முனையிலும், கடுமை காட்டியுமே கட்டுக்குள் வைத்திருக்க முடியுமென அவர் நம்பினார்.
மற்றபடி தன்னில் அவர் மென்மையானவர். அதற்கும் மேலாய் ரசனையானவர்'' என்றனர். இது நூறுசதம் உண்மை. "உங்க ளுக்கு பொதுவாக எப்படிப் பட்டவர்களை பிடிக்காது?' என நான் கேட்டபோது, முகமெல்லாம் சிறுபிள்ளைபோல் சிரித்துக் கொண்டே ""குசும்பு பிடிச்சவங் களை மற்றவர்கள் சந்தோஷமாக இருக்கிறதெ சகிக்க முடியாத வர்களை எனக்குப் பிடியாது'' என்றார்.
போகிற போக்கில், ""சந் தோஷமா இருக்கிறதுக்குத்தானே வாழ்க்கை... எனக்கு சந்தோஷம் விருப்பமென்டா, மற்றவரது சந் தோஷத்தையும் நான் விரும்பணும் தானே'' என்ற ஆழமான பார்வை யை பதிவு செய்தார்.
முன்னதாக நாம் குறிப்பிட்டோமே "விசுவாசப் பாதுகாப்பு அடிப்படைவாதப் பரிசேயர்கள்... கோடி ரூபாய் பந்தயம் கட்டிச் சொல்கிறேன்... இவர்களை நேரில் சென்று பாருங்கள். நிச்சயமாய் இவர்களுக்கு புன்னகைக்க வராது. மென்மையான ரசனைகள் எதுவும் இருக்காது, யாரையும் மனம் திறந்து பாராட்டி யிருக்க மாட்டார்கள். சொந்த பிள்ளைகள், பேரப்பிள்ளைகளைக் கூட கட்டியணைத்து அன்பு முத்தம் தந்திருக்க மாட்டார்கள்... எப்போதும் யாரையாவது குறை கூறிக்கொண்டே இருப்பார்கள். குறிப்பாக குசும்பு பிடித்தவர்கள்.
கடவுளை எனக்கு முழுமை யாகத் தெரியும் என்றோ, நான் கடவுளை காப்பாற்ற களமிறங்கி நிற்கிறேன் என்றோ ஒருவன் சொல்வானாகில் -ஒன்றேல் அவன் மூடன், அல்லது ஆபத்தான மோசடிக்காரன். மனிதன் கடவுளை காப்பாற்றப் போகிறேன் என பிரகடனம் செய்வது எவ்வளவு நகைப்பிற்குரிய மோசடி, இல்லையா? உண்மையில் கிறித்துவ வேதம் வாழ்வது என்னைப் போன்ற அருட்தந்தையர்களாலோ, பெரிய பேராயர்களாலோ, விசுவாசப் பாதுகாப்பு பரிசேயர்களாலோ அல்ல. வேதம் ஈராயிரம் ஆண்டுகளாய் வாழ்ந்ததும் வாழ்வதும் ஒரு மனிதனால். மாட்டுத் தொழுவத்தில் பிறந்து, எளிமையில் வளர்ந்து, ஏழைகளை அரவணைத்து, தொழுநோயாளரை தொட்டு அணைத்து விபச்சாரிக்கும் நேசம் தந்து, உண்மை -நீதிக்குரலாய் முழங்கி சிலுவை மரணத்திற்குத் தன்னையே கையளித்த இயேசு என்ற ஒரு மனிதனின் தியாக நினைவில்தான் வேதம் வாழ்கிறது.
ஞாயிறுதோறும் கோயில் திருப்பீடத்தில் நான் வழிபாடு நடத்துகையில் எனக்கு முன் ஐநூறு விசுவாசிகள் பக்தியுடன் முழந்தாள் படியிட்டு அமர்ந்திருக்கிறார்களென்றால் அது எனது தனிப்பட்ட யோக்கியத்துவங்களின் மகத்துவத்தினால் அல்ல. அந்த மக்கள் உண்மையில் வணங்கிப் பணிந்திருப்பது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் கல்வாரி மலையில் ஆணிகள் அறையும்படி கைகளை விரித்துக் கொடுத்த இயேசு பெருமானது தியாகத்தின் திருநினைவில்! தமிழ் ஈழம் ஒருநாள் மலராமல் போகாது என நான் திடமாக நம்புவதற்கும் அதுவே காரணம். தியாகத்தின் நினைவுகள் ஈழம் மலரும்வரை, மலர்ந்த பின்னும் எம் இனத்தை வழிநடத்தும்.
