புலம் பெயர்ந்து வாழ்ந்து வரும் ஈழத் தமிழர்கள், வன்னித் தமிழர்களுக்கு பெரும் சிரமங்களுக்கு மத்தியில் அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்களை எடுக்க செஞ்சிலுவைச் சங்கத்தினர் யாரும் முன்வரவில்லை. இதனால் அந்தப் பொருட்களை ஏலம் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இப் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் பெரியார் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
இது தொடர்பாக பெரியார் திராவிடர் கழகம் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு ஐரோப்பிய தமிழர்கள் உணவு, உடை, மருந்து என 884 தொன் நிவாரண பொருட்களை வணங்காமண் கப்பலில் அனுப்பினர். அதை சிறிலங்கா அரசு திருப்பி அனுப்பியது.
இதையடுத்து சென்னை துறைமுகத்துக்கு வெளியில் பல நாட்கள் வணங்காமண் கப்பல் தத்தளித்தது. முதல்வர் கருணாநிதியின் நடவடிக்கையை அடுத்து, 27 கொன்டெய்னர்களில் நிவாரணப் பொருட்கள் அடைக்கப்பட்டன. அவை சென்னை துறைமுகத்தில் உள்ள சிசிடிஎல் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அவர்கள், கொலராடோ என்ற சரக்கு கப்பலில் நிவாரணப் பொருட்களை ஏற்றி இலங்கையில் உள்ள செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்க கடந்த 7ம் திகதி இலங்கைக்கு அனுப்பினர். இந்த கப்பல் 9ம் தேதி கொழும்பு துறைமுகம் சென்ற பின்னரும், நிவாரணப் பொருட்களை வாங்க செஞ்சிலுவை சங்கத்தினர் இதுவரை வரவில்லை. இதனால் கொழும்பு துறைமுகத்தில் நிவாரணப் பொருட்கள் கடந்த 19 நாட்களாக கேட்பாரற்று இருக்கின்றன.
இது குறித்து சம்பந்தப்பட்ட கன்டெய்னர் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், எங்கள் நிறுவன கொன்டெய்னரில் தான் நிவாரணப் பொருட்கள் கப்பலில் இலங்கை சென்றன. நிவாரணப் பொருட்களை எடுக்க அங்குள்ள செஞ்சிலுவை சங்கத்தினர் யாரும் வராததால் எங்கள் கொன்டெய்னர்களும் அங்கேயே உள்ளன.
கொழும்பு துறைமுகம் விதிமுறைகளின்படி 21 நாட்களுக்கு மேலானால், அவர்கள் அந்த பொருட்களை ஏலம் விடுவதற்கு அதிகாரம் உள்ளது.
இது தொடர்பாக வணங்காமண் கப்பல் முகவர், டெல்லியில் உள்ள செஞ்சிலுவை சங்கம், மனிதம் மனித உரிமை அமைப்பு, இலண்டனில் உள்ள மெர்ஸி மிஷன் அமைப்புக்கு தகவல் அனுப்பி உள்ளோம் என்றார்.
பாடுபட்டு ஈழத் தமிழர்கள் அனுப்பிய நிவாரணப் பொருட்கள் வீணாகாமல் தடுக்க தமிழக முதல்வர் கருணாநிதி மத்திய அரசுடன் பேசி, சிறிலங்கா அரசை நிர்ப்பந்தப்படுத்தி அவற்றை தமிழ் மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கிறார்கள்.
மானம் இல்லாத தமிழ் புத்துஜீவிகளே,வக்கீல்களே,மனித் உரிமை பேசுபவர்களே இந்த சந்தர்பத்திலாவது உதவுங்கள்.
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணங்கா மண் பொருட்களை சிறிலங்கா ஏலத்தில் விற்கும் அபாயம் - காஞ்சிபுரத்தில் பெரியார் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்
பதிந்தவர்:
தம்பியன்
29 July 2009
0 Responses to வணங்கா மண் பொருட்களை சிறிலங்கா ஏலத்தில் விற்கும் அபாயம் - காஞ்சிபுரத்தில் பெரியார் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்