விழுப்புரத்தில் குண்டுவெடிப்புக்கு காரணம் பிரபாகரனின் தம்பிகள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தண்டவாள தகர்ப்பு இடத்தில் ராஜபக்சே வருகை எதிரான பிரசுரம் கிடந்தது. அதில் பிரபாகரனின் தம்பிகள் என்று எழுதப்பட்டிருந்தது என்று தெரிவித்துள்ளனர்.இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில்,’’போர் நிறுத்தம் கேட்டுப் போராடிய போது தமிழர்கள் தங்களைத் தாங்கள்தான் தீயிட்டுக் கொளுத்திக் கொண்டார்களே தவிர பொது மக்களுக்கு இடைஞ்சல் செய்ததில்லை.
தவிரவும் பிரபாகரனின் தம்பிகள் யார் என்பதையும் இங்கே அடக்குமுறைச் சக்திகளுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
ஈழத் தமிழ் மக்கள் மீதான வன்னி யுத்தத்தை பேரினவாத இலங்கை அரசு கட்டவிழ்த்து விட்ட போது தமிழகத்தில் போர் நிறுத்தம் கேட்டு நாமெல்லாம் போராடினோம்.
தன்மானத் தமிழனும் வீரத்தியாகியுமான முத்துக்குமார் உள்ளிட்ட 19 வீர வேங்கைகள் தங்களின் இன்னுயிரை ஈந்தனர்.
பிரபாகரனின் உண்மையான தம்பியான முத்துக்குமார் நமக்கெல்லாம் விட்டுச் சென்ற பாடம் அதுதான். தன்னுயிரைக் கொடுத்து, தன்னை வதைத்து, தன்னை எரித்து பேரினவாதிகளை எதிர்ப்பதுதான் பிரபாகரன் தம்பிகளின் போராட்ட மரபே தவிர அடுத்தவர் உயிர்களைப் பறிப்பதல்ல.
பேரெழுச்சியோடு முத்துக்குமாரின் ஊர்வலத்தில் திரண்டு கண்ணீரோடு முத்துக்குமாரை வழியனுப்பிய தாய்மார்களும் பொதுமக்களும் தங்களுக்காக, தங்களின் இனத்துக்காக தன்னுயிர் ஈந்தவன் முத்துக்குமார் என்பதால் அவனை ஒரு மகனாக நினைத்து தமிழ்த் தாய் வணங்கி நிற்கிறாள்.
அப்படி தமிழ் தாய்மார்களின் வணக்கத்திற்குரியவர்கள்தான் பிரபாகரனின் தம்பிகள் என்பதை நாம் தன்னலமற்ற தியாகத்தால் உலகிற்கு உணர்த்தியிருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
இதை எல்லாம் விட மிகச் சிறந்த வரலாற்று முன்னுதாரணமாக எம்மினத் தலைவர் அண்ணன் பிரபாகரனும் சான்றாகி நிற்கிறார். எதிரிக்கும் கூட கருணை காட்டு என்கிற விடுதலைப் போர் மரபுத் தத்துவத்தில் நம்பிக்கையுள்ள ஈழ விடுதலைப் போராளிகளே அதற்குச் சான்று.
அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்திற்குள் அப்பாவி தமிழ் மக்களை அழைத்து வந்து லட்சம் லட்சமாக கொன்றொழித்தது பேரினவாத இலங்கை அரசு.
தம் கண்ணெதிரே எந்த மக்களின் பாதுகாப்பிற்காக ஆயுதமேந்தினரோ அந்த மக்களே கொன்றொழிக்கப்பட்ட போது கூட தங்களிடம் இருந்த கனரக ஆயுதங்களாலோ, நவீன விமானங்களாலோ புலிகள் சிங்களவர்களான பொது மக்களைத் தாக்கியதில்லை.
பேரிவனவாத இலங்கை அரசின் பொருளாதார நலன்களையும், ராணுவக் கட்டமைப்பையும் சிதைப்பதாகத்தான் புலிகளின் தாக்குதல் இருந்தது. ஏழு விமானத் தாக்குதல் நடத்தப்பட்டும் கூட அதில் ஒரு சிங்கள பொதுமகனாவது கொல்லப்பட்டிருப்பனா? என்பதை நான் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
போரை முன்னெடுத்த இலங்கை அரசிற்கும், போருக்கு துணை போன காங்கிரஸ் அரசிற்கும் எதிராக ஜனநாயக ரீதியாக தமிழ் மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டத் துவங்கியதும் பேரினவாத யுத்தக் குற்றவாளிக்கு டில்லியில் சிகப்புக் கம்பள வரவேற்போடு, விருந்து கொடுத்து கௌரவித்ததையும் நினைத்து தமிழ் மக்கள் மனக் கொந்தளிப்புக்குளாகியுள்ளனர்.
தமிழகமெங்கிலும் பல்லாயிரம் பேர் ராஜபக்சவின் வருகையைக் கண்டித்து போராடி கைதாகினர்.
தமிழ் மக்களின் இந்த மனக்கொதிப்புகளை அடக்கியும் ஈழ மக்களுக்கு ஆதரவான தமிழக மக்களின் எழுச்சியையும் அடக்கி விடும் அற்ப நோக்கத்தோடு இந்த நாடகம் அரங்கேற்றப்படுகிறதா என்று தெரியவில்லை’’ என்று கூறியுள்ளார்.



0 Responses to பிரபாகரனின் தம்பிகள் யார் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்: சீமான்