Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழத் தாகத்துக்காகத் தீயை அள்ளிக்குடித்து மரணம் தழுவிய முத்துக்குமாரின் நினைவு நாளானஜனவரி 29′ மறக்க முடியுமா உலுக்கிய அந்த தினத்தை!! இப்போ அந்த தேதியை தலைப்பாக வைத்தே ஓர் ஆவணப்படம் வெளியாகியுள்ளது. முத்துக்குமாரின் பள்ளிப்பருவக்காட்சிகளோடு விரிகிறது அந்த ஆவணப்படம்.

அடுத்தடுத்து அவர் உறவுகள். நெருங்கிய நண்பர்களின் நினைவுப்பகிர்தலோடு உணர்வுபூர்வமாக நகரும் படத்தில்,மனதைக்கனக்க வைக்கும் ஈழத்து போர்க்காட்சிகளும் பதிவாகியுள்ளன. 70 நிமிடங்கள் ஓடும் இந்தப்படத்தில், ‘ஜனவரி 29- சாஸ்திரி பவன் சம்பவ இறுதிக் காட்சிகள் உணர்ச்சிகளை உச்சத்தில் உறைய வைக்கின்றன!

இயக்குனர் அமீர், நடிகர் சத்தியராஜ் ஆகியோர் இந்த ஆவணப்படத்தை வெளியிட்டுப் பேசினர். இயக்குனர் புகழேந்தி, கவிஞர் அறிவுமதி உள்ளிட்ட அனைவருமே, “பதவியிலிருக்கும்போதே செத்துவிடவேண்டும் என சிலர் நினைக்கிறார்கள்.

ஆனால், இறந்து சிம்மாசனம் ஏறியவன் முத்துக்குமார். தனக்குத்தானே சிலை வைத்துக்கொள்ளும் அரசியல் வாதிகள்தான் இங்கு இருக்கிறார்கள், இவர்கள், கரும்புலி முத்துக்குமாருக்கு சிலை வைக்க தடை போடுகிறார்கள்! இறக்கும் வரை யார் என்றே தெரியாத இளைஞன் முத்துக்குமார், ஒற்றை நாளில் அள்ளிக்கொண்ட அந்த உணர்ச்சி நெருப்பை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது! அந்த தியாக தீபத்தை ஊதி அணைக்கமுடியாது,

யாரையெல்லாம் நடிகன் என்று நினைத்தோமோ, அவர்களெல்லாம் மறைந்துவிட்ட மனிதனாகிவிட்டார்கள். ஆனால், யாரை மனிதன் என்று நினைத்தோமோ அவர்கள்தான் இன்றும் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். மருத்துவமனையில், உயிர் கசிந்து வெளியேறுகிற வேளையிலும்கூட, ‘நீ என்ன சாதி?’ எனக்கேட்ட மருத்துவச்சியிடம், ‘தமிழ்ச்சாதி என்று எழுதுங்கள்என்று சொல்லி மறைந்தனே முத்துக்குமார்அவனையாமனநலம் இல்லாதவன்என்று சொல்லுகிறீர்கள்?” என்று அறைகூவல் விட்டுவிட்டு உட்கார்ந்தார்கள்.

எல்லோர் பேச்சையும் பொறுமையாகக் கேட்ட அமீர், “விழாவுக்கு வர்றதுக்கு முன்பேதயவுசெய்து பேசச்சொல்லாதீங்கன்னு விழா அழைப்பாளர்கிட்டே ஒருமணி நேரம் என்னோட குமுறலை எல்லாம் கொட்டிட்டுத்தான் வந்தேன். அதை இப்போ இங்கே பேசினா நாளைக்கு நான் வெளியே இருக்கவே முடியாது.

முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் ஒரு நாள் கலந்து கொண்டதைத்தவிர வேறு என்ன செய்தோம்?’ என்ற ஒரு குற்ற உணர்வு எனக்கும் இன்னும் இருக்கு. வெறும் 11 பேர்தான் பாரதியின் உடல் அடக்கத்தின் போது கலந்துகொண்டனர். ஆனாலும், அந்த எழுச்சிக்கவிஞரின் வீரியம் இன்னமும் அடங்கவில்லையே! இந்த நிலைமையில், இத்தனை இலட்சம் மக்களுக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்ட முத்துக்குமாரின் இலட்சியமும் உணர்வும் அவ்வளவு எளிதில் ஓய்ந்துவிடுமா?