எனக்குத் தெரிந்த ஈழத்துக் குடும்பம். பெரும் பணக்காரக் குடும்பம். ஆண்டுக்கு 100 கோடிக்கும் மேல் தொழில் செய்கிறவர்கள். கனடா நாட்டில் வாழ்கிறார்கள். மூன்று பிள்ளைகள். மூவரும் ஆண்கள். இருவர் கனடாவில். மூன்றாமவர் போராளியாக அப் போது முல்லைத்தீவில் இருந்தார். பலமுறை பெற்றோர் விரும்பி எழுதினர். ""நீ கனடாவுக்கு வா... இங்கிருந்து கொண்டு இயக்கப் பணிகளை செய்'' என்று இடைவிடாது வலியுறுத்தினர். அவன் வரவில்லை. சமாதான காலத்தில் தலைவரிடமே நேரிற்சென்று எடுத்துக் கூறினர். அவன் கனடாவுக்கு வந்தால் இங்கிருப்பதை விட விடுதலைக் காக அதிக பணிகள் செய்யலாம் என்றனர். தலைவரும் அதிகாரப் பூர்வமாய் அவன் கனடா செல்லும் அனுமதியை எழுத் துப் பூர்வமாகவே கொடுத்து கையெ ழுத்திட்டார். உள்ளப் பூரிப்புடன் அனுமதிப் பத்திரத்தை எடுத்துக் கொண்டு அன்பு மகனிடம் விரைந் தனர். ""தலைவரே சரி சொல்லிட்டார். எப்ப புறப்படலாம் தம்பி'' என்கிறார் தந்தை. ஒரு நிமிடம் அமைதியாக இருந்த மகன் சொன் னான்: ""அப்பா, தப்பா நினைக்காதீங்கோ... உயிரோட இருக்கிற தலைவர்கிட்டெ அனுமதி வாங்கிட் டீங்கள். தமிழீழக் கனவை நம்பி உயிர் ஈகம் செய்த 17000-க்கும் மேலான போராளிகளிடம் எப்படி, எப்போ அனுமதி வாங்கப் போறீங்கள்? நான் போராடுறது தலைவருக்காக அல்ல. அவரது தலைமையில், தமிழீழத்துக்காகவும் அதுக்காக உயிர் கொடுத்த போராளிகளின் கனவு தோற்றுப் போகக்கூடாது என்பதற்காகவும்தான் நான் களத்தில் இருக்கிறேன். முதலில் அந்த 17,000 போராளிகளின் துயிலும் ஆத்மாக்களிடமிருந்து அனுமதிக் கையெழுத்து வாங்கிவிட்டு அதன்பிறகு தலைவரிடம் வாங்குங்கள், அப்போது நான் வருகிறேன்'' என்றான். தந்தை கண்ணீருடனும் பெருமையுடனும் கனடா திரும்பினார். பெரும்பாலும் அந்தப் போராளி முல்லைத்தீவில் கடந்த மே மாதம் வீரகாவியமாகி யிருக்க வேண்டும்.
ஒன்றா, இரண்டா? எத்தனை ஆயிரம் தியாகங்களால் இந்த விடுதலையை வளர்த்தோம். வீணாகிக் கருகிடுமோ? செந்நீரில் வேர் பிடித்த ஈழ மரம் மீண்டும் துளிர்க்கும். தியாகங்கள் உள்ளிருந்து உயிர் நீர் ஊட்டும். விடுதலையின் பாடலை ஒருநாள் எமது மக்களின் நாவுகள் முழங்கும்.
(நினைவுகள் சுழலும்)
0 Responses to யாரை எனக்குப் பிடிக்காது -பேசுகிறார் பிரபாகரன்