எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் சரத் பொன்சேகா தெரிவுசெய்யப்பட்டால் அது இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்குமென மகிந்த ராஜபக்சவின் ஆலோசகரும் அவரது மிக நெருக்கத்திற்கு உரியவருமான றசீக் சறூக் தெரிவித்துள்ளார். அத்துடன் சீனா போன்ற நாடுகளை போல அல்லாமல், எந்தவித நிபந்தனைகளும் இன்றி, இந்தியாதான் சிறிலங்காவுக்கு தேவையாகவிருந்த முக்கியமான உதவிகளை போரின்போது வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
யுகோஸ்லாவியா, ஹங்கேரி போன்ற நாடுகளின் முன்னாள் சிறிலங்கா தூதுவராகவும் சிங்கப்பூரின் முன்னாள் உயர் ஸ்தானிகராகவும் கடமையாற்றிய றசீக் சறூக் போர்க்காலத்தின் போதான இந்திய உதவிகளையும் தற்போதைய தேர்தல் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடுகளையும் இந்நேர்காணலில் விளங்கப்படுத்தினார்.
றசீக் சறூக் வழங்கிய நேர்காணலின் முக்கிய பகுதிகள் வருமாறு:
ஒரு இராணுவ அதிகாரி அரச தலைவராக தெரிவுசெய்யப்படுவது நல்லதல்ல. பாகிஸ்தானில், பங்களாதேசில், பர்மாவில் நடைபெறும் நிகழ்வுகளே இதற்கு நல்ல படிப்பினைகளாகும்.
இந்தியாவை பொறுத்தவரை அதன் பிராந்திய பாதுகாப்பு முக்கியமானதாகும். இந்தியாவின் அணுவலு நிலையங்கள் தென்னிந்தியாவை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளன. இதற்கு பிரதான காரணம் ஒரு பக்கம் பாகிஸ்தான். மற்றைய பக்கம் சீனா ஆகும்.
இதனால்தான் அருகிலுள்ள சிறிலங்காவுடன் நல்ல உறவுநிலைகளை பேணவேண்டிய தேவை இந்தியாவுக்கு உண்டு. இந்தியா எம்மோடு நெருங்கிய உறவுநிலையை பேணாவிட்டால் நாம் சீனா நோக்கி எமது பார்வையை திருப்புவோம். அது இந்தியாவின் நலன்களுக்கு சாதகமான விடயமாக இருக்காது.
அதனால்தான் இந்தியா எப்போதும் எமக்கு உதவி செய்துகொண்டிருக்கிறது. உதாரணமாக, சர்வதேச நாணய நிதியம் 2.4 மில்லியன் டொலர் கடனை தரமறுத்தபோது எம்மிடம் வேறு தெரிவுகள் இருக்கவில்லை. நாங்கள் சீனாவிடம்தான் கடன் கேட்கவேண்டிய நிலையிருந்தது. அப்போது, சர்வதேச நாணய நிதியம் கடனை தராவிட்டால் இந்தியா தான் அதனை தயாராக இருப்பதாக கூறியது. அவ்வாறுதான் இந்தியாவின் கேந்திர நலன்கள் எமது வெளியுறவுக் கொள்கைகளை தீர்மானிக்கின்றன.
இந்தியா பலவழிகளில் எமக்கு உதவி செய்தது. எமது கடற்படையினருக்கு தேவையான புலனாய்வு தகவல்களை திரட்டி கொடுத்தது. அத்துடன் ஆழ்கடல் கண்காணிப்பு படகுகளை தந்ததன் மூலம் விடுதலைப் புலிகளின் கப்பல்களை தடுக்கமுடிந்தது. இந்தியாவின் உதவி மூலம் விடுதலைப்புலிகளின் 10 கப்பல்கள் அழிக்கப்பட்டன. இதுதான் போரின் திருப்பு முனையை தீர்மானித்தது.
எமக்கு வெடிப்பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டபோது பாகிஸ்தான் வான்வழியாகவே அதனை உடனடியாக விநியோகித்தது. அனைத்து போர்கருவிகளையும் வெடிபொருட்களையும் சீனா முழுமையாக விநியோகித்தது.
ஒருகட்டத்தில் சரத் பொன்சேகா மூலம் சிறிலங்காவில் ஆட்சிக்கவிழ்ப்பு ஏற்படக்கூடிய சூழல் எதிர்பார்க்கப்பட்டது. அப்போதும் இந்தியாதான் அதனை தடுப்பதற்குரிய ஆயத்தங்களை மேற்கொண்டு எவ்வேளையிலும் உதவ தயாராகவிருந்தது.
இராணுவத்தளபதியாகவிருந்த சரத் பொன்சேகா தனது அடுத்த பதவி நிலைக்கு உயர்த்தப்பட்டபோது தனது சொந்த படைப்பிரிவை தனது தலைமையகத்திற்கு கொண்டுவரவிரும்பினார். ஆனால் அதனை அரசு விரும்பவில்லை. இதனை தொடர்ந்தே சந்தேகங்கள் உருவானது.
முக்கியமாக வன்னிப்பகுதிகளில் மன்னார், கிளிநொச்சி தொடங்கி முல்லைத்தீவு வரை இராணுவ குடியிருப்புக்களை அமைக்க சரத் பொன்சேகா விரும்பினார். இராணுவ குடியிருப்புக்கள் என்பது படையினர் தமது குடும்பத்தினரோடு படைத்தளங்களில் வசிப்பதாகும். இது இனப்பிரச்சனையை மேலும் சிக்கலாக்கும். அவ்வாறான குடியிருப்புக்களை அனுமதிக்க மகிந்த ராஜபக்ச விரும்பவில்லை.
அதேவேளையில் போர் முடிவடைந்தபின்னரும் 100000 – 150000 வரையான இராணுவத்தினரை புதிதாக சேர்த்துக்கொள்ளவேண்டுமெனவும் சரத் பொன்சேகா விரும்பினார். இதன் மூலம் தமிழர்களின் ஆட்பரம்பலை வடக்கு கிழக்கில் மாற்ற சரத் பொன்சேகா விரும்பினார்.
அத்துடன் சிறுபான்மையினருக்கு இந்நாட்டில் இடம் இல்லை என சரத் பொன்சேகா ஏற்கனவே பல கருத்துக்களை தெரிவித்திருந்தார். இவைதான் ஒரு இராணுவ புரட்சி ஏற்படலாம் என்ற சந்தேகங்களை தோற்றுவித்தது.
எனவே சிறிலங்காவில் இராணுவத்துறையை சேர்ந்த ஒருவர் அரச தலைவராக தெரிவுசெய்யப்படுவது இந்தியாவுக்கு அச்சுறுத்தலான ஒரு விடயமாகவே இருக்கும்
-என றசீக் சறூக் றெடிஃப் இணையதளத்திற்கு வழங்கிய தனது நீண்ட நேர்காணலில் தெரிவித்தார்
நன்றி: ஈழநேசன்
பொன்சேகா அரச தலைவராக தெரிவு செய்யப்பட்டால் இந்தியாவுக்கு தலையிடியாம்: மகிந்தவின் ஆலோசகர்!!
பதிந்தவர்:
தம்பியன்
13 January 2010



0 Responses to பொன்சேகா அரச தலைவராக தெரிவு செய்யப்பட்டால் இந்தியாவுக்கு தலையிடியாம்: மகிந்தவின் ஆலோசகர்!!