ஒரு சாமியாரின் படத்தை இரண்டு நிமிஷம்தான் ரி.வி. யில் காட்டினாங்க. அதைப்பத்தி எல்லோருமே விழுந்து விழுந்து பேசினோம். முத்துக்குமார் ஊர்வலத்தை ஒரு ஐஞ்சு நிமிஷம் ரி.வி.யில் காட்டியிருந்தா, தமிழகமே கொந்தளிச்சிருக்குமே!

60 வருஷமா அடுக்குத் தமிழில் பேசிப் பேசியே ஆட்சியிலும் உட்கார்ந்துவிட்டார்கள். அதெல்லாம் முடிஞ்சிபோன பழைய கதை. அதனால் நாமாவது அறிவுபூர்வமாகப்பேசுவோம். அவரவருக்கு என்ன முடியுமோ, அதை நம் இனத்துக்காகச் செய்வோம். அதையும் தாண்டி அரசியலால்த்தான், போராட்டத்தால்த்தான் வென்றெடுக்க முடியும் என்ற நிலை வந்தால்அதயும் செய்வோம்என்றார் வேகமாக.

அடுத்துப் பேச வந்த நடிகர் சத்தியராஜ்ஜனவரி 30 அன்று காலை பேப்பரைப் பார்த்ததும், ‘அடடா-தமிழனைப்பற்றி முழுசாத் தெரிஞ்சுக்காமலேயே அவசரமா முத்துக்குமார் இப்படி ஒரு முடிவெடுத்திட்டாரே!’னு ரொம்பவும் வேதனைப்பட்டேன். அப்புறமா அவர் எழுதி வைச்சிருந்த அறிக்கையைப் படிச்ச பிறகு; ‘பெரிய அரசியல் ஞானியா வரவேண்டியவன், இப்படிப்பண்ணிட்டானே,ன்னு இன்னமும் ஆதங்கப்பட்டேன், ஒரு பெரியாரோ.

கார்ல் மார்க்ஸோ, இப்படி அவசரப்பட்டு தீக்குளிச்சிருந்தா, அது இந்தச்சமூகத்துக்கு எவ்வளவு பெரிய இழப்பாகி இருக்கும்னு ஒப்பிட்டுப்பர்த்து பதறினேன், ஆனாலும், முத்துக்குமாரோட தியாகம் வீண்போகலை! புலம்பெயர்ந்து வாழும் ஈழச் சொந்தங்களின் இளந்தலைமுறையினர் மத்தியில் ஈழ விடுதாலை உணர்வை தூண்டிவிட்டு இருக்கிறது. எப்ப முத்துக்குமாருக்கு சிலை வைக்க இங்கே பயப்பட ஆரம்பிச்சாங்களோ, அப்பவே முத்துக்குமார் ஜெயிச்சுட்டாரு!

உண்மையைச் சொல்லணும்னா-நான் வசதியான குடும்பத்தில் பிறந்து, சொகுசா வாழ்ந்து பழக்கப்பட்டவன், அதனால் எனக்கு சிறைக்குப் போகத் தைரியம் கிடையாது. சிறைக்குப்போகும் தைரியம் என் தம்பி செந்தமிழன் சீமானுக்குத்தான் உண்டு. என் மனதிலுள்ள கோபத்தை எல்லாம் இங்கே நான் பேசிக் கொட்டினால், ஆயுளுக்கும் வெளியே வர முடியாது அப்புறம்இரண்டு முகம்தான் எனது கடைசிப் படமாகிவிடும்என்று முடித்தார்,

நன்றி – ஜூனியர் விகடன்

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to மனசில் உள்ளதைப்பேசினால் ஆயுசுக்கும் நான் வெளியே வரமுடியாது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com